Sunday, 31 July 2016

படித்தவன் பாவம் பண்ணினால். . . . . . . .


   கிருஷ்ணகிரி பக்கம் ஒரு குக்கிராமத்துக் குடும்பம் தொடர்பான  வழக்கு இது.  படித்தவன் பாவம் பண்ணினால் ஐயோ என்று போவான்  என்று சாபம் இடுவார் பாரதியார். முதல் தலைமுறை பட்டதாரி இளைஞன் செய்த மாபாதகம் தொடர்பான வழக்கு இது.

       உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
       கல்லார் அறிவிலா தார்

என்பது குறள்.  சான்றோர் கூறும் வழியில் நடக்காத அறிவிலி எத்தனை பட்டம் பெற்றும் என்ன பயன் என்பது இக் குறளின் பொருள். வள்ளுவர் குறிப்பிடும்  படித்த அறிவிலி ஒருவன் தொடர்பான வழக்கு இது.

           வழக்கு இதுதான்.

     "என் மகளுக்கு வயது பதினெட்டு. என்  தம்பி மகனும் அவளும் ஊருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக அறிகிறேன். அவள் கருவுற்றிருப்பதாகவும்  ஒரு செய்தி நிலவுகிறது. இந்தக் கொடுமையைச் சகிக்க முடியாமல் எட்டாம் வகுப்பில் படித்த என் ஒரே மகன் தூக்கில் தொங்கிவிட்டான். என்  பெண் இப்போது எங்கே இருக்கிறாள்  என்றே தெரியவில்லை. அவளை  நீதி மன்றத்திற்கு வரச் செய்து விசாரிக்க  வேண்டும்" என்பது அவர் கொடுத்த ஆள்கொணர்வு மனுவின்  சாரம்.

         அவளையும் அந்த அறிவு கெட்ட மடையனையும் போலீசார் கொண்டுவந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் நிறுத்தினர்.  நான் மட்டும் ஒரு நாள்  நீதிபதியாக  இருந்திருந்தால் பின்வருமாறூ தீர்ப்பு வழங்கியிருப்பேன்.

        "தடை செய்யப்பட்ட உறவு முறைகளில் திருமணம் செய்யக் கூடாது என்பது  நம் இந்திய  மரபில் உள்ள எழுதாச் சட்டமாகும். சகோதரன் சகோதரி உறவுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ள  இத் திருமணம் சமுதாய ஒழுங்கிற்கு எதிரானது என்பதாலும், எதிர்காலத்தில் இது ஒரு தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும் என்பதாலும்  மேற்படி திருமணம் செல்லாது என அறிவிக்கிறேன்; அத் திருமணம் இரத்து செய்யப்படுகிறது.

         கருவில் வளரும் குழந்தையை அவள் பெற்றுக்கொள்ள வேண்டும் . பரந்த மனம் கொண்ட ஒருவன் அவளைத் திருமணம் செய்து கொள்ள  வரும் வரை அவள் தந்தை, தாயின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்.

           திருமணம் தொடர்பான சட்டங்கள், விலக்கப்பட்டத்  திருமண உறவுகள் எவையெவை என்பன குறித்தப் பாடங்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

        மனுதாரரின் குடும்பத்தினருக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி, மனுதாரரின் மகன் சாவுக்கும் காரணமாக இருந்த எதிர் மனுதாரருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன். மேலும் அவர் பெற்றப் பட்டங்களை இரத்து செய்யுமாறு தொடர்புடைய பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவிடுகிறேன்."

      உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?
"மனுதாரரின் பெண் மேஜர் என்பதால் அவள் தன் கணவனோடு வாழலாமா அல்லது பெற்றோர் வீட்டிற்குச் சென்று விடலாமா என்பதை அவளே முடிவு செய்து கொள்ளலாம்"

     ஆக ஒன்றுமட்டும் தெளிவாகத்  தெரிகிறது. நம்  பிள்ளைகள் மதிப்பெண்கள் பெறுகிறார்களா என்பதில் காட்டும் ஆர்வத்தில் பாதி அளவு கூட மதிப்பீடுகளைப்(Values) பெற்றுள்ளார்களா என்பதில் காட்டுவதில்லை.

           பின்னாளில் ஏற்படும் எதிர் விளைவுகளைக் கண்டு வருந்துவதால் என்ன பயன்?

4 comments:

 1. அருவெறுப்பாகவும் கவலையாகவும் அவமானமாகவும் இருக்கிறது அய்யா

  ReplyDelete
 2. அருவெறுப்பாகவும் கவலையாகவும் அவமானமாகவும் இருக்கிறது அய்யா

  ReplyDelete
 3. உண்மை ஐயா. பிள்ளைகள் மதிப்பெண்கள் பெறுகிறார்களா என்று பார்க்கிறோமே தவிர, பிறிதொரு நோக்கில் பலர் சிந்திக்கத் தவறிவிடுகிறோம்.

  ReplyDelete
 4. தங்கள் தீர்ப்பு நியாயமாக உள்ளது. ஆனாலும் களங்கம், களங்கமே. பழைய திரைப்படப்பாடல், ஊரார் சிரிப்பார்கள், ஊரார் சிரிப்பார்கள் என எம்.எஸ்.விஸ்வநாதன் பாடுவார். அதுபோல காலமுழுக்க அசிங்கத்துடன் வாழ நீதிமன்றம் வேண்டுமானால் உத்தரவு வழங்கலாம். மனிதனின் மனசாட்சி கண்டிப்பாக நீதி வழங்காது. எதுவும் குறிப்பிட்ட காலம் தான் என்ற நிலை வரும்போது தான் செய்த தவறு என்ன என்பது விளங்கும் அதற்குள் அவனது மரியாதை சமுதாயத்தில் காணாமல் போய்விடும். அதன் பிறகு அவன் வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன?. உறவைப் போற்றாதவன் மனிதனல்ல...
  டாக்டர்.ரா.லட்சுமணசிங்
  பேராசிரியர்
  அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
  கரூர் - 639 005

  ReplyDelete