Friday 13 January 2017

படிப்பறிவு இருந்தும் படிக்காதவர்கள்

      வாங்கிய புத்தகங்களை எத்தனைப் பேர் வாசிக்கிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் வினா.

     சலவைத் தொழிலாளியின் கழுதையும், புத்தகங்களை வாங்கி அவற்றைப் படிக்காதவரும் ஒன்றுதான் என்று அறிஞர் அண்ணா எப்போதோ சொன்னது இப்போது என் நினைவில் வந்து போகின்றது.

    மக்களைப்  படித்தவர் படிக்காதவர் என வகைப்படுத்துவதை நாம் அறிவோம். இவர்களைக் குறிக்க ஆங்கிலத்தில் முறையே literate ,illiterate எந்னும் சொற்கள் புழக்கத்தில் உள்ளன. இப்போது  புதிதாக முளைத்த ஓர்  ஆங்கிலச்சொல் மக்களில் காணப்படும் மூன்றாம் வகையினரைக் குறிப்பிடுகிறது. alliterate என்பதுதான் அந்த புதிய சொல். A person who is able to read but not interested in reading books என்று இச் சொல்லுக்கான பொருளாக ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் காணப்படுகிறது.   அதாவது படிக்கத் தெரிந்தும் நூல்களைப் படிக்க ஆர்வமில்லாதவர் என்று பொருள். சுருங்கச் சொன்னால் படிப்பறிவு இருந்தும் படிக்காதவர்.

    எடுத்துக்காட்டாக, ஒரு தமிழ் இலக்கியப் பட்டதாரி இளைஞரால் ஒரு தமிழ் நாவலைப் படிக்க முடியும்; ஆனால் அவர் படிப்பதில்லை. ஓர் ஆங்கில இலக்கியப் பட்டதாரிக்கு ஆர்.கே.நாராயண் எழுதிய எளிமையான ஆங்கில நாவலைப் படிக்கும் அளவுக்கு ஆற்றல் உண்டு; ஆனால் அவர் அந்த நாவலைப் படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

    பாடநூல்களைத் தவிர பிற நூல்களைப் படிப்பதில்லை என யாருக்கோ சத்தியம் செய்து கொடுத்தவர்களைப் போல இக்காலத்து இளைஞர்கள் நூல்கள் எவற்றையும் வாசிப்பதில்லை. விதிவிலக்காகச் சிலர் இருப்பார்கள் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மிகப்பலர் கைப்பேசியே கதி என்று கிடக்கிறார்கள். என்னிடம் வேலை வாய்ப்புத்  தொடர்பான நேர்முகத்திற்கு வந்திருந்த முதுநிலைப் பட்டதாரியிடம். “பெருமாள்முருகனைத் தெரியுமா?” என்று கேட்டேன். அவருக்குப் பெருமாளைத் தெரிந்திருந்தது, முருகனைத் தெரிந்திருந்தது, ஆனால் பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளரைப் பற்றி எதுவும் தெரியவில்லை.
   
 நூல்கள் வாசிக்கும் பழக்கம் இன்மையால் இலக்கிய உலகில் என்ன நடக்கிறது என்பது இவர்களுக்கு அறவே தெரிவதில்லை. ஒரு தமிழிலக்கியம் படிக்கும் மாணவரை அழைத்து, “ஒரு சிறு இசை என்னும் நூலைப் பற்றித் தெரியுமா?” எனக் கேட்டேன். அவருக்கு எதுவும் தெரியவில்லை. இந்த நூலுக்கு அண்மையில் சாகித்திய அகாதமியின் பரிசு கிடைத்துள்ளது. நெல்லைச் சீமையில் பிறந்து வல்லிக்கண்ணதாசன் என்பதன் சுருக்கமான வண்ணதாசன் என்பதைப் புனைபெயராகக் கொண்ட சி.கல்யாணசுந்தரம் எழுதிய நூல் அது. கல்யாண்ஜி எனக் கவிதை உலகில் அறியப்படுபவர்.

“அவள் வீட்டு வாசலைப்பெருக்கி
குனிந்து நிமிர்ந்து கோலம் போட்டாள்
வாசல் தூய்மையாச்சு
என் மனமோ குப்பையாச்சு”
என்னும் புகழ் பெற்ற கவிதை வரிகளைப் படைத்தவர்.

     நான் ஆறாம் வகுப்புப் படிக்கையில் நாமக்கல் கவிஞர் எழுதிய மலைக்கள்ளன் நாவலைப் படித்தேன் என்று கூறினால் யாரும் நம்புவதில்லை. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் மு.வ. மற்றும் நா.பா நாவல்களைப் படிக்காதவர் என எந்தக் கல்லூரி மாணவரும் இருந்திருக்கமாட்டார். நா.பா எழுதிய குறிஞ்சிமலரைப் படித்துவிட்டுத் தம் குழந்தைகளுக்கு அரவிந்தன் எனவும் பூரணி எனவும்  பெயர் சூட்டி மகிழ்ந்தவர்களை நானறிவேன்.

   
வசதியுள்ளவர்கள் வீடு கட்டும்போது நூலகத்திற்கென கூடுதலாக ஒரு சிறிய அறையை அமைக்க வேண்டும். மற்றவர்கள் தம்  இல்லங்களில் ஒரு சிறு புத்தக அலமாரியையாவது வைக்க  வேண்டும். குறைந்தது ஐம்பது நூல்களைச் சேகரித்து வைப்பது நல்லது. அவற்றுள் திருக்குறள் நூல் கட்டாயம் இருத்தல் வேண்டும். “திருக்குறள் இல்லாவீடு திரிபேய் வாழ்சுடு காடு” என்று ஒரு கவிஞர் சினம் பொங்கக் கூறுகிறார். அவர் வேறு யாருமல்லர்; நான்தான்.  என் இல்லத்தில் தனி நூலக அறையே உள்ளது. திருக்குறள் தொடர்பான அறுபது நூல்கள் உள்ளன. திருவள்ளுவர் எழுதிய ஞானவெட்டியான் என்னும் மிகவும் அரிதான பழைய தமிழ் மருத்துவ நூலும் உள்ளது. மொத்தத்தில் தமிழில் மூவாயிரம் நூல்களும் ஆங்கிலத்தில் ஆயிரம் நூல்களும் உள்ளன. அந்த அறையில் அமர்ந்து தினமும் ஒரு மணி நேரமாவது வாசிக்கவில்லை என்றால் எனக்குத் தூக்கம் வராது.

   நான் ஒருபோதும் ஊருக்கு உபதேசம் செய்வதில்லை. இதற்குச் சான்று என் இளைய மகள் அண்மையில் எனக்கு எழுதிய கடிதம். அதில் அவள்  எழுதியிருந்த வாசகம் இது: “ஆங்கிலத்தை முதல் மொழியாக பேசுபவர்கள் மத்தியில் சரளமாக என்னையும் பேச வைத்தது- நீங்கள் எனக்களித்த விதை- புத்தகம் வாசித்தல் என்ற விதை!”

    சுவாசித்தலை நிறுத்தினால் மரணம். வாசித்தலை நிறுத்துவதும் ஒருவகை மரணமே. மரணித்தவருக்கும் வெளி உலகில் என்ன நடக்கிறது என்பது தெரியாது. நூல்களை வாசிக்காதவருக்கும் அதே நிலைதான்.

   உளவியலாளர் என்ற முறையில் ஓர் உண்மையைப் போட்டு உடைக்கிறேன். நாற்பது வயது வரை தொடர் வாசிப்பு இல்லாதவர்களுக்கு முதுமையில் மறதி நோய் வருவது உறுதி. நெருங்கிய உறவினர்களைக் கூட அடையாளம் காண முடியாத அளவிற்கு அந்த மறதி நோய் இருக்கும்.

    “நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு” என்று நூலையும் பண்புடைய நண்பர்களையும் இணைத்துப் பேசுகிறார் திருவள்ளுவர்.
  “தொடங்கையில் வருந்தும்படி இருப்பினும் ஊன்றிப்படி அடங்கா இன்பம் மறுபடி ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி” என்று மனத்தில் தைக்கும்படி பாவேந்தர் பாரதிதாசன் சொல்கிறார். ஆனாலும் நம்மவருக்கு எதுவும் எட்டவில்லையே. முட்டாள் பெட்டிக்குமுன் முடங்கிவிட்டனர்; கைப்பேசியில் கரைந்துவிட்டனர்; இணையத்தில் தம்மையே இழந்துவிட்டனர்.

   இனியும் காலம் கடத்தாமல் நம் குழந்தைகளை எல்லாம் மீட்டெடுத்து படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்த  சில முயற்சிகளைச் செய்தே ஆக வேண்டும்.

  பள்ளி, கல்லூரிகளில் வாரம் ஒரு பிரிவேளையில் பாடநூல் அல்லாத நூல்களைப் படிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
இந்தப் பொங்கல் நன்னாளில்  பின்வரும் உறுதிமொழிகளை ஏற்போம்.

இனி காசு கொடுத்து நூல்களை வாங்குவோம்.

வீட்டில் மனைவி மக்களுடன் சேர்ந்து நூல்களை வாசிப்போம்.

விடுமுறை நாள்களில் குடும்ப சகிதமாக நூலகத்திற்குச் செல்வோம்.

இனி நமது கடன் அட்டைகளுடன் நூலக உறுப்பினர் அட்டைகளும் சேர்ந்தே இருக்கட்டும்.

நம் குழந்தைகளுக்குப் பிறந்தநாள் பரிசாக நூல்களை வழங்கி மகிழ்வோம்.
திருமணங்களில் சீர்வரிசையில் புத்தகக் கட்டும் இருக்கட்டும்.

மொய்ப்பணம் வைக்கும்போது கூடவே ஒரு நூலையும் அன்பளிப்பாகத் தருவோம்.

தொடர்வண்டிப் பயணங்களில் கைப்பேசியை கோமா நிலையில் வைத்துவிட்டு நூல்கள் படிப்பதை வழக்கமாகக் கொள்வோம்.


    இவற்றையும் இவைபோன்ற பிறவற்றையும் சிந்தித்துச் செயல்படுத்தினால்தான் படிப்பறிவு இருந்தும்  படிக்காதவர் நிறைந்த தமிழ்நாடு என்னும் இழிநிலையைப் போக்கமுடியும்.

15 comments:

  1. நல்ல சாட்டையடி, இனியாவது மாறுவோம்.

    ReplyDelete
  2. ஐயா, இன்றைய இளைஞர்களுக்கு செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கமே இல்லாதபோது புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எப்படி வரும். உங்கள் பதிவைப் படித்தபின், என் வகுப்பில் மாணவர்களைக் கேட்டது நினைவில் வருகிறது. ஆசையே துன்பத்திற்குக் காரணம் எனக் கூறியவர் யார் என்று கேட்டேன். கிட்டத்தட்ட 26 மாணவர்கள் அதுவும் 12ம் வகுப்பில் 1000க்கு மேல் பெற்றவர்கள், 20 நிமிடம் கடந்தும் யார் என்பதை அவர்களால் யூகிக்கக்கூட முடியவில்லை. அது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி. இந்தக் கல்விமுறை படிப்பறிவையும்கற்றுத்தராமல், பட்டறிவையும் கற்றுத்தராமல் மாணவர்களை நீங்கள் குறிப்பிட்டது போல் கழுதையாகக்கூட இல்லை, கோவேறுகழுதைகளாக்குகிறது. ஆசிரியர்கள் பலரிடமும் வாசிக்கும் பழக்கம் காணாமல் போனதாலும், பணம் கொடுத்துப் பலர் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளாக வந்ததாலும் இந்த நிலை இருக்கத்தான் செய்யும்.

    ReplyDelete
  3. // வாசித்தலை நிறுத்துவதும் ஒருவகை மரணமே //

    உண்மை... உண்மை தான் ஐயா...

    ReplyDelete
  4. On reading this, I am reminded of Bacon: "Reading maketh a full man, conference a ready man and writing an exact man." During a recent interview for English teacher, I asked the candidates about "demonetisation". Nobody knew about it. This is the result of lack of reading habit. Many don't realize the pleasure involved in reading. Prof.Pandiaraj

    ReplyDelete
  5. வாசித்தலை நிறுத்துவதும் ஒரு வகை மரணமே....

    சிறப்பாகச் சொன்னீர்கள்.....

    நல்ல பகிர்வு. தொடர்ந்து இணையத்தின் வழி சந்திப்போம்....

    ReplyDelete
  6. அய்யா,பள்ளி மாணவர்களுக்கு புத்தகத்துடன் கவிதையும் எழுத வேண்டும் ; தமிழ் மற்றும் ஆங்கில கவிதையும் எழுதவேண்டும் என சொன்னவர் நீங்கள்
    அன்புடன் அருள்.காவல் துறை சென்னை.

    ReplyDelete
  7. தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வாசிக்காத நாட்கள் எல்லாம் சுவாசிக்காத நாட்கள்
    என்பர் நம் முன்னோர்

    ReplyDelete
  9. வாசிப்பு ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வருகிறது

    ReplyDelete
  10. வாசிக்க வாசிக்க வாழ்க்கை வளம் பெரும் என்பதை நீங்கள் நிரூபித்து வருகிறீர்கள் - நீதிபதி மூ. புகழேந்தி

    ReplyDelete
  11. வாசிக்க வாசிக்க வாழ்க்கை வளம் பெரும் என்பதை நீங்கள் நிரூபித்து வருகிறீர்கள் - நீதிபதி மூ. புகழேந்தி

    ReplyDelete
  12. தேவைக்காக, தேர்வுக்காக மட்டுமே கல்வி அறிவு என்ற நிலை காணப்படுகிறது. திரு.’சோ’ அவர்கள் துக்ளக் இதழ் தொடங்கும்போது சொன்ன ஒரு துணுக்குச்செய்தி. இரண்டு கழுதைகள் பேசிக்கொள்கின்றன புதுசா ஒருத்தன் துக்ளக் என்ற பத்திரிக்கையைத் தொடங்குறானாம். அப்படியா இனி தீனிக்குப் பஞ்சமில்ல பேப்பர் நிறையக்கிடைக்கும் எனப்பேசிக்கொண்டன. அன்றைய காலத்தில் பத்திரிகையை வாங்கிப்படிப்போர் குறைவு என்பதையே துணுக்குச் செய்தி சுட்டுகிறது. அதுபோலல்லாமல் வாசிக்கும் பழக்கமுடையவர்கள் கண்டிப்பாக நூல்களை வாங்கிப்படிக்கவேண்டும். அன்றைய ஓலைச்சுவடிகள் தான் இன்றைய இலக்கியங்கள், இலக்கியங்கள் வாழ்வியல் களஞ்சியங்கள். நூலகங்கள் சுவாச உறுப்புகள். வா.செ.கு, கவிதை,
    ஏடன்று கல்வி
    எழுத்தன்று கல்வி
    ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி
    அது வளர்ச்சி வாயில் - என கல்வியின் நிலையைக் குறிப்பிடுவார். வள்ளுவர் தொட்டனைத் தூறும் மணற்கேணி என்பார். கல்வி கற்றும் அக்கல்வி அறிவைப் பிறர் அறியும் வகையில் கூறாதவர்களை வள்ளுவர் இணருழ்த்தும் நாறா மலர் என்கிறார். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப்புகினும் கற்கை நன்றே - எல்லாம் அறிந்தவரும் இல்லை, எதுவும் அறியாதவரும் இல்லை எனவே யாரிடம் நமக்கு வேண்டிய கல்வி அறிவு உள்ளதோ அவரை நாடி அக்கல்வி அறிவை வயது வேறுபாடின்றி யாசிப்பது குற்றமல்ல. நல்ல நூல்களை நல்ல படைப்பாளர்களை நல்ல கருத்துக்களை அறிவதில் தவறில்லை. இறைவன் படைப்பில் கண்ணொளி காணமட்டுமல்ல, நல்ல நூல்களை வாசிக்கவும் தான். பாரதிதாசன் அறிவை விரிவு செய் என்பார். அறிவு நூல்கள் பல கற்றால் தான் கிட்டும்.
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), கரூர் - 5

    ReplyDelete
  13. வாசிப்பு என்பது மிகவும் தேவை! ஒரு மனிதனின் வாழ்க்கையில் எண்ணங்களைச் செயல்பாடுகளைக் கூட மாற்றும் சக்தி உண்டு. மாபெரும் மேதைகள், மனிதர்கள் எல்லாம் உருவானது அப்படித்தான்.. அருமையான பதிவு.

    கீதா: மேற் சொன்ன துளசியின் கருத்துடன், என் மகன் கல்லூரியில் படித்த போது வகுப்பில் ஆசிரியர் விவேகானந்தர் பற்றி ஏதோ ஒரு குறிப்பில் சொல்லிவிட்டு எத்தனை பேருக்கு இவரைப் பற்றித் தெரியும் (இவரை அல்ல...இவரைப் பற்றி) என்றவுடன் என் மகனும், மற்றொரு பையனும் மாத்திரமே கை உயர்த்தியிருக்கிறார்கள். இப்படித்தான் செல்லுகிறது இப்போதைய பெரும்பான்மையான இளைய சமுதாயம்.

    ReplyDelete