Wednesday, 15 November 2017

நாய் தொடங்கிய புத்தகக் கடை

   அமெரிக்காவில் டெல்லாஸ் நகரில் என் பெரிய மகள் டாக்டர் அருணா வசிக்கிறாள். ஒட்டாவாவிலிருந்து டெல்லாஸ் செல்லும் வழியில் விமானத்தைச் சற்று நிறுத்தச் சொல்லி நியூயார்க்கில் வசிக்கும் என் சகலை மகள் ஆனந்தி, அவள் பெற்ற சுட்டிக் குழந்தைகளைப் பார்ப்பதற்காக இறங்கிவிட்டோம்.

  நேற்று அந்தக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு உள்ளூர்ப் பொது நூலகத்திற்குச் சென்றிருந்தோம். இது நியூயார்க்கின் ஒரு பகுதியான ஜெரிக்கோ நகரில் உள்ளதால், இந்நூலகத்திற்கு ஜெரிக்கோ பொது நூலகம்(Jericho Public Library) என்று பெயர்.


    இருபதாயிரம் சதுர அடி பரப்பில் அமைந்த பெரிய நூலகத்தின் உள்ளே நுழைந்ததும் முதலில் நம் கண்ணில் படுவது குழந்தைகள் பகுதி. இந்தப் பகுதியில் ஒவ்வொன்றையும் கலை உணர்வுடன் பார்த்துப் பார்த்து அமைத்திருக்கிறார்கள். குழந்தைகளின் கண்ணைக் கவரும் வண்ணத்தில் விதவிதமான வடிவங்களில் இருக்கைகள் உள்ளன.    குழந்தைகளின் கைக்கு எட்டும் உயரத்தில் அமைந்த அழகான அளவான புத்தக அலமாரிகள், அவர்கள் மட்டும் பயன்படுத்துவதற்கேற்ற ஐபாட் மற்றும் கணினிகள், வெட்ட, ஒட்ட  வரைய வசதியாக பெரிய மேசைகள், கத்தரி, கிரையான்கள், வண்ணப் பென்சில்கள், அட்டைகள், தாள்கள் எனக் குழந்தைகள் உலகத்திற்குத் தேவையான அனைத்தும் ஏராளமாய் இருக்கின்றன. எல்லாமும் இலவசம்!

     நாங்கள் அழைத்துச் சென்ற குழந்தைகள் தத்தம் கைவேலைகளில் மூழ்கி விட்டதால் நான் அங்கே அடுக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கான நூல்களில் ஒன்றை எடுத்துப் புரட்டினேன். இல்லை இல்லை அதுதான் என்னைப் புரட்டிப் போட்டது.

   அந்த ஆங்கில நூலில் இருந்த மொத்த வாக்கியங்களும் முப்பதுக்கும் கீழேதான். அந்த எண்பது பக்க நூலில் எல்லாப் பக்கங்களிலும் கண்ணப் பறிக்கும் வண்ணப் படங்களே இருந்தன. ஒரு குழந்தை இந்த நூலை ஒருமுறை பார்த்தால், படித்தால், தொட்டு முகர்ந்தால் வாழ்நாளில் ஓராயிரம் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்னும் ஆர்வம் வந்துவிடும். நானே ஒரு குழந்தையாக மாறி முழுநூலையும் வைத்த கண் வாங்காமல் படித்து முடித்தேன்.

     அந்த நூலில் இருந்தது  நாய் பற்றிய ஒரு சிறுகதை; அதுவும் படக்கதை. அது ஓர் அழகான நாய். அதற்குப் புத்தகம் என்றால் மிகவும் பிடிக்கும். தினமும் படிக்கும். புத்தகத்தின் மீது படுக்கும்; புத்தகத்தின் வாசனையைப் பிடிக்கும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்னும் நல்ல நோக்கத்தில் ஒரு புத்தகக் கடை வைக்க எண்ணியது. ஊரின் மையத்தில் ஓர் அறையை வாடகைக்குப் பிடித்தது. நிறைய புத்தகங்களைத் தருவித்து முறையாக அடுக்கி வைத்தது. கடைத் திறப்புக்கான நாளும் வந்தது. அன்று காலையில் நேரத்தில் எழுந்து குளித்துத் தன்னை அழகுப்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியுடன் கடைக்குச் சென்றது. கடையைத் திறந்து வைத்து, வெல்கம் என எழுதப்பட்ட ஒரு பலகையை வெளியில் வைத்துவிட்டு, வாடிக்கையாளருக்காகக் காத்திருந்தது. நெடு நேரமாகியும் ஒருவரும் வரவில்லை; அதன் முகம் வாடியது.

     பிறகு ஒரு பெண்மணி வந்து, “சர்க்கரை கூடுதலாகப் போட்டு ஒரு தேநீர் வேண்டும்’ என்றாள். “மன்னிக்க வேண்டும். இது புத்தகக் கடை” என்று நாய் கூற அவள் சென்றுவிட்டாள். தொடர்ந்து சோகத்துடன் சோர்வாகப் படுத்துக் கிடந்தது.

  நீண்ட நேரத்திற்குப்பின் ஓர் ஆள் வந்து, “அஞ்சல் நிலையம் அருகில் எங்கே உள்ளது?” என்று கேட்டுவிட்டுப் போனார். இப்படியே ஒரு வாரம் சென்றது. ஒருவரும் வந்து புத்தகம் வாங்கவில்லை. என்றாலும்  குறித்த நேரத்தில் சென்று கடையைத் திறந்து வைத்தது. பொழுது போக வேண்டுமே என்று நாய் ஒரு நூலை எடுத்துக் கல்லாவில் அமர்ந்து  படிக்கத் தொடங்கியது. சிங்கம் பற்றிய அந்தக் கதைநூலை மெய்ம்மறந்து படித்தது. அந்தச் சிங்கத்தின் பின்னால் காட்டிலே சுற்றித் திரிந்தது. அடுத்து நிலாவுக்குப் போன நிர்மலா என்ற நூலைப் படித்தது. நிலாவுக்குச் சென்று நீல் ஆர்ம்ஸ்ட்ராங் சென்ற வழித்தடத்தை மோப்பம் பிடித்தது. தொடர்ந்து கணிப்பொறிக் கற்றுக் கலக்கு என்னும் நூலை எடுத்து வாசித்ததோடு நில்லாமல் ஒரு கணிப்பொறியை வாங்கி இயக்கவும் கற்றுக் கொண்டது!

  இப்படியே கடையில் இருந்த எல்லா நூல்களையும் அந்தச் சுட்டி நாய் படித்தது. அதனால் சோம்பல் அகன்றது; தன்னம்பிக்கை வளர்ந்தது. அறிவாளி நாயாக ஆனது. கடைக்கு வாடிக்கையாளர் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். அவர்கள் எந்த ஒரு நூலைப் பற்றி சிறு தகவலைச் சொன்னால் கூட உடனே அந்த நூலை நாய் எடுத்துக் கொடுத்தது. அந் நூலின் சிறப்புகளையும் சுருக்கமாகச் சொன்னது இதனால் வாடிக்கையாளர் கூட்டம் அலை மோதியது என முடிகிறது அந்தப் புத்தகம்.

 நீங்கள் நம்பமாட்டீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். நான் எப்பொழுதும் ஓர் இரவு முழுவதும் ஒருபொருள் குறித்த கனவையே(Thematic Dreams) காண்பவன். அவ்வகையில், நேற்று இரவு உறக்கத்தில் வந்த கனவு முழுவதும் அந்த நாயும் நானும்தான். நாய்க்கடையில் நான் சுமக்க முடியாத அளவுக்கு நூல்களை வாங்கியதால், அந்த நாயும் என்னுடன் வீடுவரை வந்து உதவியது.

   ‘வந்ததுதான் வந்தாய். என்னுடன் படுத்துக்கொள். விடிந்ததும் செல்லலாமே” என்று சொன்னவுடன் வாலைச் சுருட்டிக்கொண்டு படுத்தது.
  காலையில் கண்விழித்துப் பார்க்கிறேன். நிஜமாகவே போர்வைக்குள் ஒரு நாய்க்குட்டி படுத்துக் கிடக்கிறது. அதிர்ச்சியோடு போர்வையை விலக்கிப் பார்க்கிறேன்.

  அம்மாவுடன் படுத்திருந்தவன் எப்போது எழுந்துவந்து என்னருகில் படுத்தானோ தெரியவில்லை. என் பேரன் ஐந்து வயது ரோகன் அருகில் படுத்துக்கொண்டு என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்!
.....................................
முனைவர் அ. கோவிந்தராஜூ,

நியுயார்க்கிலிருந்து.

10 comments:

 1. குழந்தைகள் நூலகம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்
  மகிழ்வாக இருக்கிறது ஐயா
  நன்றி

  ReplyDelete
 2. SuperSir
  I will share with my students

  ReplyDelete
 3. சொல்லிச் சென்ற விதம் இரசிக்க வைத்தது.

  ReplyDelete
 4. உங்கள் கதை சொல்லும் பாணி சிறப்பு. கட்டுரை அருமை.

  ReplyDelete
 5. ஆமாம் ஐயா அங்கு நூலகம் என்பது அத்தனை அழகாக இருக்கும். நூலகம் என்றில்லை, புத்தகக் கடைகள் கூட உதாரணமாக பார்ன்ஸ் அண்ட் நோபில் கடைக்குள் தவழும் குழந்தைகள் கூட தவழ்வதற்கும், ஏறி இறங்கி விளையாடும் சிறி சறுக்கு மரங்கள், அப்புறம் இங்கு படத்தில் உள்ளது போல் அனைத்து வசதிகளும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை இருக்கும். புத்தகம் வாங்காவிட்டாலும் ஒன்றுமில்லை. அங்கிருந்து தகவல் நாம் குறித்து எழுதிக் கொண்டு வந்துவிடலாம். ரெஃபெரன்ஸ் புக் போல....குழந்தைகள் புத்த்கங்கள் எடுத்து வைத்துக் கொண்டுப் புரட்டி முகரலாம் வாசிக்கலாம் அப்படியே அங்கு வைத்துவிட்டு வந்துவிடலாம். வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம். நடுவில் காஃபி ஷாப் வேறு!! இருக்கும். இப்படி நான் 16 வருடங்களுக்கு முன்பு வியந்த ஒன்று. அங்கு செல்லும் குழந்தைகள் நீங்கள் சொல்லியிருப்பது போல் நிச்சயமாக நல்ல வாசிப்பாளராக உருவாகலாம். இதை விட அங்கு கால்நடை மருத்துவப் புத்தகம் ஒன்று நாம் அசந்து போவோம். புத்தகம் விலங்குகள் கார்ட்டூன்கள் போல் போடப்பட்டு, அதற்கு வலிகளைச் சொல்லுவது போலவும் அவை என்ன நோய்கள் என்றும் மருத்துவம் என்ன என்பது பற்றியும் நம் காமிக்ஸ் புத்தகம் வருவது போன்று இருக்கும். அதாவது மருத்துவம் படிப்போருக்கும் அயற்சி ஏற்படாத வகையில், ஆர்வம் ஊட்டும் வகையில், மகன் இங்கு படித்தாலும், அவனுக்குக் கற்றல் குறைபாடு இருந்ததால் அவனுக்கு கொஞ்சம் எளிதாக மனதில் பதிந்திட அப்புத்தகத்தை அவனே இணையத்தில் தேடி வாங்கி வைத்துள்ளான். இப்போது அவன் அங்குதான் இன்டெர்ன்ஷிப் செய்து கொண்டிருக்கிறான். அப்புத்தகத்தை நாமும் படித்துவிடலாம் அத்தனை அழகாகச் செய்திருக்கிறார்கள். பெரியவர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்குக் கேட்கவா வேண்டும்...

  உங்கள் படங்கள் அழகாக இருக்கின்றன. நாய் கதையும் அருமை. மற்றொன்றும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். குழந்தைகளுக்கான பல புத்தகங்களும் விலங்குகள் கதாபாத்திரங்களாகவே வரும் புத்தகமாக இருக்கும்...

  நீங்களும் குழந்தையாகவே மாறியிருப்பீர்களே! ஐயா!!

  கீதா

  ReplyDelete
 6. நூலகத்தில் உங்கள் அனுபவம் அருமை. குழந்தைகளுடன் இருப்பதென்றால் சுகம்தானே? நாயின் உதவியும் அன்பும் வியப்பில் ஆழ்த்தியது.

  ReplyDelete
 7. ஆஹா அருமையானதொரு பதிவை வடித்து என்னை அந்நூலகத்திற்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்!

  ReplyDelete
 8. ஆஹா அருமையானதொரு பதிவை வடித்து என்னை அந்நூலகத்திற்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்!

  ReplyDelete
 9. நூலகம் மனிதனின் உற்ற நண்பன். அறிவை விரிவு செய்யும் கூடம். அதிலும் குழந்தைகளுக்கு ஒரு தூண்டல் உணர்வை வெளிப்படுத்தும் அறிவுக் களஞ்சியம். சிறப்புடன் செயல்பட வாழ்த்துக்கள்.
  முனைவர் ரா.லட்சுமணசிங்
  பேராசிரியர்
  கரூர்

  ReplyDelete
 10. ஐயா, புத்தகம் என்பது மனிதனைப் புரட்டிப் போடும். அனுகுண்டால் அடங்காத மனிதர்கள் ஒரு புத்தகத்தால் அடங்குவர் எனும் பல சிறப்பு புத்தகத்திற்கு உண்டு என்பதை இக்கட்டுரை உறுதிப்படுத்துகிறது.

  ReplyDelete