Friday 3 November 2017

நூல் மதிப்புரை

  
சொல்லயில்
மரபுக் கவிதைகள்

  அண்மையில் நான் டொரெண்டோ தமிழ்ச் சங்கத்திற்குப் பேசச் சென்றிருந்தபோது தானே வந்து என்னிடத்தில் அறிமுகம் செய்து கொண்ட பேராசிரியர் சு. பசுபதி அவர்கள், தாம் எழுதிய சொல்லயில் என்னும் நூலில் வாழ்த்தொப்பமிட்டுத் தந்தார்.

    பார்த்தாலே வணங்கத் தோன்றும் நெடிய உருவம்; நட்புக் கதிர் வீசும் புன்னகை. நான் கரூர்க்காரன் என அறிந்ததும், “நானும் கரூரை அடுத்துள்ள வாங்கல்தான்” என்று கூறி பெருமகிழ்ச்சியுடன் கைகுலுக்கினார். அப்புறம் என்ன எங்களிடையே கொடுக்கல் வாங்கல் தொடங்கிவிட்டது!

   மறுநாள் ஒட்டாவா திரும்புவதற்கான  ஐந்து மணி நேர பேருந்துப் பயணத்தில் அவரிடம் பெற்ற நூலை எடுத்துப் பார்த்தேன்; படித்தேன்; படித்து முடித்தேன்; ‘படி’த்தேன் குடித்தேன்! வந்து இருநாள் கழித்து அந் நூலை மீண்டும் (சு)வாசித்தேன்.

    சொல்லயில் என்ற தலைப்பே என்னைப் புரட்டிப் போட்டது. அயில் என்றால் கத்தி என்று தெரியும். எதற்கும் இருக்கட்டும் என்று அகராதியில் பார்த்தபோது  அதிர்ந்து போனேன். வெங்காயம் வெட்டும் கத்தியன்று. அது அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் கத்தி என்று போட்டிருந்தது. சொல்+அயில்= சொல்லயில். பவணந்தியார் மெல்ல வந்து “தனிக் குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்னும் விதியால் சொல்லயில் ஆனது எனச் சொல்லிச் சென்றார்.

   அறுபத்தைந்து கவிதைகள்; அத்தனையும் மரபுக் கவிதைகள். கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்தாலும்  யாப்புப் பிழை என்பது மருந்துக்குக்கூட தென்படவில்லை. ஆசிரியப்பாவில் சிலம்பம் ஆடுகிறார்; சிந்துவில் சந்தம் பாடுகிறார்; வெண்பாவில் வெளுத்துக் கட்டுகிறார். ஆனால் தமிழ்ப் பேராசிரியருமல்லர். இவர் சென்னை ஐ.ஐ.ட்டி யில் படித்த பொறியியல் பேராசிரியர் என்று அறிய வந்தபோது  வியப்பு மேலிட்டது. சர் சி.வி.இராமன் அவர்களிடமிருந்து பரிசும் பாராட்டும் பெற்றவர் என அறிந்தபோது வியப்பு பன்மடங்காகியது.

நூலாசிரியர் பேராசிரியர் முனைவர் சு.பசுபதி

“கணினி மூலம் இணையம் புகுந்து/ கவிதை எழுத வாங்க/ அணிக ளிட்டு அன்னைத் தமிழுக்/ கழகு சேர்க்க வாங்க” என்ற அழைப்புடன் கவிதை நூல் தொடங்குகிறது. அக் கவிதையின் ஊடே, “தீர்க்க மான தேடல் விளைக்கும்/ தெளிவின் வெளிச்சம் கவிதை” என்ற கவிதைக்கான புது விளக்கத்தையும் தருகிறார். அந்தத் தெளிவின் வெளிச்சம் நூல் முழுவதிலும் பரவிக் கிடப்பதை வாசகர் உணர முடியும்.

 
சென்னையில் கண்ணகிச் சிலை அகற்றப்பட்டதை ஒரு கவிதையாகப் படைக்கிறார். அதில், ”நாட்டின் அரசியல் நாறுதடி/ இந்த ஞாலமே பார்த்து நகைக்குதடி’ என்று போட்டு உடைக்கிறார். இது தற்கால அரசியல் நடப்புக்கும் பொருந்தி வருகிறதே!

    மற்றொரு கவிதையில், ‘இந்தியாவின் தூதரென்றே இதயத்தில் எண்ணு/ இங்கு எந்த வேலை செய்தாலும் எடுப்பாகப் பண்ணு” என்று இவர் கூறும் அறிவுரையை வெளிநாடு செல்லும் இந்திய இளைஞர்கள் தம் மனத்தில் பதியம் போட்டுக்கொள்ள வேண்டும்.

    வாழ்வில் வெற்றியடைய திருக்குறளைப் படி, அதிலும் வினைத்திட்பம் என்னும் அதிகாரத்தைப் படி என ஆற்றுப்படுத்துகிறார்.
“அறுபத்தே ழாமதி காரம்- விரியும்
அங்குள்ள பத்தும் அறிவுப்பூ ஆரம்”
என்று ஆவணப் படுத்துகின்ற பாங்கு மிக அருமை.

   உழைப்பால் மட்டுமே உருவாவது சாதனை என்பதைப் பல கவிதைகளில் சுட்டிச் செல்கிறார். ஓரிடத்தில், “நுனிப்புல் புசித்திடும் நொய்யர்கள் –அரும்/ நூதனம் ஒன்றும் படைப்பதில்லை” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டெனக் கூறுகின்றார். இப்போது புரிகிறதா சொல்லயில் என்னும் தலைப்பின் நுட்பம்?

   வெண்பாப் புனைவது இவருக்குக் கைவந்த கலை போலும். ஒரே ஈற்றடியைக் கொண்ட பல பாடல்களை ஒரு தலைப்பின் கீழ் புனைந்துள்ள பாங்கு மிகச் சிறப்பாகும்.
“மெல்லிடையாள் மெளனக்கண் வீச்சினால் தந்தனள்
சொல்லில் தெரியாச் சுகம்” என்பது ஒரு பாவின் பாதி.

“செல்லமாய்க் கொஞ்சிடும் சேயின் மழலை தரும்
சொல்லில் தெரியாச் சுகம்” என்பது மற்றொரு பாடலின் பாதி.

இப்படிக் கண்ணப்பனைப் போல சுவைத்துச் சுவைத்துப் படைத்து விட்டால் நீங்கள் படிக்கும்போது சுவை தோன்றாது.

  மரபு வழிக் கவிதை எழுத விழைவோரும், மரபுப் பாக்களை விரும்பிப் படிப்போரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

நூல் பற்றிய விவரம்:
தலைப்பு: சொல்லயில்/ ஆசிரியர்: பேராசிரியர் சு.பசுபதி
வெளியீடு; எல்கேஎம் பப்ளிகேஷன்,சென்னை பேசி;044-24361141
126 பக்கங்கள்; எண்பது ரூபாய்



5 comments:

  1. உங்கள் ஊக்கச் சொற்களுக்கு நன்றி !

    ReplyDelete
  2. அருமையான நூல் மதிப்புரைக்கு நன்றி.

    ReplyDelete
  3. "சொல்லில்" நூல் மதிப்புரை கண்டு மகிழ்ந்தோம். அதுவும் ஒரு பொறிஞர் கவிஞரான கதை கேட்டு மேலும் மகிழ்ந்தோம். எங்கள் ஊர் நடுப்பட்டியை சார்ந்த பொறியாளர் முவ. பரமசிவம் என்பவர் "பரணர்" என்கிற புனைபெயரில் "தமிழ் ஐந்திணை" என்ற ஓர் அருமையான அகநூலை சிந்து வெண்பாவில் யாத்த செய்தியை இங்கே பதிவிடுவதில் எமக்கு மீண்டும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. "சொல்லயில்" நூல் மதிப்புரை என்பது தவறாக பதிவாகிவிட்டது.

    ReplyDelete
  5. சொல்லயில் நூல்மதிப்புரை வெகு சிறப்பு ஐயா. பேராசிரியர் பசுபதி அவர்கள் தளத்தில் எழுதியும் வருகிறார் என்று நினைக்கிறேன். கனடாவில்தான் இருக்கிறார். நாங்கள் அவரது தளம் வாசிப்பதுண்டு. ஆனால் கருத்து இடுவதில்லை. ஏனென்றால் அவரது அறிவிற்கும் எழுத்திற்கும் கருத்திடும் அளவிற்கு புலமையோ அறிவோ இல்லை என்பதால், வாசித்துவிட்டு வருவோம். நிறைய தகவல்கள், நல்ல கருத்துகள் அடங்கிய தளம். உங்கள் தளமும் கூட முதலில் அப்படித்தான் வாசித்து வந்தோம். பின்னர் மெதுவாகத்தான் கருத்திடத் தொடங்கினோம். நாங்கள் வாசிக்கும் தளமும் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பசுபதி ஐயா அவர்களும் ஒருவரே என்றுதான் தோன்றுகிறது அப்படி என்றால் அவரது தளம் இது http://s-pasupathy.blogspot.in

    கீதா

    ReplyDelete