Wednesday, 10 July 2019

கரூரில் வாழ்ந்த கர்நாடக இசைக் கலைஞர்கள்


    சென்ற நூற்றாண்டில் கரூரில் கொடிகட்டிப் பறந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் பலராக இருந்தனர். கரூர் சின்னசாமி ஐயர் என்பவர் புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஆவார். 1882 ஆம் ஆண்டில் பிறந்த இவர் இளமையிலேயே இசையில் நாட்டமுடையவராக விளங்கினார். முதலில் தன் தந்தையாரிடமும், பின்னர் தன் தமையனார் தேவுடு ஐயரிடமும் வயலின் வாசிக்கக் கற்றார்.

     1904 ஆம் ஆண்டு மைசூர்  மகாராஜா இவரை அழைத்து விருதும் விருந்தும் அளித்துச் சிறப்பித்தார். முதலில் புகழ் வாய்ந்த குரலிசைக் கலைஞர்களுக்குப் பக்க வாத்தியமாக வயலின் வாசித்த சின்னசாமி ஐயர் பின்னர் பல மேடைகளில் தனிக் கச்சேரியும் செய்தார். இலங்கை, மலேயா, பர்மா ஆகிய வெளிநாடுகளுக்கும் சென்று வயலின் வாசித்தார். சங்கீத கலாநிதி என்னும் சிறப்பு மிக்க விருதையும் பெற்றார்.
கரூர் சின்னசாமி ஐயர்

     கரூர் கே.எஸ்.வெங்கட்ராமையா என்பவர் பாப்பா என அன்புடன் அழைக்கப்பெற்ற வயலின் மேதையாவார். 1901 ஆம் ஆண்டு பிறந்தவர். முதலில் தன் தந்தையார் ஸ்ரீகந்தையர் அவர்களிடம் வயலின் கற்றார். பின்னர் மேலே குறிப்பிடப்பெற்ற கரூர் சின்னசாமி ஐயர், தேவுடு சகோதரர்கள் ஆகியோரிடம் வயலின் வாசிக்கக் கற்றார். பாரம்பரிய இசைக் கலாச்சாரத்திலிருந்து சற்றும் பிறழாமல் வயலின் வாசிக்கும் மாமேதை என்னும் பெயரைப் பெற்றார்.
கே.எஸ்.வெங்கட்ராமையா
     அந்தக் காலத்துத் திருவாங்கிதூர் மன்னரின் அவைக்கள இசைக்கலைஞராகத் திகழ்ந்தார் என்பது தனிச் சிறப்பாகும். தன் அளவற்ற இசைப்புலமையின் காரணமாக சங்கீத கலாநிதி விருது, சங்கீத நாடக சங்க விருது, சங்கீத நாடக அகாடமி விருது முதலிய விருதுகளைப் பெற்றார்.

     அடுத்து, கரூரில் தோன்றிய புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் திரு.பி.குப்புசாமி ஐயர். இவர் கரூர் சின்னசாமி ஐயரின் தலை மாணாக்கர் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். அந்தக் காலத்தில் டெக்கான் ரேடியோ என அறியப்பெற்ற ஹைதராபாத் வானொலியில் முப்பது ஆண்டுகள் நிலையக் கலைஞராகப் பணியாற்றினார்.  தன்னுடைய 91 ஆம் வயதில் இதே வானொலியில் வயலின் வாசித்து மிகுந்த பாராட்டு பெற்றார். தன் 95ஆம் வயதில் காலமானார்.  அவருடைய மனைவி இராஜலட்சுமியும் சிறந்த வானொலி இசைக்கலைஞர் ஆவார்.

    பிரம்மஸ்ரீ கரூர் டி.கிருஷ்ணமூர்த்தி பாகவதர் நாம சங்கீர்த்தனக் கலைஞராகத் திகழ்ந்தவர். கரூர் துரைசாமி ஐயரின் மகனாகப் பிறந்து, மாயவரம் வைத்தியநாதய்யர், மதுரை மணி ஐயர், ஜி.என்.பாலசுப்ரமணியம் போன்றோரிடம் முறையாகப் பாடம் கற்றவர். புதுக்கோட்டை பிரம்மஸ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதசாமி அவர்களின் சீடரும் ஆவார். இவரது பஜன் கச்சேரிக்குக் கூட்டம் அலைமோதும். புகழ் வாய்ந்த குரலிசைக் கலைஞராகத் திகழ்ந்த இவர் பல உயரிய விருதுகளைப் பெற்றவர் என்றாலும் அவை பற்றிய விவரம் கிடைத்தில.

     இவர்களைப் பற்றிய மேல் தகவல்கள் வேண்டி நகர மாந்தர் சிலரிடம் தொடர்பு கொண்டேன். ஆனால் எனக்கு ஏமாற்றமே எஞ்சியது.

    ஒவ்வொரு ஊரிலும் அந்தந்தக் காலக்கட்டத்தில் வாழும் மாமனிதர்கள் குறித்த  விவரங்களைத் தொகுத்து நூலாக ஆவணப்படுத்த வேண்டும். இணையத்தில் இட்டுவிட்டால் யார் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

6 comments:

 1. Karur is a land of legendary figures in history,literature,spirituality,business,music,agriculture,education,governance & What not ? Proud to live in Karur !

  ReplyDelete
 2. அருமையான கலைஞர்கள் பற்றிய பதிவு ஐயா.

  //ஒவ்வொரு ஊரிலும் அந்தந்தக் காலக்கட்டத்தில் வாழும் மாமனிதர்கள் குறித்த விவரங்களைத் தொகுத்து நூலாக ஆவணப்படுத்த வேண்டும். இணையத்தில் இட்டுவிட்டால் யார் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.//

  மிக மிக அருமையான முயற்சி. ஆவணப்படுத்துங்கள் ஐயா. மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்த்துகள்.

  கீதா

  ReplyDelete
 3. பிரம்மஸ்ரீ கரூர் டி.கிருஷ்ணமூர்த்தி பாகவதர்.......இவர் துரை சாமி ஐயர் அவர்களின் புதல்வன். பாகவதர் அவர்கள் அபாங்க் பாடுவதில் வல்லவர். இவரது ஸ்டைல் ஜிஎன்பி பாணி. இவரைப் பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் தெரியும். நாமசங்கீர்த்தத்தில்தான் ஆர்வம் அதிகம்.

  இதோ ஒரு சுட்டி தருகிறேன் ஐயா.

  http://namasmaran.org/index.php/bk-2013-01-sri-karur-krishnamoorthy/

  கீதா

  ReplyDelete
 4. குப்புசாமி ஐயர் பற்றியும் கொஞ்சம் தெரியும்.

  இணையத்தில் சில தகவல்கள் கிடைக்கின்றன ஐயா.

  கீதா

  ReplyDelete
 5. தங்களின் தேடல் தொடரட்டும் ஐயா...

  நன்றி...

  ReplyDelete
 6. கரூரில் வாழ்ந்த இசைக்கலைஞர்கள் பற்றிய பதிவு. அருமை. காலக்கடிகாரத்தால் மறைந்து போனவர்களை நாம் மறந்து போவதும் இயற்கையே எனலாம். ஆனால் வரலாற்றுப்பதிவுகள் முக்கியம். பின்னால் தொடரும் சந்ததியினருக்கு இன்னார் இன்ன கலைகளினால் உலகறியப்பட்டவர் என தெரிவிக்க ஆவனங்கள் வேண்டும். இருந்தும் இறந்தும் உலகால் அறியப்பட்டவர்கள் சிலரே. கற்ற கல்வி ஏழு பிறப்பிற்குத் தொடரும் என வள்ளுவர் கூறியதைப் போன்று கலைகளும் அழியக்கூடியவை அல்ல. அதுவும் கல்வியே. அதுவும் தொடர வேண்டும். கருவூரின் அடையாளங்களைத் தேடுவோம். தங்களின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன்.
  Dr.R.LAKSHMANASINGH
  KARUR

  ReplyDelete