Saturday 21 September 2019

உலக மறதி விழிப்புணர்வு நாள் செப்டம்பர் 21


   கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனிதருக்கு வரும் இன்பங்களைவிட துன்பங்களே அதிகம் எனத் தோன்றுகிறது. அவற்றிலும் விதிவசத்தால் வரும் துன்பங்களைவிட வரவழைத்துக்கொள்ளும் துன்பங்களே அதிகம்.

   மறதியால் வரும் துன்பங்கள் பலப்பல. படித்ததெல்லாம் மறந்துபோய், தேர்வறையில் பேய் அறைந்த மாதிரி உட்கார்ந்திருந்த அனுபவம் பலருக்கும் உண்டு. கார் சாவியை எடுக்காமல் இறங்கி, பூட்டிக்கொண்ட காரின் கதவைத் திறக்கமுடியாமல் தவித்த அனுபவம் எல்லோருக்குமே இருக்கும்.

   மின்சாரக் கட்டணம் கட்ட மறந்து ஓர் இரவு முழுதும் இருளில் தவித்தவர்களையும், அறிமுக ஆவணத்தை எடுக்க மறந்து தொடர்வண்டிப் பயணத்தில் பாதியில் இறங்கியவர்களையும் நான் அறிவேன்.

   என் நண்பருக்கு இருந்த மறதி காரணமாக, அவர் மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போய்விட்டார். மனைவியுடன் கடைத்தெருவுக்குச் சென்றவர், பூ வாங்கச் சென்ற மனைவியை மறந்துவிட்டு, பைக்கைக் கிளப்பிக்கோண்டு வீடுவந்து சேர்ந்துவிட்டார்!

   வைத்த இடத்தை மறந்து தேடுவதில்தான் மனிதனின் மிகுதியான நேரம் பாழடிக்கப்படுகிறது என ஓர் ஆய்வு சொல்கிறது.

   எதையும் எழுதி வைக்கும் வழக்கம் இருந்தால் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் வராது. இந்தச் சிக்கலால்தான் உறவும் நட்பும் கெடுகிறது.

   எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிற திருவள்ளுவர் மறதி குறித்து என்னதான் சொல்கிறார்?.

1.       மிகுதியான மகிழ்ச்சி காரணமாக மறதி ஏற்படும்.

2.       நல்ல அறிவாளியை வறுமை கெடுப்பதுபோல மறதி ஒருவனது புகழைக் கெடுத்துவிடும்.

3.       மறதியோடு வாழ்வார்க்குப் புகழ் வராது.

4.       மறதி உடையவனிடத்தில் பாதுகாப்பின்மை உணர்வு அதிகம் இருக்கும்.

5.       நினைவு வைத்துக்கொண்டு செயல்படாத ஒருவன் மறதியால் வரும் துன்பங்களுக்காக வருந்த வேண்டியிருக்கும்.

6.       மறதியில்லாத இயல்பு ஒருவருக்கு வாய்த்தால் அதைவிட சிறந்தது எதுவுமில்லை.

7.       நினைவாற்றல் என்னும் ஒரு கருவி மட்டும் உடையவருக்குச் செய்ய முடியாத அரிய செயல் எதுவுமில்லை.

8.       அறநூல்கள் குறிப்பிடும் செயல்களைச் செய்ய மறந்தவருக்கு ஏழு பிறவிகளிலும் நன்மை இல்லை.

9.       மகிழ்ச்சியில் கூத்தாடி கடமை மறந்து துன்பம் உற்றவரை, நீ மகிழ்ச்சியில் மிதக்கும்போது நினைவில் கொள்.

10.   மறதி நோய் இல்லாதவன் தான் நினைத்த செயலை எளிதாக முடிக்க முடியும்.

அதிகாரம் 54: பொச்சாவாமை
குறள் 531 முதல் 540 முடிய


4 comments:

  1. நல்ல பகிர்வு
    இன்று உலக அமைதி தினமும்கூட...

    ReplyDelete
  2. முடிவுரை - சிறப்பு...

    அருமை... அருமை ஐயா...

    ReplyDelete
  3. நன்று! சுஜாதா ஒருமுறை இல்லை.... பல முறை சொல்லக் கேட்டுருக்கிறேன். மனிதன் பெற்ற வரங்களிலே முதன்மையானவை "மறதியும்... வலியும்...!" என்று. ஆம், நினைவு என்கிற பெயரில் குப்பைகளைச் சுமந்து கொண்டிருந்தால்....?
    "Empty Cup" என்கிற ZEN கதை எல்லோரும் அறிந்ததே!
    அதற்காக பூ வாங்க வந்த மனைவியை "அம்போ" என்று விட்டுவிட்டுப் போகும் அளவிற்கான மறதியை....?

    ReplyDelete
  4. நல்ல அருமையான கட்டுரை. மறக்காமல் படிக்க வேண்டும்.

    ReplyDelete