Wednesday 22 April 2020

புரிதல் இல்லாத புல்லறிவாளர்கள்


   மகுடத் தொற்று நச்சில் நோய்19. இதன் பிடியில் சிக்கி பதினைந்து நாள்கள் போராடித் தோற்றுப் போனார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ். தன் மரணத்திற்குப்பின் அரங்கேறிய சோக நிகழ்வுகளைக் கண்ட அவரது ஆன்மா அமைதியடையுமா என்றால் அடையாது என்றே சொல்லத் தோன்றுகிறது,

     
Dr.Simon Hercules
   சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து அவரது உடலைத் தாங்கிய அவசர ஊர்தி கல்லறைக்கு விரைகிறது. அங்கே புரிதல் இல்லாத புல்லறிவாளர் சிலர் ஒன்று கூடி வாகனத்தைத் தடுக்கிறார்கள். கல்லறையில் அடக்கம் செய்ய மறுக்கிறார்கள். மருத்துவர் சைமனின் உறவினர்கள் கெஞ்சியும் பார்க்கிறார்கள். நிலைமை மோசமாகி ஒரு கட்டத்தில் கலவரம் செய்தோர்  காட்டிமிராண்டித் தனமான தாக்குதலில் ஈடுபட உடலை அப்படியே போட்டுவிட்டு உறவினர்கள் ஓடிப்போகிறார்கள். சற்று நேரம் கழித்து அருகில் உள்ள இந்துக்கள் மயானத்தில் யாரும் தடுக்காத நிலையில் மருத்துவரது உடல் நல்லடக்கம்(?) செய்யப்படுகிறது. பிறகு காவல்துறையினர் வந்து சிலரைக் கைது செய்தனர் என்பது தனிக்கதை.

    இந்த நிகழ்வு முதல்வரின் கவனத்தை எட்டியதும், உடனே மருத்துவர் சைமனின் மனைவியைத் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததோடு, இனி மகுடத்தொற்று நச்சில் பாதித்து மருத்துவர், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் எவரேனும் இறக்க நேரிட்டால் காவல்துறையினரின் பாதுகாப்புடன் உடல் அடக்கம் செய்யப்படும் அல்லது எரியூட்டப்படும் என அறிவித்துள்ளார். இது சரியான நேரத்தில் சரியாக எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த நடைமுறை பொதுமக்கள் அனைவருக்கும் பொருந்தும் என அறிவிக்க வேண்டும்.

      எங்கோ பிறந்து இங்கே வந்து பணியாற்றிய அன்னை தெரசா அவர்கள் இறக்கும் தருவாயில் உள்ள ஏழை எளியவர்களுக்கு ஓடோடி உதவிகள் செய்தார். என்ன காரணம்?. சாகக் கிடக்கும் ஒருவர் சாகும்போது மரியாதையுடன் சாக வேண்டும்; மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது.

   தம்முடன் வாழ்ந்து மடியும் சக மனிதருக்கு இறுதி மரியாதையைக் கொடுக்க மறுக்கும் மனிதர்களை எந்த வகையில் சேர்ப்பது?

     மகுடத்தொற்று பாதித்து ஒருவர் இறக்க நேர்ந்தால் அடுத்த சில நொடிகளில் அவரது உடலில் உள்ள நச்சில்களும் இறந்துவிடும் என்பது அறிவியல் உண்மை. எந்த நச்சிலும் எண்பது டிகிரி ஃபாரன் ஹீட் அளவுக்கு உடல் வெப்பம் குறைந்தால் அங்கு உயிர் வாழாது.

     அந்த மருத்துவர் சைமனின் சக மருத்துவர் ஒருவர் பதிவிட்டுள்ள காணொளிக் காட்சியை இணைத்துள்ளேன். நான் இங்கே பதிவு செய்துள்ளது நிகழ்ந்த சோகத்தின் ஒரு துளி. மீதியைக் காணொளியைப் பார்த்து வாசகர்கள் தெரிந்து கொள்க. காணொளியை என்னும் https://youtu.be/wOW6qVlfDAw இணைப்பில் காண்க.

8 comments:

  1. நெஞ்சு பொறுக்குதில்லையே ஐயா...

    ReplyDelete
  2. தொற்றால் மரணிக்கும் களப்பணியாளக் குடும்பத்தினருக்கு ரூபாய் ஐம்பது லட்சம் கருணைத்தொகை அறிவித்துள்ள முதல்வரைப்பாராட்டுவோம். கடைசிவரையிலும் எல்லா ஞாயிறும் அவர் வணங்கிய கடவுளே அவரைக் கை விட்டதும் வருத்தமே

    ReplyDelete
  3. வேதனையாக இருக்கிறது ஐயா

    ReplyDelete
  4. மிக மிக வேதனையான விஷயம் ஐயா. மக்கள் அல்லர் அறிவிலிகள்...அராஜகம்...மனித நேயம் மறந்த அறிவிலிகள்

    கீதா

    ReplyDelete
  5. வேதனை மிக்க விஷயம் ஐயா. நானும் செய்தித்தாளில் வாசித்தேன். இப்படியுமா நான் வளர்ந்த தமிழ்நாட்டில் என்று மனதை வேதனைபடச் செய்த விஷயம்.

    துளசிதரன்

    ReplyDelete
  6. வெட்கப்படவேண்டிய, வேதனைப்படவேண்டிய நிகழ்வு ஐயா. இனியாவது திருந்துவார்களா எனப் பார்ப்போம். (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

    ReplyDelete
  7. இந்த வேதனை சொல்லிமுடியாதது. மக்களுக்காக தியாகம் செய்த இவரின் ஆன்மா இவர்களைத் தண்டிக்காமல் விடாது. உருக்கமான பதிவு.

    ReplyDelete
  8. வணக்கம்
    அய்யா
    வேதனை தரும் நிகழ்வு

    தமிழ் மிக மிக நேர்த்தி
    மகுடத் தொற்று
    அருமையான பதம்

    ReplyDelete