Friday 15 May 2020

நினைவில் நிற்கும் நிலவுக் கவிஞர்



  கு.மா.பா. என அனைவராலும் அறியப்பட்ட குறிச்சி மாரிமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள வேளுக்குடி என்னும் கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர்.

    இளமையில் தன் தந்தையை இழந்த பாலசுப்பிரமணியம் தன் தாயார் கோவிந்தம்மாளிடம் தேவாரம், திருவாசகம் போன்றவற்றைத் தெளிவாகக் கற்றார். வறுமை காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் ஆறாம் வகுப்பில் இடைநின்ற மாணவராக வெளியேறி விவசாயக் கூலி, மளிகைக் கடை உதவியாளர், துணிக்கடைப் பணியாளர் எனப் பற்பல அவதாரங்களை எடுத்தார்.

    இடை நின்ற மாணவர் என்றாலும் அவரிடத்தில் இருந்த இடையறாது கற்கும் ஆர்வம் கடுகளவும் குறையவில்லை. புதுமைப்பித்தன், கு.ப.இராஜகோபாலன், பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் போன்றோரின் படைப்புகளை எழுத்தெண்ணிப் படித்தார். அதன் காரணமாக இருபது வயதை எட்டுமுன்பே அக்காலத்தில் வெளியான நவயுகன், திருமகள், சண்டமாருதம், பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற இதழ்களில் அவர் எழுதிய கவிதைகள் வெளிவந்தன. பாரதிதாசன் தலைமையில் நடந்த ஒரு கவியரங்கில் பங்கேற்கும் வாய்ப்பும் கிட்டியது.
    இவரது எழுத்தாற்றலைக் கண்ட சி.பா.ஆதித்தனார் தான் மதுரையில் .நடத்திவந்த ‘தமிழன்’ இதழுக்குத் துணை ஆசிரியராக நியமித்தார். அப்போது அவருக்கு வயது இருபத்திரண்டு. பின்னர் சில ஆண்டுகளுக்குப்பின் கோவை மாநகருக்குச் சென்று வீர கேசரி, திருமகள் ஆகிய இதழ்களிலும் பணியாற்றினார். அதற்குப்பின் இலங்கை சென்று கொழும்பு நகரிலிருந்து வெளிவந்த வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராய்ப் பணியாற்றி, நம் நாடு விடுதலைப் பெற்றதும் ஊர் திரும்பினார்.

     பிறகு எல்லோரையும் போல அவரும் தன் முப்பதாவது வயதில் பிழைக்க வழிதேடி சென்னைக்குச் சென்றார். சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் நடத்தி வந்த ‘தமிழரசு’ இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். அக் காலக்கட்டத்தில் திரைப்பட இயக்குநர் ப.நீலகண்டனுடன் நட்பு ஏற்பட்டு, பின்னாளில் அவரது பரிந்துரையால் ஏ.வி.எம் நிறுவனத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். அப்போது அறிஞர் அண்ணாவின் நாவல் ‘ஓர் இரவு’ படமாகிக் கொண்டிருந்தது. ஒரு காட்சியில் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் ஒரு பாடலை எழுதி இயக்குநரிடம் கொடுத்தார். அது அருமையாக அமைய மேலும் இரண்டு பாடல்களை எழுதச்சொன்னார் இயக்குநர்.

    இப்படி எதேச்சையாகத் தொடங்கிய பாடல் எழுதும் பணி குறுகிய காலத்தில் அவருக்குப் பொருளையும் புகழையும் ஒருசேர ஈட்டித் தந்தது. கொஞ்சும் சலங்கையில் இடம்பெற்ற ‘சிங்கார வேலனே வேலா’ என்னும் அவரது பாடல் பட்டித் தொட்டிகளில் எல்லாம் அவரைப் பற்றிப் பேசவைத்தது.

   உத்தமபுத்திரன்(1958) படத்தில் வரும்  ‘யாரடி நீ மோகினி கூறடி’ என்னும் பாடல் இன்றும் தொலைக்காட்சிகளில் வாரம் இருமுறையாவது ஒளிபரப்பப்படுகிறது.. இந்தப் பாடல் காட்சிக்காகவே படத்தைப் பலமுறைகள் பார்த்த இரசிகர்கள் மிகப்பலராக இருந்தனர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த இரசிகர்களில் நானும் ஒருவன் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன?

     அவர்தம் வாழ்நாளில் ஐம்பத்தெட்டுப் படங்களுக்கு ஏறக்குறைய நூற்று எழுபது பாடல்கள் எழுதினார். அவர் எழுதியது அறுநூறு பாடல்கள் என்று சிலர் குறிப்பிட்டாலும் அதற்கான ஆவணச்சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

  பாடல் எழுதி ஈட்டிய பணத்தைப் படம் எடுக்கிறேன் என்று சொல்லிப் பாழாக்காமல் சென்னையில் வீடுகள் மனையிடங்கள் என்று அசையாச் சொத்தாகச் சேர்த்ததால் இன்று அவரது வாரிசுகள் வளமாக வாழ்கின்றனர்.

   எழுபது எண்பதுகளில் பாடல் எழுதும் வாய்ப்புகள் அதிகம் இல்லாத நிலையில் நாவல் சிறுகதைகளை எழுதினார். கங்கை அமரன் இசையில் உருவான கனவுகள் கற்பனைகள் என்னும் படத்தில் அவர் எழுதிய வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே என்பது அவரது நிறைவுப் பாடலாய் அமைந்தது.

  தன் எழுபத்து நான்காம் வயதில் வழக்கம் போல் காலையில் எழுந்து செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தபோது மயங்கிச் சாய்ந்தவர் மண்ணுலகைவிட்டு விண்ணுலகை அடைந்தார். அவர் மறைந்த நாள் 4.11.1994.

    இவரை ‘நிலவுக் கவிஞர்’ எனக் குறிப்பிடும் அளவிற்கு நிலவைப் பாடுபொருளாக வைத்து எழுதிய பாடல்கள் பலவாக உள்ளன. அதிலும் தங்கமலை ரகசியம்(1957) படத்தில் வரும் ‘அமுதைப் பொழியும் நிலவே’ என்னும் பாடல் காலத்தால் அழியாத காவியமாக இன்றும் செவியில் பாயும் தேனாகவே விளங்குகிறது. அந்தப் பாடல் வரிகள் பின்வருமாறு:
அமுதை பொழியும் நிலவே/ நீ அருகில் வராததேனோ?

இதயம் மேவிய காதலினாலே/ ஏங்கிடும் அல்லியைப் பாராய்
புதுமலர் வீணே வாடிவிடாமல்/ புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ? நீ அருகில் வராததேனோ?
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே மறந்தே ஓடிடலாமா?
இனிமை நினைவும்  இளமை வளமும் கனவாய் கதையாய்
முடியும் முன்னே அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

  எளிய சொற்களைக் கொண்டு எழுதப்பட்ட அந்தக் காதல் பாட்டை அக்காலத்தில் படித்தவர் பாமரர் என்ற வேறுபாடின்றி அனைவரும் பாடி மகிழ்ந்தனர்.

  அம்பிகாபதி படத்தில் வரும் ‘மாசிலா நிலவே நம்...’. என்னும் பாடலும் நம் நினைவில் நீங்காது நிற்பதாகும்.

   திரைப்படத் துறையில் சமகாலத்தில் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், மருதகாசி, வாலி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் பாராட்டும் வகையில் மகாகவி காளிதாஸ் படத்தில் இடம்பெற்ற ‘மலரும் வான் நிலவும்’ என்ற பாடல் உச்சத்தைத் தொட்டது.

   ‘வானமீதில் நீந்தியோடும்’ வெண்ணிலா (படம்: கோமதியின் காதலன்) என்ற பாட்டும் குறிப்பிடத் தகுந்தது.

  ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ எனத் தொடங்கும் பாடல் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் இடம்பெற்றது. அதில் இடம்பெறும் நான்கு வரிகள் காதலின் சிறப்புக்குக் கட்டியம் கூறுவதாய் அமையும்.
அன்பில் ஊறும் மெய்க்காதல் போலே பாரிலே
இன்பம் ஏதும் வேறில்லையே ஆருயிரே
கன்னல் சாறும் உன் சொல்லைப்போல் ஆகுமோ-என்னைக்
கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ?

   இவருடைய நிலவுப் பாடல்களை மட்டும் தனியாகத் தொகுத்து ஆய்வு செய்து பிஎச்.டி பட்டம் பெறலாம். அந்த அளவுக்குப் பாநலம் பயின்றுவரும் பாக்களாக அவை விளங்குகின்றன.

   கு.மா.பா. அவர்கள் இன்றைக்குச் சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1920 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி பிறந்தார். அவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டிய தருணம் இது. எனினும் கொரோனா நச்சில் என்னும் கொடிய அரக்கனின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தில்  இப்போது விழா எடுக்கும் சூழல் இல்லை.

  அதனால் என்ன? பூசலார் நாயனார்  இறைவனுக்குத் தன்னுடைய மனத்தில் கோவில்கட்டிக் குடமுழுக்கு நடத்தியதுபோல் நாமும் அவருக்கு நம் மனத்தில் விழா எடுக்கலாமே!

குறிப்பு: கு.மா.பா. அவர்கள் குறித்த எனது உரையும், உரையின் இடையே அவர் இயற்றிய திரையிசைப் பாடல்களும் தர்மபுரி பண்பலை வானொலியில் 11.5.2020 அன்று இரவு 9.30 மணிக்கு ஒலிபரப்பானது.

    .


6 comments:

  1. அவரின் அனைத்து பாடல்களும் மிகவும் ரசிக்கத்தக்கவை...

    ReplyDelete
  2. தாங்கள் குறிப்பிட்ட அனைத்துப் பாடல்களையும் கேட்டு மிகவும் ரசித்ததுண்டு
    ஆனால் இப்பாடல்களை எழுதியவரை இன்று தங்களால்தான் அறிந்தேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  3. திரு. கரந்தையார் அவர்களின் கருத்தே எனதும்...

    ReplyDelete
  4. கரந்தை ஜெயக்குமார் ஐயா கூறியதைப் போல தாங்கள் குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தையும் நான் ரசித்துக் கேட்டதுண்டு. பாடல் ஆசிரியர் பற்றி இன்றுதான் தெறிந்துகொண்டேன். நன்றி ஐயா.

    ReplyDelete
  5. நீங்கள் சொல்லியிருக்கும் பாடல்கள் கேட்டு ரசித்திருந்தாலும் எழுதியது இவர்தான் என்பது இதுவரை அறிந்ததில்லை. நீங்கள் இப்போது குறிப்பிட்ட பின் தான் அறிகிறோம்.

    துளசிதரன்

    அமுதைப் பொழியும் நிலவே, மாசிலா பாடல்கள் அனைத்தும் ரசித்துக் கேட்டதுண்டு யாரென்று அறியாமலேயே. நிலவுக் கவிஞர் என்பது அறிந்திருந்தாலும் அவர்தான் இவர் என்றும் இப்போதுதான் அறிகிறேன் ஐயா. நல்ல பதிவு

    கீதா

    //கு.மா.பா. அவர்கள் குறித்த எனது உரையும், உரையின் இடையே அவர் இயற்றிய திரையிசைப் பாடல்களும் தர்மபுரி பண்பலை வானொலியில் 11.5.2020 அன்று இரவு 9.30 மணிக்கு ஒலிபரப்பானது.//

    வாழ்த்துகள் ஐயா

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  6. நல்ல சரித்திர பதிவு.கு.மா.பா.தலைவராக இருந்தபோது நான் தமிழ்க்கவிஞர் மன்றத்தில் இருந்தேன்.நன்று.நன்றி.

    ReplyDelete