Tuesday 5 July 2022

பெரிதினும் பெரிது கேள்

    இது பாரதியார் எழுதிய புதிய ஆத்திசூடியில் ஒரு சூடி. இச் சூடிக்குப் பொருத்தமான மாமனிதர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன். அவருக்கு மிக நெருக்கமானவரும், என் தலைமாணாக்கருள் ஒருவருமான கோவை மோகன் என்னை அழைத்துச் சென்றார்.

  கோவையில் இவர் வசிக்கும் வீடு மிகப் பெரிது; அவ் வீட்டில் உள்ள நூலகம் மிகப் பெரிது; பயன்படுத்தும் மகிழுந்து மிகப் பெரிது; இவர் வளர்க்கும் நாய்கள் மிகப் பெரியவை; தோட்டத்தில் உள்ள மரங்கள் மிகப் பெரியன; வீட்டின் முன் வைத்துள்ள திருவள்ளுவர் சிலை பெரிது; இவர் வகித்த பதவிகள் மிகப் பெரியன; இவரைத் தேடி வந்த விருதுகள் மிகப்பெரியன; நேர்மையான முறையில் சேர்த்த செல்வம் மிகவும் பெரிது.

      எல்லாவற்றுக்கும் மேலாக இவருடைய மனம் மிகப் பெரிது. தன் வீட்டில் வேலை செய்த ஒரு பெண்மணிக்கு, சென்னையில் தான் வசித்த வீட்டைக் கொடையாகத் தந்தவர் என அறிந்தபோது என் வியப்பு விண்ணைத் தொட்டது!

   EBG Foundation என்னும் அறக்கட்டளையை உருவாக்கி, முயற்சியால் ஈட்டிய செல்வத்தைக் கொண்டு ஏழைமையில் உள்ள மாணவர்களை இனங்கண்டு, தொழில்சார் படிப்புகளில் சேர்த்துப் படிக்க வைக்கிறார். சொந்த ஊரில் தனக்குப் பாகமாய் வந்த நிலபுலன்களை தன் உறவினர்க்குப் பகிர்ந்து அளித்துவிட்டார்!

    இந்தியாவில் நூல்கள் எழுதிக் கோடிக்கணக்கில் சம்பாதித்த சிலருள் இவரும் ஒருவர். கணிப்பொறியியல் தொடர்பாக இவர் முந்நூறுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும், இந்தியாவில் IIT போன்ற உயர்கல்விக் கூடங்களிலும் பாடநூலாக இருந்தவை. ஒரு குறிப்பிட்ட நூல் நூற்றுக்கும் மேலான பதிப்புகளைக் கண்டு, இருபது லட்சம் படிகள் விற்றுத் தீர்ந்தன என அவர் கூறியபோது எனக்குத் தலை சுற்றியது.

   “இத்தனை நூல்களை எழுத எப்படி நேரம் கிடைத்தது?” என்று கேட்டேன். “எல்லாம் இரவில் நெடுநேரம் கண்விழித்து எழுதியவை” என்றார்.

      இவர் விட்டுக் கொடுக்கும் பண்புடையவர். ஆனால் எந்தச் சூழலிலும் வளைந்து கொடுக்கும் பண்பு இல்லாதவர். இதன் காரணமாக மிகப்பெரிய பதவிகளைக் கூட இவர் துச்சமெனத் தூக்கியெறிந்துள்ளார்.

    இத்துணைச் சிறப்புகளை உடைய ஒரு மாமனிதருடன் கழிந்த ஒரு மணி நேரம் மிகப் பயனுடையதாய் அமைந்தது. விடைபெறும் போது எனக்கு அவர் எழுதிய நூல்கள் சிலவற்றைப் பரிசாய்த் தந்தார். நான் தினமணியில் எழுதிய நடுப்பக்கக் கட்டுரைகளின் தொகுப்பாக வானதி பதிப்பகம் வெளியிட்ட ‘வா நம் வசப்படும்’ என்னும் நூலை அளித்தபோது சற்றே வியப்புடன் பெற்றுக்கொண்டார்.

    இவரது வாழ்க்கை வரலாறு ஒரு நூலாக வெளிவந்துள்ளது. நூலை எழுதியவர் புகழ்வாய்ந்த இதழியலாளர் திரு.பா.கிருஷ்ணன் அவர்கள். கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘நேர்மையின் பயணம்’ என்னும் தலைப்பில் அமைந்த அந்த நூலை இளைஞர்களும் இளம்பெண்களும் கருத்தூன்றிப் படிக்க வேண்டும்.

   இவர் அவர் என்றால் எவர் என்று நீங்கள் கேட்பது என் செவியில் விழுகிறது.

   அவர்தான் கரூர் மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியர் இ.பாலகுருசாமி, முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.






    

    

4 comments:

  1. Ravichandar v.s.5 July 2022 at 12:09

    It's very pleasure to read your blogs
    and keep me awake.
    Appreciating you Sir!

    ReplyDelete
  2. இவரைப் பற்றி கேட்பதற்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது ஐயா.

    ReplyDelete
  3. அருமையான சந்திப்பு. நல்லக்வற்றைப்
    போற்றும் தங்கள் மனம் வாழ்க@

    ReplyDelete