Wednesday, 12 February 2025

ஹூப்பனோபனோ

 Ho’opponopono. இது என்ன வாயினுள் நுழையாத சொல்? இது ஒருவர் தன்னைத் தானே செதுக்கிக் கொள்வதற்கான ஒற்றை மந்திரச் சொல். இந்த மந்திரச் சொல் குறித்து விரிவாகப் பேசும் புகழ்பெற்ற நூல்   Zero Limits. இதன் நூலாசிரியர் Joe Vitale and Hew Len. இந்த நூல் தமிழிலும் வெளியாகியுள்ளது.

   ஒருவர் தன் வாழ்வியல் போக்கைச் சற்றே மாற்றியமைத்து மகிழ்ச்சியாக வாழும் வழிமுறைகளைச் சொல்லும் முறையைத்தான் ஹூப்பனோபனோ என்று மேலைநாட்டார் கூறுகின்றனர். இது குறித்த நூல்கள் பிறமொழிகளில் நூற்றுக்கணக்கில் வெளிவந்து நொடிப்பொழுதில் விற்றுத் தீர்கின்றன. அவற்றுள் ஒன்றே மேலே நான் குறிப்பிட்ட நூலாகும்.

   அந்த நூல்முழுவதையும் படித்துப் பார்த்தால் கடைசியில் நான்கு செய்திகளே எஞ்சி நிற்கின்றன. அவையாவன:

 I love you,

I am sorry,

Please forgive me,

Thank you.

 

இவை நான்கையும் நான் பின்வருமாறு புரிந்து கொள்கின்றேன்.

   தக்காரிடத்து அன்பு, இரக்கம், அருள் என்னும் உணர்வைச் சொல்லால், செய்லால் காட்டுதல்.

ஒருவர் தான் செய்த பிழைக்காக வருந்தி மீண்டும் செய்யாதிருத்தல்.

தான் செய்த பிழையை உணர்ந்து உரியவரிடம் உரிய முறையில் மன்னிக்குமாறு வேண்டல்.

நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, உயர்திணையிடமிருந்தோ, அஃறிணையிடமிருந்தோ பெற்ற உதவிக்கு நன்றியுணர்வை மனத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ  வெளிப்படுத்துதல்.


இவையனைத்தையும் குறித்து நம் பூட்டாதி பூட்டன் வள்ளுவர் விளக்கமாகச் சொல்லிவிட்டார்.

அன்பு காட்டுதல் (I love you):

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை.

அன்பின் வழியது உயிர்நிலை.

அன்புடையார் என்பும் உரிய பிறர்க்கு.

தான் செய்த பிழைக்காக வருந்துதல் (I’m sorry)

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வார் பழிநாணு வார்.

எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்                      மற்றன்ன செய்யாமை நன்று.

செய்த பிழைக்காக வருந்தி மன்னிப்பை வேண்டல் (Please forgive me):

சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி                        துலையல்லார் கண்ணும் கொளல்.

நன்றியுணர்வை வெளிப்படுத்துதல் (Thank you):

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்(று) உள்ளக் கெடும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எத்தனை எத்தனை குறட்பாக்கள் நம்மைச் செம்மைப் படுத்தும் வகையில் அமைந்துள்ளன! நாம் மண்ணிலே நல்ல வண்ணம் வாழும் வழிகளைச் சொல்வது திருக்குறள். அவற்றை மனப்பாடம் செய்வதோடு நிறுத்திக்கொள்கிறோம்.

நாம் திருக்குறளை வழிபடுகிறோம்; வழிப்படுகிறோமா?

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர                                                                                        துச்சில்: அமெரிக்கா

 

 

 

 

 

 

 

6 comments:

  1. அருமையான விளக்கம்.

    ReplyDelete
  2. திருக்குறள் உலகின் எல்லா நாடுகளின் உயர்ந்த கருத்துகளின் சாராம்சம் கொண்டது என்ற உண்மையை ஒப்பிட்டு விளக்கிய சிறப்பான பதிவு.

    ReplyDelete
  3. தி.முருகையன்12 February 2025 at 22:33

    எல்லாவற்றுக்கும் அடிப்படையாக ஆதாரமாக முன்னோடியாக திருக்குறள் விளங்குகிறது என்பதை எளிமையாகவும் தெளிவாகவும் உரைத்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  4. மிகவும் சிறப்பான நூல் என்று தெரிகிறது. நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கம் மிகவும் சிறப்பு. குறளில் இல்லாத குரலா!

    கீதா

    ReplyDelete