Saturday 15 November 2014

இடுக்கண் நீக்கிய இணையர்


  மனிதனுக்கு எப்படியெல்லாம் சங்கடம் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. சரியான நேரத்தில் கணவன் மனைவி இருவரும் உதவி செய்ததால் தப்பிததார் அவர்.

  உடுமலைப்பேட்டையில் புகழ்பெற்று விளங்கும் வித்யா நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கும் உரையாற்றச் சென்றபோதுதான் அவருக்கு இந்த சோதனை நிகழ்ந்தது.

   அவர் தெரியாமல் செய்த ஒரு தவறுதான் அதற்கெல்லாம் காரணம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.

 ஓர்  ஓட்டுநரை வைத்துக்கொண்டு காலை ஆறு மணிக்குப் புறப்பட்டார். ஓட்டுநர் இருக்கைக்கு அருகிலுள்ள முன் இருக்கையில் அமர்ந்துகொண்டார். கார் நகரைத் தாண்டியதும் எண்பது தொண்ணூறு என்று பறந்ததால், பாதுகாப்புக்காக சீட் பெல்ட்டை இழுத்துப் பொருத்திக்கொண்டார். மூன்று மணி நேர பயணத்திற்குப் பிறகு கார் உடுமலைப்பேட்டையை அடைந்தது. சீட் பெல்ட்டை நீக்கிவிட்டு மெல்ல இறங்கினார். அவருடைய நண்பர் வணக்கம் சொல்லி வரவேற்று அதிர்ச்சியுடன் ஏற இறங்கப்பார்த்தார்.

  . நீண்டநாள் பயன்படுத்தாமல் இருந்த பெல்ட்டை அணிந்ததால், அந்தப் பட்டை அளவுக்கு வெள்ளைச் சட்டையில் குறுக்காக ஒரு கருப்புப்பட்டைப் படிந்திருந்ததைப் பார்த்தபோதுதான் நண்பர் ஏற இறங்க பார்த்ததன் காரணம் புரிந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் பள்ளியில் இருக்கவேண்டும். சஃபாரி சட்டையைத் துவைக்க முடியுமா, காயுமா என்ற சிந்தனையுடன் வீட்டிற்குள் நுழைந்ததும் நண்பர் சட்டையைக் கழ்ற்றச்சொல்லி, புது சட்டை ஒன்றைக்  கொடுத்தார். அவருடைய துணைவியார் ஓடி வந்து துவைத்துக் காயப்போட்டுவிட்டுச் சுவையான சிற்றுண்டியைப் பரிமாறினார். உடனே விரைந்து சென்று காயாத சட்டையை எடுத்து அயர்ன் செய்துகொடுத்தார். பார்த்தால் அழுக்குப் பட்ட அறிகுறியே தெரியவில்லை. கம்பீரமாக சட்டையை அணிந்துகொண்டு நன்றிகூறி உரிய நேரத்தில் வித்யா நேத்ரா பள்ளிக்குச் சென்று உரையாற்றத் தொடங்கினார்.

   உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
   இடுக்கண் களைவதாம் நட்பு
 என்ற வள்ளுவர் கூற்றை எண்ணியபடியே அந்த இணையரை நெஞ்சார வாழ்த்தினார். சுஸ்லான் காற்றாலை நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் திரு.பிரேம்குமாரும் அவரது மனைவியும்தான் இங்கே குறிப்பிடப்படும் இடுக்கண் நீக்கிய இணையர்.

  அது சரி. அசடு வழிநத அந்த சஃபாரி சட்டை மனிதர் யார்?
வேறு யார்? நானேதான்.

இந்த நிகழ்வில் நான் கற்றுக்கொண்ட பாடம்:
 இனி இப்படிச் செல்லும்போது கூடுதலாக ஒரு செட் பேண்ட் சட்டை எடுத்துச்செல்லவேண்டும். அல்லது எவ்வளவு அழுக்குப் பட்டாலும் தெரியாத டார்க் கலர் சஃபாரி அணிந்து செல்ல வேண்டும்.
   



   




1 comment: