Sunday 14 June 2015

இமயம் தொட்ட இணையர்

      காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு
     கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
என்று வழக்கப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுவார் பாரதியர். அமெரிக்காவுக்கு நான் வந்த பின்னால்,
காலை எழுந்தவுடன் நடத்தல், பின்பு கண்டதைக் கேட்டதை எழுத்தில் படைத்தல் என்று ஆகி விட்டது.

   இன்று நடத்தலும் படைத்தலும் வேண்டா எனக் கூறி, அதிகாலையில் காரை கிளப்பிவிட்டாள் என் மகள் ஹூஸ்டனை நோக்கி. டேலஸிலிருந்து 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஹூஸ்டன் நகரம். அங்கே பணியாற்றும்  பர்வத மீனா என்னும் பெண்மணி எங்களை அன்புடன் அழைத்திருந்தாள். அவள் என் மகள் அருணாவின் நெருங்கிய கல்லூரித் தோழி., திருச்சியைச் சேர்ந்தவள்.

     அங்கே புகழ் பெற்று விளங்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், நாசா விண்வெளி மையத்திற்கும் செல்வது என்பது திட்டம். ஆனால் போன மச்சான் திரும்பிவந்த கதையாக இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு திரும்பிவிட்டோம். ஹூஸ்டனில் இரு நாள்களுக்கு இடி, புயல், மழை இருக்கும் என்று வந்த வானிலைத் தகவல்தான் எங்களை அவசரமாக ஊர் திரும்பச் செய்தது.

     ஏமாற்றத்தோடு இல்லம் திரும்பினோம். அடுத்து என்ன செய்யலாம் என எண்ணிக் கொண்டிருந்தபோது அருணாவின் கைப்பேசி சிணுங்கியது.  “இன்று மாலை நம்மை ஒரு மாமனிதர் தேநீருக்கு அழைத்துள்ளார்., செல்கிறோம்., சரியாக நான்கு மணிக்குப் புறப்பட வேண்டும்,தயாராக இருங்கள்” என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையாக வெளியில் சென்றுவிட்டாள்.

  குறித்த நேரத்தில் சென்று அவருடைய வளமனைக்குமுன் நின்றோம். அவர்தம் துணைவியார் டாக்டர் பங்கஜம் அவர்கள் முகமும் அகமும் மலர வரவேற்றார். அருணாவுக்கு அத்தை முறையாகிறார்., எங்களுக்குப் பெரிய சம்பந்தியாகிறார். புகழ் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர், கரும வீரர் காமராசரின் சிறைத்தோழர் வாடிப்பட்டி பழனிச்சாமி ரெட்டியார் அவர்களின் மகள்.

     1970 இல் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றார். உடனே திருமணம். அடுத்த ஆண்டே அமெரிக்காவில் வேலை கிடைக்க, குடும்பத்தோடு வந்தவர், இப்போது என் பெரிய மகள் அருணா படிக்கும் ஆர்லிங்டன் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றியவர்.  அமெரிக்கக் குடியுரிமைப் பெற்று, இங்கேயே வாழ்வாங்கு வாழ்கிறார்.

   இவருடைய கணவர் அறிவும் ஆற்றலும் மிகுந்த புகழ் நிறை மருத்துவர் டாக்டர் சங்கரபாண்டியன் அவர்கள். சிறுநீரகம் சார்ந்த மருத்துவத் துறையில்(Nephrology) கரை கண்டவர்.   Tarrant Nephrology Associates என்னும் நிறுவனத்தை உருவாக்கி அதன் முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுகின்றார். பதினேழு டயாலிசஸ் மையங்கள், இருபதுக்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவர்கள், நூற்றுக்கணக்கில் ஊழியர்கள் என ஆலமரம்போல் பல்கிப் பெருகி அமெரிக்கர்களே வியக்கும் வண்ணம் வளர்ந்து நிற்கும் நிறுவனம் அது. அமெரிக்காவின் செல்வந்தர்களுக்கு இணையாக வளம்பெற்று வாழ்வதோடு, முயற்சியால் ஈட்டிய பெரும்பொருளின் ஒரு பகுதியை நல்ல பணிகளுக்கு நயந்தளிக்கும் நன்கொடையாளராகவும் திகழ்கிறார்.

    சுற்றத்தினரைப் பேணிப் பாதுகாத்தலே ஒருவர் செல்வம் சேர்த்ததன் பயன் என்பார் திருவள்ளூவர். 35 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கே குடியேறி, முன் ஏர் போல பீடுநடை போட, பின் ஏர் போல உறவும் நட்பும் தொடர்ந்துவர, அணுகியோர்க்கு வழிகாட்டியாகவும் வளம் காட்டியாகவும் விளங்குகின்றனர் இந்த இமயம் தொட்ட இணையர்.

    இவர்கள் பெற்றெடுத்த ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் அமெரிக்கச் சூழலில் வளர்ந்தாலும் குடும்ப மரபுச் சொத்தான இறையுணர்வு, பெரியோரிடம் பணிவு, உறவுகளைப் பேணல் என்னும் நற்பண்புகளோடு குடும்பம் நடத்துகின்றனர். தம்மினும் தம்மக்கள் அறிவுடைமை சிறப்பு என்னும்  குறள் கருத்துக்கு ஏற்ப  இருவரும் தம்  துறைகளில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

   ஒரு முக்கிய கூட்டத்திற்குச் சென்றிருந்த டாக்டர் சங்கரபாண்டியன் அவர்கள் நாங்கள் சென்ற அரைமணி நேரத்தில் இல்லம் திரும்பி, எங்களோடு அமர்ந்து ஆர்வத்துடன் உரையாடினார். பொதுவாக அதிகம் பேசாதவர் என அறியப்பட்ட அவர், எனது நல்லூழ் காரணமாக, சூடான காபியை கொஞ்சம் கொஞ்சமாய் சுவைத்தபடி, ஒருமணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்., அதுவும் தாய்மொழியாம் தமிழில்.

   இந்திய நாட்டின் கல்வி, கலாச்சாரம், அரசியல் என அனைத்தும் அவருடைய பேச்சில் அரங்கேறின. அமெரிக்காவில் அறத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களைச் சுட்டெரிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படுவதை எடுத்துக் காட்டுகளோடு எடுத்துரைத்தார்.

   நம் நாட்டில் மெத்தப்படித்த மாவட்ட ஆட்சியர்கள் கூட படிப்பறிவில்லாத அரசியல்வாதிகளை மீறி செயல்படமுடியாத அவலநிலை நீடிப்பதை ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.
    கல்வி, தொழில், தனிமனித வருமானம், இணையம் போன்ற தொழில்நுட்பப் பயன்பாடு பெருகியிருந்தாலும் நம் நாட்டில் இன்னும் சுகாதாரம், பொதுக் கழிவறை போன்ற அடிப்படைத்தேவைகளின் தரம் மேம்படவில்லை என்பதையும் குட்டிக் காட்டினார்.  அதே சமயம், அடுத்தத் தலைமுறையினர் ஒப்பற்ற இந்தியாவை உருவாக்கிக் காட்டுவார்கள் என்றும் சுட்டிக் காட்டினார்.
 
   முன்னதாக அவர்தம் துணைவியார் வாய்க்கு அளித்த விருந்தும், பின்னர் அவர் எம் செவிக்கு அளித்த விருந்தும் மறக்கமுடியாதவை. Home taking message   என்று ஆங்கிலத்தில் கூறுவார்களே- அப்படியொரு செய்தியோடுதான் விடைபெற்றோம்.

     “ என் கணவர் டாக்டர் சங்கரபாண்டியன் ஒரு செயலில் இறங்கினால் பாதியில் விடமாட்டார். மாற்றி யோசித்து, சிக்கலைத் தீர்த்து, வெற்றி காணும் இயல்புடையவர்” என்று சான்றிதழ் கொடுத்தார் டாக்டர் பங்கஜம் அம்மையார்.

   வெற்றிக்கான சூத்திரமாய் விளங்கும் இந்தச் செய்தியை நம் மனச் சுவரில் சட்டம் போட்டு மாட்டலாமே.
       முனைவர் அ.கோவிந்தராஜூ டாக்டர் சங்கர பாண்டியன்
  

  

3 comments:

  1. நல்ல மனம் படைத்தவர்கள் எந்நாட்டில் வாழ்ந்தாலும் நம் நாட்டவரே. அவர்களது சேவை சிறக்கட்டும். வாழ்க.வளர்க.

    ReplyDelete
  2. நல்ல மனம் படைத்தவர்கள் எந்நாட்டில் வாழ்ந்தாலும் நம் நாட்டவரே. அவர்களது சேவை சிறக்கட்டும். வாழ்க.வளர்க.

    ReplyDelete