Friday 12 June 2015

ஜுராசிக் பார்க் அன்றும் இன்றும்

   1993 ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் வள்ளி திரையரங்கில் ஜுராசிக் பார்க் படம் பார்த்ததை நேற்று டேலஸ் மாநகரில் பெட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள சினிமார்க் என்னும் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கில் நின்று கொண்டு நினைத்துப் பார்த்தேன்.
இந்த சினிமார்க் வளாகத்தில் ஒரே சமயத்தில் பதினெட்டுப் படங்கள் ஓடுமாம்!

   ஜூன் 12 ஆம் தேதி ஜுராசிக் வேர்ல்ட் என்னும் திரைப்படம் உலகெங்கும் திரையிடப்படுகிறது என்னும் செய்தி கடந்த பத்து நாள்களாக காட்டுத் தீப் போல பரவியது. வெளிவந்த முதல்நாளே பார்த்துவிடுவது என்னும் முனைப்போடு இடத்திற்கு முன்னதாகவே முன்பதிவு செய்திருந்தார் என் மாப்பிள்ளை சிவ கணேஷ்.

   ஸ்டீவன்ஸ் பீல்பெர்கி இயக்கிய ஜுராசிக் பார்க் 1993 இல் வெளிவந்தது. பிறகு அதன் இரண்டாம் பகுதி த லாஸ்ட் வேர்ல்ட் என்னும் பெயரில் 1997 ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து அதன் மூன்றாம் பகுதி ஜுராசிக் பார்க் III என்னும் பெயரில் 2001 ஆம் ஆண்டு வெளியானது. அது இப்போது காலின் ட்ரிவோரோ இயக்கத்தில் ஜுராசிக் வேர்ல்ட் என்னும் பெயரில் வெளியாகியுள்ளது.

   முட்டையை மெதுவாக உடைத்துக்கொண்டு கண்ணை உருட்டிப் பார்க்கிறது ஒரு டயனோசர் குஞ்சு. இப்படித்தான் படம் தொடங்குகிறது. இந்தப் படத்தில் நம் கவனத்தை ஈர்ப்பது ஒலியமைப்புதான். அந்த முட்டை உடையும் ஒலி அவ்வளவு துல்லியமாகக் கேட்கிறது.

    ஆய்வகத்தில் மரபணு மாற்று முறையில் உருவாக்கப் படுகிற டயனோசர்களைப் பழக்கி சாதுவான பிராணிகளாக மாற்றினாலும் அவை ஒரு கட்டத்தில் தம் அரக்கப் புத்தியைக் காட்டிவிடும் என்பதாய் கதை நகர்கிறது. டயனோசர் பூங்காவைக் காணவந்த ஒரு குடும்பத்தினர் பிரிந்துபோய் ராட்சத டயனோசர்களின் தாக்குதலுக்கெல்லாம் தாக்குப்பிடித்துத் தப்பித்து, கடைசியில் ஒன்று சேர்கின்றனர் என்பதுதான் கதை.

     திரையரங்கில் புத்தம் புதிய முப்பரிமாண கண் கண்ணாடியை சீலிட்ட உறையிலிட்டு வழங்கினார்கள். இப்படம் முப்பரிமாணத் திரைப்படம் என்பதால் அதை அணிந்துதான் படத்தைப் பார்க்க வேண்டும். டயனோசர்கள் நம் கைக்கெட்டும் தூரத்தில் நிற்பதுபோல உணர்கிறோம். அவை முகத்தருகே வருவதுபோலத் தெரிவதால், பல சமயங்களில் வெடுக்கென பின்னால் சாய்கிறோம். சிலசமயம் இருக்கையில் அமர்ந்தபடி மெல்ல நகர்வதுபோலவும் உணர்கிறோம். திரைப் படம் 100 ஆண்டுகளுக்கு முன்னர்தான்  கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் தொழில் நுட்பங்கள் என்னவோ அசுர வேகத்தில் வளர்ந்து விட்டன.

   124 நிமிடங்கள் ஓடும் இப்படம் பெரும்பகுதி நேரத்தில் நம்மை இருக்கையின் விளிம்பில் உட்கார வைத்துவிடுவதுதான் இப்படத்தின் வெற்றி. ஆனால் திரைப்பட விமர்சகர்களின் கருத்து வேறுவிதமாக இருக்கிறது. அவர்கள் சொல்கிறார்கள்: All bark and no bite

   திரையரங்கைவிட்டு வெளியில் வந்தபோது  படம் எப்படி என்று என் மனைவியிடம் கேட்டேன். காதில் வாங்காதவள் போல் மகள் வாங்கிக் கொடுத்த பாப்கார்ன் பிரமாதம் என்றாள். பிறகு சுதாரித்துக்கொண்டு இப்படத்தைவிட எந்திரன் படம் அருமை என்றாள்.

   இங்கே முக்கியமான ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். படம் பார்க்க வந்த ரசிகர்கள் அனைவரும் பாராட்டும் வகையில் எந்தக் கூச்சலையும் போடாமல் படம் பார்த்தனர். எவரும் தமக்குள் உரத்தக்குரலில் பேசவில்லை. செல்போனை கோமா நிலையில் வைத்துவிட்டுதான் படம் பார்த்தனர். முத்தக் காட்சிகளைக்கூட மொத்தக்கூட்டமும் ஆரவாரமில்லாமல் அமைதியாகப் பார்த்தது.

   தெரியாத்தனமாக ஒருநாள் படம் வெளியான முதல் நாளே கரூரில் நானும் என் மனைவியும் படம் பார்க்கச் சென்றோம். ரசிகர்கள் போட்ட கூச்சலும், எழுப்பிய விசில் சத்தமும், திரைக்கு முன் கூட்டமாக நின்று போட்ட குதியாட்டமும் சகிக்க முடியாத அளவில் இருந்தன.

  என்னைப் பொருத்தவரையில், படமும் நன்றாக இருந்தது., இங்கே கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் நன்றாக இருந்தது.


  

   

3 comments:

  1. உண்மைதான் ஐயா
    மற்றவர்களிடமிருந்து நம்மவர்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது
    நன்றி

    ReplyDelete
  2. இது தான் நம்மவர்களுக்கும் மேலை நாட்டவர்களுக்கும் உள்ள வேறுபாடு. பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  3. இது தான் நம்மவர்களுக்கும் மேலை நாட்டவர்களுக்கும் உள்ள வேறுபாடு. பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete