Wednesday, 13 January 2016

கருவால் கலையும் கனவுகள்

   நேற்று மாலை நான் பள்ளியிலிருந்து இல்லம் திரும்பிய போது, எப்போது வருவேன் என்று காத்திருந்தவள்போல என் மனைவி தினமணியில் வந்த ஒரு செய்தியை என்னிடத்தில் பகிர்ந்துகொண்டாள். சொல்லும்போதே பதைபதைத்தாள்; கொடுமையின் உச்ச கட்டம் என்று வருணித்தாள்.
அந்தச் சின்னஞ் சிறிய பெண்ணின் வாழ்க்கை சீரழிந்து விட்டதே என்று புலம்பினாள். அவள் கனவுகள் கலைந்து விட்டனவே என்று கலங்கினாள். ஊரார் வீட்டுப் பெண்தானே என்று ஒதுக்கிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க அவளுக்கு மனம் வரவில்லை. பெண்ணைப் பெற்றவளுக்கு இந்த ஆதங்கமும் ஆற்றாமையும் இருக்காதா என்ன?

    பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருத்தி வயிற்று வலி என்று சொல்ல உடனே மருத்துவமனை செல்ல அங்கே அவளுக்கு ஒரு குழந்தை பிறந்ததாம். அவள் கருவுக்குக் காரணமான கள்ளக் காதலன் ஆட்டோ ஓட்டுநர் தலை மறைவாம். அவன் மனைவி மக்களிடம் போலீஸ் விசாரணை என்பதுதான் அந்தச் செய்தி.

  உளவியலாளர் என்ற முறையில் இது குறித்து நீண்ட நேரம் சிந்தித்தேன். பள்ளி கல்லூரிகளில் படிக்கும்போதே கள்ளத்தனமாக கன்னி கழியும் போக்கு இப்பொது வெகுவாக அதிகரித்து வருகிறது. இதில் தொலைக்காட்சி என்னும் ஊடகத்தின் பங்கு உச்ச கட்டத்தில் உள்ளது என்ற உண்மை யாருக்கும் தெரியவில்லை.

   பள்ளியில் படிக்கும் பெண் ஒருத்தி கள்ளக் கருவைச் சுமக்கும் காட்சி தொலைக்காட்சித் தொடரில் வெகு இயல்பாகக் காட்டப்படுகிறது. நடு வீட்டில் உட்கார்ந்துகொண்டு சின்ன குழந்தைகளின் மனத்தில் வயதுக்கு மீறிய ஆசைகளத் தூண்டுகிறது. இது குறித்த விழிப்புணர்வு பெற்றோருக்கு இருக்க வேண்டும்; ஆனால் இல்லையே.

  மேலே சுட்டப்பெற்ற செய்தியில் வந்த பெண்ணை என்ன செய்வார்கள்? அந்த ஆட்டோக்காரனின் தலையில் இரண்டாம் தாரமாகத் தாரைவார்க்க முனைவார்கள்; அவள் கழுத்தை நீட்டுவாளோ அல்லது கழுத்தில் சுருக்குக் கயிரை மாட்டுவாளோ? எதுவும் நடக்கும். மகளைக் கெடுத்தவனுக்கே மகளைக் கொடுப்பதும் அவளைக் கொலை செய்வதும் ஒன்றுதான்.

   வயதுக்கு வந்த மகளை வைத்திருக்கும் தாய், “மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்வதுண்டு. சொன்னால் மட்டுமே போதுமா? தன் மகள் மாதம் தோறும் குளிக்கிறாளா என்று பார்க்க வேண்டும். செல்போன் பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டும். தொலைக்காட்சியைப் பார்ப்பதில் கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும். பெண்ணின் இயல்பான நடைமுறையில் மாற்றம் தெரிந்தால் உடனே பள்ளியில் உரியவர்களிடம் தெரிவித்து ஆலோசனை பெற வேண்டும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக அவளிடம் மனம் திறந்து பேசி மாறாத அன்பு காட்ட வேண்டும். அவள் பெறும் மதிப்பெண்ணைப் பொருத்து அன்பு கூடுதலும் குறைதலும் கூடாது. தாய் அன்பு காட்டாவிட்டால் அன்பு கிடைக்கும் இடத்தில் மகள் செல்ல நேரிடும். பதின்ம வயதினர் அன்புக்காக ஏங்கித் தவிப்பார்கள் என்பதை தாய்மார்கள் உணர வேண்டும். தாய் கட்டிப்பிடித்து முத்தம் தருவது மிக முக்கியம். தவறினால் கட்டிப்பிடி வைத்தியம் எங்கு கிடைக்கிறதோ அங்கி தாவி விடுவார்கள்.

 பெண் குழந்தைகள் நாற்றங்காலில் வளரும் நாற்றுகள் போன்றவர். கண்ணும் கருத்துமாக வளர்த்தால்தான் அவை நடப்படும் இடத்தில் நல்ல விளைவு தரும்; இல்லையேல் பின் விளைவு மோசமாக இருக்கும். முக நூலில் ஒரு புது மொழியை என் இளைய மகள் பகிர்ந்தது நினைவுக்கு வருகிறது. அப் புதுமொழி இதோ:

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமல்ல;
    அவளுடைய அம்மாவின் வளர்ப்பில் உள்ள தரம்..

என்ன? சரிதானே?
 பத்தொன்பது வயது வரையில் கண்காணித்து வளர்த்து விட்டால் பிறகு அவளை நம்பி உலகின் எந்த மூலைக்கும் அனுப்பலாம்.

6 comments:

 1. வாட்ஸ்அப் - இதிலிலும் உடனே பரவி விடுகிறது...

  புது மொழி சிறப்பான மொழி ஐயா... இளைய மகளுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. நண்பர் அவர்களே! ஆசிரியரின் சமுதாயக் கண்ணோட்டந்தான் நல்ல சமுதாயத்தை உறவாக்கும் நல்ல வழி. ஒவ்வொரு ஆசியரும் இதை உணர்ந்து மாணவர்களை நல்வழிப் படுத்தினால் இது போன்ற தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். சகோதரியாரின் மென்மையான உள்ளமே தங்களுக்கு கண்ணாடி. வாழ்க நல்லமனங்கள் - நீதிபதி மூ.புகழேந்தி

  ReplyDelete
 3. நண்பர் அவர்களே! ஆசிரியரின் சமுதாயக் கண்ணோட்டந்தான் நல்ல சமுதாயத்தை உறவாக்கும் நல்ல வழி. ஒவ்வொரு ஆசியரும் இதை உணர்ந்து மாணவர்களை நல்வழிப் படுத்தினால் இது போன்ற தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். சகோதரியாரின் மென்மையான உள்ளமே தங்களுக்கு கண்ணாடி. வாழ்க நல்லமனங்கள் - நீதிபதி மூ.புகழேந்தி

  ReplyDelete
 4. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
  மகிழ்வோடு நவில்கின்றேன்
  கனிவோடு ஏற்றருள்வீர்

  ReplyDelete
 5. எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர்கள் நல்லவர்கள் ஆவதும் தீயவர்கள் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் வரியை நினைவுபடுத்தலாம்.தாயைத் தண்ணீர் துறையில் பார்த்தால் மகளை வீட்டில் பார்ர்க்க வேண்டியதில்லை என்பது கிராமத்துப் பழமொழி. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை போன்ற பழமொழிகள் நினைவுபடுத்துவது பெண் குழந்தையை வளர்ப்பதில் உள்ள இடர்பாடுகளைச் சுட்டவே. தங்களது கட்டுரையின் தாய் பெண்ணைப் பேணிப் பாதுகாக்கத் தவறிவிட்டார் வருந்துவதைத் தவிற வேறு மார்க்கம் இல்லை.

  ReplyDelete
 6. எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர்கள் நல்லவர்கள் ஆவதும் தீயவர்கள் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் வரியை நினைவுபடுத்தலாம்.தாயைத் தண்ணீர் துறையில் பார்த்தால் மகளை வீட்டில் பார்ர்க்க வேண்டியதில்லை என்பது கிராமத்துப் பழமொழி. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை போன்ற பழமொழிகள் நினைவுபடுத்துவது பெண் குழந்தையை வளர்ப்பதில் உள்ள இடர்பாடுகளைச் சுட்டவே. தங்களது கட்டுரையின் தாய் பெண்ணைப் பேணிப் பாதுகாக்கத் தவறிவிட்டார் வருந்துவதைத் தவிற வேறு மார்க்கம் இல்லை.

  ReplyDelete