Friday, 5 May 2017

அது வண்ணக் கிளி செய்த மாயம்

  சுகவனம் மைசூரு நகரின்  அடையாளமாகத் திகழ்கிறது எனச் சொன்னால் அது மிகையாகாது. 

   அண்மையில் ஒரு திருமண வரவேற்பில் பங்கேற்பதற்காக மைசூரு சென்றிருந்தேன். எனது இனிய நண்பர் பொறியாளர் சந்துரு அங்கே வசிக்கிறார். ஒவ்வொரு முறையும் மைசூரு செல்லும்போது நண்பருடன் சேர்ந்து சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடத்திற்குச் செல்வதுண்டு. அந்த வகையில்  செல்லாத இடத்திற்குச் செல்வது என முடிவு செய்தோம்.

  பல இடங்களை அவர் பட்டியலிட்டார். நான் தேர்ந்தெடுத்தது சுகவனம் என்னும் இடமாகும். சுகம் என்றால் கிளி என்று பொருள். நாங்கள் அங்கு சென்றதும் முப்பது அடி உயரத்தில் பளிங்குக் கற்சிலையாக நின்ற ஆஞ்சநேயர் எங்களை வரவேற்றார்.

   வியப்பாக இருந்தது; எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் பார்வையாளர்களைச் சுகவனத்திற்குள் செல்ல அனுமதிக்கிறார்கள்.

 சுட்டப் படம்
           சுட்டப் படம்




   உள்ளே சென்றதும் அப்படியே ஒரு நோட்டம் இட்டேன். சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் நிறைய மர மட்டைகளோடு ஒரு சுக வனமாகவே காட்சியளிக்கிறது. இரண்டு தென்னைமர உயரத்தில் அந்த வனத்தைச் சுற்றிப் பார்க்க வான நடைப்பாதை (Sky walk) அமைத்திருக்கிறார்கள். ஆனால் அதில் நடப்பதற்குப் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. அந்தச் சுகவனத்தின் நிறுவனர் மட்டுமே அதைப்பயன்படுத்துவாராம்.

   அங்கே பச்சைக் கிளிகள்- இல்லை இல்லை- வண்ண வண்ணக் கிளிகள்  உள்ளன. அவை மிகத் தூய்மையாகவும் கொழு கொழு எனவும் உள்ளன. ஆண் கிளிகளும் பெண் கிளிகளும் கொஞ்சிக் குலாவுகின்றன; துள்ளி விளையாடுகின்றன.

   அவை எந்த நாட்டுக் கிளிகள், உயிரியல் பெயர் என்ன என்பது போன்ற விவரங்கள் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட தகடு அந்தந்தக் கூண்டுக்கு முன்னால் உள்ளது.

    சீருடை அணிந்த ஊழியர்கள் கிளிகளுக்கு உண்ணத் தேவையான பழம் கொட்டைகளைத் தருகிறார்கள். குடிக்க நீர் வார்க்கிறார்கள். தண்ணீரைப் பீய்ச்சி அடித்து குளிப்பாட்டுகிறார்கள்.

         ஒரு கூண்டில் இருந்த பச்சைக்கிளி செய்த சாகசத்தை நான் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். தனக்குத் தின்பதற்குக் கொடுக்கப்பட்ட முழு கொண்டைக்கடலைகளைத் தின்றுவிட்டு ஒன்றைமட்டும் வைத்துக்கொண்டு விளையாடியது. கூண்டின் உள்ளே குறுக்காக   வைக்கப்பட்டிருந்த ஓர்  உருள் கம்பியில் உட்கார்ந்தபடி விளையாடியது. காலிடுக்கில் இருந்த அந்தக் கொண்டைக்கடலையைச் சற்றே விடுவிக்கிறது. அது கீழ் நோக்கி விழும்போது கண நேரத்தில் தலைகீழாகத் தொங்கி தன் அலகால் அக் கொண்டைக்கடலையைப் பிடிக்கிறது. அதை மீண்டும் தன் காலிடுக்கில் வைத்து நழுவவிடுகிறது. அது கீழே விழுமுன் தன் அலகால் பிடிக்கிறது. இப்படி ஐந்து நிமிடம் கழிகிறது. ஒரு முறையாவது கவனக் குறைவால் தவறவிடும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். நான்தான் கவனக் குறைவால் கையிலிருந்த காமிராவைத் தவற விட்டேன். கிளி அல்ல.

     கிளி என்றால் பச்சையாகத்தான் இருக்கும். ஆனால் அங்கே வெள்ளைக் கிளி உள்ளது; கருப்புக் கிளி உள்ளது; நீலக்கிளி உள்ளது. உருவ அமைப்பிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.  சில கிளிகள் பருத்துப் பருந்துக் கணக்கில் உள்ளன. எல்லாமே துருப்பிடிக்காத எவர்சில்வர் கம்பியாலான கூண்டுகளில் உள்ளன. வெளியில் எங்காவது பறந்து திரியும் ஊர்க் கிளிகள் உள்ளே வந்து வளர்கிளிகளோடு கலந்துவிடக்கூடாது என்னும் எண்ணத்தில் சுக வனம் முழுமைக்கும் மூன்று தென்னைமரம் உயரத்தில் கம்பிவலை அமைத்திருக்கிறார்கள்.

     

அடுத்து ஓர் இடத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். எட்டிப் பார்த்தேன். ஒரு போட்டோகிராபர் ஒரு சிலரை நிற்கவைத்து ஃபோட்டோ எடுத்தார். அவர்களுடைய தலைமீதும் தோள் மீதும் கிளிகள் பறந்துவந்து அமர்ந்திருந்தன. அதற்குக் கட்டணமாக ஒருவருக்கு நூற்றிப்பத்து ரூபாய் வாங்குகிறார்கள். சுகவனத்தை விட்டு வெளியில் செல்லும்போது கிளிகளோடு சேர்ந்து எடுத்தப் படங்களை அச்சிட்டுக் கொடுத்துவிடுகிறார்கள். நாங்களும் அப்படி ஒரு படம் எடுத்துக்கொண்டோம். பல கிளிகள் நம் மீது வந்து அமரும்போது உருவாகும் மகிழ்ச்சி இருக்கிறதே அதை அனுபவித்துப் பார்க்க வேண்டும்.
“வன்னப் பறவைகளைக் கண்டு மனத்தில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா” என்று பாரதி சொன்னானே அது உண்மை என உணர்ந்த தருணம் அது.

   சுக வனத்தில் நம் காமிராவில் படம் எடுக்க அனுமதி இல்லை.

      பச்சைக்கிளிகளை நினைவில் சுமந்தபடி வெளியே வந்தால் நம்மை போன்சாய் மரங்கள் வரவேற்கின்றன. போன்சாய் தோட்ட்த்தில் நுழைய கட்டணம் இருபது ரூபாய். மரங்களை ஃபோட்டோ எடுக்கலாம். தனிக் கட்டணம் ஏதுமில்லை.

    ‘போன்’ என்றால் தொட்டி என்று பொருள். ‘சாய்’ என்றால் மரம். சிறு தொட்டிகளில் பெரிய மரங்கள் வாமன வடிவில் செழிப்பாகக் காணப்படுகின்றன. இந்தக் கலை பத்தாம் நூற்றாண்டில் ஜப்பானியர் மற்றும் சீனர்களால் உருவாக்கப்பட்டது என்பது பழைய செய்தி. அதற்கு முன்னர் இராமாயண காலத்தில் அக் கலையை இந்தியர் தெரிந்து வைத்திருந்தனர் என்பது புதிய செய்தி. சுக்ரீவனின் தாய்மாமன் ததிமுகன் இக் கலையில் வல்லவனாக இருந்தான். அவன் உருவாக்கியதே கிஷ்கிந்தா என்னும் குறுமரக் காடு. இச் செய்தி குறித்தக் கல்வெட்டும் அங்கே உள்ளது.. இதைக் கருத்தில்கொண்டு இந்த போன்சாய் தோட்டத்திற்கு கிஷ்கிந்தா மூலிகா போன்சாய் தோட்டம் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

   போன்சாய் குறித்த பழைய சமஸ்கிருத நூல் நம் நாட்டில் இருந்தது. உபவன வினோதம் என்பது அதன் பெயர். அதிலிருந்து இரண்டு வரிகள்:

Ishtaka chite samantaat purushanikhaatevate tarurjaatah
Vamana eva hi dhatte phala kusuman sarva kaalamiti.

இதன் பொருள்: “ஒரு குழியைத் தோண்டு; அதில் செங்கல் சுவரைச் சுற்றிலும் கட்டு; அரச மரக்கன்றை நடு; நீர் ஊற்றி எருவிடு; அவ்வப்போது நுணுக்கமாக வேர்களையும் கிளைகளையும் வெட்டு; சர்வ காலமும் பூக்கும்; காய்க்கும்.”

   பல செய்திகளை நாம் முறையாக ஆவணப்படுத்தாத காரணத்தால் வெளிநாட்டினர் உரிமை கொண்டாடுகிறார்கள்!

   எல்லாவற்றையும் பார்த்துவிட்டு மன நிறைவோடு வெளியே வருகிறோம். சுகவனம் மற்றும் போன்சாய் தோட்டம் அமைத்து மிக அருமையாகப் பராமரித்துவரும் சுவாமி கணபதி சச்சிதானந்தா நம் பாராட்டுக்கு உரியவர். சில உருப்படியான நல்ல செயல்களைச் செய்யும் சாமியார்களும் நம் நாட்டில் உள்ளனர் என்பதற்கு இவர் சான்றாக உள்ளார்.

      


    

6 comments:

 1. கட்டுரை மிக அருமை. சுகவனத்திற்கு நேரில்சென்று வந்த மகிழ்ச்சி ஏற்பட்டது அதற்கு காரணம் தங்களின் எழுத்து நடை.மிக்க மகிழ்ச்சி அய்யா.
  அன்புடன் நூலகர் மாேகன்

  ReplyDelete
 2. கிளிகளுடன் சேர்ந்து படம்
  மகிழ்வாக இருக்கிறது ஐயா
  இருமுறை மைசூர் சென்றுள்ளேன்,ஆயினும் இவ்விடம் பற்றி அறியாமலேயே
  இருந்திருக்கிறேன்
  நன்றி ஐயா

  ReplyDelete
 3. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
  மைசூர் சென்றுள்ளேன். ஆனால் இவ்விடம் பற்றி அறியவில்லை. வாய்ப்பிருக்கும்போது அவசியம் செல்வேன். நன்றி.

  ReplyDelete
 4. கோடை வெயிலுக்கு இதமான பதிவுகள்...

  ReplyDelete
 5. கோடை வெயிலுக்கு இதமான பதிவுகள்...

  ReplyDelete
 6. மனிதமனம் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டுமென்றால் சுகவனம் போன்ற இடங்களைக் காண வேண்டும். பச்சைக்கிளிகள் மட்டுமல்ல உலகில் கிளிகளின் வகைகள் ஏராளமாக உள்ளன். அதிலும் குறிப்பாகப் பஞ்சவர்ணக்கிளிகள் தான் உண்ட கொட்டைகளில் ஏதேனும் விசத்தன்மை இருப்பின் அந்த நச்சுத்தன்மையைப் போக்க குறிப்பிட்ட மலையைத் தேடிச் சென்று ஒருவகையான மண்ணை உண்டு நஞ்சைப் போக்கிவிடுகிறது. மனிதன் பேசுவதைப் போன்று கிளிகளும் பேசுவது மனதுக்கு மகிழ்ச்சியே.

  ReplyDelete