Tuesday 20 March 2018

மறக்க முடியாத மரக்கா Arboretum

   ஆர்போரீட்டம் (Arboretum) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு மரங்களின் தொகுதி அல்லது கூட்டம் எனப் பொருள் சொல்லலாம். குறிப்பாகச் சொன்னால் வெவ்வேறு பெயருடைய  மரங்களை ஒரு பெரும்பரப்பில் நட்டு வளர்ப்பதாகும். இந்த ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக மரங்கள் நிறைந்த சோலை என்னும் பொருள் தரும் வகையில்  மரக்கா என்னும் புதிய சொல்லை நான் உருவாக்கியுள்ளேன்.





    நாடு திரும்ப இன்னும் ஒரே வாரம் உள்ள நிலையில்,  டெல்லாஸ் ஆர்போரீட்டம் என்னும் இடத்திற்குச் சென்றோம். நகரை ஒட்டி ஓர் இருநூறு ஏக்கர் நகராட்சி நிலத்தை ஏற்று, இயற்கை ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து இதை உருவாக்கி உள்ளனர். பராமரிப்புச் செலவு மிகுதி என்பதால் மரக்காவினுள் செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறார்கள். மாலை ஐந்து மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி. அதற்குப் பிறகு இரவு ஒன்பது மணிவரை மரக்கா உறுப்பினர்க்கு உரியதாகும். அலுவலகம் முடிந்து மனைவி மக்களுடன் வந்து எந்தவித கூட்ட நெரிசலும் இல்லாமல் மரக்காவில் மகிழ்ச்சியுடன் நடைபயில்கிறார்கள். மரக்காவுடன் இணைந்த நன்னீர் ஏரியில் தாமே படகோட்டிச் செல்கின்றனர். முன்னிரவு நேரங்களில் உண்டாட்டு மற்றும் இசைக் கச்சேரிகளை ஏற்பாடு செய்து மகிழ்ந்து குலாவுகின்றனர். மரக்கா உறுப்பினர் ஆவதற்கு ஆண்டுச் சந்தா உண்டு.

  இங்குள்ள ஒவ்வொரு மரமும் பொதுமக்கள் தம் உறவினர், நண்பர் நினைவாக அல்லது பிறந்த நாள், திருமண நாள், பட்டமேற்ற நாள் தொடர்பாக நடப்பெற்றதாகும்.

   முதியவர் சிலர் சக்கர நாற்காலியில் ஊர்ந்து வந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தாம் நட்ட மரங்களை அண்ணாந்து பார்த்து அதிசயிக்கிறார்கள்.
   



     மரக்கா என்றால் வெறும் மரங்கள் மட்டுமே இருக்கும் என்று போனால் அங்கே பூச்செடிகள் காடாக மண்டிக் கிடந்தன. குறிப்பாக வண்ண வண்ன டுலிப் மலர்கள் கண்ணைப் பறித்தன.

   இங்கு நடக்கும் செயல்பாடுகள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. குழந்தைகளுக்கென தனிப்பகுதி உண்டு. அங்கு அவர்களுக்குக் கதை சொல்கிறார்கள்; ஒவியம் வரையவும் கற்றுத்தருகிறர்கள். நீர்ச்சறுக்கு, குன்றேறுதல் போன்ற சாகசங்களில் குழந்தைகள் ஈடுபடுகிறார்கள். குழந்தைகளுக்கு இது பொழுதுபோக்குவதற்குரிய இடமன்று., பொழுதாக்குவதற்குரிய இடமாகும்.

      பெற்றோர் குழந்தைகளுடன் சென்று இரவு நேரத்தில் துணிக் கூரை அமைத்துத் தங்கி மகிழலாம். தாய் தினம், தந்தை தினம் எனப் பல்வேறு சிறப்பு நாள்களில் அங்கு சென்று நிகழ்வுகளைக் கண்டு மகிழலாம்; விதவித உணவுகளை உண்டு மகிழலாம்.

   சனிக்கிழமை தோறும் மரக்கா உறுப்பினர்க்கு மட்டும் யோகா வகுப்புகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வியாழக்கிழமையும் முதிய இளைஞர்களுக்கு அதாவது  அறுபத்தைந்து வயதுக்கு மேற்பட்டோருக்குக் குறைந்த கட்டண அனுமதியும் இலவச பேட்டரி காரும் உண்டு.

   ஜூன், ஜூலை இரண்டு மாதங்கள் கல்லூரி மாணவர்க்கான கோடைகால சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ் வழங்கும் திட்டமும் உண்டு.
   சுருங்கச் சொன்னால் இந்த மரக்காவை ஒரு திறந்தவெளி நூலகம் அல்லது திறந்தவெளிப் பள்ளி எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 
முனைவர் .கோவிந்தராஜு,
அமெரிக்காவிலிருந்து.

  

6 comments:

  1. இங்கு நடக்கும் செயல்பாடுகள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. குழந்தைகளுக்கென தனிப்பகுதி உண்டு. அங்கு அவர்களுக்குக் கதை சொல்கிறார்கள்; ஒவியம் வரையவும் கற்றுத்தருகிறர்கள். நீர்ச்சறுக்கு, குன்றேறுதல் போன்ற சாகசங்களில் குழந்தைகள் ஈடுபடுகிறார்கள். குழந்தைகளுக்கு இது பொழுதுபோக்குவதற்குரிய இடமன்று., பொழுதாக்குவதற்குரிய இடமாகும்.

    பெற்றோர் குழந்தைகளுடன் சென்று இரவு நேரத்தில் துணிக் கூரை அமைத்துத் தங்கி மகிழலாம். தாய் தினம், தந்தை தினம் எனப் பல்வேறு சிறப்பு நாள்களில் அங்கு சென்று நிகழ்வுகளைக் கண்டு மகிழலாம்; விதவித உணவுகளை உண்டு மகிழலாம்.

    நம் நாட்டில் இதெல்லாம் சாத்தியமாகுமா?
    ஏக்கம்தான் மிஞ்சுகிறது ஐயா

    ReplyDelete
  2. மரக்கா! புதிய சொல் நன்றாக இருக்கிறது ஐயா. இதனைத் தாங்கள் அகராதியில் பதிய அதற்கானவர்களிடம் தொடர்பு கொள்ளலாம் இல்லையா? ஆங்கிலத்தில் இப்படு இருவாகும் சொற்களை ஆங்கில அகராதிகள் பதிவது போல் முனவர் ஜம்புலிங்கம் ஐயா கூட அதைப் பற்றி எழுதியிருந்தார் இல்லையா...அப்படி..

    ஆமாம் ஐயா அங்கெல்லாம் எல்லாமே இப்படித்தான். பொழுது போக்காக மட்டுமின்றி நம் சிந்தனைகளையும், அறிவையும் வளர்ப்பதாகவே இருக்கும். பார்ன்ஸ் அண்ட் நோபிள் புத்தகக் கடைக்குச் சென்றால் அது தனி அனுபவம். ஊர் திரும்புவதற்குள் முடிந்தால் அங்கு அருகில் இருந்தால் சென்று வாருங்கள் ஐயா. வியந்து போவீர்கள். அங்கும் சிறு குழந்தைஅளுக்கென்று விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் இருக்கும் நாம் அவர்களை விளையாட விட்டு எழுத எல்லாம் குட்டியாக மேசை நாற்காலி எல்லாம் இருக்கும்...குழந்தைஅளுக்கென்று தனியாகவும் இருக்கும்...புத்தகத்தை எடுத்துப் படித்துவிட்டு வைத்துவிட்டும் வரலாம்...இல்லை என்றால் வாங்கவும் செய்யலாம்...முழுநேரம் கூட நாம் நம் உணவுடன் அங்கு சென்று இருந்து வாசித்துவிட்டு வரலாம்...அப்படி முன்பு இருந்தது...இப்போது மாறியுள்ளதா என்று தெரியவில்லை ஐயா..அங்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நிறைய நல்ல அனுபவம் கொடுத்து நம்மூரில் இப்படி நடக்காதா என்ற ஏக்கத்தையும் கூடவே வர வழைக்கும்...

    நல்ல விவரனம் ஐயா...ஒரு இடத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது...

    கீதா

    ReplyDelete
  3. மரக்கா சொல்லாக்கம் அருமை. படங்களும் கட்டுரையும் வெகு அருமை.

    ReplyDelete
  4. படங்களும் தகவல்களும் அருமை...

    ReplyDelete
  5. பதிவினைப் பார்க்கும்போது வியப்புதான் மேலிட்டது. புதியதோர் உலகத்திற்குச் சென்ற உணர்வு. ரசனையுள்ள மக்கள். மரக்கா சொல் பொருத்தமாக இருப்பதாக உணர்கிறேன்.

    ReplyDelete
  6. பயிர்நூல் முறைப்படி அமைந்துள்ள தோட்டம் என்று விக்சனரி பொருள் கொள்கிறது. "மரக்கா" புதிய சொல்லாட்சி! டெல்லாஸ் அர்போரீட்டம் பற்றிய விரிவான பதிவு. இருநூறு ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் "மரக்கா" ஒரு அதிசயம்!!!

    ReplyDelete