Friday 3 January 2020

இனிய திருப்பாவையும் எளிய உரையும் பாடல் 11-15


பாடல் எண்: 11
கற்றுக் கறவைகள் கணங்கள் பலகறந்து
  செற்றார் திறனழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
  புற்று அரவு அல்குல் புனமயிலே! போதராய்!
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
  முற்றம் புகுந்து முகில்வண்னன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
  எற்றுக்கு உறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய்!
 
அருஞ்சொற்பொருள்: கற்று- கன்று; கணம்- கூட்டம்; செற்றார்- பகைவர்; செரு- போர்; கோவலர்- ஆயர்; அரவு- நல்ல பாம்பு; அல்குல்- பெண்ணின் பிறப்புறுப்பு; புனம்- விளைநிலம்; போது>போந்து- வந்து;             சிற்றாதே- அசையாமல்; பெண்டாட்டி- பெண்மையை ஆள்பவள்;       எற்றுக்கு- எதற்கு.
விளக்கவுரை:
   கூட்டம் கூட்டமாக நிற்கும் கன்றுகளை ஈன்ற  வள்ளல் பெரும்பசுக்களிடமிருந்து பால் கறந்து வாழ்பவர்களும், கண்ணனின் பெருமைகளைப் பொறுத்துக் கொள்ளாதவர்களைப் பகைவர்களாகக் கருதி அவர்களுடன் போரிட்டு அவர்தம் வலிமையை அழிப்பவர்களும், குற்றம் குறைகள் எதுவும் இல்லாத வாழ்வியல் நெறிகளைக் கொண்டவர்களும் ஆகிய ஆயர்களின் குலக்கொழுந்தே! பொற்கொடியே! புற்றில் உறையும் நல்ல பாம்பின் படத்தை ஒத்த பிறப்புறுப்பை உடையவளே! தினைப் புனத்தில் திரியும் இளமயில் போன்றவளே! எழுந்து வந்து கதவைத் திற!

   உன் வீட்டு வாசலில் நம் உறவுக்காரப் பெண்கள், உற்ற தோழியர் எல்லோரும் கூட்டமாகக் கூடிநின்று, முகில் வண்ணனாகிய ஊழி முதல்வனின் ஆயிரமாயிரம் திருநாமங்களை அழகாகச் சொல்லிப் பாடுகிறார்கள். பெண்மை என்னும் பெருஞ்செல்வத்தை ஆண்டு அனுபவிக்கும் பெண்ணே! (செல்வப் பெண்டாட்டியே!) நீ அசையாமலும், பேசாமலும் படுக்கையில் கிடந்து உறங்குவதில் ஏதேனும் பொருள் உண்டோ? எழுந்து வாசலுக்கு வந்து எம்மோடு சேர்ந்து நீயும் கண்ணனைப் போற்றிப் பாடு.
                 &&&&&&&&&&&&&&&&
பாடல் எண்: 12
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
   நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
   பனி தலைவிழ நின் வாசல் கடைப்பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
   மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்!
இனித்தான் எழுந்திராய்! ஈது என்ன பேருறக்கம்?
   அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!

அருஞ்சொற்பொருள்: கனைத்தல்- அழைப்பொலி எழுப்புதல்; கற்று- கன்று; சோர- சொரிய; செற்ற- அழித்த;

விளக்கவுரை:
  எருமைகள் தம் இளங்கன்றுகளை நினைத்து ஒலி எழுப்பி அழைத்த  அளவில் மடி சுரந்து, தாமாகப் பாலை இடைவிடாது சொரிய, அது வீணாகிக் கட்டுத்தரை எல்லாம் சேறு ஆனாலும் குறைவு படாத நல்ல செல்வ வளத்தை உடைய ஆயனின் அருமைத் தங்கையே!

    எங்கள் தலைமீது பனிமழை பொழிய, உன் வீட்டு வாசலில் நடுங்கியபடி நிற்கின்றோம். சும்மா நிற்கவில்லை; அன்று சினம் கொண்டு படை நடத்தி இலங்கை அரசன் இராவணனை அழித்தவனும், எங்கள் மனத்துக்கு இனியனும் ஆகிய இராமனை நாங்கள் பைந்தமிழில் பாடி நிற்கின்றோம். ஆனால் நீயோ வாய்திறந்து ஒரு வார்த்தையும் சொல்லாமல் படுக்கையில் கிடக்கின்றாய்! இப்படி அடம் பிடிப்பது இங்குள்ள இல்லத்தார் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இது உனக்கு அவமானம் ஆகும் அல்லவா? எனவே எழுந்து வா.

உள்ளுறை பொருள்: எருமைகள் தம் கன்றுகள் மடி முட்டாத நிலையிலும் பால் சொரிவதைப் போல் இறைவழிபாட்டில் ஆர்வம் இல்லாதவர்க்கும் இறைவன் இரங்கி அருள் புரிவான்.
            &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பாடல் எண்:13   -
புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
   கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தியைப் பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்;
   வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பின காண்; போது அரிக் கண்ணினாய்!
   குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடந்தியோ? பவாய்! நீ நன்னாளால்
   கள்ளம் தவிர்த்துக் கலந்தேலோர் எம்பாவாய்!

அருஞ்சொற்பொருள்; புக்கார்- புகுந்தார்; போது- பூ; அரி- வண்டு; பள்ளி- படுக்கை;
விளக்கவுரை:
    அன்புத் தோழியே! கீழ் வானத்தில் வியாழன் மறைந்து, வெள்ளி முளைத்து விட்டது. பறவைகள் எல்லாம் தம் மொழியில் பேசத் தொடங்கிவிட்டன. கொக்கின் வடிவில் வந்த பகாசுரன் என்னும் அரக்கனின் வாயைக் கிழித்துக் கொன்றவனும், இராமனாக அவதாரம் எடுத்து, இராவணின் குலத்தை அழித்தவனும் ஆகிய கண்ணனின் புகழ் பாடியவாறு நம் ஆயர்பாடிச் சிறுமியர் அனைவரும் பாவை நோன்பு நோற்குமிடத்துக்குச் சென்று சேர்ந்துவிட்டனர்.

   பூவில் புரளும் கருவண்டினை ஒத்த கண்களை உடையவளே! எங்களுடன் சேர்ந்து தாமரைத் தடாகத்தில் நடுங்கும் குளிரிலும் நீரைக் கைகளால் குடைந்து  நீராட மனமில்லாமல், இப்படிப் படுக்கையில் கிடக்கின்றாயே!

    நீ கள்ளத் தனமாக யாருக்கும் தெரியாமல் சென்று நீராடி, நோன்பிருந்து தனி ஒருத்தியாகக் கண்ணனைக் காணலாம் என்று எண்ணுகிறாயா? அது நடக்காதடி பெண்ணே! இந்த நல்ல நாளில் எங்களோடு சேர்ந்து நீராடி நோன்பு நோற்பதற்கு உடனே எழுந்து வா.
                    &&&&&&&&&&&&&&&&&&&
பாடல் எண்:14 
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
   செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய்கூம்பின காண்;
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
   தங்கள் திருக்கோவில் சங்கிடுவான் போகின்றார்;
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
   நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏத்தும் தடக்கையன்
   பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

அருஞ்சொற்பொருள்: புழைக்கடை – பின்புறம்; வாவி- குளம்; நெகிழ்ந்து- திறந்து; கூம்பிய- மூடிய; கூறை- ஆடை; தட- வலிமையான; ஏத்தும்- ஏந்தும்; பங்கயம்- தாமரை.

விளக்கவுரை:
   உங்கள் வீட்டின் பின்புறத் தோட்டத்தில் உள்ள குளத்தில் பூத்துக்கிடந்த ஆம்பல் மலர்கள் கூம்பி விட்டன; செங்கழுநீர் மொட்டுகள் மெல்ல விரிகின்றன. இதிலிருந்து இது விடியற்காலை என்பதைப் புரிந்துகொள்.

   வெண்மையான பற்களை உடைய தவயோகியர், நீராடி முடித்து, செங்கல்பொடி நிறத்தில் காவி உடை அணிந்து, சங்கினை முழங்குவதற்காகத் தங்கள் கோவிலுக்குச் செல்கிறார்கள். இதுவும் பொழுது விடிவதற்கான அறிகுறியாகும்.

   “நான் முதலில் வந்து எழுப்புவேன்” என்று நீ நேற்று சொன்னது என்ன ஆயிற்றூ? கொஞ்சமும் நாணம் இல்லாமல் தூங்கும் பெண்ணே! பேச்சில் உள்ள ஆர்வம் உன் செயலில் இல்லையே!

   சங்கு, சக்கரம் ஏந்திய வலிமையான கைகளை உடையவனும், தாமரை மலர் போன்ற கண்களை உடையவனும் ஆகிய கண்ணனைப் பாடி மகிழ உடனே எழுந்து வா.
                 &&&&&&&&&&&&&&&&&&& 
பாடல் எண்:15 
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
     சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள்! பண்டே உன் வாய் அறிதும்
     வல்லீர்கள் நீங்களே, நான் தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய், உனக்கு என்ன வேறு உடையை?
     எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்;
வல்னை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
     வல்லானை, மாயானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய்.


அருஞ்சொற்பொருள்: எல்லே- என்னே; சில்லென்று- சளசளவென்று; வல்லை- சாமர்த்தியசாலி; கட்டுரை- கட்டுக்கதை; ஒல்லை- சீக்கிரம்; வேறு என்ன உடையை- வேறு என்ன வேலை; போந்தார்- வந்தார்; வல்லானை>வல் ஆனை>வல் யானை- குவலயபீடம் என்னும் யானை; மாற்றார்- பகைவர்; மாற்று- வலிமை; மாயன்- கண்ணன். 
 விளக்கவுரை:
   உள்ளே விழித்தாலும் எழுவதற்கு மனமில்லாமல் படுக்கையில் கிடக்கும் பெண்ணுக்கும், வெளியே அவளை எழுப்பிக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் இடையே நடக்கும் சுவையான உரையாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.

இனி உரையாடலைக் கேட்போம்.

  “இளம் கிளி போன்று கொஞ்சிப்பேசும் அழகிய பெண்ணே!  இன்னுமா நீ உறங்குகிறாய்?”

 “அருமைப் பெண்களே! சளசளவென்று மீண்டும் மீண்டும் என்னை அழைக்காதீர். நானே எழுந்து வருகிறேன்.”

 “நீ சரியான சாமர்த்தியசாலிதான்! வக்கணையாய்ப் பேசுகிறாய்! நீ பேசும் கட்டுக்கதைகள் என்னவென்று எங்களுக்கு முன்னரே தெரியும்.”

 “சரி சரி நீங்களும் வல்லவர்தாம். நீங்கள் சொல்வது போல் நான் சாமர்த்தியசாலியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.”

  “அடி பெண்ணே! சீக்கிரம் எழுந்து வா. எங்களுடன் சேர்ந்து நீராடுவதை விட உனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?”

“ அதுவெல்லாம் ஒன்றுமில்லை. எல்லோரும் வந்து விட்டார்களா?”

  “எல்லோரும் வந்து விட்டார்கள். நீ வேண்டுமானால் வந்து எண்ணிச் சரிபார்த்துக்கொள். கம்சன் ஏவிய ‘குவலயா பீடம்’ என்னும் யானையைக் கொன்றவனும், எதிரிகளை அழிக்கவல்லவனும் ஆகிய கண்ணனைப் பாடி மகிழ்வோம். உடனே எழுந்து வா.”
      &&&&&&&&&&&&&&&&&&&&&

4 comments: