Tuesday 30 June 2015

நாடு போற்றும் நயாகரா

   அந்தக் காலத்தில் அதாவது 1960 களில் ஐந்தாம் வகுப்பில் சமூகம் என்று ஒரு பாடநூல் இருந்தது. அட்லஸ் புத்தக அளவில் இருக்கும். அதில் ஒரு பாடம் அமெரிக்க நாடு பற்றியது. அப் பாடத்தில் நயாகரா நீர்வீழ்ச்சி எனக் குறிப்பிட்ட ஒரு பத்தியும் ஒரு படமும் இருந்தது நன்றாக நினைவிருக்கிறது. அதற்குப் பிறகு 52 வருடம் கழித்து
அந்த நயாகராவைப் பார்க்கப் போகும் பரபரப்போடு சுற்றுலா பேருந்தில் ஏறி அமர்ந்தேன். அதுவும் முந்திக்கொண்டு ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தேன்., செல்லமாக கோபித்துக்கொண்டே என் மனைவி அருகில் அமர்ந்தாள். மகள் புவனா எங்களுக்கு முன் இருந்த இருக்கையில் ஓர் அமெரிக்கப் பெண்ணுடன் அமர்ந்தாள்.

    குளிர்சாதனம் பொருத்தப்பட்ட சொகுசு பேருந்து. பத்து சக்கரங்களுடன் கூடிய நீண்ட, அகன்ற, உயரமான பேருந்து. ஜன்னலோரம் பிகப்பெரிய கண்ணாடி., பார்த்து அறிய முடியாது., தொட்டுதான் உணரமுடியும். அக் கண்ணாடி வழியாக உள்ளிருந்து வெளியே பார்க்க முடியும்., வெளியிலிருந்து உள்ளே பார்க்க முடியாது.

    வசதியான இருக்கைகள்., குளிர் காற்றைக் கூட்ட குறைக்க தலைக்கு நேர் மேலே வசதி இருந்தது. அவ்வப்போது வந்து உதவிக்கரம் நீட்ட மஞ்சள் நிற சீருடையில் மட்டற்ற அழகுடன் இரு சீன இளம்பெண்கள் இருந்தனர். கை தேர்ந்த சீன நாட்டு ஓட்டுநர். மொத்தத்தில் விமானத்தில் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. எட்டு மணி நேர பயணத்தில் சிறு அலுப்புக் கூட இல்லை.

      முன்பதிவு செய்திருந்த அனைத்துப் பயணியரும் குறித்த நேரத்தில் வந்ததால், காலை எட்டு மணிக்குப் புறப்பட வேண்டிய பேருந்து சரியாக எட்டு மணிக்கு நியுயார்க்கிலிருந்து  புறப்பட்டது. காடுகளும் மலைகளும் பின்னால் ஓட, பேருந்து 120 கி.மீ வேகத்தில் ஒரு சிறு ஒலியின்றி சிறுத்தையைப் போல விரைந்தது. அந்த வேகத்திலும் கண்ணில் கண்ட காட்சிகளை என் காமிரா துல்லியமாகப் பதிவு செய்தது.

    குறிப்பிட்ட இடைவெளியில் பயணியரின் ‘அந்த’ வசதிக்காக பேருந்து நிறுத்தப்பட்டது. 100% தூய்மையான கழிப்பறைகள்., அதுவும் கட்டணமில்லா கழிப்பறைகள். “ இதற்குக் கூடவா உங்கள் நாட்டில் கட்டணம் வசூலிக்கிறார்கள்?” என்று அருகில் வந்த அமெரிக்கர் வியப்புடன் கேட்டார். ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்று நினைத்திருப்பார். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட பொதுக் கழிவறைகளை மற்றும் உணவக, அங்காடி கழிவறைகளைப் பயன்படுத்தியிருப்பேன். ஆனால் ஒரு இடம் கூட முகம் சுழிக்கும்படியாக இல்லை. சென்சார் பொருத்தப்பட்டிருப்பதால் சிறுநீர் கழித்துவிட்டுச் சற்று அகன்றாலே போதும் அதனுள் தானே தண்ணீர் கொட்டுகிறது. இத்தகைய சென்சார்கள் இருப்பதால், தூய்மையாக வைக்க வேண்டும் என்னும் சென்ஸ் இல்லாதவர்களால் கூட எந்தப் பிரச்சனையுமில்லை. தேடிப்பார்த்தாலும் ஒரு தூசு தும்பு இல்லை., தரையில் ஒரு கறை கசடு எதுவுமில்லை. அண்ணாந்து பார்த்தால் ஒட்டடை இல்லை. இதற்காகவே அவர்களுக்கு ஒரு ஓ போடலாம். மனிதனுக்கு ஒன்றும் இரண்டும்தானே முக்கியம்.

    பிற்பகல் மூன்று மணி அளவில் சற்றே மெல்லச் சென்ற எங்கள் பேருந்து நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஒரு குக்கிராமச் சாலையில் பயணித்து நின்றது.
அங்கே Watkins Glen State Park என்னும் பெயர்ப்பலகை கண்ணில்பட்டது. அந்த அழகுப் பெண்கள் இருவரும் முன்னே சென்று வழிகாட்ட, ஒரு மலைப் பகுதிக்குள் நுழைந்தோம். அங்கே இறங்கு முகமாய் ஓடிய ஓடையின் கரை வழியே நடந்து, படிக்கட்டுகளில் கற்பாதைகளில்  இறங்கி, படு பாதாளத்தில் சென்றோம். இடையிடையே சிறியதும் பெரியதுமான நாற்பது அருவிகள் நுங்கும் நுரையுமாய் பேரொலியுடன் விழுந்தன. ஓடை மீது கட்டப்பட்டிருந்த குறுகிய கற்பாலங்களை நடந்தும் கிடந்தும் கடந்தோம்.

    ஓர் இடத்தில் பேரருவி கொட்டியது., அதனுள் நனையாமல் சென்றோம்., அருவி நீர் நம் தலைக்கு மேலே தாவி விழுகிறது. அப்படி பாலம் அமைத்திருக்கிறார்கள். நான் ஈரோட்டுப் பேராசிரியர் கந்தசாமி தலைமையிலும், தமிழ் நாட்டின் காவல்துறை உயர் அதிகாரி டாக்டர் சைலேந்திர பாபு அவர்கள் தலைமையிலும் எத்தனையோ மலைகளில் சுற்றியிருக்கிறேன். அனால் அவற்றையெல்லாம் தூக்கி விழுங்கும் அனுபவமாக இது அமைந்தது. இவ்வளவு தூரம் இறங்கி வந்துவிட்டோமே இனி எப்படி திரும்பி ஏறிச் சென்று பேருந்தைப் பிடிப்பது என மலைத்து நின்ற போது, அந்த வழிகாட்டிப் பெண் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தால் எங்கள் பேருந்து அங்கு நின்று  கொண்டிருந்தது!

    இரவு எட்டுமணிக்கு நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டலுக்குச் சென்று சற்றே ஓய்வெடுத்தோம். பிறகு பொழுது சாய்வதற்குள் நயாகரா அருவியைப் பார்த்துவிட வேண்டும் என்னும் முடிவோடு ஓட்டமும் நடையுமாக விரைந்தோம்.

     நயாகரா அருவி பேரழகின் பெட்டகமாகத் திகழ்ந்ததைக் கண்டு வியப்பில் கத்தினோம். அருவி நீர் ஆறாக ஆர்ப்பரித்து ஓடும் அழகே அழகு! ஆற்றின் இந்தப்பக்கம் அமெரிக்கா அந்தப்பக்கம் கனடா. அங்கே அருவியைக் காண்பதற்காக 168 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தைக் கட்டியுள்ளார்கள். Skylon Tower என்று பெயர்.
Skylon Tower
 அவர்கள் பக்கத்திலிருந்த மின் விளக்குகளிலிருந்து வந்த வண்ண ஒளிவெள்ளம் அருவியின் மீது பட்டு வர்ணஜாலம் நிகழ்த்தியது கண்களைவிட்டு அகலாத காட்சியாகும்.
Enchanting view

couple behind couple of falls

Chinese Guides

with army men with gun


    1885 ஆம் ஆண்டு இந்த அருவி சுற்றுலா பயணியருக்குத் திறந்து விடப்பட்டதாம். அமெரிக்காவில்  நியுயார்க் மாநிலத்தின்  மிகப்பழமையான சுற்றுலாத் தலம் இதுதானாம்.

   குளிர் காற்றும் தூறலும் வலுத்ததால் திரும்பி நடந்தோம். இரவு உணவுக்காக ஒரு பஞ்சாபிக்காரர் நடத்திய உணவகத்திற்குள் நுழைந்தோம். மெனு கார்டை பார்த்ததும் அந்தக் குளிரிலும் வியர்த்தது. இரண்டு இட்லி 12 டாலர் (800 ரூபாய்) ஒரு தோசை 15 டாலர். ஆனால் சுவையாகவும் சூடாகவும் இருந்தது. இந்த நாட்டில் சைவ உணவு எளிதில் கிடைக்காது., கிடைத்தாலும் விலை அதிகம். அசைவ உணவு வகைகள் எங்கும் கிடைக்கும்., விலையும் குறைவு. ஓர் அசைவ உணவுப் பிரியர் ஒருநாள் சாப்பிட்ட உணவகத்தில் மறுநாள் சாப்பிடுவதில்லை என்ற கோட்பாட்டோடு இருந்தால் நியுயார்க் நகரில் மட்டும்  பத்து ஆண்டுகளுக்குச் சாப்பிடலாமாம்.
    மறுநாள் காலை எட்டு மணிக்குத் தயாராக நின்ற பேருந்தில் ஏறி பழைய நயாகரா கோட்டைக்குச் சென்றோம். பழங்கால அரண்மனை, போர் வாள்கள், பீரங்கிகள் முதலியவற்றைப் பார்த்தோம். பழங்கால போர்வீரர் போல சீருடை அணிந்த வீரர்கள் சிலர் துப்பாக்கியால் எப்படி சுடுவது என விளக்கினார்கள். அந்தத் துப்பக்கியை தூக்க முயற்சி செய்தேன்., முடியவில்லை. இவர் தூக்குவார் என்று அருகில் நின்ற அயர்லாந்துக்காரரை மாட்டிவிட்டேன்.. அவரும் தூக்க முடியாமல் துன்பம் வருங்கால் நகுக என்ற பாணியில் சிரித்தார்.

    அங்கிருந்து மீண்டும் அருவிக்குச் சென்றோம். மின்தூக்கி மூலம் இறங்கி ஆற்றின் படகுத்துறைக்குச் சென்றோம். படகு மூலம் அருவியின் அருகில் சென்று அருவி நீர் விழும் காட்சியைப் பார்ப்பதற்காக வரிசையில் நின்றோம். அருவிச் சாரலில் நனையாமல் இருப்பதற்காக ஒரு பாலித்தின் அங்கியைக் கொடுத்தார்கள். இது இல்லை என்றால் தொப்ப நனைந்திருப்போம்.
Close to the falls

Maid of the Mist

experiencing shower

Heavenly Niagara falls


   Maid of the Mist என்னும் இரண்டடுக்கு இயந்திரப் படகில் ஏறி அருவியை நோக்கி முன்னேறினோம். ஒரு கட்டத்தில் அருவிக்குள் சென்று விட்டதாகவே உணர்ந்தோம். மலரின் மகரந்தத்தூள் போன்ற  சாரல் துளிகள் எங்கள் மேல் கொட்டின. குதிரை லாட வடிவில் அருவி கொட்டியது. சாரலைப் பொருட்படுத்தாமல் காமிராவை வெளியில் எடுத்துச் சில படங்களை எடுத்தேன். ஒரே ஒரு நிமிடம் மட்டும் அங்கே நின்ற படகு திரும்பி விரைந்தது. பிரிய மனமில்லாமல் அருவியைத் திரும்பித்  திரும்பி பார்த்துக்கொண்டே வந்து பேருந்தில் ஏறினோம்.

    வழி நெடுகிலும் பெருமழை பெய்தது. ஓர் இடத்தில் பெட்ரோல் பிடிப்பதற்காக ஓட்டுநர் வண்டியை நிறுத்தினார். பயணியர் எல்லோரும் இறங்கியபின் பெட்ரோல் பிடித்தார். பயணியர் வண்டியில் இருக்கும்போது பெட்ரோல் பிடிக்கக் கூடாது என்பது இந்நாட்டின் விதியாம்.

    மழைக்கு அருகில் இருந்த உணவு விடுதிக்குள் தஞ்சம் அடைந்தோம். சிற்றுண்டி வாங்குவதற்கும் வசதியாய்ப் போயிற்று. இரவு எட்டு முப்பது மணி அளவில் நியுயார்க் நகரை அடைந்தோம். அந்த சீன ஓட்டுநருக்கு சில பாராட்டு வார்த்தைகளைச் சொல்லிவிட்டுப் பூவேந்திரன் காரில் பயணித்து இல்லம் சேர்ந்தபோது மணி பத்து. அந்த நேரத்திலும் விழித்துக் காத்திருந்த சுட்டிக்குழந்தைகள் எங்களிடம் வந்து ஒட்டிக் கொண்டன.

  சுவையான இரவு உணவை உண்டு மகிழ்ந்து, அருவிப் பயணம் அழகாய் அமைய கருணை காட்டிய இறைவனுக்கு நன்றி சொல்லி உறங்கச் சென்றோம்.

   மறுநாள் பிற்பகல் விருந்துக்குப்பின் அனைவரிடமும் பிரியா விடைபெற்று, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மூலம் மூன்றரை மணி நேரம் பயணித்து டேலஸ் விமான நிலையத்தை அடைந்தோம். இறங்கு தளம் கிடைக்காததால் ஓடு தளத்திலேயே அரைமணி நேரம் நிற்க நேர்ந்தது.  இரண்டு நிமிடத்திற்கு ஒரு விமானம் வந்து இறங்கினால் அவர்கள்தாம் என்ன செய்வார்கள். எங்களை வரவேற்று அழைத்துச் செல்ல மாப்பிள்ளை சிவ கணேஷ் வந்திருந்தார்.

 இல்லம் சேர்ந்த சிறிது நேரத்தில் இல்லத்தரசி கொடுத்த தேநீரை சுவைத்தபடி எனது  மடிக்கணினியில் பயணக் கட்டுரையைத்  தட்டச்சு செய்யத் தொடங்கினேன்.

Dr A Govindaraju from Dallas, Texas State, USA

   

3 comments:

  1. நயகரா நீர்வீழ்ச்சியை இன்று தங்களால் கண்டேன் ஐயா
    தங்களுடன் பயணித்த உணர்வு
    படங்கள் அருமை
    நன்றி

    ReplyDelete
  2. என்னவொரு இனிய அனுபவம்... கூடவே பயணித்தோம் ஐயா...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. புத்தகத்தில் கண்ட நயாகராவை நேரில் கண்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

    ReplyDelete