Wednesday, 1 July 2015

போற்றுதற்குரிய பொது நூலகம்

     சில வாரங்களுக்கு முன்னால் என் மகள் அருணா படித்துக் கொண்டிருக்கும்  டெக்சாஸ் பல்கலைக்கழகம்- ஆர்லிங்டன் நூலகத்திற்குச் சென்றிருந்தேன். அதைப் பற்றி நான் எழுதிய கட்டுரையை நீங்கள் படித்திருக்கலாம். பல்கலைக்கழக நூலகங்கள் சரி, பொது நூலகம் எப்படி உள்ளது எனக் கேட்டு சில வாசகர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.


    ஒரு பொது நூலகத்தைப் பார்க்க முடியுமா என  அருணாவிடம் கேட்டேன். “உள்ளூர் நூலகத்தில் நானும் உறுப்பினர் ஆக நினைத்தேன்., வாங்கப்பா  போகலாம்” என அழைத்தாள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் எங்கள் கார் பெட்ஃபோர்ட் பொது நூலகத்தின் முன் உரிய கார் நிறுத்தும் பகுதியில் நின்றது.
in front of Bedford Public Library
       கதவுகள் தாமாக விலகி வழிவிட உள்ளே சென்றோம். அடுத்த அடியை என்னால் எடுத்து வைக்க முடியவில்லை. “இம்மாம் பெரிய லைப்ரரியா?” என வியந்து அப்படியே உறைந்து நின்றேன். பத்தடி முன்னே சென்றுவிட்ட அருணா, திரும்பி வந்து “அப்பா, வாங்க” என்றபடி என் கையைப்பிடித்து அழைத்துச் சென்றாள்.

      நூலக உதவியாளர் சுட்டிக்காட்டிய கணினியில் தன் பெயர், முகவரி போன்ற விவரங்களை உள்ளிட்ட அடுத்த வினாடியில்   அருணா கோவிந்தராஜு என்னும் பெயர் பொறித்த கண்ணைக்கவரும் உறுப்பினர் அட்டை வந்து விழுந்தது. உறுப்பினர் ஆவதற்குக் கட்டணம் எதுவுமில்லை! பெட்ஃபோர்ட் பகுதியில் வசிப்பதற்கான ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள அட்டை போதும்.

   அடுத்து அந்த உதவியாளர் சொன்ன தகவல்தான் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது இன்ப அதிர்ச்சி! “ இனி நீங்கள் நாற்பது புத்தகங்கள், பத்து டி.வி.டி கள் ஆகியவற்றை  வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்” என்று சொன்னால் அதிர்ச்சியாக இருக்காதா என்ன?

    நாவல் என எழுதப்பட்ட நூலடுக்கில் என் மகள் தான் விரும்பிய நூல்களைப் பார்த்து ஒரே நிமிடத்தில் எடுத்தாள். நான் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்று நூலை எடுக்க விரும்பினேன். அருகில் இருந்த கணினியில் Books on Mandela என உள்ளீடு செய்தேன். உடனே ஒரு பத்து நூல்களின் பெயர், நூலாசிரியர், அவை தற்போது நூலகத்தில்  உள்ளதா இல்லையா, இருந்தால் எந்த அடுக்கு போன்ற விவரங்கள் திரையில் தோன்றின. விசைப்பலகைக்கு அருகில் சிறு தாள்களும் பென்சிலும் இருந்தன. விவரத்தை எழுதிக்கொண்டு குறிப்பிட்ட அடுக்கை நோக்கி விரைந்தேன்- கண்டேன் புத்தகத்தை.

    எடுத்த நூல்களை ஒவ்வொன்றாக Barcode readerமேல் வைக்க நூல் பற்றிய விவரம் கணினித் திரையில் தோன்றியது. நூல் விவரம், திருப்பிக் கொடுக்க வேண்டிய தேதி முதலியவற்றோடு ஒரு சிறு துண்டுச்சீட்டு வெளியில் வந்தது.

     தரைத் தளத்தில் மட்டுமே இயங்கும் அந்த நூலகதைச் சுற்றிப் பார்த்தேன். குழந்தைகள் பிரிவில் அவர்களுக்கேற்ற இருக்கைகள், வண்ணப் படங்களுடன் பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்ட புத்தகங்கள், விளையாட்டுப் பொம்மைகள் என எல்லாம் அசத்தலாக இருந்தன. அங்கே  உள்ள 1000 books before Kinder Garten என்ற பிரிவில் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் உரக்கப் படித்துக்காட்டும் சிறப்புத் திட்டம் செயல்படுகிறது. பள்ளிப் படிப்பைத் தொடங்குமுன் ஆயிரம் புத்தககங்களைப் படித்துக்காட்ட வேண்டும் என்னும் பேராசை என்னை வெகுவாகக் கவர்ந்தது. வாழ்நாள் முழுவதிலும் சேர்த்து நாம் ஆயிரம் வேண்டாமையா ஒரு நூறு நூல்களை வாசிக்கிறோமா இல்லை இல்லை தொட்டுப் பார்க்கவாவது செய்கிறோமா என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

   பதின்ம வயதினருக்குத் தனிப்பிரிவு, ஆழ்ந்து படிப்போருக்குத் தனிப்பிரிவு, நூலக நண்பர்களுக்குத் தனி இடம் என ஏகப்பட்ட பிரிவுகள் உள்ளன. Books with big letters என்ற முதியோருக்கான  பிரிவு என்னை வியப்பில் ஆழ்த்தியது. அப் பிரிவில் இருந்த புத்தகங்கள் எல்லாம் பெரிய  பெரிய எழுத்துகளில் இருந்தன. முதுமை என்பது இரண்டாவது குழந்தைப்பருவம் என்பதை மனத்தில் கொண்டு இப்பிரிவை அமைத்திருக்கிறார்கள்!

   சுவர்களில் உள்ளூர் ஓவியர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் வரைந்த படங்களை அழகாக மாட்டியிருந்தர்கள்.

    நம்மூரில் நூலக வாசகர் வட்டம் இருப்பது போல இங்கும் நூலக நண்பர்கள் என்னும் அமைப்பு உள்ளது. நம் கரூர் மாவட்ட மைய நூலகத்தில் மாதம்தோறும் சிந்தனை முற்றம் கூட்டம் நடப்பதுபோல இங்கே வாரந்தோறும் நடைபெறுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கருத்தரங்குகளும், குழந்தைகளுக்கான கதை சொல்லி நிகழ்ச்சிகளும் வாரம்தோறும் நடைபெறுகின்றன.

      நூலகரிடம் விடை பெற்றபோது அவர் சொன்ன தகவல் எங்களை மேலும் வியப்படைய வைத்தது:

    “எங்கள் நூலகம் சூரிய சக்தி மின்சாரத்தால் இயங்குகிறது. இந்த வகையில் டெக்சாஸ் மாநிலத்தில் முன் மாதிரி நூலகமக விளங்குகிறது.”

   நான் ஒரு நூலக அறிவியல் பட்டதாரி. எனது கணிப்பில் இது உண்மையிலேயே மிகச்சிறந்த பொது நூலகமாகும்.

   இச் சிறந்த நூலகத்தை நீங்களும் சுற்றிப்பார்க்கலாம். பாஸ்போர்ட், விசா எதுவும் தேவையில்லை. ஒரு பத்து நிமிடத்தை ஒதுக்கினால் போதும். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து கீழ்க்காணும் இணைப்பில் வீடியோ படத்தைப் பாருங்கள்.

    இந்தப் பதிவை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இப் பதிவு பற்றிய உங்கள் கருத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 வாருங்கள் நூல்களை வாசிப்போம்; நேசிப்போம்; சுவாசிப்போம்.Dr A Govindaraju from Bedford, Dallas, Texas state, USA

    

5 comments:

 1. மிகச் சிறந்த நூலகத்தை (இணைப்பை) அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 2. நூலகம் பற்றிப் படிக்கப் படிக்க வியப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஐயா
  காணொளியை தரவிறக்கம் செய்து கொண்டேன்
  நன்றி ஐயா

  ReplyDelete
 3. அமெரிக்கா பயணத்தை பயனுள்ள கட்டுரைகளாக்கி வலைப் பூவில் பதிந்துள்ளமைக்கு பாராட்டுக்கள் .படித்ததில் பிடித்தது என்று நண்பர்களுக்கும் , முகநூலிலும் பகிரிந்துள்ளேன் .பாராட்டுகள் .எழுத்துப்பணி தொடரட்டும் .வாழ்த்துகள் .

  ReplyDelete
 4. கட்டுரை இணைப்பில் உள்ள காணொளி வாயிலாக பெட்போர்டு பொது நூலகத்தை அறிய முடிந்தது.

  ReplyDelete
 5. கட்டுரை இணைப்பில் உள்ள காணொளி வாயிலாக பெட்போர்டு பொது நூலகத்தை அறிய முடிந்தது.

  ReplyDelete