நாம் கல்லில் சிலைவடித்தால் அமெரிக்கர் தண்ணீரில் சிலை வடிக்கின்றனர். தண்ணீரில் சிலை வடிக்க இயலுமா? இயலும் எனச் சொல்லி சாதித்துக் காட்டியுள்ளனர். ஒரு சிலையா இரு சிலையா நூறு சிலைகளை வடித்துக் கண்காட்சியாகக் காட்டிவிட்டனர்.
Gaylord Texon Resort என்பது அந்த இடத்தின் பெயர். வடக்கு டெக்சாஸ் மாநிலம்
டெல்லாஸில் உள்ளது. ஆளுக்கு இருபத்து ஐந்து டாலர் கட்டணம். நுழைவாயிலில் நின்ற ஒருவர்
ஒரு சிறப்பு அங்கியைத் தந்து அணியுமாறு சொன்னார். அது Parka எனப்படும் அதிகக் குளிரைத்
தாங்கும் சிறப்பு உடை. ஷூ அணியாமல் யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை. நல்ல வேளையாக
நாங்கள் ஆண், பெண், குழந்தை உட்பட அனைவரும் ஷூ அணிந்து சென்றோம். கதவைத் திறந்து நடந்தால்
வழி தவறி வடதுருவத்திற்கு வந்தது போல குளிர் நிலவியது. அந்தப் பாதை சரிவாகச் சென்றது;
அது ஒரு பாதாள அறையை நோக்கிச் சென்றது. நடக்க முடியாமல் போகுமோ என அஞ்சும் அளவிற்கு
உடல் குளிரால் விறைத்தது.
அங்கே இருந்தவரிடம் வெப்பநிலை என்னவென்று கேட்டேன். ‘எட்டு டிகிரி ஃபாரன்ஹீட்’
என்றார். நான் அடிப்படையில் ஓர் இயற்பியல் பட்டதாரி என்பதால், ஒரு மனக்கணக்குப் போட்டுப்
பார்த்தேன்; அது மைனஸ் பதின்மூன்று டிகிரி சென்டிகிரேட்!
சுழியன் டிகிரி சென்டிகிரேட் என்றாலே தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்துவிடும். மைனஸ் பதின்மூன்று டிகிரி என்றால் கேட்கவா வேண்டும்? இப்போதுதான் புரிந்தது இவர்களால் தண்ணீரில் எவ்வாறு சிலை செதுக்க முடிகிறது என்று.
பனிக்கட்டிகளில் கண்ணைக் கவரும் வகையில் வண்ணச் சிலைகளை வடித்து வைத்திருந்தனர்.
ஆனால் அங்கு நிலவிய கடுங்குளிரில் நின்று நிதானமாகப் பார்த்து மகிழ இயலவில்லை. காமிராவை
எடுத்து என்னால் கிளிக் செய்ய முடியவில்லை. கையுறை அணியாமல் சென்றதால் விரல்களை இயக்க
இயலவில்லை. எனது பயணக் கட்டுரைகளுக்காகக் காத்திருக்கும் வலைப்பூ வாசகர்களை ஏமாற்றக்கூடாது
என்னும் எண்ணத்தில் ஒருவாறு சமாளித்துக் கொண்டு படம் எடுத்தேன்; பாதிக்குப் பாதியே
தேறின.
A 30 sec. video
இந்தக் கொடுமையான குளிரிலும் அங்கே ஒரு கடை இருந்தது. அங்கும் சிலர் தேநீர் அருந்தியபடி நின்றனர்!
என்னால் இருபது நிமிடங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது. விரைவாக -இல்லை
இல்லை- விறைப்பாக வெளியேறினேன், அவர்கள் கொடுத்த அங்கியைத் கழற்றித் தந்துவிட்டுப்
போதுமடா சாமி என நினைத்துக்கொண்டு கார் நிறுத்தகத்தை நோக்கி நடந்தேன். ஆனாலும் ஏதோ
ஒன்றைச் சாதித்த உணர்வும் உள்ளத்தில் தோன்றி மறைந்தது.
முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.