Monday, 20 July 2015

சாலை ஒழுக்கம்

   நம் நாட்டில் சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது இடது புறம் செல்க (Keep Left) என்பது விதி. ஆனால் இங்கே Keep Right என்பதுதான் அடிப்படையான சாலை விதி. இந்த ஆங்கிலத் தொடருக்கு சரியாகச் செய் என்றும் பொருள் உண்டு. ஆம். எனக்குத் தெரிந்தவரையில் அமெரிக்காவில் எல்லோரும்  சாலை விதிகளை மிகச் சரியாகக் கடைப்பிடிக்கிறார்கள்.   சாலை விபத்துகளே இல்லையா என நீங்கள் கேட்கலாம். இங்கும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனால் அவற்றுள் மனிதத் தவறுகளால் நிகழும் விபத்துகள் குறைவு எனலாம்.

     என் மகள் குடியிருக்கும் பகுதியில் இரு பெரிய சாலைகள் குறுக்காக சந்திக்கின்றன. அங்கே சிக்னல் உள்ளது. சிக்னலை ஒட்டி சாலை ஓரத்தில் உட்காருவதற்கு வசதியாக இருக்கைகளை அமைத்திருக்கிறார்கள். காலையில் நடைப் பயிற்சி முடிந்ததும் அவ் இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் சாலையைக் கவனிப்பது உண்டு.

    அதிகாலை நேரத்தில் பெரும்பாலும் வாகனப் போக்குவரத்து அதிகம் இருக்காது. ஆனால் சிவப்பு விளக்கு எரியும்போது அரை மணி நேரம் கவனித்தால் கூட ஒரு வண்டியாவது சிவப்பு விளக்கை மதிக்காமல் செல்வதைப் பார்க்க முடியாது. போக்குவரத்துக் காவலர் யாரும் அங்கு நிற்கும் முறையும் இல்லை.

    சென்னை மாநகரில் குறிப்பாக தியாகராய நகரில் காலை ஆறு மணிக்கு சிக்னலில் நின்று கவனித்துள்ளேன். பத்து வண்டிகளில் எட்டு வண்டிகள் சிவப்பு விளக்கைப் பற்றிக் கவலையில்லாமல் சென்று கொண்டே இருக்கும். அமெரிக்காவில் இப்படி சென்றால் அவ்வளவுதான்., அபராதம் கட்டியே பர்ஸ் காலியாகிவிடும். மூன்று தடவைக்குமேல் இத் தவறைச் செய்தால் ஓட்டுநர் உரிமம் செல்லாமல் போய்விடும்.

   எல்லா பெரிய சிக்னல்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இருபத்து நான்கு மணி நேரமும் சிக்னலும் கேமராவும் செயல்படுகின்றன. ஆனால் ஏனோ தெரியவில்லை நம்மூரில் மட்டும் வாகன நெரிசல் குறைந்ததும் சிக்னல் விளக்கை அணைத்து விடுகிறார்கள்.

  வேகக் கட்டுப்பாடு என்பது இங்கே தாரக மந்திரமாக உள்ளது. எங்கெங்கே எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை பெரிய எழுத்துகளில் பளிச்செனத் தெரியும்படி தெளிவாக எழுதி வைத்துள்ளனர். அந்த வேகத்தைவிட ஒருமைல் கூடுதலாகச் சென்றாலும் அபராதம் கட்டவேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும். அதுவும் 200 டாலர் 300 டாலர் என வசூலிப்பார்கள். தொடர்ந்து வேகக்கட்டுப்பாட்டை மீறினால் ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படும் அல்லது  பறிபோய்விடும்.


  இங்கே ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். சோதனை மேல் சோதனைப் போதுமடா சாமி என்று புலம்ப வைத்துவிடுகிறார்கள். உரிமம் வழங்குவதில் அத்தனைக் கிடுக்கிப்பிடி உண்டு. என் மகள் உரிமத் தேர்வுக்குச் சென்றபோது, அவள் கார் ஓட்டியதை எல்லாம் பார்த்துவிட்டுக் கடைசியில், “இன்று போய் நாளை வா” என்று கூறி அனுப்பிவிட்டார்கள். மீண்டும் கட்டணம் செலுத்தி, அவர்கள் சொன்ன தேதியில் சென்று, அவர்கள் எதிர்பார்த்தவாறு காரை ஓட்டிக் காட்டி உரிமம் பெற்றாள். இதற்கே அவள் கரூரில் கார் ஓட்ட உரிமம் பெற்றவள்! இங்கே இனியன் பெண்ணுக்கும் ஒபாமாவின் பெண்ணுக்கும் ஒரே சட்டம்தான்.


   நடந்து செல்வோருக்கு முன்னுரிமை உண்டு. சிக்னல் இல்லாத இடங்களில் சாலையை நடந்து கடப்பதாக இருந்தால் பயம் இல்லாமல் மெதுவாக நடக்கலாம். வாகன ஓட்டிகள் நின்று நடப்பவருக்கு வழிவிடுவார்கள். சிக்னல்களில் பச்சை விளக்கு எரிந்தால் சாலையைக் கடப்பதற்கு நடக்கலாம். அவசரமாகக் கடக்க  வேண்டியிருந்தால் அருகில் இருக்கும் பொத்தானை அழுத்தி விட்டுவிட வேண்டும். சில விநாடிகளில் எதிர்த் திசையில் பச்சை விளக்கு எரியும்., உடனே நடந்து சாலையைக் கடக்கலாம்.


  
school bus
பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உயர் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பள்ளிப் பேருந்துகள் செல்வதற்கு மற்ற வாகன ஓட்டிகள் வழி ஏற்படுத்திக் கொடுப்பார்கள். பள்ளிப் பேருந்துகள் நின்று குழந்தைளை ஏற்றும் போதும் இறக்கிவிடும்போதும் எந்த வாகனமும் குறுக்கே செல்லக் கூடாது.. முந்தவும்  கூடாது. பள்ளிக் குழந்தைகளை நாட்டின் சொத்தாக நினைப்பதால் அனைவரும் பொறுப்புணர்ந்து செயல்படுகின்றனர். பள்ளிப் பேருந்து விபத்து என்பது இவர்கள் அறியாத ஒன்று.

   பள்ளிகள் அருகில் இருந்தால் சாலையில் வாகனங்கள் 25 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போதும் ஓட்டுநர்கள் செல்போனில் பேசக்கூடாது. மற்ற இடங்களில் செல்போனில் பேசலாமாம்.


    இவை எல்லாவற்றுக்கும் மேலாக நான் வியந்து பார்த்து வாய் பிளந்து நின்றதைக் குறிப்பிட வேண்டும். சிக்னல் இல்லாத குறுக்குச் சாலைகளில் அனத்து வாகனங்களும் ஒரு கணம் நின்று, நிதானித்துப் பார்த்துச் செல்கின்றன. எதிரிலோ, அருகிலோ எந்த வாகனமும் கண்ணில் படாத நிலையிலும் தமது வாகனங்களைச் சற்றே நிறுத்திதான் செல்கின்றனர். நடு நிசியிலும் இந்த நடைமுறை தொடர்கிறது.


    இரு வண்டிகளுக்கு இடையில் பத்து மீட்டர் இடைவெளி என்பது கட்டாயமாகும். அதேபோல், காரில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் இருக்கைப் பட்டையைப் பொருத்த வேண்டும். இரண்டு வயது குழந்தைக்குக் கூட சீட் பெல்ட் போடுவது கட்டாயமாகும். இல்லை என்றால் இருநூறு டாலர் தண்டம் கட்ட வேண்டும்.  பள்ளிப் பேருந்தில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் போட வேண்டும்.


 கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த முடியது. சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஓரங்கட்டி நிறுத்தி ஒருவரை வண்டியிலிருந்து இறக்கிவிட முடியாது. வண்டியை நிறுத்தி யாரிடத்திலும் வழி எது முகவரி எங்குள்ளது என்றெல்லாம் கேட்பதும் கூடாது. GPS ஏற்பாட்டுடன் வண்டியை ஓட்டுதல் வேண்டும்.


    அதேபோல், வீட்டிற்கு முன்னால், கடைக்கு முன்னால் வண்டிகளை  நிறுத்துவது குற்றம்.  விசாலமாக இடம் கிடக்கிறதே என்று நிறுத்திவிட்டுச் சென்றால், திரும்பி வந்து பார்க்கும்போது வண்டி இருக்காது. பிறகு இரண்டு மணி நேரம் கழித்து, இம்பவுண்ட்கார் டாட் காம் என்னும் இணையதளத்தில் காரின் பதிவு எண்ணை இட்டால் முகவரி தெரியும். காப்பீடு, உரிமம் உட்பட அனைத்து மூலச் சான்றுகளையும் காட்டி, முந்நூறு டாலர் அதாவது இருபதாயிரம் ரூபாய் அபராதம் கட்டி வண்டியை எடுக்க வேண்டும். ஒழுங்காக ஓட்டத்தெரியாத ஓட்டுநர் பட்டியலிலும் பெயர் இடம் பெற்றுவிடும். அடுத்த முறை தவறு செய்தால் போலீசின் கவனிப்பு வேறு விதமாக இருக்கும்.

    இவ்வாறு கண்டிப்புடன் இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் உள்ளது. தாறுமாறாக வண்டிகளை நிறுத்தினால் அவசரகாலத்தில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகள் உரிய இடத்திற்கு எளிதில் செல்ல முடியாதல்லவா? குடியிருப்புப் பகுதிகள், மருத்துவ மனை வளாகம் ஆகியவற்றில் சாலையின் இரு ஓரங்களிலும் FIRE LANE NO PARKING என்று எழுதி சிவப்பு வண்ணத்தில் பட்டையாகக் கோடும் போட்டிருப்பார்கள். இந்தக் கோட்டுக்கு உள்ளேதான் வண்டிகளை நிறுத்த வேண்டும்.


   எட்டு வழி, பத்து வழிகள் கொண்ட நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது குறிப்பிட்ட வேகத்திற்கு மேலும் செல்லக் கூடாது., கீழும் செல்லக்கூடாது. Lane changing என்று சொல்லக்கூடிய தட மாற்றமும் கூடாது., முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்வதற்கு மட்டும் உரிய முறையில் மிகுந்த கவனத்துடன் தடம் மாறலாம்., தடுமாறக்கூடாது.

   இந்த நெடுஞ்சாலைகளில் Emergency Lane எனப்படும் ஒரு தடம் சாலையின் இடது புறம் இருக்கும். விபத்துக்குள்ளான அல்லது பழுதான வாகனங்களுக்கு மட்டும் உரியது இது. நம் ஊர் சாலைகளில் இத்தகைய ஏற்பாடுகள் இல்லை. அதனால் நிற்கும் வாகனங்கள் மீது மோதும் நிலை ஏற்படுகிறது.

   சாலைப் பராமரிப்பு என்பது அரசின் முதன்மைப் பணியாக உள்ளது. நகரச் சாலைகள் கிராமச் சாலைகள் எவற்றிலும் குண்டு குழிகளைப் பார்க்க முடியாது. குப்பைக் கூளங்களைப் பார்க்க முடியாது. சாலைக் குறியீடுகளை கஞ்சத்தனம் பார்க்காமல் ஏராளமாக வைத்துள்ளார்கள். எந்த சாலை எந்த ஊரை நோக்கிச் செல்கிறது என்பதையும், தெருவின் பெயர்களையும் தெளிவாக எழுதி, கைகாட்டிக் கம்பங்களை ஆங்காங்கே அமைத்துள்ளார்கள். விபத்துகள் குறைந்துள்ளமைக்கு இவை முக்கிய காரணங்களாகும்.

    கண்ணைக் கூசச் செய்யும் அதிக ஒளி உமிழும் முகப்பு விளக்குகளை வாகனங்களில் பொருத்துவதைத் தடை செய்துள்ளார்கள். அதேபோல் வாகனத்தின் பின்னால் சிவப்பு விளக்கு எரிவதும் கட்டாயமாகும். நம் ஊரில் பெரும்பாலான  லாரிகளில் பின்னால் சிவப்பு விளக்கே எரியாது.

  நிறைவாக ஒரு செய்தி. வாகன ஆய்வாளர்களோ போலீசாரோ கையூட்டு வாங்குவது கிடையாது. எனவே ஓட்டுநர்கள் விதிகளைப் பின்பற்றி விழிப்புடன்
செல்கிறார்கள். எமனை வெல்கிறார்கள்.


DR A GOVINDARAJU  from USA

3 comments:

  1. கண்டிப்பான கட்டுப்பாடுகள்... ம்...

    ReplyDelete
  2. தண்டனைகள் அதிகமானால் குற்றங்கள் குறையும் என்பார்கள். அலட்சியம் தான் விபத்துக்களுக்குக் காரணம். நம் ஊர்களில் பின் பற்றப்படும் போக்குவரத்து விதிகளை அமெரிக்கர்கள் தெரிந்துகொள்ளாதது மிகவும் நல்லது. ஏனென்றால் சிக்னல் மற்றும் சாலைக் குறியீடுகளைப் பின்பற்றுபவர்களைப் பிறர் மதிப்பதில்லை “பயித்தியக்காரன்” என நினைத்து விடுவார்கள்.

    ReplyDelete
  3. தண்டனைகள் அதிகமானால் குற்றங்கள் குறையும் என்பார்கள். அலட்சியம் தான் விபத்துக்களுக்குக் காரணம். நம் ஊர்களில் பின் பற்றப்படும் போக்குவரத்து விதிகளை அமெரிக்கர்கள் தெரிந்துகொள்ளாதது மிகவும் நல்லது. ஏனென்றால் சிக்னல் மற்றும் சாலைக் குறியீடுகளைப் பின்பற்றுபவர்களைப் பிறர் மதிப்பதில்லை “பயித்தியக்காரன்” என நினைத்து விடுவார்கள்.

    ReplyDelete