Thursday 30 July 2015

மறப்பது இலமே

   மறக்க இயலாத அமெரிக்கப் பயணம் நிறைவுக்கு வருகிறது. நேற்று காலையில் டேலஸ் ஃபோர்ட்வொர்த் விமான நிலையத்தில் வந்து இறங்கியது போல் உள்ளது. ஆனால் அறுபத்தைந்து நாள்கள் இறக்கை கட்டிப் பறந்து விட்டதாகத் தோன்றுகிறது.


    இதற்கு இடையில், மாமனிதர் அப்துல்கலாம் மறைவினால் ஆற்றொணாத் துயரில் மூழ்கி இரண்டு நாள்கள் முடங்கிக் கிடந்தேன்.

    பயணத்தின் முத்தாய்ப்பாக மூன்று இடங்களைப் பார்ப்பது சிறப்பு என எண்ணினேன். எண்ணியபடி நடந்தது.

  மெட்ரோ பிளக்ஸ் தமிழ்ச்சங்கம் ஆற்றும் தமிழ்ப்பணிகள் அயலகத் தமிழர்களின் தமிழார்வத்திற்குச் சான்றாக உள்ளன. சங்கத்தின் ஆதரவில் பன்னிரண்டு தமிழ்ப் பள்ளிகள் நடைபெறுகின்றன. அவ்வப்போது தமிழறிஞர்களின் சொற்பொழிவும் உண்டு. ஒரு நிகழ்ச்சிக்கு என் மகளுடன் சென்றிருந்தேன். திருச்சி கலைக்காவிரி கல்லூரியின் மேனாள் முதல்வர் டாக்டர் மார்க்ரெட் பேஸ்டின் தமிழிசை குறித்தும், மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியர் ஐ.பேச்சிமுத்து சங்கத் தமிழ் மரபு குறித்தும் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள். நிறைவில் நானும் சில கருத்துகளைச் சொல்லி, ஒரு வினாவைத் தொடுத்து விளக்கமும் பெற்றேன். சங்கத் தலைவர் பஞ்சு அருணாசலத்தின் பேத்தி திருமதி கீதா சுப்ரமணியம் என்னுடன் உற்சாகமாக அளவளாவினார்.

   டேலஸில் புகழ் பெற்று விளங்கும் கிம்பெல் கலை அருங்காட்சியகத்தைப் (Kimbell Art Museum) பார்த்தோம். ஐந்து ஏக்கர் பரப்பளவில் இரண்டு பெரும் கட்டடங்களில் இது அமைந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பழங்காலத்து ஓவியங்களும் சிற்பங்களும் ஏற்ற அடிக் குறிப்புகளோடு கருத்தைக் கவரும் வகையில் இருந்தன. ஆவணப் படுத்துவதில் அமெரிக்கர் வல்லவர்கள் என்பதற்கு இந்த அருங்காட்சியகம் சான்றாகும்.

   “என்னை நன்றாக இறைவன் படைத்தனன்” என்று திருமூலர் கூறுவார். நேர்மறைச் சிந்தனையின் வெளிப்பாடுதான் இது. இப்படிச் சொல்வதற்கு எத்தனைப் பேருக்கு மனம் வரும்? ஆனால் நான் அவ்வப்போது திருமூலரைப் போல நினைத்தும், சொல்லியும் மகிழ்வதுண்டு.

    எவ்வித சிக்கலுமின்றி அமெரிக்கப் பயணம் அருமையாக அமைந்ததற்கு இறையருள் வாய்த்தது. எனவே நிறைவாக கோவிலுக்குச் செல்வது சிறப்பு என்னும் நோக்கில் நேற்று இர்விங் பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்குச் சென்றோம்.

    தூய்மை முதலாவது இறைவன் இரண்டாவது(God is next to cleanliness)  என்பது இங்கு வாழ்வோரின் கோட்பாடு. தூய்மை கோலோச்சும் இடமாக இந்தக் கோயில் இருந்ததைக் கண்டு வியந்து போனேன். சந்து பொந்து இண்டு இடுக்கு என எல்லா இடங்களும் அப்பழுக்கு இல்லாமல் மிகவும் தூய்மையாக இருந்தன.

   தூய்மையின் மறு வடிவம்தானே இறைவன்?  உள்ளம், உடல் மற்றும் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வோர் தனியாக இறைவனை வணங்க வேண்டிய அவசியம் கூட இல்லை என்பது அடியேனின் கருத்து.

    கோவிலை ஒட்டி அமைந்துள்ள ஒரு பெரிய கலாச்சாரக் கூடத்தில்  ஆன்மிக வகுப்புகள், சொற்பொழிவு, பரத நாட்டியம் முதலியவை நடந்த வண்ணம் உள்ளன. எழுவர் குழு ஒன்று கோவிலைச் செம்மையாக நிர்வாகம் செய்கிறது.

    
இன்று காலை நடைப் பயிற்சியின்போது பார்த்துப் பழகிய அனைவரிடமும் பேசி விடை பெற்றேன். என் மகள் வசிக்கும் இல்லத்தின் அருகில் உள்ள பின்புறத்துச் சோலையில் உலாவும்போது நான் சந்தித்துப் பழகிய உயிரினங்கள் பற்பலவாகும். அடிக்கடி பார்த்த மூன்று வாத்துகள், அணில்கள், பறவைகள் அவை. அவற்றுக்குப் புரியாத மொழியில் தமிழில் வாழ்க எனச் சொல்லி விடை பெற்றேன்.

     என்னைப் பார்த்தவுடன் வழக்கமாக கண்ணாமூச்சி ஆடும் ஓர் அணில் இதற்குத் தானே ஆசைப்பட்டாய் கோவிந்தராஜா என்ற பாணியில் நான் படம் பிடிப்பதற்கு வசதியாக இன்று ஒரு நிமிட நேரம் எனது காமிராவைப் பார்த்துக் கொண்டிருந்தது. படமாகவும் காணொலிக் காட்சியாகவும் பதிவு செய்தேன்.     அங்கிருந்த நெடு மரங்களும் குறுஞ்செடிகளும் கிளை அசைத்து விடை கொடுத்தன.

    வழக்கமாக அமரும் இருக்கையில் நீண்ட  நேரம் அமர்ந்திருந்தேன். மேகக் கூட்டம்போல் எண்ணங்கள் ஓடின. இந்த இரண்டு மாத காலம் என் வாழ்வில் பொன்னான காலம். மனைவி, இரு மகள்கள், மருமகன் இவர்கள் எல்லோருடைய அன்பிலும் சிக்கித் திளைத்தக் காலமல்லவா?    கரூர் சென்றதும் எனக்கும் என் மனைவிக்கும் எப்படி இருக்கும்? Empty Nest Syndrome வாட்டி வதைக்கும்.

     நேற்று இரவு நடைபெற்ற  விடை நல்கு விருந்தில் உறவினர்கள் காட்டிய பாசத்தில் திக்குமுக்காடினோம். என் மனைவிக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரங்கள் அதிகம். அவள் இங்கே ஆறுமாதமாக  ஒன்றிய செயலாளராக இருந்ததுதான் காரணம். ஆம். உறவினர்களோடு மனம் ஒன்றிய நிலையில் செயலாற்றியவள்!

   ஒபாமா ஒரு கணம் நினைவில் வந்தார். உலக நாடுகள் அமெரிக்காவை பெரிய அண்ணன் என்று அழைப்பதுண்டு. தம்பிகளை அச்சுறுத்தும் அண்ணனாக இல்லாமல் அன்பு காட்டி அரவணைக்கும் அண்ணனாக அமெரிக்கா இருக்க வேண்டும் என ஒரு வேண்டுகோளை அவரிடம் வைத்தேன். அவரும் புன்முறுவலோடு தலையசைத்தார்.

    நம் நாட்டு இளைஞர்கள் நினைவில் வந்தனர். சிந்து நதியின் மிசை நிலவினிலே கேரளத்து இளம்பெண்களுடன் சுந்தரத் தெலுங்கினில் பாடி தோணிகள் ஓட்டி விளையாட பாரதியார் ஆசைப்பட்டார். நமது இளஞர்கள் ஒரு படி மேலே சென்று, தேம்சு நதி மிசை நிலவினிலே பெல்ஜியம் நாட்டிளம் பெண்களுடன் பைந்தமிழில் பாட்டிசைத்து விசைப் படகு ஓட்டி விளையாட வேண்டும் என்று எண்ணினேன்.

   வலைப்பூவில் நான் வெளியிட்ட பயணக் கட்டுரைகளை எல்லாம் படித்துப் பின்னூட்டம் அளித்த அனைவரையும் நன்றியோடு நினைத்துப் பார்த்தேன்.  கட்டுரைகளப் படித்துத் தவறாமல் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட சரவணப் பெருமாள் காந்திமதி இணையர், திண்டுக்கல் தனபாலன், கரந்தை ஜெயக்குமார், பேராசிரியர் இலட்சுமண சிங், மருத்துவர் க.கண்ணன், ஆசிரியர் ஆர்.முரளி, பணி நிறைவு தலைமையாசிரியர் ரெங்கசாமி, ஆர்.வெங்கட்ராமன், நூலகர் சிவக்குமார், நூலகர் மோகனசுந்தரம்  ஆகியோரை மனம் மகிழ நினைவு கூர்ந்தேன்.

செல்பேசி ஒலித்தது. எண்ண ஓட்டத்திற்குத் திரை இட்டேன்.

    இன்று பகல் 12.15 மணிக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதால் இல்லம் நோக்கி விரைந்தேன்.

    முன்னதாகவே விமான நிலையத்திற்குச் சென்று எமிரேட்ஸ் விமானத்துக்கான அனுமதிச் சீட்டைப் பெற்றோம். இன்னும் சிறிது நேரத்தில் விமானத்திற்குள் செல்ல வேண்டும்.

   பிரிவு என்பது சாதாரணமானது அன்று. நெஞ்சம் கனக்கிறது. இயல்பாக இருக்க முயன்றாலும் முடியவில்லை. மனைவியின் கண்கள் கலங்கின. மீண்டும் ஆறு மாதத்திலோ ஒரு வருடத்திலோ வரத்தானே போகிறோம் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன்., பயனில்லை. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? சும்மாவா சொன்னார் திருவள்ளுவர்.

    அழைப்பு அறிவிப்பு வந்துவிட்டது. எங்கள்  மருமகன் இல்லை இல்லை மறுமகன் சிவகணேஷ், பெரிய மகள் அருணா, சிறிய மகள் புவனா தூரத்தில் நின்றபடி கையசைத்தார்கள். வந்திருந்த உறவினர்களும் கையசைத்தார்கள். ஆனால் அவர்களைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

 கண்ணீர் திரையிட்டதால்.

திரும்பி விமானத்தை நோக்கி நடக்கிறோம் பிறந்த வீட்டுக்குச் செல்லும் பெண்ணின் மனநிலையோடு.



3 comments:

  1. தங்களின் மனதின் வலி புரிகிறது ஐயா... ஆறுதல் படுத்திக் கொள்ளுங்கள்... நன்றி...

    ReplyDelete
  2. Two months went by like two seconds. Hope to see you and aunty soon in October. Have a safe Journey Uncle!

    ReplyDelete
  3. தங்களின் மனச்சுமையை உணர முடிகிறது ஐயா
    ஆனாலும் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதல்லவா
    தாங்கள் அறியாதது அ ல்ல

    ReplyDelete