Thursday, 16 July 2015

நாசாவும் பீசாவும்

   இந்தியாவின் தோசாவும் அமெரிக்காவின் பீசாவும் உலகப் புகழ் பெற்றவை. எப்படி நம்மூரில் வகை வகயான தோசைகள் உண்டோ அப்படி இங்கே வகை வகையான வண்ண மயமான பீசாக்கள் உண்டு. அமெரிக்காவின் தேசிய உணவு என்று சொல்லத்தக்க வகையில் பீசா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.


     அமெரிக்க நாட்டில் ஒரு நாளைக்கு மட்டும் விற்பனை ஆகும் பீசாவை பரப்பி வைக்க நினைத்தால் குறைந்தது நூறு ஏக்கர் நிலம் தேவைப்படுமாம்! இதை நானாக சொல்லவில்லை., இம்மாத ரீடர்ஸ் டைஜஸ்ட் என்னும் ஆங்கில மாத இதழ்  சொல்லுகிறது.

     இப்படி பீசா புராணம் எழுதிக்கொண்டிருந்தபோது என் மனைவி எட்டிப்பார்த்தாள்.

    “சரியான சாப்பாட்டு ராமன் நீங்கள்., நாசாவைப் பற்றி எழுதச் சொன்னால் பீசாவைப் பற்றி எழுதுகிறீர்!” என்று கடிந்து கொண்டாள்.

இனி நாசாவைப் பார்ப்போம்
.
   1969 ஜூலை மாதம்  இருபதாம் தேதி உலக விண்வெளி வரலாற்றில் மிக முக்கியமானது. மனிதன் ஒருவன் முதன் முதலில் நிலவில் காலடி வைத்த நாள். அப்போது நான் எஸ்.எஸ்.எல்.சி படித்துக் கொண்டிருந்த சமயம். டி.வி. இல்லாத காலம். வானொலிப் பெட்டிகள் மட்டும் புழக்கத்தில் இருந்தன. எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் பெருமாள் அவர்கள் எங்களை வானொலிப் பெட்டிக்கு முன்னால் அமரவைத்து செய்தியைக் கேட்கச் செய்ததோடு, அவரே நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் சேர்ந்து நிலவுக்குச் சென்ற மாதிரி கதை கதையாகச் சொன்னார்.

    I believe that this nation should commit itself to achieving the goal, before this decade is out, of landing man on the moon and returning him to the earth”

என்பது தனது நாட்டின் கனவு என 1961 ஆம் ஆண்டு அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி  உரைத்தார்அவர் சொன்னது போலவே பத்தாண்டுகளுக்குள் நாசா (NASA-National Aeronautics and Space Administration) அந்தச் சாதனையை நிகழ்த்தியது.

   அப்போது அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சன் ஹூஸ்டனில் உள்ள நாசா கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நிலவில் அடிவைத்த விண்வெளி வீரர்களோடு தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு பாராட்டினார். நன்றி தெரிவித்த நீல் ஆம்ஸ்ராங், “இது மனிதன் நிலவில் வைத்த சிற்றடி., ஆனால் மனித குலத்தின் பெரும் பாய்ச்சல்” என்று குறிப்பிட்டார்.
  ஃப்ளோரிடாவில் இருப்பதும் நாசாதான். Kennadi Space Center என்று பெயர். இங்கிருந்து விண்கலங்கள் ஏவப்படுகின்றன. ஹூஸ்டனில் உள்ள நாசா Johnson Space Center என அழைக்கப்படுகிறது. விண்ணில் ஏவப்படும் கலங்கள் அனைத்தும் இங்குள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகின்றன.


     ஹூஸ்டனில் உள்ள நாசா 1600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வழக்கமான சோதனைக்குப் பிறகு நாசா வளாகத்தினுள் சென்றோம். முதலில் டிராம் எனப்படும் தொடர்வண்டி மூலம் வளாகத்தைச் சுற்றிப் பார்ப்பது, பிறகு அருங்காட்சியகப் பகுதியைப் பார்ப்பது எனத் திட்டமிட்டுக் கொண்டோம்.

    மூன்று பெட்டிகளைக் கொண்ட டிராம் வண்டியில் ஏறி அமர்ந்தோம். பேட்டரியில் இயங்கும் வாகனம் என்பதால் ஓசையின்றி ஊர்ந்தது. Saturn V என்னும் இராக்கெட் வைக்கப்பட்டிருந்த கட்டடத்தின் அருகில் டிராம் வண்டி நின்றது. இறங்கி உள்ளே சென்றோம். அங்கு இராக்கெட்டின் உள்  பாகங்கள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பார்ப்பதற்குப் பிரமிப்பாக இருந்தன.


    மீண்டும் ட்ராம் வண்டியில் ஏறி இராக்கெட் பார்க் என்னும் இடத்திற்குச் சென்றோம். அங்கே நான்கு தென்னைமரம் உயர இராக்கெட்டை கிடையாக வைத்திருந்தார்கள். எவ்வளவு பெரிய இராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என வியந்து நின்றோம்.


   மீண்டும் டிராம் வண்டியில் ஏற, அந்த வளாகத்தை ஒரு பெரிய சுற்றில் வலம் வந்தது. ஓர் இடத்தில் வண்டி நின்றது. அங்கே நூற்றுக்கணக்கில் மரங்கள் நடப்பட்டு, ஒவ்வொரு மரத்தின் அடியிலும் பெயர் பொறிக்கப்பட்ட நடுகல் இருந்தது. அந்த மரங்கள் அனைத்தும் விண்வெளிப் பயணத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவாக நடப்பட்டவையாம்.

   ஒருவழியாக டிராம் பயணம் முடிந்து, அருங்காட்சியக வளாகத்தினுள் நுழைந்தோம். ஒரு மினி தியேட்டருக்குள் சென்று அமர்ந்தோம். ஒரே நேரத்தில் மூன்று திரைகளில் வெவ்வேறு விண்வெளிப் பயணக் காட்சிகளைக் காட்டினார்கள். எதைப் பார்ப்பது எதை விடுவது எனத் தெரியாமல் சற்றுக் குழம்பிப் போனேன். திரைகளுக்கு அருகில் நின்ற ஒருவர் விண்வெளிப் பயணம் குறித்துச் சுவாரஸ்யமாகப் பேசினார்.   அடுத்து, பன்னாட்டு விண்வெளி நிலைய அரங்கம். திரிசங்கு சொர்க்கம் என்பார்களே அது போல ஒரு விண்வெளி ஆய்வகம் பூமியிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு மேலே அமைந்துள்ளது. பதினைந்து நாடுகள் சேர்ந்து அதை அமைத்துள்ளன. அந்தப் பட்டியலில் நம் நாட்டின் பெயர் இல்லாதது அறிந்து வருந்தினேன்.

  கனடா,ஜப்பான்,ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம், டென்மார்க், ப்ரான்சு, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து என்பன அந்த பதினைந்து நாடுகள்.

     அடுத்து ஓர் இருட்டறையில் நுழைகிறோம். மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்தக் காட்சியை முப்பரிமாணத்தில் அமைத்துள்ளார்கள். நாம் அருகில் இருந்து பார்ப்பது போல உணர்கிறோம்.


    அமெரிக்கா சுதந்திரம் பெற்று 193 ஆண்டுகள் கழித்து நிகழ்த்திய சாதனையை, நாம் சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளில் சந்திரயான் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பிச் சாதனைப் படைத்தோம் என்பதை அச் சமயம்   பெருமையுடன் நினைத்துப் பார்த்தேன்.

   நிலவின் ஈர்ப்பு விசை மிகவும் குறைவு. அங்கே நடப்பதற்குத் தனிப் பயிற்சி வேண்டும். அங்கு ஒரு குட்டிக்கரணம் போட்டால் உடனே இயல்பு நிலைக்கு வரமுடியாது. இதற்கான செயல் விளக்கக் காட்சியை மனிதனின் பொம்மையை வைத்து அருமையாகக் காட்டியிருந்தார்கள். மேலும் கோள்களின் வெவ்வேறு ஈர்ப்பு விசையால் நமது எடையும் வேறுபடும் என்பதை மாயக் கண்ணாடியில் நமது உருவம் எடைக்கேற்ப குண்டாகவும் ஒல்லியாகவும்  தெரியும்படி அமைத்திருந்தது அருமை. சிரித்து மகிழாமல் யாரும் இவ்விடத்தை விட்டு நகர முடியாது.


   அடுத்தப் பகுதியில், விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் உடை, பதப்படுத்தப்பட்ட உணவு, படுக்கை, கழிப்பறை என எல்லாவற்றையும் காண முடிந்தது.

  அடுத்து இருந்த அரங்கில், இராக்கெட் விடுவதால் மனித குலத்திற்கு என்ன நன்மைகள் கிடைத்துள்ளன என அறிந்தோம். Internet, dialysis, food processing, less weight calipers என்று பட்டியல் நீள்கிறது. இவை எல்லாம் தொடக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டுப் பின்னர் மக்களிடையே புழக்கத்தில் வந்தவை தாம்.

     அடுத்தது  Moon Rock Museum. நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்லையும் மண்ணையும் கண்ணாடிப் பேழைக்குள் காட்சிப்படுத்தியிருந்தனர். அவற்றில் ஒரு சிறு கல்லை மட்டும் கையால் தொட்டுப் பார்க்கும் வகையில் வைத்திருந்தார்கள். அதைத் தொட்டுப் பார்த்தபோது நிலவைத் தொட்ட உணர்வு ஏற்பட்டு எனக்கு உடம்பு சிலிர்த்தது!

     ஒரு புதுமையான திட்டம் இங்கே உண்டு. Dine with Astronauts என்பது இத் திட்டத்தின் பெயர். நாம் முன் பதிவு செய்து கொண்டால், வாரத்தில் ஒரு நாள் மட்டும் இம் மையத்திலுள்ள உணவுக் கூடத்தில் விண்வெளி வீரர்களுடன் அமர்ந்து அவர்களோடு அளவளாவியபடி மதிய உணவை உண்ணலாம். இதில் என்ன சிக்கல் என்றால் அவர்கள் பேசக் கூடிய அமெரிக்கா ஆங்கிலம் நமக்கு எளிதில் புரியாது. அவர்கள் சிரிக்கும்போது நாமும் சிரித்துவிட வேண்டும்., அவ்வப்போது இலேசாக தலை ஆட்டி வைக்க  வேண்டும்., அவ்வளவுதான்.

    ஒரு பெரிய கூடத்தில் Astronauts Gallery அமைந்திருந்தது. முதன் முதலில் விண்ணில் பயணித்த விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பெர்ட் தொடங்கி நூற்றுக் கணக்கானவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. நாசாவுடன் இணைந்து விண்வெளிக்குச் சென்ற இந்திய விண்வெளி வீரர்களை என் கண்கள் தேடின.

   விண்வெளியில் பயணித்த முதல் இந்தியர் ராக்கேஷ் ஷர்மா, விண்வெளியில் 322 நாள்கள் தங்கியிருந்த இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருடைய படங்கள் கண்ணில் பட்டன. நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த அவர்களுக்கு நிமிர்ந்து நின்று ஒரு சல்யூட் அடித்தேன்.
Dr Kalpana Chaoula
Photo courtesy: Google


  ஆனால் நான் தேடிக்கொண்டிருந்த படம் வேறு. அந்தக் கருப்பு நாள் பிப்ரவரி 1, ஆண்டு 2003. முப்பத்திரண்டு நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்து பணிமுடித்துப் பூமிக்குத் திரும்பியபோது தான் பயணித்த கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறி மாண்டு போனவள் டாக்டர் கல்பனா சாவ்லா. அப்போது நான் எழுதிய இரங்கற்பா மறுநாள் தினமணி நாளேட்டின் நடுப்பக்கத்தில் வெளியானது. அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதே நாளில் அக் கவிதையைப் படிக்கும்போதும் என் கண்கள் கலங்கும்.

என் மகள் அருணா அங்கே வைக்கப்பட்டிருந்த கல்பனா சாவ்லாவின் படத்தைச் சுட்டிக் காட்டினாள். கண்டதும் கண்கள் கலங்கின. மனத்திரையில் அந்த கவிதை வரிகள் மெல்ல நகர்ந்தன.

            கல்பனா சாவ்லா கண்மணியே
               ககனத்தில் நீசென்ற தடமெங்கே?
            வல்விதி உன்னை வழிமறித்து
               வானத்தில் மறைத்துள்ள இடமெங்கே?


             வானத்தில் சிறகடித்துப் பறந்துசென்ற
                வான்புகழ் வண்ணப் பறவையெங்கே?
             ஞானத்தின் வடிவான கல்பனாவை
                ஞாலத்தில் தேடிநாம் போவதெங்கே?
                               
             விண்வெளியில் ஆய்வை முடித்தபின்னர்
                விடியுமுன் காணாமல் போனதெங்கே?
             மண்வெளியில் உறைகின்ற மாந்தரெல்லாம்
                மனம்பதைக்க விட்டுநீ சென்றதெங்கே?

               
             உறுதிமிக்க வைரம்போல் இதயமுடை
                உன்னத வண்ணப்பொற் சிலையெங்கே?
             இறுதியாய் மறைந்துவிட்ட செய்திகேட்டு
                இந்தியாவே கதறி அழும் நிலையிங்கே!

             ஆணுக்குப் பெண்ணிங்கு நிகரென்று
                அவனிக்கே அறிவித்த பெண்ணெங்கே
             தூணுக்கு நிகரானத் தூமணியாம்
                தூயநல் பாரதத்தின் கண்ணெங்கே?

   விண்ணில் விதைக்கப்பட்ட விதை அவள். எனவே அவளைப் போன்ற நூற்றுக் கணக்கான விண்வெளி வீரர்கள் நம் பாரத மண்ணில் பிறந்துள்ளார்கள்., இனியும் பிறப்பார்கள்.

   நான் இன்று நாசாவைக் கண்டு வியந்து எழுதுவதைப்போல வருங்காலத்தில் அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு வந்து நமது விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவை கண்டு வியந்து எழுதுவார்கள் என்ற நம்பிக்கையோடு வெளியில் வந்தேன்.

Dr A Govindaraju  from USA      

7 comments:

 1. வரிகள் கலங்க வைத்தது ஐயா...

  ReplyDelete
 2. மண்ணிலிருந்து விண்ணிற்கு மனிதன் சென்றது அறிவியலின் சாதனை. அச்சாதனையை நிகழ்த்திய விஞ்ஞானிகளின் இறப்புகள் வரலாற்றுச் சுவடுகள். எனினும் எத்தனையோ விஞ்ஞானிகள் மாண்ட போதும் கல்பனாசாவ்லாவின் இறப்பைக் கண்டு மனம் பதைக்காதவர்கள் இல்லை. கண்டிப்பாக இஸ்ரோவைப் பற்றியும் உலகம் அறியும் காலம் வரும். கட்டுரை அருமை.

  ReplyDelete
 3. மண்ணிலிருந்து விண்ணிற்கு மனிதன் சென்றது அறிவியலின் சாதனை. அச்சாதனையை நிகழ்த்திய விஞ்ஞானிகளின் இறப்புகள் வரலாற்றுச் சுவடுகள். எனினும் எத்தனையோ விஞ்ஞானிகள் மாண்ட போதும் கல்பனாசாவ்லாவின் இறப்பைக் கண்டு மனம் பதைக்காதவர்கள் இல்லை. கண்டிப்பாக இஸ்ரோவைப் பற்றியும் உலகம் அறியும் காலம் வரும். கட்டுரை அருமை.

  ReplyDelete
 4. >>> ஒரு சிறு கல்லை மட்டும் கையால் தொட்டுப் பார்க்கும் வகையில் வைத்திருந்தார்கள். அதைத் தொட்டுப் பார்த்தபோது நிலவைத் தொட்ட உணர்வு ஏற்பட்டு எனக்கு உடம்பு சிலிர்த்தது..<<<

  பதிவினில் படிக்கும்போது எனக்கும் மெய் சிலிர்த்தது.. புதிய செய்திகளை அறிந்து கொண்டேன்..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
 5. தங்கள் இரங்கற்பா
  அப்பப்பா அருமையப்பா
  கண்களில் கண்ணீரப்பா
  இதயத்தில் வெறுமையப்பா
  உங்கள் எழுத்து வெளுத்து கட்டுதப்பா
  உங்கள் காளடியில் எனது வணக்கமப்பா
  உங்கள் எழுத்துக்கு நான் என்றும் அடிமையப்பா - என் அப்பா

  ReplyDelete
 6. காளடியில் (எழுத்துப் பிழை) காலடியில்

  ReplyDelete
 7. காளடியில் (எழுத்துப் பிழை) காலடியில்

  ReplyDelete