Tuesday, 14 July 2015

வணக்கம் ஹூஸ்டன்

   முன் ஒரு சமயம் வெள்ளம் புயல் அறிவிப்பின் காரணமாக கை கூடாமல் போன ஹூஸ்டன் பயணம்  என் மகள் மற்றும் மாப்பிள்ளையின் பெருமுயற்சியால் மீண்டும் வாய்த்தது.


   ஹூஸ்டனுக்குப் போயாக வேண்டும் என நான் அடம் பிடித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று என் மகள் அருணாவின் நெருங்கிய தோழி பர்வத மீனாவைப் பார்க்க வேண்டும் என்பதாகும். மற்றொன்று அங்குள்ள நாசாவைக் காண வேண்டும் என்னும் நீண்ட நாள் ஆசை.

   என் மருமகன் சிவகணேஷ் இது போன்ற நீண்ட தூரப் பயணங்களைத் திட்டமிடுவதில் வல்லவர். அதனால் பயணங்கள் எல்லாம் கால விரையம், மன உளைச்சல் எதுவுமின்றி வெற்றிகரமாக மகிழ்ச்சியாக  அமையும். அந்த வகையில் ஹூஸ்டன் பயணமும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

      காலை ஒன்பது மணிக்கு டேலஸிலிருந்து புறப்பட்டு மதிய உணவுக்கு ஹூஸ்டனை அடைந்தோம். நடுவில் நெடுஞ்சாலை ஓய்வுக் கூடத்தில் அமர்ந்து எடுத்துச் சென்ற காலை உணவை உண்டோம். சாலை ஓரத்தில் மரங்களும் மலர்ச் செடிகளும் சூழ்ந்த இடத்தில், குழந்தைகளுக்கான ஆடிடத்துடன் அனைத்து வசதிகளையும் கொண்டதாய் அமைந்திருந்தது அந்த ஓய்வகம். அது அரசு நிர்வாகத்தில் இயங்குவது என்பது குறிப்பிடத் தக்கது.

   ஹூஸ்டனில் மீனா எங்களை அகமும் முகமும் மலர வரவேற்றாள். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்தில் இள நிலைப் பொறியியல் பட்டம் பெற்று, மேற்படிப்பை ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் முடித்த கையோடு அதே ஊரில் வேலையிலும் சேர்ந்தாள்.

    மெடிக்கல் டிஸ்ரிக்ட் (Medical District)  என்னும் பகுதியில் அமைந்துள்ளது ஹூஸ்டன் மருத்துவ மையம். பெரிய மாநகரில் ஒரு சிறு பகுதியை District  என்று குறிப்பிடுவார்கள்.

இங்கு 106,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுள் 40,000 மருத்துவர்களும், 20,000 விஞ்ஞானிகளும் அடங்குவர். உலகின் பல நாடுகளிலிருந்து நாள்தோறும் 12,000 நோயாளிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். பராக் ஒபாமா, சோனியா காந்தி போன்ற பிரபலமானவர்கள் இங்கு சிகிச்சைக்காக வருவார்களாம்! இம் மையத்தில்தான் மீனா விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறாள்.
ever green friends

  டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவ மனையின் வானுயர் கட்டடத்தில் பதினெட்டாவது தளத்தில் இருந்த அவளது ஆய்வகத்திற்கு எங்களை அழைத்துச் சென்று காட்டினாள். பல்லாயிரம் டாலர் மதிப்புடைய, பல நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட அதிநவீன கருவிகளைக் கொண்டதாய் இருந்தது அவ் ஆய்வகம். அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆர்வத்துடன் விளக்கினாள்.

     திசு வளர்ப்புக் கூடம் (Tissue Cultre chamber) என்பது  ஆய்வகத்தின் கருவறை ஆகும். கோவிலின் கருவறைக்குள் நுழைய எவ்வளவு தூய்மை முக்கியமோ அதைவிட பன்மடங்கு தூய்மை முக்கியமாம் திசு வளர்ப்புக் கூடத்தில் நுழைவதற்கும்.  மாபெரும் மருத்துவ மையத்தின் மூளையாகச் செயல்படுகிறது இவ் ஆய்வகம்.

   அந்த மூளைக்கு மூளையாகச் செயல்படுகிறாள் மீனா என்னும் தமிழ்ப்பெண் என அறிந்தபோது எனது சட்டைக் காலரை உயர்த்திக் கொண்டேன்.
    அடுத்து, மெட்ரோ இரயிலில் இருபது நிமிடம் பயணித்து, கார் நிறுத்தியிருந்த இடத்திற்குச் சென்றோம். மெட்ரோ இரயில் குளிர் சாதன வசதியுடன் படு சொகுசாகவும் தூய்மையாகவும் இருந்தது. பர பரப்பான சாலையின் நடுவே தண்டவாளங்களில் ஓடுகிறது. அந்த இரயில் ஓடும்போது ஒரு தம்ளர் நிறைய தண்ணீரை நிரப்பி வைத்தால் ஒரு சொட்டுக் கூட சிந்தாது. அந்த அளவுக்கு ஒரு சிறு குலுங்கல் கூட இல்லாமல் ஓடுகிறது. சில நாற்சந்திகளில்  மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு சிக்னலில் இரயில் நின்று சென்றது வியப்பாக இருந்தது.
memorable Metro train


  இறங்குவதற்கு முன் என் மகள் புவனா ஒன்றைச் சுட்டிக் காட்டினாள். “இந்த மெட்ரோ இரயில் திட்டத்தை முன்னின்று செயல்படுத்திய  மேயருக்கு இந்த இரயில் அர்ப்பணிக்கப்படுகிறது” என்று பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்தது. வரும் வழியில் ஒரு பாலத்திற்கு அறவழியில் கடமையாற்றி பணிநிறைவு பெற்ற போலீஸ் அதிகாரியின் பெயரைச் சூட்டியிருந்தார்கள். இப்படி எல்லாம் அமெரிக்காவில்தான் நடக்கும் போலும்.

     அரைமணி நேர கார் பயணத்திற்குப் பிறகு கிளியர் லேக் பகுதியில் இருக்கும் அவளுடைய வீட்டிற்குச் சென்றோம். எங்களுடன் அளவளாவியபடி அவள் சர்வ சாதாரணமாக கார் ஓட்டும் அழகைக் கண்டபோது பெண்கள் எல்லாத் துறையிலும் சாதிக்க வல்லவர்கள் என்னும் என்னுடைய கருத்து மேலும் வலுப் பெற்றது.

    1200 சதுர அடி கொண்ட பெரிய வீடு. உடன் பணியாற்றும்  சென்னையைச் சேர்ந்த அலமேலு என்ற பெண்ணும் மீனாவுடன் வசிக்கிறாள். அவள் மாநில அளவில் புகழ்பெற்ற கூடைப் பந்து விளையாட்டு வீராங்கனை. பள்ளியில் படித்தபோது கரூர் வந்து விளையாடியதாகச் சொன்னாள். ஆகும் செலவையும், சமையல் உட்பட அனைத்துப் பணிகளையும் இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர். நல்ல பெண்., உள்ளார்ந்த அன்பு காட்டி எங்களை உபசரித்தாள்.

     இப்படி ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, விட்டுக்கொடுத்து, சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு வாழ்வதற்கு தனித்திறன் வேண்டும். இதை ஆங்கிலத்தில் Social skill  என்பார்கள். தம் குழந்தைகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மேற்சொன்ன  Social skill என்னும் திறனையும் வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சிந்தனையோடு அவர்கள் எந்த ஊரிலும் எந்த நாட்டிலும் சிக்கல் இல்லாமல் பணியாற்றவும்  வாழவும்  முடியும்.

    மாலை எட்டு மணி அளவில் அவளுடைய காரில் எங்களை கடற்கரைக்கு அழைத்துச் சென்றாள். அடுத்த அரை மணி நேரத்தில் அட்லாண்டிக் கடல் கண்ணில் பட்டது. ஆனால் அங்கு கடற்கரையும் இல்லை., மணலும் இல்லை. மாறாக,  கடல் நீரின் மேலே சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் பலகைகளைப் பரப்பி அதன் மேலே பொழுது போக்கு மையத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கடற் பரப்பை இரசித்தவாறு, அப்பலகையின் மேல் காலார நடந்து செல்லலாம். இதை  board walk என்று கூறுகிறார்கள்.  நம்மூர் ப்ளாக் தண்டர் மாதிரி நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு இரவு பத்தரை மணிக்கு வீடு திரும்பினோம்.
aboard on Atlantic waters


    மறு நாள் காலை பத்து மணிக்கு உலகப் புகழ் வாய்ந்த நாசாவிற்குச் சென்றோம். அது குறித்துத் தனிப் பதிவை எழுதுவேன்.

மகாத்மா காந்தி  மாவட்டம் பாலாஜி பவன் என்னும் இந்திய உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு மாலை நான்கு மணியளவில் டேலஸிற்குப் புறப்பட்டோம்.

   “அங்கிள் நீங்கள் எல்லோரும் மீண்டும் ஒருமுறை ஹூஸ்டன் வர வேண்டும்” என்று சொல்லி வழியனுப்பினாள் மீனா.

   சொந்தமாக ஒரு கார், பிடித்த வேலை, கை நிறைய சம்பளம், மனம் நிறைய மகிழ்ச்சி என உயர்ந்து நிற்கும் அவளைக் கரம் பிடிக்க ஒருவன் விரைவில் வர வேண்டும் என மனதார வாழ்த்தி விடை பெற்றோம்.

Dr A Govindaraju from USA

     

5 comments:

 1. நல்லதொரு வாழ்வு அமையும் என்பதில் சந்தேகமில்லை ஐயா... வாழ்த்துகள்...

  தகவல்கள் பெருமூச்சு விட வைத்தது....

  ReplyDelete
 2. தங்களின் மகளின் தோழிக்கு ஏற்ற துணை கிடைப்பார் ஐயா
  பயண விவரங்கள் மகிழ்ச்சி கொள்ளச் செய்கின்றன
  நன்றி ஐயா

  ReplyDelete
 3. Excellent sir..by reading itself I went to.dat place in my imagination...:) its impressive... Have a nice time there...its a blessing to see such a wonderful place...

  ReplyDelete
 4. ஹூஸ்டன் பற்றி அழகாகவும் அதேசமயம் அங்கு பணியாற்றும் நமது நாட்டு மங்கை மீனா பற்றியும் தெரிவித்துள்ளீர்கள். ஆங்கிலத்தில் "brain drain" எனக் கூறுவார்கள். இந்திய அறிவை வெளிநாட்டவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நமது நாட்டில் அப்பெண்மணியைப் பயன்படுத்திக்கொள்ளத்தவறிவிட்டனர் என்று தான் கூறவேண்டும்.எப்படியென்றாலும் எந்நாட்டவருக்கும் சேவையாற்றுவதில் தமிழர்கள் (இந்தியர்கள்) சளைத்தவர்கள் அல்ல என்பதை மீனா நிரூபித்துள்ளார். அவர் மூலம் இந்தியர்களின் புகழ் உலகெங்கும் ஓங்கட்டும். வாழ்க வளமுடன், வளம் பெறுக, நலம் பெறுக, வாழ்க பல்லாண்டு.

  ReplyDelete
 5. அருமை மிக்க மகிழ்ச்சி அய்யா
  திறமைக்கும் தகுதிக்கும் என்றுமே மதிப்புண்டு... நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete