Saturday 10 September 2016

வெள்ளத்தால் விளைந்த நன்மை

 வெள்ளத்தால் நன்மை விளையுமா? விளைந்துள்ளதே. 7.8.2016 அன்று அடையாறு முத்தமிழ்ப் பேரவை என்னும் குளிரூட்டப்பட்ட அரங்கில், சென்ற ஆண்டு சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளம் தொடர்பாக நீதிபதி மூ.புகழேந்தி அவர்கள்  எழுதியுள்ள வெள்ளத் தாண்டவம் வரலாற்று மகா காவியம்  நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது.
மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் மாண்பமை ச.மோகன் நூலை வெளியிட சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ந.கிருபாகரன் பெற்றுக் கொண்டார். நான் நூலின் சிறப்புகள் குறித்துப் பேசினேன்.
நூலாசிரியர் நீதிபதி புகழேந்தி உரை



மகிழ்ச்சியாக:  நீதியரசர் ச.மோகன், நீதியரசர் ந.கிருபாகரன்

நூல் வெளியீடு


நூல் மதிப்புரை வழங்கிய முனைவர் அ.கோவிந்தராஜூ (நடுவில்)

நூல் மதிப்புரை


நூலின் பெயர்: வெள்ளத் தாண்டவம்
வரலாற்று மகா காவியம்
பக்கம்:300  விலை:ரூ300/-
நூலாசிரியர்: நீதிபதி மூ.புகழேந்தி
வெளியீடு: செல்லம்&கோ, சென்னை. பேசி:044-2225 2500

    மா மன்னர்களில் ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக்   கொண்டு காவியம் படைக்கப்படும் மரபை மாற்றியமைத்த முதற் பாவலர் இளங்கோ அடிகள்அவர் குடி புரந்தோம்பும் மன்னனைக் காவிய நாயகனாகப் படைக்காமல், குடிமக்களில் ஒருவனான கோவலனைக் காவிய நாயகனாகப்  படைத்ததனால்  புரட்சிப் பாவலர் எனப் பாரதியாரால் போற்றப்படுகிறார்.

        இறைவன் அல்லது   ஒரு தனி மனிதர் சந்தித்தச் சிக்கல்களைப் பற்றிய  படப்பிடிப்பாகவே  காவியம் அமையும் என்பதை மாற்றி, பொதுமக்கள் சந்தித்தச் சிக்கல்களைக் காவியத்தின் பாடுபொருளாக அமைத்துக் காவியம் கண்டுள்ள நீதிபதி கவிஞர் புகழேந்தி  அவர்களும் என் பார்வையில் ஒரு புரட்சிப் பாவலராகவே தோன்றுகிறார்.

    ஒன்று அழிவதும் அதனைத் தொடர்ந்து மற்றொன்று ஆவதும் இயற்கை நியதி. அந்த வகையில் சென்னைப் பெருவெள்ளத்தின் பேரழிவைத் தொடர்ந்து வெள்ளத் தாண்டவம் என்னும் பெருங்காவியம் தோன்றியுள்ளது. காவியத்தின் கருப்பொருளாக அமைவது மனித நேயமாகும். சாதி, மத, இன மற்றும் பொருளாதார  வேறுபாடுகள் ஒழிந்து மனிதம் மட்டுமே தழைக்க வேண்டும் என்னும் கருத்தை மணியிடை இழையாக வைத்துக் காவியத்தைப் பாவியமாய்ப் புனைந்து அளித்துள்ளார் நீதிபதி புகழேந்தி அவர்கள்.

   காவியத்தை வெண்பாவில் தொடங்கி விருத்தப் பாவில் முடிக்கிறார். மொத்தம் 644 பாடல்களைப் புனைந்துள்ளார். தென்றலெனத் தவழும் பாக்கள் சில; புயலென வீசும் பாக்கள் சில; ஆனால் வெற்றெனத் தொடுத்தல் எங்கும் இல.

  நாவல் எழுதுவதில் வல்லவரான இந் நூலாசிரியர் தலவன், தலைவி, அவர்களிடையே முகிழ்க்கும் காதலைத் தனக்கே உரிய தனித் தன்மையோடு படம்பிடித்துக் காட்டுகிறார். காதல் கதை என்றால் ஒரு வில்லன் கட்டாயம் இருக்க வேண்டுமே. வெள்ளத்தைதான் இவர் வில்லனாகக் காட்டுகிறார். இந்த வில்லனால்தான் காதலர் பிரிகிறார்கள்; அதே வில்லனால்தான் கடைசியில் இணைகிறார்கள்.

  இக் காவியத்தில் பேசப்படும் நிகழ்வுகள் கற்பனை அல்ல. எல்லாவற்றிற்கும் செய்தித்தாள் ஆதாரங்களை நூலின் பின்னிணைப்பாகத் தந்துள்ளார். இது இந் நூல் குறித்த ஆய்வுகளுக்குப் பெரிதும் பயன்படும்.
  ஒரு படைப்பாளி சிக்கலை மட்டும் சொன்னால் போதாது; சிக்கலக்குரிய காரணத்தையும், தீர்வையும் சொல்ல வேண்டும். இது சமூகப் பொறுப்புள்ள எழுத்தாளனின் கடமையாகும். இந் நூலாசிரியர் வெள்ளம் வந்ததற்கான காரணங்களையும், வருங்காலத்தில் வெள்ளம் ஏற்படாமல் இருப்பதற்குரிய தீர்வுகளையும் சொல்வதன் மூலம் தன் சமூகக் கடமையை நிறைவேற்றியுள்ளார்.

   உவமைக் கவிஞர் சுரதாவுக்கு இணையாக உவமைகளைக் கையாள்கிறார். அதேபோல அணி நயங்களுக்கும் பஞ்சமே இல்லை. தண்டியலங்காரம் கூறும் காப்பிய இலக்கணத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாய் இக் காவியம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

    
எனக்குத் தெரிந்த வகையில் சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளம் தொடர்பாக இப்படியொரு  பெருநூல் வெளி வந்ததாகத் தெரியவில்லை. இதுவே முதற் பெருங் காவியமாக இருக்கலாம். இது காலத்தால் அழியாத காவியமாக நிலைத்து நின்று ஆசிரியரின் புகழ் பாடும். 

   உச்ச நீதி மன்ற மேனாள் நீதியரசர் ச.மோகன் அவர்களின்  அணிந்துரை ஒன்று போதும் இந் நூலின் பெருமையைப் பறைசாற்ற. கவிஞர் பொன்னடியாரின் ஆய்வுரையும், முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கனின் வாழ்த்துரையும், மருதூராரின் பாராட்டுரையும் உரைகற்களாய் விளங்குகின்றன.

       ஆங்கிலத்தில் Master Piece, Magnum Opus என்றெல்லாம் சொல்கிறார்களே அப்படிப்பட்ட தலைசிறந்த படைப்பாக வெள்ளத் தாண்டவம்  அமைகிறது.

   இது தமிழகத்தின் அனைத்து நூலகங்களிலும் இருக்க வேண்டிய மிகச் சிறந்த நூலாகும். திருமணம், பிறந்தநாள் பரிசாக வழங்குவதற்கு ஏற்ற நூலாகும்.


3 comments:

  1. விழா நிகழ்வுப் பகிர்வுக்கும், நல்ல நூல் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  2. நூலினைஅவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா
    அருமையான மதிப்புரை
    நன்றி

    ReplyDelete
  3. நீதிபதி அவர்களைத் தங்கள் இல்லத்தில் வைத்துப் பார்த்துப்பேசியுள்ளேன். அய்யா அவர்களின் வைரநிலா நூலைப் படித்துள்ளேன். தன்னாட்சி அதிகாரம் பெற்ற எங்கள் கல்லூரியில் பாடநூலாக வைக்கத் தருணம் பார்த்துக்கொண்டுள்ளேன். காரணம் படைப்பாளி தான் கண்ட கேட்ட அனுபவங்களை இச் சமூகத்திற்கு வரலாறாக வழங்குகிறார்கள். சென்னையில் நிகழ்ந்த வெள்ளத்தாண்டவத்தை காவியம் ஆக்கியுள்ளார். இனி வரும் சந்ததியினருக்கு நூலைப் படித்தாலே போதும். அய்யா அவர்கள் ஆழிப்பேரலை நிகழ்வுகளை ஏன் பதிவு செய்யவில்லை எனத் தெரியவில்லை. 1964ஆம் ஆண்டு தனுஷ்கோடியை ஆழிப்பேரலை நொடிகளில் அழித்தது. அப்போது இரயில் பயணம் செய்தவர்களில் புது மணப்பெண்ணும் ஒருவர். அந்த அழிவு நிகழ்வுகளுடன் வாழ்ந்த அவர் சில மாதங்களுக்கு முன் இறந்தார் என்ற செய்தி நாளிதழில் செய்தியாகியிருந்தது. அடுத்து 40 ஆண்டுகள் கடந்து 2004இல் ஆழிப்பேரலையின் தாக்குதல். எனவே இயற்கைப் பேரிடர்களையும் ஆவணப்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு நீதிபதி புகழேந்தி போன்றவர்கள் தங்களது அன்றாட பணிக்களுக்கிடையே அருமையான நூலைப் படைக்கவேண்டும். அதிலும் தங்களது மதிப்புரை மட்டுமல்லாது இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள வெண்பா, விருத்தப்பா மற்றும் உவமை போன்ற இலக்கியச்சிந்தனைகள் நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டும் வகையில் உள்ளது. வளர்க அய்யா அவர்களின் எழுத்துப்பணி. வாழ்த்துகள்.
    முனைவர் ரா.லட்சுமணசிங், பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), கரூர் -5

    ReplyDelete