Wednesday 8 July 2015

இது படமல்ல., பாடம்

   இன்று காலையில் மேற்கொண்ட நடைப் பயிற்சியின்போது சென்னை தாம்பரத்தில் வசிக்கும் எனது இனிய நண்பர் நீதிபதி புகழேந்தி அவர்களுடன் தொலைப் பேசியில் பேசினேன்.


அவர் ஓர் இலக்கிய ஆர்வலர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார். வெற்றிமுனை என்னும் சுய முன்னேற்ற மாத இதழின் ஆசிரியர். அவருடைய பேனா எப்போதும் சமுதாயத்திற்கு நன்மை தரும் கருத்துகளை மட்டுமே பிரசவிக்கும்.

அவரது வைரநிலா என்னும் நாவலில் பிள்ளைகள் நெறி தவறிச் செல்லும்போது பெற்றோருக்கு ஏற்படும் அவமானம் குறித்துத் தீட்டியிருந்த கருத்தோவியம் நேற்று பாபநாசம் படம் பார்த்தபோது என் மனத்தில் தோன்றியது.

பாபநாசம் திரைக்கு வந்த முதல் நாளன்றே இங்கே இர்விங்  ஹாலி உட் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார் எனது மாப்பிள்ளை சிவ கணேஷ். அவர் கமல் ஹாசனின் இரசிகரும் ஆவார்.

    இரவு ஒன்பதுமணிக்குப் படம். அரங்கில் மொத்தம் இருபது பேர்கள் இருந்திருக்கலாம். அவ்வளவுதான் கூட்டம். படத்தில் கமல்ஹாசன் தோன்றியதும் ஒரு மனிதர் விசிலடித்துத் தமிழ் நாட்டின் பெருமையை அமெரிக்க மண்ணிலும் நிலைநாட்டினார். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இயல்பான நகைச் சுவையுடன் நகர்ந்து கொண்டிருக்கும் படம் தற்செயலாக நடந்த கொலைக்குப்பின் அதுவும் கமலஹாசனின் மகளான ஒரு பள்ளி மாணவி செய்த கொலைக்குப்பின் படம் படு சூடு பிடிக்கிறது. இரவு பதினோரு மணிக்குத் தன் வீட்டுக்கே வந்து தன்னையும் தன் அன்னையையும் காம இச்சைக்கு வற்புறுத்திய அவளது வகுப்புத் தோழனைப் போட்டுத் தள்ளிவிடுகிறாள். அவன் ஒரு பெரிய போலீஸ் அதிகாரியின் ஒரே மகன். அதற்குப் பிறகு அங்கே வந்த கமலஹாசன் அக்கொலையை மறைத்து எப்படி போலீசுக்கு அல்வா கொடுக்கிறார் என்பது மீதிக் கதை.


   கமல் தன் மகள் மீது வைத்துள்ள பாசம், அந்த போலீஸ் அதிகாரியம்மா  தன் மகன் மீது வைத்துள்ள பாசம்- இது இருவரையும் அத்து மீறி, அறத்தை மீறி செயல்பட வைக்கிறது.


   வன்புணர்ச்சிக்கு ஒரு பெண்ணை வற்புறுத்தல் என்பது கொலை செய்வதைவிட கொடிய செயலாகும். இப்படிப்பட்டவர்களை வயலில் முளைக்கும்  களைச் செடியாக எண்ணி அதனைப் பிடுங்கி எறிய வேண்டும் என்பார் திருவள்ளுவர்
.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

      
    திரிஷியம் என்னும் மலையாளப் படத்தைத் தழுவி இப்படம் எடுக்கப் பட்டுள்ளதாக அறிகிறோம். நல்ல விஷயம் எங்கிருந்து வந்தால் என்ன!
நீண்ட டைவெளிக்குப்பிறகு திரையில் தோன்றும் கவுதமி கமல் ஹாசனின் மனைவியாக நடிக்கிறார்., இல்லை இல்லை வாழ்கிறார்.

      கமலின் மூத்த மகள் செல்வியாக நிவேதா தாமஸ், இளைய மகள் மீனாவாக எஸ்தர் அனில் நடிப்பில் அசத்துகிறார்கள். குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருது இவர்களுக்குக் கிடைத்தால் வியப்பில்லை., கிடைக்காமல் போனால்தான் வியப்பு.

   போனவாரம் Cast away என்னும் ஆங்கிலப் படம் பார்த்தேன். ஒலி ஒளி அமைப்பு அவ்வளவு பிரமாதமாக இருந்தது. அப் படத்திற்கு இணையாக பாபநாசம் படம் இருந்தது.

      அடி தடி சண்டை, கட்டிப்பிடி வைத்தியம்,  கார் பந்தயம், கற்பழிப்பு   என எதுவும் இல்லாமல் மூன்று மணிநேரம் இரசிகர்களைக் கட்டிப்போட முடியும் என்ற சாதனை நிகழ்த்தப் பட்டுள்ளது.

   பதின்ம வயது குழந்தைகளுடன் சேர்ந்து பார்ப்பதற்குரிய நல்ல படம்., பாடம். 


·         பள்ளியில் ஆசிரியர்களும் வீட்டில் பெற்றோர்களும் குழந்தைகளைக் கண்காணித்து நன்னெறிப் படுத்தவேண்டும் என்பதுதான் படம் முடிந்து வெளியே வந்தபோது எனக்குக் கிடைத்த Home taking message.

    நல்ல நூலை மறுபடியும் வாசித்தல் போல மீண்டும் ஆறு மாதம் கழித்து ஒரு முறை பார்க்கலாம்.


DR A GOVINDARAJU from USA

4 comments:

  1. பள்ளியில் ஆசிரியர்களும் வீட்டில் பெற்றோர்களும் குழந்தைகளைக் கண்காணித்து நன்னெறிப் படுத்தவேண்டும்
    உண்மை ஐயா உண்மை
    அதுவும் இக்காலத்தில் அவசியம் தேவை
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. அழகான.... அருமையான விமர்சனம் ஐயா...

    ReplyDelete
  3. பயண நிகழ்வுகளைப் படித்து உங்களுடன் பயணித்த எங்களுக்கு அருமையான திரை விமர்சனத்தையும் வழங்கியுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  4. விமர்சனம் அருமை ....தெளிவு..

    ReplyDelete