ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் கழித்து முடிவெட்டப் போனார் முத்தையா. சென்ற வருடம் ஜனவரி மாதம் முடி திருத்தகம் சென்று முடி வெட்டியதோடு சரி. பிறகு பிப்ரவரியில் கோவிட் தலைகாட்டத் தொடங்கியதும் இவர் சலூன்காரரிடம் தலைகாட்ட மறுத்துவிட்டார். ஏப்ரலில் போட்ட பொதுமுடக்கம் முடிந்து கடைகள் திறந்தபோது சலூன்களும் திறந்து செயல்பட்டன. அடுத்த வாரத்தில், ஒரு சலூன்காரர் தன்னிடம் முடி வெட்டிக்கொண்ட ஐம்பது பேர்களுக்குத் தொற்றைப் பரப்பிய செய்தி நாளேடுகளில் வந்தபோது, முத்தையா தன் வருமுன் காக்கும் திறமையை எண்ணித் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டார்.
பாகவதர் கணக்கில் தலைமுடி வளர்ந்தபோதும் முத்தையா கவலைப்படவில்லை. இந்த
நிலையில் வெளிநாடும் சென்றார். சென்ற இடத்தில் கோவிட் பரவிக்கிடந்தாலும் சலூன்கள்
கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட்டன. என்றாலும் அங்கும்
சலூனுக்குச் செல்வதைத் தவிர்த்த முத்தையா காந்தியைப் பின்பற்றி முடிதிருத்த
முனைந்தார். குளியலறைக் கண்ணாடிமுன் நின்று கத்தரிக்கோலைக் கையில் பிடித்தார். அரை
மணிநேரம் சென்றது. பின்னர் விழுந்து
கிடந்த மயிர்களை கூட்டி எடுத்துக்கொட்ட மேலும் அரைமணி நேரம் ஆயிற்று.
குளித்துவிட்டு வெளியே வந்தபோது அவரது மனைவி, “அட பராவாயில்லையே. இருபது
டாலர் மிச்சம்” என்று சொல்ல முத்தையாவுக்கு ஏற்பட்ட புல்லரிப்பில் சற்றே
மயிர்க்கூச்செரிந்தார். அப்புறம் என்ன, தானே முடி வெட்டிக்கொள்ளும் கலையைத்
தொடர்ந்தார். பிறகு அடுத்த நாட்டுக்கும் பயணமானார். விமானத்தில் இவரது சிகை
அமைப்பைக் கண்ட சிலர் வியப்படைந்தனர்.
சென்ற இடத்திலும் ஆறு மாதங்களில் மூன்று முறைகள் தானே
முடிவெட்டிக்கொண்டார். பின்பக்க மண்டை மட்டும் ஊட்டி தேயிலைத் தோட்டம் போல் படிப்படியாக
இருக்கும்!
இப்போது ஒரு கோவிட் தொற்றும் இல்லை, ஊரில் அனைவரும் முத்தையா உட்பட இரண்டு
தடுப்பூசிகள் போட்டுள்ளனர் என்பதால் சலூன் கடைக்குச் சென்று முடிவெட்டிக்கொள்ள
அவருக்கு ஆசை வந்தது. அதற்கான தேதியும் நேரமும் குறிக்கப்பட்டது. ஆம். அந்த ஊரில்
தொலைப்பேசியில் நேரம் கேட்டுச் செல்வது நடைமுறை.
Super Cuts
என்னும் பெயரமைந்த சலூன் கடைக்குக் காலையில் முதல் ஆளாகச் சென்றார். சொந்த
ஊரில் எப்போதுமே இப்படி முதல் ஆளாகச் செல்வது இவரது வழக்கம். இவர் சென்றபின்தான்
கடை முதலாளியம்மா, நாற்பது வயது இருக்கும், காரில் வந்து கம்பீரமாய் இறங்கினார்.
கடை திறக்க இருபது நிமிடங்கள் இருந்தன.
சரியாகப்
பத்து மணிக்கு முத்தையா உள்ளே சென்றார். அந்த அம்மணி “வெல்கம்” எனச்சொல்லி புன்முறுவலுடன்
வரவேற்றார். முகக்கவசத்திற்குள் ஒளிந்து கொண்ட அவரது புன்முறுவலைக் காணமுடியாமல்
போனதில் முத்தையாவுக்குச் சற்றே ஏமாற்றம்தான். எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “ஹாய்”
எனச் சொன்னார். பிறகு, பெயர், முகவரி, தொலைப்பேசி எண் முதலிய விவரங்களைக் கேட்டு
கணினியில் உள்ளீடு செய்தார். இதற்கிடையில் முத்தையா கடையை ஒரு நோட்டம் விட்டார்.
இருபதுக்கு இருபத்தைந்து அடி உள்ள பெரிய, இதமாகக் குளிரூட்டப்பெற்ற ஹால். முதலில் வரவேற்புக்கூடம். இடைவெளியுடன் கூடிய இருக்கைகள்; சிறிய டீப்பாய், அதன்மேல் புத்தகங்களும் வார இதழ்களும் அழகுற காட்சியளித்தன. எங்கு பார்த்தாலும் ஒரு தூசு தும்பு, ஒட்டடை எதுவுமில்லை.
அடுத்ததாக, இரண்டு வரிசைகளில் ஆறு அழகிய முடி திருத்த இருக்கைகள். எதிரில் அப்பழுக்கில்லாத பெரிய கண்ணாடிகள். ஆங்காங்கே சுவரில் சிகை அலங்காரப் படங்கள் குடும்பம் குடும்பமாக. கடைக்காரர் தரும் சேவைக்கான விலைப்பட்டியலும் ஒரு பக்கம் சுவரில் தொங்கியது. பார்வையில் படும் வகையில் அரசு அளித்திருந்த உரிமம் வைக்கப்பட்டிருந்தது. இங்கு உரிய உரிமம் பெற்றவர் மட்டுமே முடி திருத்தும் சேவையை அளிக்கமுடியும்.
அம்மையார் முத்தையாவை ஓர் இருக்கையில் அமரச் சொன்னார். ஒரு மடிப்புக் கலையாத, தூய்மையான கரிய நிற சால்வையை எடுத்துக் கழுத்துவரைப் போர்த்தினார். கொஞ்சமாக அவரது தலையில் தண்ணீரைப் பீய்ச்சியடித்தார். ஒரு சீப்பால் எல்லா முடியையும் ஒன்று திரட்டி உச்சிக்கொண்டை போட்டு கலையாமல் இருக்க ஒரு கிளிப்பை மாட்டிவிட்டார். கண்ணாடியில் பார்த்த அவருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. இப்போது தலையின் பக்கவாட்டிலும், பின்னாலும் முடி வெட்டினார். பின் அந்த கிளிப்பை எடுத்து வேறுபக்கம் மயிரைத் திரட்டி நிறுத்தி, எதிர்பக்கத்தில் வெட்டித் தள்ளினார். இப்படி சீப்பும் கிளிப்பும் இடம் மாற இருபது நிமிடங்களில் பணியை முடித்து ஒரு சிறிய மின் கருவி மூலம் முடி வெட்டிய சுவடு தெரியாமல் மிக நுணுக்கமாக ஒழுங்கு படுத்தினார்.
இந்த சலூனில் கட்டிங் மட்டும்தான். ஷேவ் செய்ய வேறு சலூனுக்குத்தான் செல்ல
வேண்டும் என்பதை கூகிளில் தேடி அறிந்து வைத்திருந்தார் முத்தையா. அவர் எப்போதும் செல்ஃப்
ஷேவிங் செய்பவர் ஆதலால் அதுபற்றிக் கவலைப்படவில்லை. “மீசையை மட்டும் கொஞ்சம்
ட்ரிம் செய்யமுடியுமா?” என்று கேட்டார். அவர் பேசிய ஆங்கிலத்தைப் புரிந்து
கொண்டதால் அவர் மீசை தப்பித்தது. சொல்லப்போனால் அம்மணி மிக நன்றாகவே ட்ரிம்
செய்திருந்தார். சில பாராட்டு மொழிகளை
உதிர்த்த முத்தையா தான் கையோடு கொண்டுவந்திருந்த சீப்பால் தலைவாரி அழகு பார்த்தார். நான்கு வயது குறைந்த மாதிரி நினைப்பு!
முடி திருத்தக் கட்டணம் வரியுடன் சேர்த்து பதினெட்டு டாலர், இந்திய மதிப்பில் சொன்னால் ரூபாய் ஆயிரத்து நானூறு. முதியோருக்கு இரண்டு டாலர் தள்ளுபடி!
முத்தையா தான் கொண்டு வந்திருந்த கடை விளம்பரத் துணுக்கைக் கொடுத்து நான்கு டாலரைக் குறைக்குமாறு கேட்க அவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றார். பன்னிரண்டு டாலர் கொடுத்தால் போதும். இருந்தாலும் அவ்வூர் வழக்கப்படி இரண்டு டாலர் டிப்சும் சேர்த்து பதினான்கு டாலரை கொடுத்துவிட்டு, இரண்டு டாலரைச் சேமித்த மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி நடையைக் கட்டினார்.
அட அந்த முத்தையா யார் என்றுதானே கேட்கிறீர்கள்?
அது நானேதான்!
முனைவர் அ.கோவிந்தராஜூ,
அமெரிக்காவிலிருந்து.