இளமையிலே சோம்பிநீ இருக்கலாமா?
வளமையிலே வாழ்வதற்கு மறுக்கலாமா?
இளமயிலே! சோம்பிநீ இருக்கலாமா?
வளமயிலே! வாழ்வதற்கு மறுக்கலாமா?
இளந்தமிழில் இனிதாகப் பேசிடவும்
இயல்பாகப் பிழையின்றி எழுதிடவும்
இளமையிலே விட்டுவிட்டால் படியுமா?
முதுமையிலே முயன்றாலும் முடியுமா?
உறங்கிக் கிடந்தால் இந்நாளில்
ஊரே சிரிக்கும் பின்னாளில்
பிறந்ததும் வாழ்வதும் எதற்காக?
பெரும்புகழ் பெறுதல் அதற்காக!
தொலைக்காட்சி இப்போது இனிக்கும்
தொலைந்துவிடும் எதிர்காலம் கசக்கும்!
அலைப்பேசி உனை ஈர்த்து மயக்கும்
அடுக்கடுக்காய் தீமைகளைப் பயக்கும்!
இளங்காலை நேரத்திலே எழுவாய்
இனிதாக இறைவனைத் தொழுவாய்
வளங்காண நாள்தோறும் படிப்பாய்
வாழ்வினிலே சாதித்து முடிப்பாய்!
துடிப்புடன் செயலாற்று துன்பமிலை
துணிந்திடு படிப்பதற்கே இன்றுமுதல்!
விடிந்ததும் இந்நாட்டின் தலைவன் நீ
வீழினும் வேங்கையென எழுகவே!
முனைவர்
அ.கோவிந்தராஜூ
----------------------------------------------------------------------------------------------------------------------
உறுதி மொழி
1. இது எனது சொந்தப்
படைப்பாகும்
2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்
இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்
போட்டிகள் 2015 (வகை 5 மரபுக் கவிதை) க்காகவே எழுதப்பட்டது.
3. இது
இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு
வெளியாகும் முன் வேறு இதழ்களுக்கு அனுப்பப்படமாட்டாது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------