Wednesday 17 April 2019

எழுத்துத் திருட்டு என்றும் வேண்டா


   அண்மைக் காலத்தில் தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தமிழ்ப்புலத்தில் வழங்கும் எம்.ஃபில், பிஎச்.டி பட்டங்கள் நம்பகத் தன்மையை இழந்துவிட்டன. ஒரு காலத்தில் அறிவு மேம்பாட்டுக்காக செய்யப்பட்ட ஆய்வுகள், பின்னர் வேலை வாய்ப்புக்காகவும், ஊக்க ஊதியத்திற்காகவும், பதவி உயர்வுக்காகவும் செய்யப்பட்டன. இதனால் ஆர்வமில்லாதவர்கள், ஆற்றல் இல்லாதவர்கள் கூட ஆய்வுப் படிப்பில் சேர்ந்தனர். இத்தகையோரின் இயலாமையைக் காசாக்கும் வகையில் சிலர் பணம் வாங்கிக்கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை எழுத முன்வந்தனர். இவர்களை ghost writers என ஆங்கிலத்தில் சொல்கிறோம்.

Sunday 7 April 2019

சிலம்பொலி சென்றது விண்


சிலம்பொலி செல்லப்பனார்
இன்று(6.4.2019) காலமானதையொட்டி
இயற்றப்பட்ட இரங்கற் பா

புலன்கள் அனைத்தும் பொழியும் தமிழில்
நலன்கள் அனைத்தும் நனிமிகத் தோன்றும்
நலம்சேர் பனுவல் நயம்பட யாத்த
சிலம்பொலி சென்றது விண்.

சிலம்பின் சிறப்பைச் சிறப்புடன் சொல்லி
உலக அளவில் உயர்த்திப் பிடித்தார்;
வலம்புரிச் சங்கென வாழ்ந்து மறைந்தார்
சிலம்பொலி சென்றது விண்.

அணியாய்ப் பணிவை அணிந்தவர் வாழ்ந்தார்
துணிவை விரும்பித் துணையெனக் கொண்டார்
இலமென என்றும் இயம்பினார் அல்லர்
சிலம்பொலி சென்றது விண்.

செல்லப்பன் எம்முடை இல்லப்பன் என்றுதான்
சொல்லப் படுவார்;ஓர்  நல்லப்பன் என்றே
உலகுளார் ஏற்பர்; உறுபுகழ் பெற்ற
சிலம்பொலி சென்றது விண்.

சிக்கலே இல்லாத சிந்தனைப் பேச்சாளர்
எக்காலும் சோரா எழுத்தாளர் – மக்கள்
புலம்பொலி தோற்கும் புயலொலி முன்னே
சிலம்பொலி சென்றது விண்.
 6.4.2019            -கவிஞர் இனியன், கரூர்




Thursday 4 April 2019

எனக்கு எட்டியபுரமான எட்டையபுரம்

   பாரதி பிறந்து 137 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் தன் இளைமைப் பருவத்தில் ஓடி விளையாடித் திரிந்த அந்த எட்டயபுரத்து மண்ணைப் பார்க்க வேண்டும் என்பது என் நீண்டகால கனவாக இருந்தது. ஒரு தமிழாசிரியர் என்ற முறையில்  என் பணிக்காலத்தில்  ‘இளசை நாடு’ எனப்படும் எட்டையபுரத்துக்குச் செல்லவில்லையே சென்று பார்த்து மாணவர்க்குச் சொல்லவில்லையே என்ற குற்ற உணர்வும் எனக்கு உண்டு.