என்னால்
முடியுமெனும் எண்ணம் வேண்டும்
ஏன்முடி யாதென எண்ணல் வேண்டும்
முன்னேற
வேண்டுமென முழுதாய் எண்ணி
முனைப்போடு முயன்று நடத்தல் வேண்டும்
நன்னெறி சிந்தனை
நல்வழி காட்டும்
நற்செயல் செய்க., நானிலம் போற்றும்
தன்னால் நடக்கும்
தலைவிதி என்று
தயங்கி நின்றால் தவறி வீழ்வாய்!
காலம் கருதிநீ
கருத்துடன் பணிசெய்தால்
ஞாலம் கைகூடும்
நவின்றார் வள்ளுவரும்
பாலம்
எனும்படியாய் பலகுறள் இங்கிருக்க
பாவம்! ஏனப்பா பரிதவித்து நிற்கின்றாய்?
ஓலம் ஒப்பாரி
ஒருபோதும் உதவாது
ஓரடி
முன்வைத்தால் ஒருகாத வழிதெரியும்!
ஆலம் விழுதென
அவனியைத் தாங்கும்
ஆற்றல் இருப்பது
உனக்கே புரியும்!
வெற்றி வந்தால்
பெற்றுக் கொள்க
வீழ்ந்து
விட்டால் கற்றுக் கொள்க
கற்க
விரும்பிடின் இளமையில் கற்க
காலம் எல்லாம் குறள்வழி நிற்க
நெற்றி வியர்வை நிலத்தில் வீழ
நல்லுடல் பயிற்சி
நாளும் செய்க!
பற்பல மொழிகள் கற்றிடல் தெம்பு
பைந்தமிழ் மொழியே உயிரென நம்பு!
-முனைவர் அ.கோவிந்தராஜூ
-----------------------------------------------------------------------------------------------------------------------
உறுதி மொழி
..: 1. இது எனது சொந்தப் படைப்பாகும்
2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்
இணையக் கல்விக் கழகம் நடத்தும்
மின்தமிழ் இலக்கியப்
போட்டிகள் 2015-வகை 5 மரபுக் கவிதைப் போட்டிக்காகவே
எழுதப்பட்டது.
3.இது இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு வெளிவரும்
வரை இப்படைப்பு வேறு எந்த இதழுக்கும் அனுப்பப்பட மாட்டாது.