Saturday 28 February 2015

புலியூருக்குக் கெட்ட பெயர்



     புலியூர் முருகேசன் விவகாரத்தில் பெருமாள் முருகனை இழுக்கவே கூடாது. பெருமாள் முருகனின் நிழலின் பக்கம் கூட இந்த ஆள் வரமுடியாது. பெருமாள் முருகன் மாணிக்கக்கல்; புலியூர் முருகேசன் கூழாங்கல். 

   சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டார் என்று ஒரு சாதியினர் அந்த எழுத்தாளர் என்று சொல்லப்படக்கூடிய  முருகேசனை அடித்து நொறுக்கிவிட்டனர்
.
   எழுதியிருக்கக்கூடாது; எழுதியதையும் கொச்சையாகவும் பச்சையாகவும்(obscene), நீலமாகவும்(blue film), மஞ்சளாகவும்(yellow literature)- ஆக மொத்தம் அசிங்கமாக எழுதிவிட்டார். உப்புக்குப் பெறாத ஒரு கருவை எடுத்துக்கொண்டு கதை எழுதுகிறேன் என்று மக்களை மாக்களாக இனம்காட்டிவிட்டார்
.
   அந்தக் குறிப்பிட்ட கதையில் வரும் சுப்பிரமணியைப் போல சமுதாயத்தில் இலட்சம் பேர்களில் ஒருவன் இருப்பான். அந்த பாலியல் வக்கிரத்தை எழுத்தில் கொண்டு வந்து அவனுக்கும் அந்த அசிங்கத்திற்கும் அங்கீகாரம் தர வேண்டுமா என்ன?

      Oral sex என்பது இயல்புக்கு மாறானது; தவறானது; அது மன நோயின் முற்றிய நிலைப்பாடு. தேமே என்று இருக்கும் தெரியாதவர்களுக்கும் தெரிவிக்கிறார் இந்த பதடி எழுத்தாளர்.

    பயன் இல்லாதவற்றைச் சொல்பவனை மக்களுள் பதடி என்று திட்டுகிறார் திருவள்ளுவர். பயன் இல்லாதவற்றை எழுதியுள்ள புலியூர் முருகேசனும் பதடிதான்.
     இளைஞர்களும் இளம்பெண்களும் அவர் எழுதியுள்ள அசிங்கத்தைப் படித்தால் மனம் தடுமாறி, தடம் மாறி கிளர்ச்சியுறுவார்கள்.
   அவரை அடித்து நொறுக்கியதை நான் ஆதரிக்கவில்லை. பொதுநல வழக்குப் போட்டு அவரை சிறைக்கு அனுப்பியிருக்கலாம்.
   

Wednesday 11 February 2015

நாம் எங்கே போகிறோம்?

    பள்ளியில் படிக்கும்போதே இந்தியாவைக் காணவேண்டும் என்று கனவு கணடவள் அவள். அதற்கு விலையாக தன் கற்பைப் பறிகொடுக்க வேண்டியதாயிற்று.

   ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இருபது வயது இளம்பெண் சென்ற சனிக்கிழமை(7.2.15) இரவு புதுதில்லி வந்து இறங்கியதும் ஜெய்ப்பூர் செல்ல திட்டமிட்டாள். மறு நாள் நண்பகலில் ஜெய்ப்பூரை அடைந்து, ஒரு டாக்சியை பிடித்து ஜல்மஹால் சென்றாள். சுற்றிலும் தண்ணீர்; நடுவில் அழகான அரண்மனை. அதனால்தான் ஜல்மஹால் எனப் பெயர் வந்தது. அதன் அழகைக் கண்டு வியந்தபடி நின்ற அவளிடம் மோட்டார் பைக்கில் வந்த ஓர் இளைஞன் தன்னை டூரிஸ்டு கைடு என அறிமுகப்படுத்திகொண்டான். அவளும் அவனை நம்பி பல்வேறு இடங்களுக்கும் சென்றாள். சற்று தூரத்தில் இருந்த மொஜாமா பாத் என்ற ஊருக்குச் சென்று, அங்கிருந்த குளிர்பானக் கடையிலிருந்து குளிர்பானம் வாங்கிக் கொடுத்தான். அவள் கழிவறைக்குச் சென்று வருவதற்குள் மயக்க மருந்தைக்  கலந்து விட்டான் பாவி. மயங்கிய நிலையில் அவளை ஒரு மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று கெடுத்து விட்டது அந்த மிருகம். நினைவு திரும்பியபோது தன்னுடைய கற்பு பறிபோனதை எண்ணி கலங்கினாள்; கண்ணீர் விட்டாள். ஐ ஃபோன், பணம் ஆகியவற்றையும் களவாடிச் சென்றுவிட்டான் அந்தக் கயவன். சுதாரித்துக் கொண்டு அருகிலிருந்த சாலைக்கருகில் வந்தபோது, காரில் வந்த ஒருவர்  நிறுத்தி, அழைத்துச்சென்று மருத்துவரிடம் காட்டினார். அவர் ஒரு வழக்கறிஞர். எனவே அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணை தொடர்கிறது.

   அந்த இளம்பெண் பைத்தியம் பிடித்தவள்போல் உள்ளாள். வந்த இடத்தில் தன் கற்பை இழந்து நாடு திரும்புகிறாள்.

அந்தக் கயவனிடம் எப்படி ஏமாந்தாய் என்று போலீஸ் கேட்டபோது அவள் சொன்னாள்:

  “எனக்கு சரிவர ஆங்கிலம் வராது. அவன் நன்றாக ஆங்கிலம் பேசினான்.  இடங்களைச் சுற்றிப்பார்க்க அவனுடைய ஆங்கிலம் உதவுமே என்று அவன் பின்னாலே சென்றேன்.

   கண்ணதாசன் சொல்வதுபோல் அவன் பேசத்தெரிந்த மிருகம்- அதுவும் ஆங்கிலம் பேசத்தெரிந்த மிருகம்.

     “படித்தவன் பாவம் பண்ணினால் ஐயோ என்று போவான் என்று கூறுவான் பாரதி. படித்தோர் செய்யக்கூடிய குற்றங்களை  white collar crimes  என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது நாளுக்கு நாள் நம் நாட்டில் பெருகி வருகின்றது.

  ‘அதிதி தேவோ பவ என்று நம் நாட்டு வேதங்கள் கூறும். வரும் விருந்தினரைத் தெய்வமாக மதிக்கிறேன் என்று அதற்குப் பொருள். இப்படிப்பட்ட நாட்டில்தான் வெளிநாட்டுப் பெண்கள் கற்பை இழந்து கண்ணீர்  விடும் அவலநிலை நாடெங்கிலும் அவ்வப்போது அரங்கேறுகிறது
.
    அந்தக் கயவனுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்த பள்ளிக்கூடம் திருடுவது கற்பழிப்பது முதலியவை பழிச்செயல் என சொல்லிக்கொடுக்கவில்லை.

   “கணக்கையும் அறிவியலையும் சொல்லிக்கொடுப்பதை நிறுத்திவிட்டு, ஓராண்டுக்கு நீதி நெறிக்கல்வியை மட்டும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று தீபம் நா.பார்த்தசாரதி ஒரு நாவலில் குறிப்பிடுவார். இப்படி சொல்வோரும் எழுதுவோரும் பைத்தியக்காரர்ப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

நாம் எங்கே போகிறோம்?


Friday 6 February 2015

எங்கே போகிறோம்?

     சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வந்து இறங்கும்போது அதிகாலை 4.15 மணி. முதல் நாளே ஃபாஸ்ட் ட்ராக் டாக்சிக்கு கேரியருடன் கூடிய வண்டிக்கு முன்பதிவு செய்திருந்தோம். மறுநாள் என் மனைவி  அமெரிக்கா செல்ல இருந்ததால் இரு பெரிய பெட்டிகள், பைகள் என கூடுதல் சுமையோடு வந்ததால்தான் இந்த ஏற்பாடு.

 ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் டாக்சி வரவில்லை. சென்னைக் குளிரில் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வந்த வண்டி எங்களுக்கு ஏற்றதாக இல்லை. அதாவது நாங்கள் மூவர், பெட்டிகள் இரண்டு என்பதால் ஒத்துவரவில்லை. தொலைப் பேசியில் தொடர்பு கொண்ட போது வேறு வண்டியை அனுப்புவதாக சொன்னார்கள். நேரம் ஆனதே தவிர வண்டி ஏதும் வரவில்லை.

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் வந்து வந்து  கேட்டுக்கொண்டே இருந்தனர். என் மகள் மீண்டும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு சத்தம் போட்டாள். போலீசில் புகார் செய்யவேண்டியிருக்கும் என்றும் சொல்லிப்பார்த்தாள். கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வேறு ஒரு டாக்சியை பிடித்து வீடு வந்து சேர்ந்தபோது மணி காலை 6.15 மணி. மீண்டும் என் கைப்பேசி  சிணுங்கியது, “சென்ட்ரலுக்குமுன் நிற்கிறேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?” என்று ஃபாஸ்ட் ட்ராக் ஓட்டுநர் கேட்டார். எரிச்சலில் ஏதாவது பேசிவிடக்கூடாதே என்ற உணர்வோடு, “உங்கள் சர்வீஸ் ப்ரமாதம்” என்று சொல்லி முடித்தேன். என் மகள் போலீசில் புகார் செய்யலாம்  என்றாள்.  அப்போது வந்து விழுந்த டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேட்டிலிருந்து செய்தி ஒன்றை அவளிடம் காட்டினேன்.

    இருபத்து மூன்று வயது இளம்பெண் ஒருத்தி ஆட்டோவில் சென்றுள்ளாள். ஒத்துக்கொண்டபடி உரிய இடத்தில் இறக்கிவிடாமல், ஒன்வே அது இது என்று சாக்குப்போக்குச் சொல்லி 500 மீட்டர் தூரத்தில் நிறுத்தி இறக்கிவிட்டார். ஏன் எனக் கேட்டதற்கு அந்த ஓட்டுநர் அவள் கன்னத்தில் அறைந்து விட்டார். அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், ஆட்டோ ஓட்டுநருக்குச் சாதகமாகவே பேசி எஃப்.ஐ.ஆர் போட மறுத்து விட்டனர். அவள் விட்டபாடில்லை. மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பிறகு ஒப்புக்காக புகாரை ஏற்றுக்கொண்டனர். அப்போது இரவு எட்டு மணி. பத்திரிகையாளர் தலையிட்டபோது, முதலில் அவள்தான் ஓட்டுநரின் முதுகில் அடித்தாள் என்று ஒரு கிளைக்கதையைச் சொன்னார்கள்.

இது ஒரு புறம் இருக்க, பொது இடத்தில் ஒரு பெண்ணின் கன்னத்தில் ஆட்டோ ஓட்டுநர் அறைந்ததைக் கூடி நின்று வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர்கூட அவளுக்குச் சாட்சி சொல்ல வரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

நாம் எங்கே போகிறோம்?