Wednesday, 8 January 2025

இடையும் விடையும்

 

அன்னம் போன்ற நடையுடையாள்

   அழகாய்த் தெருவில் நடந்துசென்றாள்!

என்னே வியப்பு! பார்த்தவர்கள்

   இல்லை அவளுக்(கு) இடையென்றார்!

இன்னும் சிலபேர் உண்டென்றார்

   இறைவன் போன்ற இடையுடையாள்

முன்னும் பின்னும் பார்த்தபடி

   முறுவல் காட்டி நடைபயின்றாள்!

 

 

இடையே அவளுக்(கு) இல்லையெனின்

   இயங்க அவளால் முடியாதே!

நடையே அழகாய் உள்ளதென்றால்

   நங்கைக் கிடையும் இருப்பதனால்!

இடையில் புகுந்த ஒருசிலர்தாம்

   இல்லை என்றார் இறையிருப்பை!

விடையாய்ச் சொல்வேன் வியனுலகில்

   விளங்கும் இறைவன் உளனென்றே!     

 

குறிப்பு: கருத்து கம்பனுடையது; கவிதை என்னுடையது.

 

கம்பன் கவி இது:

 

பல்லியல் நெறியில் பார்க்கும்

   பரம்பொருள் என்ன யார்க்கும்

இல்லையுண் டென்ன நின்ற

   இடையினுக் கிடுக்கண் செய்தார்.

 

   பரம்பொருளான இறைவன் உண்டு எனவும் இல்லை எனவும் மக்கள் பலவாறு பேசுவது போல, சீதைக்கு இடை உண்டு எனவும் இல்லை எனவும் தோழியர் பலவாறு பேசி, இறுதியில் இடை உண்டு எனக் கண்டு, அந்த இடைக்கு ஒட்டியாணம் போன்ற அழகிய அணிகலன்களைத் தோழியர் அணிவிக்க, அவற்றின் எடையைத் தாங்காமல் இடை வருந்தியது என்பது கம்பனின் கற்பனை!

 

   இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஒரு கவிநயத்திற்காகப் பெண்களுக்கு இடை இல்லை எனச் சொல்லலாமே தவிர,  உண்மையில் இடை இல்லாமல் பெண்கள் இயங்க முடியாது. அதுபோல, ஒரு பேச்சுக்காகக் கடவுள்  இல்லை எனச் சொல்லலாமே தவிர, உண்மையில் கடவுள் இல்லாமல் இந்த உலகம் இயங்காது.

 

கம்பன் புகழ் வாழ்க! அவன் கவி வாழ்க.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

 

Tuesday, 10 December 2024

அமெரிக்காவில் ஓர் அழகிய கோவில்

   அமெரிக்காவில் டெல்லாஸ் பகுதியில் ஓர் இந்து கோயில் உள்ளது. அது நம்மூர் கோயிலைப் போல் இல்லை. ஒரு திருமண மண்டபம் போல் காட்சி அளிக்கிறது.

Saturday, 30 November 2024

தண்ணீரில் செதுக்கிய சிலைகள்

     நாம் கல்லில் சிலைவடித்தால் அமெரிக்கர் தண்ணீரில் சிலை வடிக்கின்றனர். தண்ணீரில் சிலை வடிக்க இயலுமா? இயலும் எனச் சொல்லி சாதித்துக் காட்டியுள்ளனர். ஒரு சிலையா இரு சிலையா நூறு சிலைகளை வடித்துக் கண்காட்சியாகக் காட்டிவிட்டனர்.

     Gaylord Texon Resort என்பது அந்த இடத்தின் பெயர். வடக்கு டெக்சாஸ் மாநிலம் டெல்லாஸில் உள்ளது. ஆளுக்கு இருபத்து ஐந்து டாலர் கட்டணம். நுழைவாயிலில் நின்ற ஒருவர் ஒரு சிறப்பு அங்கியைத் தந்து அணியுமாறு சொன்னார். அது Parka எனப்படும் அதிகக் குளிரைத் தாங்கும் சிறப்பு உடை. ஷூ அணியாமல் யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை. நல்ல வேளையாக நாங்கள் ஆண், பெண், குழந்தை உட்பட அனைவரும் ஷூ அணிந்து சென்றோம். கதவைத் திறந்து நடந்தால் வழி தவறி வடதுருவத்திற்கு வந்தது போல குளிர் நிலவியது. அந்தப் பாதை சரிவாகச் சென்றது; அது ஒரு பாதாள அறையை நோக்கிச் சென்றது. நடக்க முடியாமல் போகுமோ என அஞ்சும் அளவிற்கு உடல் குளிரால் விறைத்தது.

     அங்கே இருந்தவரிடம் வெப்பநிலை என்னவென்று கேட்டேன். ‘எட்டு டிகிரி ஃபாரன்ஹீட்’ என்றார். நான் அடிப்படையில் ஓர் இயற்பியல் பட்டதாரி என்பதால், ஒரு மனக்கணக்குப் போட்டுப் பார்த்தேன்; அது மைனஸ் பதின்மூன்று டிகிரி சென்டிகிரேட்!

    சுழியன் டிகிரி சென்டிகிரேட் என்றாலே தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்துவிடும். மைனஸ் பதின்மூன்று டிகிரி என்றால் கேட்கவா வேண்டும்? இப்போதுதான் புரிந்தது இவர்களால் தண்ணீரில் எவ்வாறு சிலை செதுக்க முடிகிறது என்று.

     பனிக்கட்டிகளில் கண்ணைக் கவரும் வகையில் வண்ணச் சிலைகளை வடித்து வைத்திருந்தனர். ஆனால் அங்கு நிலவிய கடுங்குளிரில் நின்று நிதானமாகப் பார்த்து மகிழ இயலவில்லை. காமிராவை எடுத்து என்னால் கிளிக் செய்ய முடியவில்லை. கையுறை அணியாமல் சென்றதால் விரல்களை இயக்க இயலவில்லை. எனது பயணக் கட்டுரைகளுக்காகக் காத்திருக்கும் வலைப்பூ வாசகர்களை ஏமாற்றக்கூடாது என்னும் எண்ணத்தில் ஒருவாறு சமாளித்துக் கொண்டு படம் எடுத்தேன்; பாதிக்குப் பாதியே தேறின.














  

                             A 30 sec. video
இந்தக் கொடுமையான குளிரிலும் அங்கே ஒரு கடை இருந்தது. அங்கும் சிலர் தேநீர் அருந்தியபடி நின்றனர்!

    என்னால் இருபது நிமிடங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது. விரைவாக -இல்லை இல்லை- விறைப்பாக வெளியேறினேன், அவர்கள் கொடுத்த அங்கியைத் கழற்றித் தந்துவிட்டுப் போதுமடா சாமி என நினைத்துக்கொண்டு கார் நிறுத்தகத்தை நோக்கி நடந்தேன். ஆனாலும் ஏதோ ஒன்றைச் சாதித்த உணர்வும் உள்ளத்தில் தோன்றி மறைந்தது.

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.