Tuesday 31 May 2016

சூர்யாவின் இன்னொரு முகம்

    சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குப் பஞ்சமா என்ன? ஒரு மேம்பாலத்தில் சாரை சாரையாக வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற கார் கிரீச் சத்தத்துடன் நிற்கிறது. 

Friday 27 May 2016

தேசம்மாள் என்னும் தெய்வம்

   


  அன்பு மகள் அருணாவுக்கு,
    அம்மாவும் நானும் நலம். தங்கை புவனா கனடாவில் நலமுடன் நன்றாகப் படிக்கிறாள். சென்றவாரம் தொலைப்பேசியில் பேசியபோது ஹூஸ்டனில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கப் போவதாகச் சொன்னாய். பிறகு எதை எதையோ பேச, கடைசியில் உன் பாட்டியைப் பற்றிய பேச்சும் வந்தது. பேச்சின் நிறைவில் உன் பாட்டி குறித்து விரிவாக ஒரு கடிதம் எழுதுமாறு வேண்டினாய். உன் வேண்டுகோளை ஏற்று இக் கடிதத்தை எழுதுகிறேன்.

Wednesday 25 May 2016

புதுமைப் பெண் கிரண் பேடி

     ஐ.பி.எஸ் என்று சொல்லப்படும் இந்திய காவல் பணி என்பது ஆண்களுக்கே உரியது என்ற போக்கை மாற்றிக் காட்டிய முதல் பெண்மணி கிரண் பேடி ஆவார். இந்தப் பெண் என்ன செய்யப் போகிறாள்  எனப் பலரும் தம் புருவங்களை உயர்த்தியபோது, மூக்கின்மேல் விரல் வைக்கும்படியாய் வீரதீர செயல்களைச் செய்தார் பேடி.

    தில்லி திகார் சிறை என்பது சிறைத் துறை அதிகாரிகளுக்கு திகில் தரும் சிறையாகவே   இருந்தது. அங்கு உயர் அதிகாரியாக பொறுப்பேற்ற கிரண் பேடி அதிரடி மாற்றங்களைப் புகுத்தி, ஆறே மாதங்களில் திகார் சிறையைச் சீரமைத்ததால், ஓர் ஐந்தாம் வகுப்புக் குழந்தைக்குக்கூட அவர் பெயர் அறிமுகம் ஆகிவிட்டது. விடுதலையான சிறைவாசியர் எல்லாம் மனம்திருந்தி சீர்மிகு வாழ்வை மேற்கொள்ள பல திட்டங்களை அறிமுகப்படுத்தி அவர்களுடைய நன்றிக்கு உரியவரானார்.

      பிறரைச் சார்ந்து நிற்காமல் தன் காலில் நிற்க வேண்டும் என்னும் கோட்பாட்டை  இளமையிலேயே கடைப்பிடிக்கத் தொடங்கினார். சிக்கல்களைச் சந்தித்தபோது அதன் பின்விளைவுகளுக்குத் தானே பொறுப்பேற்றார். வெற்றி என்றால் தான் காரணம் என்றும், தோல்வி என்றால் தன் கீழ் பணியாற்றுவோர் காரணம் என்றும் கூறும் அதிகாரத் தோரணை அவரிடம் எள்ளளவும் இருந்ததில்லை.

       ஒரு கரும யோகியைப் போல ஏற்றுக் கொண்டப் பணியைச் செவ்வனே செய்தாரே தவிர, பதவி வெறி கொண்டவராய் ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. அதனால்தான் ஒரு கட்டத்தில் தான் வகித்த உயர் பதவியைத் துச்சமென தூக்கி எறிந்துவிட்டுப் பொது வாழ்வுக்கு வந்தார்.

       நாட்டுப்பற்றும் சமூக சிந்தனையும் உடையவர் கிரண் பேடி. நம் நாட்டில் பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது படித்தவர்களுக்கே கூட தெரிவதில்லை. வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் சந்திக்கும்போது எப்படிப் பழக வேண்டும் எப்படிப் பேச  வேண்டும் என்பதுகூட தெரியவில்லை. உலகம் முழுவதும் படிக்கவும் பணியாற்றவும் செல்லும் நமது நாட்டு இளைஞர்கள் இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டால்தான் நம் நாட்டின் மதிப்பு உயரும் எனக் கருதிய கிரண் பேடி ஓர் ஆங்கில  நூலை எழுதி வெளியிட்டார். வெளியான சில மாதங்களில் பல்லாயிரக் கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்னும் பொருள்பட BROOM AND GROOM என்ற ஆங்கிலத் தொடரை நூலின் தலைப்பாக வைத்தார். என்னே அவரது நுண்மாண் நுழை புலன்! பத்து நூல்களை வாங்கினேன்; அவ்வப்போது திருமணப் பரிசாக அளித்தேன்; ஒரு நூல் இன்றும் என் இல்ல நூலகத்தின் இணையற்ற நூல்களுள் ஒன்றாய்த் திகழ்கிறது.  இந் நூலை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட அனுமதி கேட்டு அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    இப்போது அவர்  புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.      நியமனம் பற்றிய செய்தி வெளிவந்ததும் நிருபர்கள் அவரைச் சந்தித்தனர். “உங்களுடைய பங்களிப்பு அங்கு எவ்வாறு இருக்கும்?” என்று ஒருவர் கேட்டார்.  “ஒரு குக்கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர், நெரிசல் மிகுந்த நாற்சந்தியில் கால்கடுக்க நின்று தன் பணியைச் செய்யும் போலீஸ்காரர் ஆகியோரைச் சந்தித்து அன்புடன் அளவளாவி, அவர்கள் சமுதாயத்தில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணரச் செய்வேன்.” என்று விடையளித்தார். புதுச்சேரி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    அறுபத்து ஏழு வயதாகும் இவர் 1972-ஆம் ஆண்டு இந்திய காவல் பணித் தொகுதியில் சேர்ந்தவர். கைசுத்தம் மிகுந்த துணிச்சல் மிகுந்த அதிகாரி என்னும் புகழுக்கு உரியவர். எப்பொழுதும் இல்லாத அளவில் இப்போது கையூட்டுக் கலாச்சாரம் பரவலாகக் காணப்படும் புதுவைக்கு இவருடைய சேவை தேவை என ஓர் ஆங்கில நாளேடு எழுதியுள்ளது.

      புதுதில்லியில் பணியாற்றியபோது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நிறுத்தப்பட்டவை அமைச்சர்களின் கார்கள் என அறிந்தும் இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் போடச்செய்தவர். இதன் காரணமாக அவருக்கு கிரேன் பேடி(Crane Bedi) என்னும் பட்டப்பெயரும் ஏற்பட்டது!

      விருதுகளையும் பதவிகளையும் இவர் ஒருபோதும் தேடிப்போனதில்லை. ஆனால் அவை இவரைத் தேடிவந்து அணி சேர்க்கின்றன. அவர் பெற்ற விருதுகளில் ராமன் மக்ஸஸாய் விருது, ஐக்கிய நாடுகள் சபை விருது ஆகியன குறிப்பிடத் தகுந்தவையாகும்.

      அணுகுவதற்கு எளியவரான அந்த ஆளுநரை நம் மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் அழைத்து வந்து, பட்டமளிப்பு விழா உரையினை நிகழ்த்தச் செய்து, தமிழக இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் ஒரு புதிய எழுச்சியைத் தரலாம்.Saturday 21 May 2016

அரும்புகள் எழுதிய குறும்பா (ஹைக்கூ)

    ஆசிரியர் எவரேனும் விடுப்பில் இருந்தால் என்னை அழையுங்கள் என்று மாணவர்களிடம் சொல்லியிருந்தேன். அப்படி கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி ஹைக்கூ கவிதைகளை எழுதுவது குறித்து ஒரு வகுப்பு எடுத்தேன்.

    மூன்று வரிக்கவிதை. இரண்டு வரிகள் இயல்பாய் இருக்கும். மூன்றாம் வரியில் ஒரு குத்து இருக்கும். அதாவது ஒரு பன்ச் இருக்கும். குடும்பம், காதல், நாடு, சமூகச் சிக்கல் என எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்று உசுப்பி விட்டேன்.

     மறுநாள் கவிதைகள் வந்து குவிந்தன. கருவிலே திருவுடையார் மட்டுமே கவிதை எழுத முடியும் என்ற கருத்தை அடித்து நொறுக்கிவிட்டார்கள். முயன்றால் எவரும் எழுதலாம் என நிரூபித்து விட்டார்கள் எனது மாணவர்கள். இங்கே பதச் சோறாக சில குறும்பாக்கள்.

      படியில் நின்றபடி பயணம் செய்து தம் வாழ்க்கைப் பயணத்தைப் பாதியில் முடித்துக் கொள்ளும் இளைஞர்களைப் பற்றி எழுதுகிறார்கள்.

குடிமகன் பேருந்தில் ஏறினார்
படியில் நின்றார்
ஆம்புலன்சில் சென்றார்

என்பது எம்.எஸ்.கே.சரண்குமாரின் பதிவு.

பேருந்தில் சென்றான்
படியில் நின்றான்
நொடியில் மறைந்தான்

என்பது எஸ்.ஹரிஹரன் என்னும் மாணவனின் மனக் குமுறல்.

    அம்மா தெருக் குழாயில் தண்ணீர் அடிக்கிறாள். அப்பாவுந்தான் ஆனால் வேறு இடத்தில்.. போதையினால் பாதை மாறும் குடும்பத்தை அங்கதச் சுவையோடு படம்பிடித்துக் காட்டுகிறான் ஏ.எஸ்.தனுஷ் ஆதித்யா 

கஷ்டப்பட்டு அம்மா
இஷ்டப்பட்டு அப்பா
தண்ணி அடிக்கிறார்கள்.


டி.பிரதீபாவுக்கு தன் கணித  ஆசிரியருடன் ஏற்பட்ட அனுபவத்தை,

உனக்கு இன்று தீபாவளி
எனக்கு நாளை தீபாவளி
கணக்காசிரியர் பிரம்புடன் வருவார்

என்னும் ஹைக்கூவாக பதிவு செய்கிறாள்.

இன்று வாழ்வே ஒரு போராட்டமாக இருக்கிறது என்பதை நச்சென்று சொல்கிறான்  ச.வேத ஞானகுரு.

சுதந்திரம் வாங்குவதற்கு
முன்பும் போராட்டம்
பின்பும் போராட்டம்.

ம.காவ்யா எழுதியுள்ள ஒரு கவிதை நம் சமூகத்தின் மீது விழும் சாட்டை அடியாகவே உள்ளது.

மாடு பெண்கன்று ஈன்றால் மகிழ்ச்சி
ஆடு பெண்கன்று ஈன்றால் மகிழ்ச்சி
அகிலா பெண்ணைப் பெற்றால் இகழ்ச்சி!

Child is the father of men  என்பது ஆங்கிலப் பொன்மொழி. இதை அப்படியே ஒரு ஹைக்கூ வாகப் படைக்கிறாள் ஜி.மயூரி.

அம்மாவிடம் அன்பைப் பார்த்தேன்
அப்பாவிடம் கோபத்தைப் பார்த்தேன்
என்னிடம் அவர்களைப் பார்த்தேன்.

   போலீஸ்காரர் இலஞ்சம் வாங்குவதை எத்தனையோ திரைப் படங்களில் விதவிதமாகக் காட்டுகிறார்கள். ஆனால் கா.ஸ்ரீநிகா என்னும் மாணவி எழுதியுள்ள ஒரு ஹைக்கூ நம்மைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறது.

பிச்சைக்காரரும் போலீஸ்காரரும்
கடைக்காரரிடம் கேட்டார்கள்
ஒருவர் பணிவாக மற்றவர் மிடுக்காக.

    தம் சகவயது மாணவ மாணவியர் பலரும் பள்ளியில் படிக்க முடியாத அவலநிலையில் இருப்பதை தம் கவிதைகளில் சுட்டிக் காட்டுகிறார்கள்; இல்லை இல்லை குட்டிக் காட்டுகிறார்கள்.

புத்தகப் பையை
சுமக்கும் வயதில்
குப்பைப் பையை சுமக்கிறது.
                 -சு.மெ.ஜூமர் நித்திஷ்

பதினைந்து வயதில் அவனுக்கு
அரசாங்க அலுவலகத்தில் வேலை
தேநீர் விற்கிறான்.
                  -ம.காவ்யா

அம்மா நோயில்
அப்பா போதையில்
நான் வேலையில்
                   -த.பிரதீபா

பெற்றக் குழந்தையை
வேலைக்கு அனுப்புவது
ஒரு புதுவிதமான பிச்சை!
                    -கா.ஸ்ரீநிகா

    இவர்களெல்லாம் வருங்காலத்தில் சிறுமை கண்டு பொங்கி எழும் நக்கீரத் துணிச்சல் மிகுந்த கவிஞர்களாகவும் கவிதாயினிகளாகவும் உருவெடுப்பார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு நிறையவே உள்ளது.Thursday 19 May 2016

வெற்றிகளும் வழிமுறைகளும்

   வெற்றிகளை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு,  அவற்றை அடைவதற்குரிய வழிமுறைகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் செயல்படுவதை அறிவுடையவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

நடந்து முடிந்த தேர்தலில் வேட்பாளர் பலரும் வழிமுறைகளைப் பற்றி யோசிக்காமல் எப்படியேனும் வெற்றியடைந்தால் சரி என்று செயல்பட்டிருப்பதை கட்சிக்காரர்கள் வேண்டுமானால் மறுக்கலாம்; நடுநிலையாளர்கள் எவரும் மறுக்கமாட்டார்கள்.

குறுக்கு வழிகளில் பெற்ற வெற்றிகளை நினைத்து எப்படி மகிழ முடியும்? படிப்பறிவில்லாத, படிப்பறிவிருந்தும் விழிப்புணர்வில்லாத  மக்களை ஏமாற்றி வெற்றியடைந்தவர்களின் நெஞ்சம் அவர்களைச் சுடாதா?

ஐந்நூறு ஆயிரத்துக்குச் சோரம் போகிறவர்கள் தமிழர்கள் என்னும் அவப்பெயர் வந்து விட்டதே. இலவசங்களை விரும்பும் இளித்தவாயர்கள் தமிழர்கள் என்னும் கூடுதல் அவப்பெயரும் வந்துவிட்டதே.

மனிதருக்கு மனிதர் பணிவு காட்டுவதில் தவறில்லை. ஆனால் முதுகெலும்பில்லாத புழுக்களைப் போன்று கூனிக்குறுகி, வளைந்து நெளிந்து பணிவைக் காட்டுவதில் தமிழர்க்கு நிகர் தமிழர்தாம் என்னும் களங்கமும் வந்து சேர்ந்து விட்டதே.

யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாதே; அதில் உள்ள உண்மைத் தன்மையை உணர்க என உரைத்த வள்ளுவரின் குறளைக் காற்றில் பறக்கவிட்டு, பரப்புரையையும் பசப்புரையையும் நம்பி ஏமாந்த  ஏமாளித் தமிழர், கம்பத்தில் பறக்க வேண்டிய கட்சிக் கொடிகளைக் கழுத்தில் சுற்றித்திரிந்த கோமாளித் தமிழர் என்றெல்லாம் கேரளா, ஒடிசா, மேற்குவங்க மக்கள் பேசுகிறார்களே!


ஐயகோ! அவமானம்! அவமானம்!

Sunday 15 May 2016

தேர்தல் மரம்

    கட்செவி அஞ்சலில் கண்டதும் வரும். சில செய்திகள் நம் கருத்தைக் கவர்ந்து சிந்தனையைத் தூண்டும். அந்த வகையில் அண்மையில் வந்த இந்தச் செய்தி என்னை நிமிர்ந்து உட்காரச் செய்தது.

    “தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலை நினைவு கூரும் வகையில் ஒரு மரக்கன்று நடுவோம். ஐந்து ஆண்டுகள் கழித்து நட்ட மரம் அதிக பலன்கொடுத்ததா அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அதிக பலன் கொடுத்தாரா என்று பார்ப்போம்.”

     நல்ல விஷயமாயிற்றே என்று நண்பர்களோடு பகிர்ந்துகொண்டேன். எத்தனைப் பேர் அதைக் கவனித்தார்களோ? எத்தனைப் பேர் செடி நடுவார்களோ? நான் நட்டேன் ஒரு சரக்கொன்றை மரக்கன்றை.
tree seedling planted on the Eve of General election 2016

      எங்கள் தெருவில் இல்லத்திற்கு முன்னால் தெருவோரத்தில் ஆழ குழி தோண்டி சரக்கொன்றைச் செடியை நட்டேன். அது வளர்ந்து பூக்கத் தொடங்கிவிட்டால் கொள்ளை அழகாக இருக்கும். சரம் சரமாகத் தொங்கும் பொன்னிறப் பூக்கள் அனைவரையும் சுண்டியிழுக்கும்.

      அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நட்ட செடியையும், தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினரையும் கண்காணிக்க வேண்டும். செடியின் பெயர், தாவரவியல் பெயர், நட்ட தேதி போன்றவற்றையும், சட்டமன்ற உறுப்பினரின் பெயர், முகவரி, அலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, தேர்தலின்போது அவர் அளித்த வாக்குறுதிகள் ஆகியவற்றையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

      நட்ட செடி கிளை பரப்பி நிழல்தரும்போது நீரூற்றி எருவிட்டுப் பாராட்டுவோம். அவ்வாறே சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கு ஏதேனும் நன்மை செய்தால் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுவோம்.

      ஐந்தாண்டு முடிவில் நட்ட மரம் தந்த  பயனையும், உறுப்பினர் தந்த பயனையும் ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

      ஒவ்வோர் ஆண்டு நிறைவிலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, சட்டமன்ற உறுப்பினரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்க வேண்டும்.

1.       வேட்பு மனு தாக்கல் செய்யும்போது உங்கள் சொத்து எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு உள்ளது?

2.       உங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி நிதி எவ்வளவு? செலவின விவரம் தருக.

3.       சட்டமன்றம் எத்தனை நாள்கள் நடந்தன? நீங்கள் எத்தனை நாள் அவையில் இருந்தீர்கள்? சட்டமன்றத்தில் என்னென்ன கேள்வி கேட்டீர்கள்?

4.       தேர்தலின்போது தொகுதிக்குச் செய்வதாக அளித்த வாக்குறுதிகளில் எவ்வெவற்றை நிறைவேற்றினீர்கள்?

பார்க்கப் பார்க்கதான் மரம் வளர்ந்து பயன்தரும். மரம் மட்டுமல்ல; நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும்.

     நான் களத்தில் இறங்கிவிட்டேன். நீங்கள்?????????????      

Tuesday 10 May 2016

நூற்றாண்டு விழாக் காணும் வேளாளர் விடுதி

   பணி நிறைவுக்குப்பின் எங்காவது ஊர்ப்பயணம் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு ஏற்றார்போல் கோபியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது.

Wednesday 4 May 2016

நுழைவுத் தேர்வும் தமிழக மாணவர்களும்


முனைவர் அ.கோவிந்தராஜூ

    இந்தத் தேர்தல் பரபரப்பிலும் ஊடகங்களில் பெரிதாகப் பேசப்பட்ட ஒரு  செய்தி உண்டு என்றால் அது மருத்துவப் படிப்பிற்கான நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வு பற்றிய செய்திதான்.