அன்பு மகள் அருணாவுக்கு,
வாழ்க வளமுடன். இங்கு நானும் அம்மாவும்
தங்கையும் நலமாக உள்ளோம். அங்கு நீயும் மாப்பிள்ளையும் நலமா?
தொலைப்பேசி புழக்கத்தில் வந்ததால்
கடிதம் எழுதும் வழக்கம் மறைந்து விட்டது. நீ திருச்சியில் பொறியியல் கல்லூரியில்
படித்தபோது நான் உனக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருதேன். அதற்குப் பிறகு இப்போதுதான்
உனக்குக் கடிதம் எழுதுகிறேன்
.
தம்மின்தம் மக்கள்
அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
என்னும் குறள்பா ஏனோ என்
சிந்தனையில் இன்று சுற்றிச் சுற்றி வந்தது.
தம்மினும் தம்மக்கள் அறிவுடையார்
என்பதில்தான் பெற்றோருக்குப் பெருமை. அந்தப் பெருமையை அளித்த உன்னை எவ்வளவு
பாராட்டினாலும் தகும்.
என்னைவிட நீ அறிவுடையவள் என்பதில் இரண்டாவது
கருத்துக்கு இடமில்லை. என்றாலும் நீ இக்கருத்தை ஏற்றுக்கொள்ளமாட்டாய்.
நான் திருச்சி வானொலியில் பேசினேன்; நீயோ
மிஸிஸிப்பி வானொலியில் பேசினாய். நான் உள்ளூர் பத்திரிகையில் எழுதினால், நீ உலக
அளவில் புகழ் பெற்ற பத்திரிகைளில் எழுதுகிறாய். நான் பள்ளிக்குழந்தைகளுக்குப்
பாடம் நடத்தினால், நீ பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறாய். நான் நம்
தாய்மொழியில் கட்டுரை எழுதினால், நீ அன்னிய மொழியில் சிலம்பம் ஆடுகிறாய்.
நான் நாடளவில் புகழ்பெற்ற பாரதியார்
பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படித்தேன். நீ உலகப்புகழ் பெற்ற டெக்ஸாஸ்
பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெறப்போகிறாய். என் ஆய்வு ஊரளவில்
பேசப்படுகிறது; உனது ஆய்வு உலக அளவில் பேசப்படும் நாள் வரத்தான் போகிறது. இவ்வளவு
ஏன்? 23 வயதில் சென்னைக்குக்கூட தனியாக
செல்வது பற்றி யோசிப்பேன். ஆனால் நீயோ அந்த வயதில் தனியாக மிஸிஸிப்பிக்குப் பறந்து
சென்றாய்.
நான் ஆசிரியப்பணியேற்று பள்ளிக்கு சைக்கிளில்
போன வயதில், இன்று நீ பல்கலைக்கழகத்திற்கு காரில்- அதுவும் நீயே
ஓட்டிச்செல்கிறாய். அதனால்தான் சொல்கிறேன் நீ என்னினும் அறிவுடையவள் என்று.
ஆற்றலில் குருவை மிஞ்சிய சிஷ்யனால் குருவுக்கு மகிழ்ச்சி. அறிவில் நீ தந்தையை
மிஞ்சியவள் என்பதால் எனக்கு மகிழ்ச்சி.
தேர்ந்தெடுத்த உயிரி தொழில்நுட்பத்துறையில் நீ
சிறந்து விளங்குவதற்குக் காரணம், எனது
கருத்தை எனது ஆசையை உன்னிடத்தில் திணிக்காமல் உனக்கு ஆர்வமுடைய படிப்பைத் தொடர
அனுமத்தித்தது என நினைக்கிறேன்.
இன்னொரு காரணமும் உண்டு. எந்தப் பணியை
மேற்கொண்டாலும் அதில் 100 விழுக்காடு ஈடுபாட்டுடன் செயல்படுவது உனது இயல்பாகும்.
பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கலைக்கல்லூரியில் நீ உதவிப்பேராசிரியையாகச்
சிறிதுகாலம் பணியாற்றியபோது உன் மாணவர்கள் கொடுத்தப் பின்னூட்டங்களே அதற்குச்
சான்றாகும்.
உனது முயற்சிகளுக்கு உறுதுணையாய் இருப்பவர்
உன் அன்புக் கணவர். பொன் அணிகளை எதிர்பார்க்காமல் உன் அணிகளை (பணிவும்
இன்சொல்லும்) கணக்கில் எடுத்துக்கொண்டு உன் கரம் பற்றிய எங்கள் மாப்பிள்ளை
உண்மையில் பாராட்டுக்குரியவர்.
இப்படியே நீ இருந்துவிடப்
போவதில்லை. மேலும் உன் நிலை உயரும். செல்வாக்குப் பெருகும்; செல்வம் பெருகும்.
அப்போதும் எப்போதும்போல் பணிவாக இரு. பெருக்கத்து வேண்டும் பணிவு என்று வள்ளுவர்
கூறுவதை என்றும் நினைவில் கொள்.
இன்று டிசம்பர் 30. உன் பிறந்த நாள். உன்
அம்மாவுக்கும் எனக்கும் இன்றுதான் பிறந்த நாள். வியப்பாக இருக்கிறதா? அம்மாவாக
அப்பாவாக நாங்கள் ஆனதே நீ பிறந்த நாளன்றுதானே!
அருமை மகளே! அமிழ்தினும் இனியவளே! உனக்கு எங்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
தற்காத்துத் தற்கொண்டார்ப் பேணி தகை சான்ற
சொற்காத்துச் சோர்வில்லாமல் வாழ்வதே குறள் காட்டும் நெறியாகும். அந்நெறியில்
வழுவாது வாழ்க; வளர்க.
உன் அன்புத் தங்கையும்
இனிய பிறந்த நாள் வாழ்த்தைக் கூறுகிறாள்.
என்றும் மாறாத அன்புடன்,
உன் அப்பா.