Thursday 31 December 2020

திருவெம்பாவை இனிய(ன்) உரை

 அன்பிற்கினிய வலைப்பூ நண்பர்களே!

  சென்ற ஆண்டு மார்கழி மாதத்தில், ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களுக்கு உரை எழுதி நாள்தோறும் பகிர்ந்தேன். அதற்குப்  பெரும் வரவேற்பு இருந்தது.

   இந்த ஆண்டு மார்கழி மாதத்தில், மாணிக்க வாசகர் அருளிய திருவெம்பாவைக்கு உரை எழுதுகின்றேன். தென்னாடுடைய சிவன், எந்நாட்டவர்க்கும் இறைவன் என்பதால், அமெரிக்காவில் டெல்லாஸ் நகரில் வசிக்கும் என் மூத்த மகளின் இல்லத்திலிருந்து எழுதுவதை ஒரு பேறு எனக் கருதுகிறேன்.

ஆழ்ந்து படித்து அரும்பொருள் உணர்க; மற்றவர்க்கும் பகிர்க.

 

என்றென்றும் தமிழ்ப்பணியில்,

முனைவர் அ.கோவிந்தராஜூ,

(கவிஞர் இனியன்)



 

திருவெம்பாவை இனிய(ன்) உரை

 

பாடல் 1 /20 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டும் இங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!

 

அருஞ்சொற்பொருள்:

ஆதி – முதல்; அந்தம் – முடிவு; தடம் –அகன்ற; கழல்கள் –திருவடிகள்; போது –மலர்;  ஆர் –நிறைந்த அமளி –படுக்கை; இங்ஙன் –இப்படி; ஈதே –இதுவே; பரிசு –தன்மை, நிலை

 

விளக்கம்:

  வாள் போன்ற அகன்ற கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாது, சோதி வடிவாய் விளங்கும் சிவபெருமானை நாங்கள் எல்லோரும் பாடி வரும்போது நீ உறங்கிக் கிடக்கின்றாயே, உன் செவிகள் கேளாச் செவிகளோ?

 

   மலர்ப் படுக்கையில் படுத்துறங்கும் பெண்ணே! நாங்கள் உன் வீட்டின்முன் வீதியில் கூடி நின்று, சிவபெருமானின் திருவடிகளைப் வாழ்த்திப் பாடும் பாட்டொலியைக் கேட்டதும் உன் மெய்ம்மறந்து, விம்மி, புரண்டு புரண்டு படுத்துக்கிடக்கின்றாய். எங்களோடு சேர்ந்து சிவபெருமானைப் பாடும் இறைச் செயலை மறந்து இப்படி படுக்கையில் கிடக்கின்றாயே! இதுவா உன் தன்மை? இது அல்லவே.

 

பாடல் 2 /20


பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

 

அருஞ்சொற்பொருள்:

போது –மலர்; ஆர் –நிறைந்த; அமளி –படுக்கை; நேரிழை –அணிகலன்; ஏத்துதல் -போற்றுதல்

 

விளக்கம்:

    “பொருத்தமான அழகிய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நாம் இரவு பகல் என்று பார்க்காமல் கூடிப் பேசும்போதெல்லாம் ‘ஒளி வடிவாய்த் திகழும் சிவபெருமானே என் பாசத்துக்கு உரிய பெருங்கடவுள்’ என அடிக்கடி சொல்லும் நீ இப்போது, மார்கழி மாதத்து அதிகாலைப் பொழுதில்  மலர்ப்படுக்கையின் மீது பாசம் கொண்டவளாய்ப் படுத்து உறங்குகின்றாயே! இது நியாயமா?”

 

     “பொருத்தமான அழகிய அணிகலன்களை அணிந்த என் அருமைத் தோழியரே! சீ சீ! இதுவா நீங்கள் என்னைப் பரிகாசம் செய்து திட்டி விளையாடும் நேரம்?”

    

   “ அடி பெண்ணே! உன்னைத் திட்டுவதற்கு நாங்கள் வரவில்லை. விண்ணுலகில் வாழும் தேவர்களே சிவபெருமானைப் போற்றி வணங்க, அஞ்சிக் கூசுவார்கள். ஆனால் நாம் வாயார வாழ்த்திப் பாடும்போது எளியராய் வந்து நமக்கு அருள் தரக்கூடிய, தாமரை மலர் போன்ற திருவடிகளை உடைய தில்லைக்கூத்தன் நம் அன்புக்கு உரியவர். உடனே எழுந்து வா. மார்கழி நீராடி நம் மனத்துக்கு இனியானை இனிய தமிழில் இனிமையாகப் பாடி மகிழ்வோம்.”

 

 

 பாடல் 3 /20
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்துஆட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும்  நமக்கேலோர் எம்பாவாய்

 

அருஞ்சொற்பொருள்:

   அத்தன் –தந்தை; உள்ளூற – வாய் ஊற; கடை –வாயிற் கதவு; பத்து – பத்து வகையான சிவ கருமங்கள்; பழ –பழமையான; புன்மை –குற்றம், சிறுமை; சித்தம் –அறிவு.

 

பொருள் விளக்கம்:

   “முத்துகள் போன்ற பற்களையும் அழகிய புன்முறுவலையும்  உடைய பெண்ணே! எப்போதும் நீதான் முதலில் எழுந்து வெளியே வந்து, எங்கள் முன் நின்று, சிவபெருமான் குறித்து, ‘என் அப்பன், நான் விரும்பும் நாயகன், நிறைவாக வீடு பேறு அளிக்கும் அமுதன்’ என்று வாய் ஊற, இனிமையாகப் பேசுவாய்! இன்றைக்கு என்ன ஆயிற்று உனக்கு? எழுந்து வா! வாயிற் கதவைத் திற!”

 

   “வெண்ணீறு அணிதல், உருத்திராக்க மாலை அணிதல், சிவனை வழிபடுதல், சிவனைப் பாடுதல், சிவ நாமாவளி சொல்லல், சிவனடியாரை வழிபடுதல், சிவ தருமங்கள் செய்தல், சிவன் கதை கேட்டல், சிவன் கோவிலில் உழவாரப்பணி செய்தல், சிவனடியார்க்குத் தொண்டு செய்தல் என்னும் பத்தினையும் பாங்குறச் செய்யும் பெண்களே!

   சிவபெருமானின் நெடுநாள் அடியவர்களாகிய நீங்கள், என்னிடம் உள்ள குறைகளைக் கருதாமல், இந்தப் புதிய அடியவளாகிய என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டால் குறைந்தா போவீர்கள்?”

 

  “என்னமாய் பேசுகிறாய்! அடியே, சிவன்பால் நீ கொண்டுள்ள மாறாத அன்பினை நாங்கள் அறிவோம். மார்கழி மாதத்தில் இளங்காலைப் பொழுதில் எழுந்து நீராடி, அறிவின் அழகு வடிவாய்த் திகழும் ஞானசீலனை நாம் பாடுவது வழக்கம் என்பது உனக்குத் தெரியாதா? நீ அதற்கு அணியமாய் இருக்க வேண்டாமா? ம்ம்..பேசு  பேசு. எங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.”

 

 பாடல் 4 /20
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?

எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே  காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்!

 

அருஞ்சொற்பொருள்:

ஒண்ணித்திலம் = ஒள்+நித்திலம்; ஒள் –சிறந்த; நித்திலம் –முத்து; அவமே –வீணே; விழுப்பொருள் –மேலான பொருள்; உண்ணெக்கு=உள்+நெக்கு அதாவது உள்ளம் நெக்குருகி.

 

பொருள் விளக்கம்:

 

வீட்டின் வெளியே நிற்கும் பெண்கள் சொல்கிறார்கள்:

   முத்துகள் போன்ற பற்களையும் அழகிய புன்முறுவலையும்  உடைய கன்னிப் பெண்ணே! இன்னமும் உனக்குப் பொழுது விடியவில்லையா? படுக்கையில் கிடந்து இன்னும் உறங்குகின்றாயே!”

 

உள்ளே படுக்கையில் புரண்டபடி கிடக்கும் இளம்பெண் சொல்கிறாள்:

   “வண்ணக் கிளிகள் பேசுவதைப் போல கொஞ்சு மொழி பேசும் நம் தோழியர் அனைவரும் வந்துவிட்டார்களா?”

 

மறுமொழியாக வெளியே நிற்கும் பெண்கள் சொல்கிறார்கள்:

   “இரு இரு, அனைவரும் வந்து விட்டார்களா என எண்ணிப் பார்த்துச் சொல்கிறோம். அதுவரை வீணாகத் தூங்கிப் பொழுதைக் கழிக்காதே. விண்ணுலகத்துத் தேவர்களுக்கெல்லாம் மாமருந்தாகிய அமுதம் போன்றவனும், வேதங்களின் மேலான உட்பொருளாய் விளங்குபவனும், பார்ப்பதற்கு இனியவனும் ஆகிய சிவபெருமானை உள்ளம் கசிந்து, உள்ளம் நெக்குருகப் பாடித் துதிக்கவே உன்னை அழைக்கின்றோம். அடி தூங்கி வழியும் பெண்ணே! தலைகளை எண்ணிப் பார்த்துவிட்டோம்; எண்ணிக்கையில் குறைவில்லை; அனைவரும் வந்துவிட்டனர். நீ வேண்டுமானாலும் வந்து எண்ணிப் பார்த்துக்கொள்.”

 

தத்துவ விளக்கம்:

 மாயையில், சிற்றின்பத்தில் சிக்கிக்கொண்ட மனித மனத்தை இறைவன்பால் முயன்று திருப்ப வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர்.

 

 பாடல் 5 /20
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்!

       

அருஞ்சொற்பொருள்:

  மால் –திருமால்; பொக்கங்கங்கள் – பொய்கள்; படிறீ – வஞ்சகி; ஞாலம் – நிலவுலகம்; கோது – குற்றம்; ஏலக்குழல் – மணம் வீசும் கூந்தல்; பரிசு –தன்மை, நிலை 

பொருள் விளக்கம்:

    வீட்டின் வெளியே நிற்கும் பெண்கள் சொல்கிறார்கள்:

  “நறு மணம் வீசும் நல்ல கூந்தலை உடைய இளம்பெண்ணே! திருமால் அன்னப்பறவை வடிவிலும், நான்முகன் பன்றி வடிவிலும் சிவனின் திருமுடியினையும் திருவடியினையும் தேடிச்சென்று காணவியலாத நிலையில், ‘சிவனின் முடி கண்டேன் அடி கண்டேன் அவன் அருள் கொண்டேன்’ என்று நேற்று உன் வாயில் பாலூற, தேனூற வாய்க்கு வந்தபடி பேசினாய். அடி வஞ்சகியே! இன்று துயில் எழாமல் கிடக்கின்றாய்! வா வந்து கதவைத் திற. மண்ணுலகம், விண்ணுலகம் மற்றும் பிற உலகத்தாரும் அறிவதற்கு அரியவனான சிவபெருமானின் திருவழகையும், நம் குற்றங்களைப் பொருட்படுத்தாமல், நம்மை ஆட்கொண்டு அருளும் பண்பையும் பாடுகிறோம். சிவ சிவா என்று ஓலமிடுகிறோம். இவற்றை எல்லாம் கேட்டும் கேளாமல், உணராமல் உறங்குகின்றாயே. இது உனக்கு அழகோ?” 

தத்துவ விளக்கம்:

 இங்கே மனித மனம் என்பது உறங்கிக் கிடக்கும் பெண்ணாக உருவகம் செய்யப்படுகிறது. மாயையில் மயங்கிக் கிடக்கும் நம் மனத்தைத் தட்டி எழுப்பி இறைவன்பால் செலுத்த வேண்டும் என்பது இப் பாடலின் உட்பொருள்.

 

பாடல் 6
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்.

 

அருஞ்சொற்பொருள்:

நென்னல் – நேற்று; பகராய் – சொல்லுக; அளி – கருணை; கழல் – திருவடி;

கோன் – அரசன்

 

பொருள் விளக்கம்:

வீட்டின் வெளியே நிற்கும் பெண்கள் சொல்கிறார்கள்:

  “மானின் மருட்சிப் பார்வை கொண்ட இளம்பெண்ணே! நேற்று நீ என்ன சொன்னாய்? ‘நானே வந்து உங்களை எழுப்புவேன்’ என்றல்லவா சொன்னாய். நீ சொன்ன அந்தச் சொல் எந்தத் திசையில் போயிற்று? சொல். இன்னுமா பொழுது விடியாமல் இருக்கிறது? இப்படி வெட்கமில்லாமல் படுக்கையில் கிடக்கின்றாயே!

     வானவரும் மனிதரும் பிற எவ்வுயிரும் அறிந்து கொள்வதற்கு அரியவன் சிவபெருமான். ஆனால் அவன் திருவடிகளே சரணம் என்று பணிந்தோர்க்குத் தானே எளியவனாய் வந்து இரங்கி அருள் செய்யக் கூடியவன். அவனுடைய புகழ்மிக்கத் திருவடிகளைப் போற்றி நாங்கள் பாடுகின்றோம். ஆனால் நீ வாய் திறவாமல் கிடக்கின்றாய். அம்மா தாயே, அவனை ஊன் உருகப் பாடாமல் இப்படிக் கிடப்பது உனக்குதான் தகும்!

   நமக்கு மட்டும் அல்லன் எல்லோருக்கும் சிவபெருமானே அரசன். உடனே எழுந்து வா; சேர்ந்து பாடுவோம்.”

 

தத்துவ விளக்கம்:

   மனித மனம் நிலையற்றத் தன்மை உடையது. மேலும் சிறியன சிந்திக்கும். பெரிதும் முயன்று அதை ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்னும் வள்ளுவ நெறியில் ஆற்றுப்படுத்த வேண்டும்.  தாமரை இலைமேல் உள்ள நீர்த்துளி போல உலக இன்பங்களில் பட்டும் படாமலும் இருக்க மனத்தைப் பழக்க வேண்டும்.

 

பாடல் 7 /20
அன்னே! யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

 

அருஞ்சொற்பொருள்:

  அன்னே – தாயே; இரு – பெரிய; சின்னங்கள் – திருநீறு, ருத்திராட்சம் முதலியன. அரையன் – அரசன்; வாளா – எதுவும் பேசாமல்; ; பரிசு –தன்மை, நிலை. 

பொருள் விளக்கம்:

 

வீட்டின் வெளியே நிற்கும் பெண்கள் சொல்கிறார்கள்:

  “தாயே! உன்னுடைய பல குறும்புகளில் இப்படி அதிகாலையில் உறங்குவதும், நாங்கள் அழைத்தும் படுக்கையைவிட்டு எழாமல் இருப்பதும் அடக்கமோ? தேவர்களும் உணர்வதற்கு  அரியவனாம், பெரும் சிறப்புக்கு உரியவனாம் சிவபெருமானின் சின்னங்களான திருநீறு, ருத்திராட்சம் இவற்றைப் பார்த்தாலே ‘சிவ சிவா” எனச் சொல்லுவாயே. ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்று சொல்ல முனையும் ஒருவர் தென்னா எனத் தொடங்கி முடிக்குமுன், அதைக் கேட்கும் நீ தீயிடைப்பட்ட மெழுகினைப்போல உருகுவாயே. அப்படிப்பட்டவளாகிய நீ இன்று,  சிவபெருமானை என்னவன், என் அரசன், இனிய அமுதன் என நாங்கள் வேறு வேறு குரலிலே உரக்கச் சொல்லி அரற்றுவதைக் கேட்ட பிறகும் தூங்குகின்றாயே! கல்நெஞ்சமுடைய பேதை போல, இன்னும் படுக்கையில் சும்மா படுத்துக் கிடக்கின்றாய். இது தூக்கப்பித்தினால் ஏற்பட்ட நிலையோ?” 

தத்துவ விளக்கம்:

   முதல் நாள் ஒரு நல்ல செயலைச் செய்யத் துணை நின்ற மனம் அடுத்த நாள் அப்படித் துணை நிற்காமல் முரண்டு பிடிக்கும். இதுதான் மனித மனத்தின் இயல்பு. அதனால்தான் ஒளவையார், ‘மனம்போன போக்கிலே போக வேண்டாம்’ என்றார். மனம் செம்மையானால் நமது செயல்களும் செம்மையாகும் என்பதே இப்பாடலின் உள் உறை செய்தி. 

பாடல் 8 /20
கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.              

 

அருஞ்சொற்பொருள்:

    சிலம்பல் – ஒலியெழுப்புதல்; குருகு – பறவையினங்கள்; ஏழில் –ஏழு துளைகளைக் கொண்ட நாதஸ்வரம், இயம்புதல் – ஒலித்தல்; கேழில் – ஒப்பிலாத; விழு – மேன்மை; ஆழி – கடல்; ஊழி – காலத்தின் பேரலகு(Highest Unit of Time); ஆமாறு –ஆகும் வழி; ஏழை – ஏந்திழை என்பதன் சுருக்கம், இங்கே உமையவளைக் குறிக்கும்; ஏழை பங்காளன் –உமையவளைச் சம பங்காகக் கொண்ட சிவபெருமான்.

 

பொருள் விளக்கம்:

வீட்டின் வெளியே நிற்கும் பெண்கள் சொல்கிறார்கள்:

 

  “உறங்கும் இளம்பெண்ணே! கோழிகள் கூவுகின்றன; குருகு முதலான பறவைகள் கீச் கீச் என்று ஒலி எழுப்புகின்றன. சிவன் கோவிலிலிருந்து நாதஸ்வர இசையும் சங்கொலியும் காதில் வந்து விழுகின்றன. இவையெல்லாம் பொழுது விடிந்ததைப் புலப்படுத்துகின்றன.

 

    இதோ பார். நாங்கள் ஒப்பிலாத பரஞ்சோதியாய், ஒப்பிலாத உயர்ந்த அருள் வெள்ளமாய், ஒப்பிலாத மேலான பொருளாய் விளங்கும் சிவபெருமானைப் போற்றிப் பாடுகின்றோம். அதுவும் உன் காதில் ஏறவில்லையா?

 

நீ வாழ்க! இது என்னடி, உனக்கு இப்படியொரு பாழாய்ப்போன உறக்கம்! கொஞ்சம் உன் வாயைத் திறந்து ஏதாவது சொல்லேன். ஓகோ! நீ புரிவது யோக நித்திரையோ? உன் வழிபடும் கடவுளான கடல் அளவு அன்புடைய சிவனை இப்படியொரு வழியிலும் வணங்குகிறாயோ?

 

 தோழியே! வா வந்து உன் மாளிகையின் மணிக்கதவை மகிழ்ச்சியுடன் திற. கால வெள்ளத்தால் அழியாது ஓங்கி உயர்ந்து நிற்கும் ஊழி முதல்வனும், உமையவளை சரிப்பாதியாய்க் கொண்ட ஏழை பங்காளனுமாகிய சிவபெருமானைச் சேர்ந்து பாடுவோம் வா!”

 

தத்துவ விளக்கம்:

  மனிதன் ஐம்புலன் நுகர்ச்சியிலேயே காலங்கழித்தல் கூடாது. தன்னைப் படைத்தக் கடவுளை வணங்கும் கடமையிலிருந்து ஒருபோதும் தவறுதல் கூடாது என்பது இப்பாடலின் அடி நாதம். 

 

பாடல் 9 /20
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

 

அருஞ்சொற்பொருள்:

  பேர்த்தும் – மீண்டும்; பெற்றியன் – தன்மையன்; பிரான் – தலைவன்; பாங்காக – இணக்கமாக; உகந்து – ஏற்று, மகிழ்ந்து; சொன்ன பரிசே – சொன்ன முறையில்; தொழும்பாய் – கீழ்ப்படிந்து; கோன் – அரசன்; நல்குதியேல் – கொடுப்பாயானால்.   .

 

திருவெம்பாவை பாடல்கள் அமைப்பு முறை:

  முதல் எட்டுப் பாடல்களும் துயிலெடைப் பாடல் என்னும் வகையில் அடங்கும். அதாவது ஒருவர் மற்றவரைத் துயில் எழுப்புவதாய் அமையும் இந்த ஒன்பதாவது பாடல் தொடங்கி பத்தொன்பதாம் பாடல் முடிய கன்னிப்பெண்கள் சிவனின் பல்வேறு பரிமாணங்களைப் புகழ்ந்து தங்கள் உணர்வுகளைக் குழைத்துப் பாடுவதாக அமையும். நிறைவுப் பாடலான இருபதாம் பாடல் போற்றிப் பாடலாகும். படலின் எல்லா அடிகளும் போற்றி எனத் தொடங்குமாறு அமைந்திருக்கும்.

 

பொருள் விளக்கம்:

   “உலகம் தோன்றிய காலத்திலிருந்து இருந்துவரும் கதிரவன், நிலா, மலை, கடல் போன்ற பழமையான பொருள்களிலே மிகப் பழமையான பொருளாகவும், இன்று மனித அறிவில் உருவாகும் புதுமையான தொழில்நுட்பங்களில் அண்மையில் வெளியானவற்றில் மிகப் புதுமையாகவும் (எ.கா:கரோனா தடுப்பு மருந்து) விளங்கும் இறைவனே!

   உன்னைத் தலைவனாகப் பெற்ற நாங்கள் உன் திருவடிகளைப் பணிவோம்; உன்னையே வணங்கும் உன் அடியார்களின் திருவடிகளையும் பணிவோம். அவர்களையே எங்கள் கணவராக அடைவோம். அவர்களுக்கு ஏற்றமுறையில் கீழ்ப்படிந்து அவர் சொற்படிப் பணிசெய்து கிடப்போம். இதுதான் எங்கள் ஆசை. எமக்கு அரசராய் விளங்கும் நீ இந்த ஆசையை நிறைவேற்றினால் போதும். எங்களுக்கு வேறு எந்தக் குறையும் இல்லை.”

 

பாடல் 10 /10
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

 

அருஞ்சொற்பொருள்:

   ஏழ் பாதாளம் – ஏழு பாதாள உலகங்கள்; சொற்கழிவு –சொற்கள் இல்லாத ஒலி; பாதமலர் – திருவடி; போதார் புனைமுடி – மலர் சூடிய முடி; பொருள் முடிவே – பொருள் வடிவம் உடைய; பேதை – உமையவள்; ஒருபால் –ஒரு பக்கத்தில்; திருமேனி –திருவுருவம்; ஓத உலவா –படித்து அறிய முடியாத;  தொண்டர் –அடியார்கள்; கோது –குற்றம்;

பிணாப் பிள்ளைகள் –பெண் பிள்ளைகள், சிறுமியர்; பரிசு –முறை, தன்மை.

 

பொருள் விளக்கம்:

   கன்னிப் பெண்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து மார்கழி நீராடி, சிவன் கோவிலுக்குச் சென்று அவனது திருவடிகளில் விழுந்து வணங்குவதற்கு முன்பாக அக்கோவிலின் பணிப்பெண்களைச் சந்தித்து உரையாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


  “கோவிலில் சிவத்தொண்டுகள் செய்யும் குற்றமிலாத நல்ல குலத்தில் தோன்றிய பெண் பிள்ளைகளே! மண்ணுலகுக்குக் கீழுள்ள ஏழு உலகங்களும் ஒலி உலகங்கள். மண்ணுலகு தொடங்கி ஏழு உலகங்கள் மேலே உள்ளன. அவை கடல், மலை, கோள்கள் போன்ற பொருள்களை உடைய பொருள் உலகங்கள். சிவபெருமானின் மலர் போன்ற திருவடிகளைக் கீழே உள்ள ஒலி மட்டும் நிரம்பியுள்ள ஏழு உலகங்களைத் தாண்டிச் சென்றாலும் காணமுடியாது. அதேபோல் ஆத்தி, கொன்றை மலர்களைச் சூடியுள்ள சிவனின் திருமுடியை மேலே உள்ள ஏழு  பொருள் உலகங்களைத் தாண்டிச் சென்றாலும் காண இயலாது.


   உமையவளைத் தன் ஒரு பாகமாய்க் கொண்டுள்ள சிவன் ஓர் ஒருவம் உடையவனல்லன். உருவம், அருவுருவம், அருவம் என வேறு வேறு தோற்றம் உடையவன்.(உருவம் - தில்லைக் கூத்தன், அருவுருவம் சிவலிங்கம், அருவம் -எதுவாகவும் இல்லாதவன், வெட்ட வெளி)


   வேதங்களால் அளக்கமுடியாதவன் சிவன்;  விண்ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் எத்தனை காலம் துதித்தாலும் அவனை எந்த நூல்களிலும் படித்தாலும் உணரமுடியாது. ஆனாலும் நம்மைப் போன்ற எளியவர்களுக்கு அவன் உற்ற தோழன்; அடியவர்களின் உள்ளத்தில் உறைபவன்.


   நாம் வணங்கும் சிவபெருமானுக்கு ஒரு பேர் உண்டா?( ஆயிரம் திருநாமங்கள் உடையவன்) ஓர் ஊர் உண்டா? (எந்நாட்டவர்க்கும் இறைவன்) அவனுக்கு உற்றார் யார்? அயலார் யார்?(அப்படி வேறுபாடு பார்க்காமல் அருள் செய்பவன்), அவனை எந்த முறையில் பாடி வணங்குவது?(உருகி அழுதாலே போதும்) வாருங்கள் எல்லோரும் சென்று அவன் திருவடிகளைப் பணிவோம்.”

 

குறிப்பு: இன்னும் பத்துப் பாடல்களுக்கான உரை அடுத்தப் பதிவில்.