Friday 26 July 2019

நாவடக்கம் இல்லா நெல்லை கண்ணன்


   மனிதர்களின் நிறைகளை மட்டும் எடுத்துக்கொண்டு எழுதுவதும் பேசுவதும் என் வழக்கம். அதே சமயம் சிலர் எல்லைமீறி இதழ்களில் எழுதும்போதும் மேடையில் பேசும்போதும் அவர்தம் சிறுமை கண்டு நான் பொங்குவதும் உண்டு.

Thursday 18 July 2019

ஆங்கில நாவலாசிரியர் ஆர்.கே. நாராயண்


     2006 ஆம் ஆண்டு ஆர்.கே.நாராயண் அவர்களின் பிறந்த நூற்றாண்டாக நாடெங்கும் கொண்டாடப்பட்டது. அப்போது நான் புகழூர் டி.என்.பி.எல் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றினேன். அந்த ஆண்டில் அப் பள்ளியில் தொடங்கப்பெற்ற ஆங்கில இலக்கிய மன்றத்திற்கு “ஆர்.கே.நாராயண் ஆங்கில இலக்கிய மன்றம்என்று பெயர் சூட்டினேன். ஆங்கிலக் கட்டுரை எழுதும் போட்டியில் வென்றவர்களுக்கு அவர் எழுதிய நாவல்களைப் பரிசாக வழங்கினேன். ஆர்.கே.நாராயண் குறித்து அப்போது தொடங்கிய எனது தேடல் இன்றுவரை நின்றபாடில்லை.

Wednesday 10 July 2019

கரூரில் வாழ்ந்த கர்நாடக இசைக் கலைஞர்கள்


    சென்ற நூற்றாண்டில் கரூரில் கொடிகட்டிப் பறந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் பலராக இருந்தனர். கரூர் சின்னசாமி ஐயர் என்பவர் புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஆவார். 1882 ஆம் ஆண்டில் பிறந்த இவர் இளமையிலேயே இசையில் நாட்டமுடையவராக விளங்கினார். முதலில் தன் தந்தையாரிடமும், பின்னர் தன் தமையனார் தேவுடு ஐயரிடமும் வயலின் வாசிக்கக் கற்றார்.

Friday 5 July 2019

தினம்தோறும் மரம்நடும் திம்மக்கா


   சென்றமாதம் சென்னை சென்றிருந்தபோது என் சகலை வீட்டில் பவன்ஸ் ஜேர்னல் ஆங்கில இதழில் இருந்த அட்டைப் படத்தைப் பார்த்து வியந்தேன். இன்றும் நோய் நொடியின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் 107 வயது பெண்மணியின் படம்தான் அது.
திம்மக்கா: பத்மஸ்ரீ விருதாளர்
   உள்ளேயிருந்த அவர் பற்றிய கட்டுரை எனக்கு மேலும் வியப்பூட்டியது.
   கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் குபி என்னும் சிற்றூரில் 1912 ஆம் வருடம் ஜனவரி முதலாம் நாள்  ஏழைப் பெற்றோருக்கு எழில்சேர் மகளாகப் பிறந்தார். வளர்ந்தார்; மழைக்குக் கூட பள்ளிக்கூடத்துக் கூரையின்கீழ் ஒதுங்கியதில்லை.ஆடு மாடு மேய்த்தார்; உரிய பருவத்தில் திருமணம் நடந்தது; மகப்பேறு வாய்க்கவில்லை எனினும் மனம் சோர்ந்துவிடவில்லை. மரக்கன்றுகளை குழந்தைகளாக எண்ணி வளர்க்க முடிவு செய்தனர் கணவரும் மனைவியும். இப்படித் தொடங்கி அவர்கள் வாழும் பகுதியில் சாலையோரங்களில், ஏரிக்கரைகளில் நூற்றுக் கணக்கில் மரம் வளர்த்தார்கள். அவர்களைப் பொருத்தவரை மரக்கன்று நடாத நாள் மகிழ்ச்ச்சியற்ற நாள்.

    அவர்கள் நட்ட ஒவ்வொரு ஆலமரத்தின் கீழும் இன்று ஆயிரம் பேர்கள் அமரலாம்! கணவர் இறந்த பின்னரும் அம்மையார் மரம் வளர்க்கும் பணியைத் தொடர்ந்தார்; தொண்டர்களின் உதவியுடன் தொடர்கிறார். ஒரு பனையோலைக் குடிசையில் மிக எளிமையாக வாழ்கிறார். கர்நாடக அரசு மாதந்தோறும் வழங்கும் ரூபாய் ஐந்நூறுதான் அவருக்கு வாழ்வாதாரம்!

   இந்த ஆண்டு  ‘பத்மஸ்ரீ’ விருதினை அவருக்களித்து நாடு பெருமை தேடிக்கொண்டது. இன்று உலகமே அவரைக் கொண்டாடுகிறது. திம்மக்கா என்னும் ஒற்றைச் சொல்லைத் தந்து கூகுளில் தேடினால் ஓராயிரம் படங்களும் செய்திகளும் வந்து குவிகின்றன. தோன்றின் புகழோடு தோன்றுக என்னும் குறளுக்குச் சான்றாகத் திகழ்கிறார்.

  மரம் நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய கென்யா நாட்டு வாங்கரி மாத்தாய் என்ற பெண்மணி நோபல் பரிசு வழங்கப்பெற்றார். நம் நாட்டு திம்மக்காவுக்கும் அத்தகைய நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்பது என் ஆசை.

     சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவர் ஏற்படுத்திய மரம் நடும் ஆர்வம் இன்று பலரையும் தொற்றிக்கொண்டது.

  ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எண்பதுகளில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் என்ற முறையில் மாணவர்களை அழைத்துச் சென்று கொடைக்கானல் பெருமாள்மலையில் முகாமிட்டு ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டோம்.

  நான் முதல்வராகப் பணியாற்றிய டி.என்.பி.எல் பள்ளியில் பல்மரப் பூங்காவை (Arboretum) உருவாக்கினோம்.

 நிசப்தம் அறக்கட்டளையினர் ஈரோடு மாவட்டம் கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் புறம்போக்கு நிலத்தில் ஓர் அடர்வனத்தை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளார்கள். இருபத்தைந்து செண்ட் நிலத்தில் 1500 பலவகை மரக்கன்றுகளை நட்டு வளர்க்கிறார்கள். சென்றமாதம்  அவ் வனத்தின்  ஓராண்டு நிறைவு விழாவையும் கொண்டாடினார்கள்.
கோட்டுப்புள்ளாம்பாளையம் அடர்வனம்
   சேந்தங்குடி ‘மரம் தங்கசாமி’ என்பவர்தான் முதல்முதலில் மரக்கன்றுகளைத் திருமணத் தாம்பூலமாக வழங்குவதை அறிமுகப்படுத்தினார். இது பரவலாகி நடைபெற்று வரும் நிலையில் இப்போது விதைப்பந்துகளைத் திருமணத் தாம்பூலமகத் தரும் வழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது.

   என் சம்பந்தியை நேற்றுச் சந்தித்தபோது அவர் ஒரு திருமணத்தில் பெற்றுவந்த விதைப்பந்துகளைத் தந்தார். மணமக்களின் படம், நம்மாழ்வார் படம் மற்றும் விதைப்பந்து குறித்த விவரம் அழகுத் தமிழில் அச்சிடப்பட்ட அட்டைப் பெட்டியில் வைத்துக் கொடுத்துள்ளார்கள்.


  சந்தனம், தேக்கு, அத்தி, வேம்பு போன்ற நாட்டுமர விதைகளை செம்மண்ணின் நடுவில் வைத்து நெல்லிக்காய் அளவில்  உருண்டைகளாக உருட்டிக் கொளுத்தும் வெயிலில் காயவைத்து எடுக்கப்படுவதே விதைப்பந்துகளாகும்.

   இவற்றை ஆற்றங்கரைகளில், மலைச் சரிவுகளில், புறம்போக்கு நிலங்களில், சாலை ஓரங்களில் வீசி எறிய வேண்டும். அவ்வளவுதான் நம் வேலை. அவை அப்படியே கிடந்து மழை பெய்யும்போது முளைத்துச் செடியாகி மரமாகின்றன.

    சரி இந்த விதைப்பந்துகள் எங்கே கிடைக்கும் என்றுதானே கேட்கிறீர்கள்?

www.seedballs.in  என்னும் இணைய தளத்தில் அனைத்து விவரங்களும் கிடைக்கின்றன. 9500914545 என்னும் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.