Sunday, 13 March 2016

கவரி வீசிய காவலன்

                                                              
                                                                 வரலாற்று நாடகம்

                                                       (முனைவர் அ கோவிந்தராஜூ)

             காட்சி 1   இடம்: சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை
                              அரண்மனை

வாயிற்காவலர்: யார் நீங்கள்?
மோசிகீரனார்:  வாயிற்காவலரே வணக்கம். நம் மன்னரைக் காண
                   வந்துள்ளேன்.  
  
               
காவலர்:  வணக்கம் புலவரே! மன்னர் ஓய்வெடுத்துக்கொண்டுள்ளார்.
          நீங்களும் களைப்போடு வந்துள்ளீர். அதோ தெரிகிறதே அந்த 
                    கூடத்தில் சற்றே ஓய்வெடுங்கள், மன்னர் இரண்டு நாழிகை
                    கழித்து  எழுந்து விடுவார்.  பிறகு மன்னரைச் சந்திக்கலம்.

புலவர்: நன்றி காவலரே!
          அது என்ன பளிங்கு மண்டபம் போல் தெரிகிறதே!
                     சென்று பார்க்கலாம். ஆகா! அது என்ன கட்டில்இவ்வளவு                அழகாக                   உள்ளதே!

      (கட்டிலின் மீது அமர்கிறார்., அப்படியே படுத்துத் தூங்கிவிடுகிறார்)


                        காட்சி 2 இடம்: அரண்மனை
காவலர் 1: மாரா! அதோ பார் மன்னர் வருகிறார்!

காவலர் 2: இந்த புலவர் எங்கே போனார்? வீரா! அங்கே பார்! புலவர் முரசு
                   கட்டிலில் படுத்துத் தூங்குகிறார்! மன்னர் பார்த்தால்
                 அவ்வளவுதான்!

காவலர் 1: மாரா அங்கே பார் மன்னர் என்ன செய்கிறார் பார்.

(மோசிகீரனாரின் தூக்கம் கலையாமல் இருக்க மன்னர் கவரி வீசுகிறார்)

புலவர்: மன்னா! மன்னா! என்னை மன்னிக்க வேண்டும். என் முதுமை 
              மற்றும் உடல் சோர்வு காரணமாக முரசு கட்டிலின் மீது படுத்து
                  உறங்கிவிட்டேன். அறியாமல் தவறு செய்துவிட்டேன்.
                 மன்னா! இந்தக் கட்டிலில், எண்ணெய் நுரையைப் போன்ற
                  மென்மையான  பூக்கள் பரப்பப் பட்டிருந்தது. அது,
                  நீராட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்த வீரமுரசு
                  வைக்கக்கூடிய முரசுக் கட்டில் என்பதை அறியாமல் அதன் மீது
                 ஏறிக் கிடந்து உறங்கினேன்.

                 அதனைக் கண்ட நீயோ சினங்கொண்டு நினது வாளினால் என்னை
                  இரு கூறாக்கிக் கொல்லாது விடுத்தாய். அதுமட்டுமல்லாது,
                  என்னருகே வந்து நின்னுடைய வலிமையான முழவு போன்ற
                 தோளினை உயர்த்திக் குளிர்ச்சியுடன் அருளுடன் எனக்குக் கவரி
                 வீசவும் செய்தாய்.

                  இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
                   நன்னயம் செய்து விடல் 
                  என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழ்கின்றீர்.
                 வெற்றியுடைய தலைவனே! நீ இவ்வாறு செய்தது எதனாலோ?
                 நீ நல்ல தமிழின் இனிமை முழுவதும் உணர்ந்தவன்.
                 அதனால்தான்                இந்த எளியவனுக்குக் கவரி வீசினாய்!

மன்னன்: புலவரே! மனம் கலங்காதீர். இந்த முரசு கட்டிலில்  உம்மைத்
                      தவிர வேறு எவரேனும் உறங்கியிருந்தால் உயிரை
                     வாங்கியிருப்பேன். கவரி வீசியிருக்கமாட்டேன். என்                             உடைவாளை                     வீசி இருப்பேன்.
                    ஆனால் நீரோ முத்தமிழ்ப்புலவர் மோசிகீரனார். உமக்குக் கவரி
                     வீசியதை அந்தத் தமிழன்னைக்குக் கவரி வீசியதாக எண்ணி
                      மகிழ்ந்தேன்.

புலவர்:    மன்பதை போற்றும் மன்னா! உன் தமிழ்ப்பற்றை எண்ணி
                    மகிழ்கிறேன். நீ வாழ்க! நின் கொற்றம் வாழ்க! இப்புவி  உள்ள
                   அளவும் உன் புகழ் வாழ்க!


மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?
                        புறநானூறு:50

பாடியவர்: மோசிகீரனார்.

பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

திணை:பாடாண். துறை: இயன் மொழி.

குறிப்பு: அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந்துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது.






6 comments:

  1. Prof.R.Pandiaraj14 March 2016 at 22:19

    Very interesting to read.

    ReplyDelete
  2. Very nice. Bringing Sanga Tamil poems back to this generation is an appreciable effort. Vazhga Anna

    ReplyDelete
  3. Very nice. Bringing Sanga Tamil poems back to this generation is an appreciable effort. Vazhga Anna

    ReplyDelete
  4. மிக அருமை ஐயா!நன்றிகள்

    ReplyDelete
  5. அருமையாக, இளைஞர்கள் படிக்க ஆர்வம் கொள்ளும் வகையில் சுருக்கமாக எழுதிய நாடக பாணி.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    அ. ஸ்ரீ விஜயன்

    ReplyDelete