இதயத்தைக் கசக்கிப் பிழிவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் சங்கப் பாடல் ஒன்று உண்டென்றால் அது இதுவாகத்தான் இருக்கும். மகிழ்ச்சியான தருணங்களை எந்தப் புலவரும் பாட்டிலே கொண்டு வந்து காட்டமுடியும். ஆனால் சோகமான தருணத்தைப் பாட்டாக இயற்றுவது என்பது ஒரு சிலரால்தாம் இயலும். ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் ஒரு சங்கப் புலவர் இயற்றிய பாட்டு நம்மை உள்ளுக்குள் அழ வைக்கிறது என்றால் அந்தப் புலவரின் திறனை என்னென்று சொல்வது!
Thursday 29 December 2022
Thursday 8 December 2022
நெஞ்சைக் கவரும் நெதர்லாந்து
திருப்பூர் நண்பர் முனைவர் ப.ரங்கசாமி அவர்கள் அனுப்பிய ‘நெதர்லாந்து பயண அனுபவங்கள்’ என்னும் நூல் தூதஞ்சல் மூலம் நேற்று வந்தது. பிரித்த கையோடு ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டுதான் மறுவேலை பார்த்தேன்.
Sunday 4 December 2022
மறுபடியும் பிறப்போம்
இன்று கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடந்த ‘சிந்தனை முற்றம்’ பேச்சரங்கில் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் இந்தத் தலைப்பில்தான் பேசினார்.
Friday 11 November 2022
மாற்று ஏற்பாடு
‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ என்று மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் புலம்ப வேண்டியிருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதில் நான் மட்டும் விதி விலக்கா என்ன?
Sunday 6 November 2022
முருங்கையால் வந்திடும் முன்னேற்றம்
கரூரில் நடந்த மூன்று நாள் முருங்கைத் திருவிழாவில் (International Moringa Fair 2022) சுமார் முப்பதாயிரம் பேர்கள் பங்கேற்றனர் என ஒரு நாளேடு தெரிவிக்கிறது. இது உண்மைச் செய்தி என்பதை என் இரு கண்களால் கண்டேன். ஒவ்வொரு அரங்கிலும் பெருங்கூட்டம் நிரம்பி வழிந்தது. மதியம் ஒரு மணி அளவிலும் கருத்தரங்கக் கூடத்தில் ஓர் இருக்கை கூட காலியாய் இல்லை.
Friday 21 October 2022
மனத்தில் நிற்கும் மனோ சாலமன்
இந்த முறை நாங்கள் மகிழுந்தில் சென்னைக்குச் சென்றபோது முற்றிலும் மாறுபட்ட சாலையோர விடுதி ஒன்றைக் கண்டோம். மேல்மருவத்தூருக்கு அருகில், அச்சிறுபாக்கம் என்னும் ஊரில் நான்கு வழிச் சாலையை ஒட்டி இந்த அழகிய விடுதி அமைந்துள்ளது.
Tuesday 30 August 2022
கரூர் புத்தாக்கத் திருவிழா
Wednesday 13 July 2022
வந்ததே அந்த நாள் நினைவுகள் நெஞ்சிலே
என்னிடம் படித்த மாணவர்களின் பெயர்கள் மறந்து போகின்றன. நண்பர்களின் பிறந்த நாள்கள் என் நினைவில் நிற்பதில்லை. ஆனால் பள்ளியில் என்னுடன் படித்த தோழர், தோழியரின் பெயர்கள் மட்டும் இன்றளவும் மறக்கவில்லை!
Wednesday 6 July 2022
அவன் ஒரு கள்வன்
“உன்னைத் திருமணம் செய்து கொள்ள காலம் தாழ்த்தும் உன் காதலன் ஒரு கள்வனா?” என்று வியப்புடன் கேட்டாள் தோழி.
“ஆம். அவன் கள்வனே. ஒரு நாள் மலை வீழருவி அருகில் நாங்கள் தனித்திருந்த போது என் ஐம்புல இன்பம் அனைத்தையும் ஒருசேர களவாடிக் கொண்டானே! களவில் இன்பம் நுகர்ந்தவன் கள்வன்தானே?” என்று தலைவி ஆவேசம் வந்தவள்போல் சொன்னாள்.
Tuesday 5 July 2022
பெரிதினும் பெரிது கேள்
இது பாரதியார் எழுதிய புதிய ஆத்திசூடியில் ஒரு சூடி. இச் சூடிக்குப் பொருத்தமான மாமனிதர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன். அவருக்கு மிக நெருக்கமானவரும், என் தலைமாணாக்கருள் ஒருவருமான கோவை மோகன் என்னை அழைத்துச் சென்றார்.
Tuesday 28 June 2022
அன்பர் பணி செய்யும் அன்பாலயம்
இன்று எங்கள் பெயரனின் இரண்டாம் பிறந்த நாள். அவனுடைய பெற்றோர் கனடாவில் எளிய விழாவாகக் கொண்டாடுவார்கள். இந்தியாவில் உள்ள நாங்கள் அவனுடைய பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்து செயலில் இறங்கினோம்.
Friday 3 June 2022
அது ஒரு கனாக்காலம்!
இன்று (ஜூன் 3)உலக மிதிவண்டி நாள். காலையில் இது குறித்த நினைவோடு எழுந்தேன். அதன் விளைவாக அமைந்ததே இப் பதிவு.
Tuesday 24 May 2022
கடலும் கடல் சார்ந்த கடவுளும்
கடலும் கடல் சார்ந்த இடமும் என்பது நெய்தல் நிலமாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் நெய்தல் நிலத்திற்கான கடவுளை வருணன் என்று குறிப்பிடுகிறார். ஆனால் இன்றைய நிலை வேறு. கன்னியாகுமரியில் கன்னியாகுமரியும், திருச்செந்தூரில் முருகனும், இராமேஸ்வரத்தில் ஈஸ்வரனும் வழிபடும் கடவுளராய் வலம் வருகின்றனர்.
Monday 25 April 2022
ஒளிரும் வைரங்களில் ஒன்று
கோபி வைரவிழா மேனிலைப் பள்ளியில் என்னிடம் படித்த மாணவர் இவர். 1993 முதல் 1995 வரை மேனிலைக் கல்வி பயின்றவர். பின்னாளில் பல் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று இந்நாளில் இத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறார். சென்னை சவிதா பல்மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் திறம்படப் பணியாற்றுகிறார்.
Monday 21 March 2022
கூடு திரும்பிய குருவிகள்
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் காலடி வைக்கப் போகிறோம் என்னும் குறுகுறுப்பு உணர்வுடன் கனடா நாட்டின் மான்ட்ரியல் விமான நிலையத்தில் நானும் என் துணைவியாரும் தோகா செல்லும் விமானத்துக்காகக் காத்துக் கிடந்தோம்.
Friday 11 March 2022
புத்தகத் தயாரிப்பில் புதுமை
அண்மைக் காலத்தில் புத்தகச் சந்தையில் குழந்தைகளுக்கான அழகிய நூல்கள் அணிவகுத்து வருகின்றன. பொதுவாக வழவழப்பான தாள்களில் வண்ணப் படங்கள் அச்சடிக்கப்பெற்ற புத்தகங்களைப் பார்த்திருக்கிறோம். அளவில் பெரியதாய் நீள் சதுர வடிவில் இருக்கும். எளிதில் கிழியாத தாள்கள், கெட்டி அட்டையிலான கட்டமைப்பு ஆகியவற்றுடன் இருக்கும் என்பதையும் அறிவோம்.
Wednesday 9 March 2022
என்று ஓயுமோ இந்தப் பனி மழை
கனடா நாட்டில் மழைக்காலம் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகி விட்டன. இங்கே மழைக்காலம் என்றால் மழை பெய்யாது; மாறாகப் பனிதான் பெய்யும். பனியே நம்மூர் மழைபோல் பெய்வதால் மழைக்காலம் என அழைக்கிறார்கள் போலும்!
Thursday 3 March 2022
காட்டில் நடந்த திருமணம்
உலகக் கானுயிர் நாள்(மார்ச் 3)
சிறப்புக் கவிதை
காட்டில் நடந்த திருமணம்
காட்டில்
நடந்த திருமணம்
கண்ணில் இன்னும் நிற்குதே
ஏட்டில்
எழுதிப் பார்க்கிறேன்
எழுத எழுத நீளுதே!
காட்டு
யானைக் கூட்டத்தில்
காதல் கொண்ட இரண்டுக்குக்
காட்டு
ராசா தலைமையில்
கலக்க லான திருமணம்!
பத்து
நூறு மின்மினிப்
பூச்சி தந்த ஒளியிலே
புத்தம்
புதிய ஆடையில்
பூனை ஒன்று பாடிட
பாட்டைக்
கேட்டு மயில்களும்
பைய வந்தே ஆடின!
நாட்டம்
கொண்ட நரிசில
நட்டு வாங்கம் செய்தன!
கெட்டி
மேளம் கொட்டிட
கிட்ட வந்த மான்களும்
ஒட்டித்
தாளம் போடவே
ஓடி வந்த முயல்களும்
இரட்டை
நாத சுரங்களை
இரண்டு புலிகள் ஊதிட
அரட்டை
அடித்துக் குரங்குகள்
அட்ட காசம் செய்தன!
ஓநாய்
எல்லாம் வந்தன
ஒன்று சேர்ந்து கொண்டன
கானாப்
பாட்டுப் பாடியே
கால்கள் வலிக்க ஆடின!
தாலிக்
கட்டி முடிந்ததும்
தடபுட லான பந்தியில்
வேலி
தாண்டி மந்திகள்
விரைந்து சென்று குந்தின!
மெல்ல
வந்த கரடிகள்
மேவும் வாழை இலைகளில்
நல்ல
நல்ல உணவினை
நகைத்த வாறு படைத்தன!
முப்ப
தானை வரிசையாய்
மூங்கில் செடிகள் நட்டன!
இப்ப
டித்தான் திருமணம்
இனிதே நடந்து முடிந்தது!
-கவிஞர் இனியன், கரூர்
துச்சில்:
கனடா
Tuesday 25 January 2022
இல்லறத் துறவி
இந்தப் பதிவு அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்.
அறுபது வயது
ஆனதும் இல்லறத்தில் இருந்தபடியே துறவு மேற்கொள்ள வேண்டும். முதியோர் அறுபது ஆண்டுகளில் தம்மைப் பற்றிக் கொண்டிருந்த பலவற்றை விட்டு
விலகி நின்றால் அவர்தம்
உடல் நலமும் உள்ள நலமும்
நன்றாக இருக்கும்.
முதுமையில்
எப்படி வாழ வேண்டும் என்பது குறித்துத் தொல்காப்பியர் தம் இலக்கண நூலில் பேசுகின்றார்.
எனக்குத் தமிழ்
கற்பித்த பேராசிரியர் தமிழண்ணல் மிகத் தெளிவாக அதை விளக்கினார். ‘அப்போதைக்கு இப்போதே சொல்லிவிட்டேன்’ என்று பெரியாழ்வார் பாணியில் சொன்னது இன்றும்
என் நினைவில் நிற்கிறது.
அந்தத் தொல்காப்பிய நூற்பா இது:
“காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும்
கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே''
-தொல்.பொருள் 192
கணவனும் மனைவியும் காமம் தீர்ந்த கடைசிக்கட்ட வாழ்வில் தமக்குப் பாதுகாப்பாக இருக்கும் பெற்ற பிள்ளைகளோடும், அறவழியில் வாழும் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடனும் இணக்கமாக இருந்து நல்லதை மட்டும் எண்ணிக்கொண்டு, மற்றவருக்கு நல்லதை மட்டும் சொல்லிக்கொண்டு, முடியுமாயின் நல்லவற்றைச் செய்துகொண்டு வாழ்வதே எல்லோருக்கும் வாய்க்காத முதுமைப் பருவத்தைப் பெற்றதன் பயனாகும் என்பதே இந் நூற்பாவின் பொருளாகும்.
இந்த நூற்பாவின் முதல் வரிதான் மிக முக்கியம். காமம் தீர்ந்த முதுமைப் பருவம். இளமைப் பருவம் காமத்தை விரும்பிய பருவம். முதுமையிலும் அதே காம உணர்வுடன் இருத்தல் முறையன்று. அறிவுடைய செயலும் அன்று. இங்கே காம உணர்வு என்பது ஆசை உணர்வு எனப் பொது நிலையில் கொள்ள வேண்டும்.
முதலில் பாலுணர்வைத் தூண்டக் கூடிய உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். தவிர்க்க முடியாதபோது குறைந்த அளவில் உண்ண வேண்டும்.
மசாலா நிறைந்த உணவு, உப்பும் சர்க்கரையும் கூடுதலாய் உள்ள உணவு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிகம் சூடாகவும் அதிகம் குளிர்ச்சியாகவும் எதையும் உண்ணுதல் கூடாது.
மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணல் ஆகியவற்றை மெல்ல விட்டொழித்தல் வேண்டும்.
அதே போல் பாலுணர்வும் பாலுறவும் என்பதும் தேவையில்லாதவை. இதற்கான மனப்பக்குவத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நூல்களைப் படிப்பது, இறைவழிபாட்டில் ஈடுபடுவது, எழுதுவது, சமூகப் பணிகளில் பங்கேற்பது என்று மடைமாற்றம் செய்ய வேண்டும். மன உறுதியாலும் தொடர் முயற்சியாலும் இது அனைவருக்கும் சாத்தியமாகும்.
சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொண்டாலே முதுமை இனிதாகும். சகிப்புத் தன்மை இருந்தால் சினம் தவிர்க்கப்படும். சினம் தவிர்த்தால் போதுமே; உடல் நலம் சீராக இருக்கும்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
என்பது வள்ளுவர் காட்டும் வழி. முதுமையில் எந்த ஒன்றிலிருந்து நீங்கி இருந்தாலும், அந்த ஒன்றினால் வரும் துன்பம் நம்மைத் தாக்காது என்பதே குறளின் எளிய பொருள். ‘வேண்டாமை
என்னும் விழுச்செல்வம்’ மட்டுமே முதுமையில் வேண்டப்படும் செல்வம். ‘வாயைக் கட்டுதல்
வயிற்றைக் கட்டுதல்’ என்னும் முதுமொழி முதுமைப் பருவத்துக்கு உரியது.
அடுத்ததாக முதியோருக்குக் கூடுதல் விழிப்புணர்வு தேவை. நோய் எதிர்ப்புத் தன்மை குறையும் பருவம் என்பதை ஒத்துக்கொண்டு தமது உடல் சார்ந்த செயல்பாடுகளை வயதுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்வதே அறிவுடைமை. கொரானா தீநுண்மி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இக் காலத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்வது குறித்து மும்முறை யோசிக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்காத எந்த மருந்தையும் எடுத்தல் கூடாது. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுக்காமல் இருப்பதும் சரியன்று.
நிறைவாக ஒரு கருத்து. கைபேசி, தொலைக்காட்சி ஆகியவற்றிலிருந்து இயன்றவரை ஒதுங்கியிருத்தல் வேண்டும்.
நான்கு வரியில் அமைந்த தொல்காப்பிய நூற்பா என்னை எப்படியெல்லாம் சிந்திக்கத் தூண்டுகிறது! தமிழில் வழி காட்டும் வண்டமிழ் நூல்கள்தாம் எத்தனை எத்தனை!
முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்
துச்சில்: கனடா.
Sunday 23 January 2022
இதய கீதம்
இந்தப் பாடல்களைப் படிக்கும் போதெல்லாம் என் கண்கள் கண்ணீர் சிந்தும். நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் மறைந்த தாயை எண்ணி மனம் உருகும்.
பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு துறவி தன் தாயின் சிதைக்குத் தீ மூட்டிய போது அவர் இதயத்தில் எழுந்த இதய கீதம்!
பத்து மாதங்களாய் உடம்பெல்லாம் தோன்றிய வலிகளைப் பொறுத்துக்கொண்டு, பிறந்த சின்னஞ்சிறு தளிரைக் கைகளில் வாரி எடுத்து, பொன் போன்ற மார்பில் அன்புடன் அணைத்துப் பாலமுதம் தந்த அவளை இனி எந்தப் பிறப்பில் காண முடியும்?
தவமாய்த் தவமிருந்து முந்நூறு நாள் சுமந்து, அந்தி பகலாய்ப் பார்த்துப் பார்த்து வளர்த்த அவளது சிதைக்கு தீ மூட்டுவதா?
கூடையில், தொட்டிலில், மார்பினில், தோள்களில், கட்டிலில் வைத்துத் தன் சேலை முந்தானை என்னும் சிறகினில் மூடிப் பாங்குடன் வளர்த்த தாயின் உடலுக்குத் தீ மூட்டுவதா?
தாங்க முடியாத வலியோடு பெற்றெடுத்து இரவு பகலாய்க் கைகளில் ஏந்தி பால் அமுதம் ஊட்டிய அந்தத் தாயின் உடலுக்குத் தீ மூட்டுவதா?
இனிய தேனே, அமுதே, செல்வமே, பூமானே என அழைத்து மகிழ்ந்த அவளுக்கு வாழும்போது எந்தப் பரிசையும் வழங்காத கைகளால் அவள் மாண்டபின் அவளது வாயிலே அரிசியை இடுவதா?
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச்- செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை
தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம்கிடந்து
முந்நூறு நாள்அளவும்
அந்திபக லாச்சிவனை
ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற
தாயார் தமக்கோ
எரியத் தழல்மூட்டு வேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும்
தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து- முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய
தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாம லேந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே- அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே
தீமூட்டு வேன்
அரிசியோ நான்இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்துமகி ழாமல் - உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
பட்டினத்தடிகள் இயற்றிய இந்தப் பாடல்களைப் பாட நூலில் வைத்து நம் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.
தாயின் அருமை தெரியாத ஒரு தலைமுறை மெல்ல உருவாகி வருவதை எண்ணி இந்தப் பதிவை இடுகிறேன்.
முனைவர் அ.கோவிந்தராஜூ,
துச்சில்: கனடா.
Sunday 9 January 2022
ஒன்று முதல் ஒன்பது வரை
வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
விரைவில் வெண்பா யாப்பில் அமைந்த என் கவிதை நூல் வெளிவர உள்ளது. அதிலிருந்து ஒரு துளி இங்கே.
1
ஞாலத்தைக் காத்திடும் நல்லதோர் வானம்முக்
காலத்தைக் காட்டும் கதிரவன் பூமி
குறையும் நிறையும் குளிர்நிலா யாவும்
இறைவன் படைப்பினில் ஒன்று.
(வானம் ஒன்று, கதிரவன் ஒன்று, பூமி ஒன்று, நிலா ஒன்று)
2
உழைக்க உறுதியாய் உன்கை; நடக்க
கழைபோல் வலுவுடைக் கால்கள்; விழைந்தே
இறைஉரு காண இறைமொழி கேட்க
இறைவன் படைப்பில் இரண்டு.
(கைகள் இரண்டு, கால்கள் இரண்டு, கண்கள்
இரண்டு, செவிகள்
இரண்டு)
3
முத்தமிழ் மூவேந்தர் முன்னிற்கும் முக்கனி
முத்திதரும் தேவார மூவரொடு பித்தனின்
முத்தொழில் முக்கண்கள் முச்சங்கம் முக்காலம்
அத்தனையும் முத்தமிழில் மூன்று.
(முத்தமிழ் மூன்று- இயல்,இசை,நாடகம்; முக்கனி மூன்று-
மா,பலா,வாழை; தேவாரம் பாடியோர் மூவர்- திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்; சிவனின்
முத்தொழில்- ஆக்கல், இயக்கல், அழித்தல்; சிவனின் நெற்றிக் கண்ணுடன் கண்கள் மூன்று;
பண்டைய தமிழ்ச்சங்கம் மூன்று- முதல், இடை, கடை; காலம் மூன்று-
இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்)
4
பண்டைத் தமிழர் பகுத்த நிலவகை
உண்டெனச் சொன்ன உறுதிப் பொருளொடு
சான்றோர் புகழும் சமயக் குரவர்கள்
ஊன்றி உணர்ந்திடின் நான்கு.
(நிலம் நான்கு- குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல்; உறுதிப்
பொருள் நான்கு- அறம்,பொருள்,இன்பம்,வீடு; சமயக் குரவர் நால்வர்-
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர்)
5
உளத்தால் இயங்கும் உடல்சார் புலன்கள்
அளவிலா ஆய்வின் அகம்சார் திணைகள்
எழுத்தில் தொடங்கும் இலக்கணம் எல்லாம்
பழுதிலாப் பாங்கினில் ஐந்து.
(புலன்கள் ஐந்து- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்; அகத்திணைகள் ஐந்து- குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை; இலக்கணம் ஐந்து- எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி)
6
சுவையில் உணவில் சுவைசேர் சுவைகள்
அவனிக் கழகாய் அறுபடை வீடுகள்;மா
பாரதம் போற்றிடும் பாண்டவர் இல்லொடு
பாரோர் புகழ்ந்திடும் ஆறு.
(சுவைகள் ஆறு- இனிப்பு,கார்ப்பு,கசப்பு,புளிப்பு,துவர்ப்பு,உவர்ப்பு; படை வீடுகள் ஆறு- திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர்,பழனி,சுவாமிமலை,திருத்தணி,பழமுதிர்சோலை; பாண்டவர்
அறுவர்-தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன்,
திரௌபதி)
7
வானவில் காட்டும் வனப்புறு வண்ணமும்
கானம் இசைத்திட கால்கோள் சுரங்களும்
உண்ட உணவால் உருவாகும் தாதுக்கள்
எண்ணி அறிந்திடின் ஏழு.
(வானவில் வண்ணம் ஏழு- சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை,
நீலம், கருநீலம், ஊதா;
சுரங்கள் ஏழு-ஸரிகமபதநி; தாதுக்கள் ஏழு- இரத்தம், தசை, கொழுப்பு,
எலும்பு, எலும்பு மஜ்ஜை, நிண நீர், சுக்கிலம்/சுரோணிதம்)
8
செந்தமிழ் நாடுவாழ் சித்தர்கள் கண்டவை
நந்தமிழ் காப்பியர் தந்தமெய்ப் பாடுகள்
தண்டமிழ் காட்டிடும் திக்குகள் என்பன
எண்ணித் தொகுத்திடின் எட்டு.
(அட்டமா சித்திகள் எட்டு-அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, , பிராகமியம்,
ஈசத்துவம், வசித்துவம்; மெய்ப்பாடுகள்
எட்டு- நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம்,பெருமிதம், வெகுளி, உவகை;
திக்குகள் எட்டு- கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு,
வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென் மேற்கு)
9
உடலில் அமைந்தவை ஒன்பான் துளைகள்
உடலில் அணிமணி ஒன்பது நம்மவர்
தேர்நற் சடங்கில் திகழ்நவ தானியம்
பார்த்தால் அவைஒன் பது.
(உடலில் துளைகள் ஒன்பது- கண்
2, காது 2, மூக்குத் துளைகள் 2, வாய், கருவாய், எருவாய்;
மணிகள் ஒன்பது- வைரம், மரகதம்,
நீலம், கோமேதகம், பவழம்,
மாணிக்கம், முத்து, புட்பராகம்,
வைடூரியம்; தானியம் ஒன்பது- நெல், கோதுமை, பாசிப்பயறு,
துவரை, மொச்சை, எள்,
கொள்ளு, உளுந்து, கொண்டைக்கடலை)
&&&&&&