Tuesday, 14 October 2014

ஹைக்கூ கவிதைகள்








      வெண்பா இலக்கணம், ஆசிரியப்பா இலக்கணம் படித்த எனக்கு ஹைக்கூ இலக்கணம் தெரியவில்லை. சிலரிடம் கேட்டேன். தெளிவு கிடைக்கவில்லை. பிறகு அது தொடர்பான நூல்களை- ஹைக்கூ எழுதுவது எப்படி போன்ற நூல்களைப் படித்தேன். இவைதான் நான் புரிந்து கொண்டது.

·         மூன்று வரிகள் இருக்க வேண்டும்..

·         ஒவ்வொரு வரியிலும் ஒரு சொல் முதல் நான்கு சொற்கள் இருக்க வேண்டும்.

·         முதல் இரண்டு வரிகள் இயல்பாக இருக்கும்

·         மூன்றாம் வரி நச்சென இருக்கும்., நம்மை யோசிக்க வைக்கும்

·         எதுகை மோனைகள் பற்றிக் கவலை வேண்டா. இருந்தால் நல்லது.

·         தேவைக்குக் கொஞ்சம் பிறமொழிச் சொல் வரலாம்

·         ஒரு செய்தியைச் சொல்ல ஒரு ஹைக்கூதான்- மூன்று வரிகள்

சைவ சமையல் மட்டுமே தெரிந்த ஒருவர் அசைவ சமையல் செய்ய முயற்சி செய்வதைப்போல, மரபுக் கவிதைகளை மட்டும் எழுதுகிற வழக்கமுடைய  நான் இன்று ஹைக்கூ எழுத நினைத்தேன்., எழுதினேன்.
அவற்றுள் சில உங்கள் சிந்தனைக்கு:

மடியில் தொடக்கம்
மண்ணில் அடக்கம்
மனித வாழ்வு

‘செல்’ அரிக்கும்
இளமை
திரும்பிவராது

வரதட்சணை
இது ஒரு
ஹைடெக் பிச்சை

கள்ளிப்பாலுக்குத்
தப்பித்தவள்
அமலாபால்!

அரசு அலுவலகங்களில்
ஒட்டடை மட்டுமா?
அட்டைகளும்!

போராளுமன்றம்
தவறாக எழுதியுள்ளாய்
சரியாகத்தான் எழுதியுள்ளேன் ஐயா

சிகரெட் பிடித்தால்
மரண தண்டனையா
ஆம்


மனைவி சொல்கிறாள்
இருந்தும் பயனில்லை
அடகில் நகை

பெரும் தீ விபத்து
ஊரே மணக்கிறது
ஊதுபத்திக் கிடங்கில் தீ

கல்வியை
விலை போட்டு வாங்கவா முடியும்?
வாங்க வா! முடியும்!

இரண்டு அடி வாங்கினால்தான்
திருந்துவாய் என்றால்
வள்ளுவரிடம் வாங்கு.




8 comments:

  1. Wow, short but deep. Last one is my favourite

    ReplyDelete
  2. மணக்கிறது
    மட்டன் பிரியாணி
    சைவரின் சமையல் அருமை.

    ReplyDelete
  3. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

    http://blogintamil.blogspot.in/2014/11/blog-post_23.html

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி.

    ReplyDelete
  4. இரண்டு அடி கொண்ட சோற்றோடர் அதில் உள்ளதே வாழ்க்கை பாடம் திருக்குறள்

    ReplyDelete
  5. எல்லாமே ரசித்து படித்தேன் ஐயா.

    ReplyDelete