எம்மில் தேவதை எம்மில் வாழ்கிறாள்
எம்மில் இருந்து எம்மனம் வீழ்கிறாள்
‘எம்’முன்
நின்றே ஏத்தினன் அவளை
எம்மில்
மீண்டும் எழுக என்றேன்
எம்மில்
உறையும் இறைவன் அருள்க
எம்மில் இனிமகிழ் வெங்கும் நிறைக
என மனம் ஒன்றிய நிலையில் ஒரு நிமிட
வழிபாட்டை முடித்து, மாப்பிள்ளையின் மகிழ்வுந்தில் டெல்லாஸ் ஃபோர்ட்வொர்த் விமான
நிலையத்தை நோக்கி விரைந்தோம். பெண்ணும் மாப்பிள்ளையும் கனத்த இதயத்தோடு எங்களுக்கு
விடை நல்க, நாங்கள் கொண்டு வந்திருந்த இரு பெட்டிகள் விமானக் கோழியின்
அடைமுட்டைகள் ஆக, எந்தச் சிக்கலுமின்றிப் பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைந்து,
‘வானில் பறக்கும் வெண்பறவையே, நினது வாயில் திறவாய்’ என மனம் எண்ணிட,
காத்திருப்போர் கூடத்தில் காத்திருந்தோம்.
விமானம் இருபது நிமிடம் தாமதமாகப் புறப்படும் என அறிவித்தனர். இருபது
நிமிடம் இரு நிமிடமாய்க் கழிய, மூக்கும் வாயும் முழுதாய் மறைத்து, கண்மலர்
காட்டிக் கனிவுடன் வரவேற்றாள் விமானத் தாரகை.
உரிய இடம் கண்டு, கூரையில் இருந்த கூட்டைத் திறந்து, சிறிய பெட்டியைச்
சிறைவைத்து, சாளரம் ஓரம் சாய்ந்து நான் அமர, என் துணைவி என்னருகில் அமர, அந்தச்
சின்னப் பறவை தன் சிறகை விரித்து, மேலே மேலே எழுந்து, மேகங்கள் இடையே பறந்தது.
ஒன்பது மாதங்கள் அமெரிக்க மண்ணில் நாங்கள் வாழ்ந்த துச்சில் வாழ்க்கையின்
தூய நினைவுகளில் மனம் நிலைத்தது. சரியாக மூன்று மணி நேரம் பறந்தபின், அந்த வான்
ஊர் பறவை தன் சிறகுகளை மெல்ல அசைத்துக் கனடா நாட்டின் டொரன்டோ பியர்சன் விமான
நிலையத்தில் தரையிறங்கி நிலைகொண்டது. அப்போது அங்கே காலை 11.45 மணி.
மூன்றாம் முறையாகக் கனடா நாட்டில் காலடி பதித்து, உதவியாளர் நல்கிய
உதவியால் எல்லாச் சோதனைகளையும் கடந்து ஒட்டாவா செல்லும் அடுத்த விமானத்தைப்
பிடிக்கச் சென்றோம். நாங்கள் செல்ல வேண்டிய பிற்பகல் இரண்டு மணி விமானம் ஏதோ
காரணத்தால் இயங்காமல் போக, மாலை ஐந்து மணி விமானத்துக்காகக் காத்திருந்தோம்.
பெரிய
மகள் அன்புடன் தந்த எலுமிச்சம் சோறும், உருளைக்கிழங்கு வறுவலும் அமிழ்தமாய்
இருந்தது. உண்ட களைப்பில் உட்கார்ந்த வண்ணம் என் மனைவி சற்றே உறங்க, நான் டாக்டர்
இரா.ஆனந்தகுமார் ஐ.ஏ.எஸ் என்பவர் எழுதிய ‘படிப்படியாய்ப் படி’ என்னும் நூலைப்
படிக்கத் தொடங்கினேன். நேரம் போனதே தெரியவில்லை.
கனடா
நாட்டின் தலைநகராய்த் திகழும் ஒட்டாவா நோக்கி நாங்கள் சென்ற ஏர் கனடா விமானம் மிக
வேகமாய்ப் பறந்தது. அடுத்த ஐம்பது நிமிடங்களில் விமானம் ஒட்டாவா வொய்.ஓ.டபிள்யூ
பன்னாட்டு விமான நிலையத்தில் பாங்காகத் தரையிறங்கியது. இறங்கி நாங்கள்
வெளிவாயிலுக்கு வரவும் எங்கள் பெட்டிகள் எங்களை நோக்கி கன்வேயர் பெல்ட் மூலமாக
வந்து விழவும் சரியாக இருந்தது. அலைப்பேசியை உசுப்பி வெளியில் காத்திருந்த இளைய மாப்பிள்ளையை
அழைத்தேன். எங்களை அன்புடன் வரவேற்றுத் தம் மகிழ்வுந்தில் அலுங்காமல் அழைத்துச்
சென்றார்.
அன்று மணல் வீடு கட்டி எங்களை மகிழ்வித்த சின்னப்பெண், வளர்ந்து, படித்துப்
பட்டங்கள் பெற்று, கனடா சென்று, காதலன் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும்
கைகொடுத்து, கடுமையாய் உழைத்து, காசுகள் சேர்த்து, இன்று ஒரு வளமனையைச் சொந்தமாக
வாங்கியுள்ளாள்.
அந்த அழகு மனையின் வாசலில் நின்று அகம் குளிர வரவேற்றாள் எங்கள் இளையமகள். அவள் கைகளில் தவழ்ந்த எங்கள் பேரன் எங்களைக் கண்ட மகிழ்ச்சியில் பெருங்கூச்சலிட்டு, உடல்மொழி காட்டி அவன் தந்த உற்சாக வரவேற்பை வருணிக்கத் தக்க சொல்கள் தமிழில் இல்லை.
கனடாவில் குளிர்காலம் தன் ஆதிக்கத்தைத் தொடங்கும் தருணத்தில் நாங்கள்
வந்துள்ளோம்.
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.