கனடாவில் என் மகளுடன் இருக்கும் காலத்தில் அவ்வப்போது நூலகத்திற்குச் செல்வதுண்டு. இம்மை உலகத்திலிருந்து மறுமை உலகத்திற்குச் சென்ற மனமகிழ்ச்சியில் அரைநாள் பொழுதை அங்கே கழிப்பதுண்டு.
Monday, 9 June 2025
Sunday, 8 June 2025
கனடாவிலும் வந்தது காற்று மாசு
காதில் வந்து விழுந்த செய்தியை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.
சுவாசிக்கும் மூச்சுக்காற்று கெட்டு விட்டதால் மூச்சு முட்டுகிறதாம். அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாள்கள் விடுமுறையாம். காற்றில் கலந்த தூசு மற்றும் உலோகத் துகள்களைப் போக்க ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளிக்க முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ளாராம். இந்தக் கூத்தெல்லாம் எங்கே நடந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? வேறு எங்கே? நம் நாட்டின் தலைநகரான புது தில்லியில்தான்!
Monday, 2 June 2025
விளாங்காய்ச் சீருக்கான விளக்கம்
செப்பலோசை அமையாமல் பலரும் வெண்பா எழுதுவதைக் கண்டு மனம் நொந்து ஒரு வெண்பா எழுதினார் மதிப்பிற்குரிய பெரியவர் ஈழம் தமிழப்பனார். அவர் எழுதிய வெண்பா இது:
செப்-பலோ-சை வாராமல் செந்தமிழில் வெண்பாக்கள்/
எப்பவுமே கூறும் இயல்பினரைத் –தப்பாமல்/
வெல்லம்போல் அள்ளுசுவை வெண்பா இலக்கண
எல்லையை மீறின் எதிர்.
உங்கள் வெண்பாவில் ‘செப்பலோசை’ என்னும் விளாங்காய்ச் சீர் செப்பலோசையைக் கெடுத்துவிடுமே ஐயா என்று ஒரு பதிவிட்டேன். அதற்கு மறு(ப்பு) மொழியாக விளாங்காய்ச் சீர் வெண்பாவில் வரலாம் எனக் கூறியதோடு நில்லாமல், விளாங்காய்ச் சீர் வருவதைத் தவிர்க்கலாம் என்போரின் கூற்று ஏற்கத்தக்கது அன்று என்பதைத் தெளிவாகவும் உறுதியாகவும் கூறினார். (கேட்க
அதைத் தொடர்ந்து, விளங்காய்ச் சீருக்கான விளக்கத்தைத் தேடினேன்.
வெண்பாவுக்குரிய செப்பலோசையைக் கெடுக்கும் என்பதால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்,
சைவத் திருமுறைகள்முதலான மரபிலக்கியங்களில் விளாங்காய்ச் சீர் பயன்படுத்தப்படவில்லை
என்பதைச் சான்றுகளுடன் நிறுவுகிறார் தமிழறிஞரும் நாசா விஞ்ஞானியுமான முனைவர் நா.கணேசன்
அவர்கள். (பார்க்க: https://nganesan.blogspot.com/2018/07/venpavil-vilaangaayc-ciir-vilakku.html)
பாரதியாரும் கண்ணதாசனும் கூட விளாங்காய்ச்சீரைத்
தொடவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
திருக்குறளில் பல இடங்களில் இந்த விளங்காய்ச்
சீர் இடம் பெற்றுள்ளதாய்ச் சிலர் சுட்டிக்காட்டுவதை அவர் தகுந்த சான்றுகளுடன் மறுக்கின்றார்.
அதற்கு ஆதாரமாகப் பணிநிறைவு பெற்ற
பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் இராம.சுப்பிரமணியம்
எழுதியுள்ள ‘கணக்கு வழக்கு இலக்கிய இலக்கணம்’ என்னும் நூலிலிருந்து உரிய சான்றுகளை
ஒன்றன்பின் ஒன்றாக அடுக்குகின்றார்.
அளபெடை, விகாரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம்
போன்ற இலக்கண நுட்பங்களை அறியாதவர்களே வள்ளுவர் விளாங்காய்ச்சீர்களைக் கையாண்டுள்ளதாகப் பிறழ உணர்கின்றனர் எனப் பேராசிரியர்
இராம.சுப்பிரமணியம் தம் நூலில் நிறுவுகிறார் என்பதை முனைவர் நா.கணேசன் அவர்கள் நிரல்பட
விளக்கிக் கூறுகின்றார். செப்பலோசையைக் கெடுக்கும் விளாங்காய்ச் சீரை வள்ளுவர் தம்
நூலில் ஓர் இடத்தில் கூட கையாளவில்லை என்பதை முதன்முதலில் எடுத்துக் கூறியதால், பேராசிரியர்
இராம.சுப்பிரமணியம் அவர்களுக்கு,
விளாங்காய்ச்சீர் பாவில் விளங்காச்சீ ரென்று
விளக்கிய
வித்தகரைப் போற்று
என ஒரு குறள்வெண்பாவை இயற்றி அவருக்குப் புகழ்மாலையாகச் சூட்டுகிறார்.
மேலும் குமரகுருதாச பாம்பன் சுவாமிகளின்
விதப்ப விதியை ஆதாரமாக மதுரன் தமிழவேள் என்பார் சுட்டிக் காட்டுவதை முன் வைக்கின்றார்.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் “ திருவலங்கற்றிரட்டு” என்னும் நூலில் உள்ள விதப்ப
விதியின் உரையாவது: “
வெண்பாவுக்குரிய
காய்ச்சீர் நான்கனுள் இடையில் குறில்நெடில் இணைந்த நிரையசை உடையனவும், இரண்டு மாஞ்சீராகப் பிரிக்கத் தகுவனுமான ‘தம்பிரானே’ என்பது போன்ற கூவிளங்காயும் , ‘சருவசாரம்’
என்பது போன்ற
கருவிளங்காயும் வெண்பாவில் வரவொண்ணா எனவும், வரின் ஓசைநயங் கெடும் எனவும் அறிக.
கலிப்பாவில் வரும் காய்ச்சீர்கட்கும் இந்நியாயங் கொள்க.” (பார்க்க: https://madhuramoli.com)
நம் காலத்துத் தமிழறிஞர்களின் தமிழறிஞர்களின்
கருத்துகளையும் தொகுத்துத் தருகிறார்.
சைவத்
திருமுறைகளில் உள்ள வெண்பாக்களில் எங்கும்
விளாங்காய்ச்
சீர் இல்லை. (விதிவிலக்காக நமச்சிவாய என்னும் சொல் திருவாசகத்தில்) க. வச்சிரவேல் முதலியார் குறிப்பிடுகிறார்.
(பார்க்க http://shaivam.org/siddhanta/san-thiruvarutpayan-vachiravelmudaliyar-urai.pdf
வெண்பாவில்
‘வீடுபேற்றை’, ‘கேட்கமாட்டேன்’ என்பன போன்ற விளாங்காய்ச்
சீர் வரலாமா? என்ற கேள்விக்கு வெண்பாவில் என்ன எவ்வகைப் பாவிலும் விளாங்காய்ச் சீர் வருவது விரும்பத்
தக்கதன்று. அது எந்தப் பாவில் அமைந்தாலும் அப் பாவுக்குரிய
ஓசையைக் கெடுத்துவிடும் என்று விடையிறுக்கின்றார் ’இலக்கணச் சுடர்’ இரா. திருமுருகன்.
கி.வா.ஜ. வின் கவி
பாடலாம் வாங்க புத்தகத்தின் கேள்வி பதில் பகுதியில் பக்கம் 228 கேள்வி 15:
வேல்பற்றும்
கைக்குகேசன் மேதகைய தாமரைப்பூங்/
கால்பற்றிக்
காண்போம் கதி.
கேள்வி: இந்த
வெண்பாவில் பிழை ஏதேனும் உண்டா?
பதில்: ’முதலடியில் இரண்டாம் சீரில் இடையில்
விளாஞ்சீர் வந்தமையால் ஓசை நீள்கிறது. குகே என்று குறில் நெடிலாகிய நிரை வந்தது.
அப்படி வருவது தவறு’
சாமிநாதன்
என்னும் இறைவன் பெயரை ஒரு சீராய் வைத்தால் ஓசை கெடும் எனக்
கருதிய வள்ளலார் அதைத் தவிர்க்க வேண்டி வகையுளியாய் அமைத்துள்ளதைச் சான்றாகத்
தருகிறார்.
நின்னிலையை என்னருளால் நீயுணர்ந்து நின்றடங்கின்/
என்னிலையை
அந்நிலையே எய்துதிகாண் – முன்னிலையை/
இற்குருவி
னாட்டாதே என்றுரைத்தான் ஏரகம்வாழ்/
சற்குருஎன் சாமிநா தன்.
திருமுருக கிருபானந்த வாரியாரின் வெண்பா ஒன்றையும் சான்றாகத் தருகிறார்.
கண்ணதாசன் என்னும் விளாங்காய்ச் சீர் அமையாத வெண்பா:
எத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளைச்
சித்திக்கும் வித்தாகச் செப்புகின்றான் -- சத்திக்கும்
கண்ணதா சக்கவிஞன் கந்தன்
கருணையினால்
வண்ணமுடன் வாழி மகிழ்ந்து..
‘விளாங்காய்ச்சீர் வருவதாகச் சொல்லப்படும் ஒன்றிரண்டு வெண்பாவும், ஆய்ந்து பார்த்தால் ஏட்டில் இருந்து
அச்சுக்குப் போந்தபோது ஏற்பட்ட கவனப் பிசகான பிழைகள் என்பது என் புரிதல்” என்று சந்தவசந்தத்தில் கூறியுள்ளதாக ஒரு கட்டுரையில்
எழுதுகிறார் முனைவர் நா.கணேசன்.
சந்த வசந்தம்
குழுமத்தைத் சேர்ந்த பெரும்புலவர்கள் இலந்தை சு.இராமசாமி, முனைவர் சு.பசுபதி,
திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி, கவிஞர் குருநாதன் இரமணி, திரு.இராமகிருஷ்ணன், திரு,ஹரிகிருஷ்ணன்
போன்றோரும் விளாங்காய்ச்சீர் வெண்பாவில் இடம்பெறலாகாது என்று உறுதியாகக் கூறுவதை
யானே அறிவேன்.
அகரம்
அமுதா என்பவர் விளாங்காய் ஆகாது என விரிவாகப் பேசுகிறார். (பார்க்க: http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2009/03/38.html)
அதே சமயம் பாவலர் மா.வரதராசன், கனடா சி.ஜெயபாரதன்,
ஈழம் தமிழப்பனார் ஆகியோர் விளாங்காய்ச்சீரை ஒதுக்கத் தேவையில்லை என்கின்றனர்.
வள்ளுவரே இச் சீரைத்
தவிர்க்கும்போது அதை நாம் வெண்பாவில் பயன்படுத்தி, வள்ளுவரைவிட நுண்மாண் நுழைபுலம்
மிக்கவராய்க் காட்டிக் கொள்வதை என் சிறுமதி ஏற்கமறுக்கிறது.
எது எப்படியோ, விளாங்காய்ச் சீர் குறித்து இந்தப்
பதிவை இடுவதற்கு வழிவகுத்த முனைவர் ஈழம் தமிழப்பனார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
உரித்தாகுக.
முனைவர் அ. கோவிந்தராஜூ,
துச்சில்: கனடா
Saturday, 29 March 2025
சுந்தர் பிச்சையும் கரப்பான் பூச்சியும்
ஓர் உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண்ணின் தோள் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். அந்தக் கரப்பான் பூச்சியை அவர் மீதிருந்து விலக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்தப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
Thursday, 20 March 2025
காதுக்கு எட்டிய கரூர் சதி வழக்குச் செய்தி
‘கரூர் சதி வழக்கு’ என்பது இன்றுவரை பலருக்கும் புரியாத ஒரு புதிராகவே இருந்தது. இப்போது கரூரில் வாழும் மிக மூத்த குடிமக்களுக்கும் இது குறித்து ஒன்றும் தெரியவில்லை.
Monday, 24 February 2025
நான் பார்த்த நல்ல படம்
Wednesday, 12 February 2025
ஹூப்பனோபனோ
Sunday, 9 February 2025
தரமில்லாத தமிழ் சினிமா
கும்பகோணம் கல்லூரியில் படிக்கும் இருபது வயது மாணவி தவறான வழியில் உறவு வைத்துக் கருவைச் சுமந்தாள். அவள் கழிவறைக்குள் சென்று தானே பிரசவம் பார்த்து, பிறந்த குழந்தையை அங்கிருந்த குப்பைத் தொட்டியில் வீசிவிட்டாள். மயங்கி விழுந்த அப் பெண்ணை, விடுதிக் காப்பாளர் மருத்துவமனையில் சேர்த்தார், தாயும் சேயும் நலம் என நம்மூர் நாளேடு செய்தி வெளியிட்டு நாலு காசு பார்த்தது.
Sunday, 26 January 2025
வணங்கத்தக்க வைரப்பன்
எழுபத்து ஆறாவது குடியரசு நாளான இன்று தியாகி வைரப்பன் என்பவரை வலைப்பூ வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இக் கட்டுரையை எழுதுகின்றேன்.
Friday, 17 January 2025
நல்ல நோக்கத்திற்காக ஒரு நடைப்பயணம்
ஈரோட்டில் ‘முனை’ என்னும் தன்னார்வத் தொண்டு அமைப்பு பாராட்டுக்குரிய வகையில் செயல்படுகின்றது. இதில் கல்லூரியில் படிக்கின்ற, படித்து முடித்த இளைஞர்களும் இளம்பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.
Wednesday, 8 January 2025
இடையும் விடையும்
அன்னம் போன்ற நடையுடையாள்
அழகாய்த்
தெருவில் நடந்துசென்றாள்!
என்னே வியப்பு! பார்த்தவர்கள்
இல்லை அவளுக்(கு) இடையென்றார்!
இன்னும் சிலபேர் உண்டென்றார்
இறைவன்
போன்ற இடையுடையாள்
முன்னும் பின்னும் பார்த்தபடி
முறுவல்
காட்டி நடைபயின்றாள்!
இடையே அவளுக்(கு) இல்லையெனின்
இயங்க அவளால்
முடியாதே!
நடையே அழகாய் உள்ளதென்றால்
நங்கைக்
கிடையும் இருப்பதனால்!
இடையில் புகுந்த ஒருசிலர்தாம்
இல்லை என்றார்
இறையிருப்பை!
விடையாய்ச் சொல்வேன் வியனுலகில்
விளங்கும் இறைவன் உளனென்றே!
குறிப்பு: கருத்து கம்பனுடையது; கவிதை என்னுடையது.
கம்பன் கவி இது:
பல்லியல் நெறியில் பார்க்கும்
பரம்பொருள் என்ன யார்க்கும்
இல்லையுண் டென்ன நின்ற
இடையினுக் கிடுக்கண் செய்தார்.
பரம்பொருளான இறைவன் உண்டு எனவும் இல்லை எனவும் மக்கள் பலவாறு பேசுவது போல, சீதைக்கு இடை உண்டு எனவும் இல்லை எனவும் தோழியர் பலவாறு பேசி, இறுதியில் இடை உண்டு எனக் கண்டு, அந்த இடைக்கு ஒட்டியாணம் போன்ற அழகிய அணிகலன்களைத் தோழியர் அணிவிக்க, அவற்றின் எடையைத் தாங்காமல் இடை வருந்தியது என்பது கம்பனின் கற்பனை!
இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஒரு
கவிநயத்திற்காகப் பெண்களுக்கு இடை இல்லை எனச் சொல்லலாமே தவிர, உண்மையில் இடை இல்லாமல் பெண்கள் இயங்க முடியாது. அதுபோல, ஒரு பேச்சுக்காகக் கடவுள் இல்லை எனச் சொல்லலாமே தவிர, உண்மையில் கடவுள் இல்லாமல் இந்த உலகம் இயங்காது.
கம்பன் புகழ் வாழ்க! அவன் கவி வாழ்க.
முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.