இந்த
ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற குடியரசுதின அணிவகுப்புத் தொடர்பான செய்திகளை
நாளேடுகளில் பார்த்தேன். வலிமையான பாரதம் என்பதைப் பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு
இருந்ததாக நாளேடுகள் எழுதின. மகிழ்ச்சிதான். ஆனால் வலிமையான பாரதம் என்பதன் சிறு
கூறுதான் இது.
வலிமையான
பாரதம் என்பதை இன்னொரு கோணத்தில் சிந்திக்க வேண்டும். மனித வளமே நாட்டின் உண்மையான
வலிமையாக இருக்க முடியும்.
கையூட்டுக் கலாச்சாரம் மிகுந்துள்ள பாரதம் எப்படி வலிமையான பாரதமாக இருக்க
முடியும்? கல்வித்துறையில் எனக்குத் தெரிந்த உயர் அதிகாரி, ஒரு ஆசிரியரின்
விருதுக்கான விண்ணப்பத்தை அடுத்த நிலைக்குப் பரிந்துரை செய்ய இலஞ்சம் கேட்டார். அந்த
ஆசிரியரையும் எனக்குத் தெரியும். விருதுக்குத் தகுதியானவர்தான். ஆனால் இலஞ்சம்
கொடுக்காவிட்டால் பரிந்துரை செய்யமாட்டாரே என்ற அச்சத்தில் ரூபய் பத்தாயிரம்
கொடுத்தார். கொடுத்ததையும் பெற்றுக்கொண்டு, “இலை போட்டீர், சோறு போடவில்லையே” என்று கூறினாராம் அந்த அதிகாரி. நல்லவேளை, இவர் அரசு ஊழியராக இருந்தார். இவர்
ராணுவ அதிகாரியாக இருந்திருந்தால் பக்கத்து நாட்டிடம் பணம் வாங்கிக்கொண்டு
இராணுவம் தொடர்பான முக்கிய தகவல்களை கசிய விட்டிருப்பார். இப்போது சொல்லுங்கள்.
வலிமை என்பது வெறும் தளவாடங்களிலும் உட்கட்டமைப்புகளிலுமா உள்ளது?
பணியில் ஆர்வமில்லாத ஓர் ஆசிரியர், “ஏதோ பிழைப்பு நடக்கிறது” என்று கூறுகிறார்.
இன்னொருவர் சொல்கிறார்:
“வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சனையில்லாமல் வேலைசெய்கிறேன்”.
மூன்றாமவர், “என்னிடம் படிக்கும்
மாணவர்கள் நாட்டைத்தாங்கும் எதிர்காலத் தூண்கள். அவர்களை உருவாக்கும் உன்னத
பணிசெய்கிறேன்” என்றார்.
இப்போது சொல்லுங்கள். வெறும் பள்ளிக்கட்டடங்களால்
பாரதம் வலிமை பெறுமா? மேலே மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட ஆசிரியரைப் போன்றவர்களால்
மட்டுமே வலிமையான பாரதம் உருவாகும். அரசுத் துறையில், பொதுத்துறையில், தனியார்
துறையில் பணியாற்றுவோரின் ஒட்டு மொத்தப் பணிக்கலாச்சாரம் உயர்ந்தால்தான் பாரதம்
வலிமை பெறும்.
தேர்தல் சமயங்களில் வாக்குகளை விற்றுக் கோழிக்கறி வாங்கி சமைத்துச்
சாப்பிட்டால், சாப்பிட்டவரின் உடல் வேண்டுமானால் வலிமை பெறும். ஆனால் பாரதத்தின்
வலிமை குறையும்.
நம்பி தேர்ந்தெடுத்து நாம் அனுப்பிய மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள்
பலரும் ஊழலில் திளைக்கின்றனர். அரசியல் வாதிகள் சிலரின் பேராசையால் கருங்கல்
மலைகள் காணாமல் போய்விட்டன. ஆறுகளின் வயிற்றைக் கிழித்து வறளச் செய்துவிட்டனர்.
இப்படிப்பட்டவர்களால் பாரதத்தாய் வலிவும் பொலிவும் இழந்து உலக அரங்கில்
தலைகுனிந்து நிற்கிறாள்.
எனவே, இலஞ்சம்
என்னும் பணக்கலாச்சாரம் ஒழிந்து பணிக்கலாச்சாரம் ஓங்கினால்தான் பாரதம் வலிமை
பெறும். ஊழலை ஒதுக்கித் தள்ளிவிட்டு
உழைப்பில் ஆர்வம்காட்டும் ஆள்வோர் ஆளப்படுவோர்- இவர்களால் மட்டுமே பாரதம் வலிமை
பெறும். இத்தகையோர் ஊர்தோறும் அணிவகுத்து, நெஞ்சை நிமிர்த்திப் பீடுநடை போட்டால் வலிமையான
பாரதத்தைப் பறைசாற்றும் அணிவகுப்பு என்று எழுதலாம்.