விலங்குகளைக் கூண்டில் அடைப்பது,
அவற்றை சர்க்கஸ் காட்சிகளில் பயன்படுத்துவது, குறிப்பாக யானைகளைக் கோவில் வாசலில்
கட்டிப்போடுவது, கிளி ஜோஸ்யம் என்னும் கிறுக்குத்தனமான செயலுக்காக கிளிகளை அடைத்து
வதைப்பது, கொத்தித் திரியும் அந்தக் கோழிகளைக் கொட்டகையில் அடைத்து வளர்ப்பது,
அண்டிப் பிழைக்கும் நல்ல ஆடுகளில் ஓர் ஆடு
பார்க்க மற்றோர் ஆட்டை அறுத்துக் கறிக்கடையில் தொங்கவிடுவது போன்ற எதுவும்
எனக்குப் பிடிப்பதில்லை.
மனிதர்கள் கூண்டுக்குள் கிடக்க,
அவர்களை விலங்குகள் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்தால் எப்படியிருக்கும் என
கற்பனை செய்து பார்ப்பேன். இப்படி
கரூரில் உட்கார்ந்துகொண்டு கற்பனை செய்து பார்த்தது கனடாவில் நிஜமாகி விட்டது.
நாங்கள் வசிக்கும் பேஷோர்
பகுதியிலிருந்து காரில் தொண்ணூறு கிலோமீட்டர்
பயணித்தால் மாண்ட்டிபெலோ என்ற ஊர் வரும். இது அண்டை மாநிலமான கிபெக்கில் உள்ளது.
வழியில்
ஆர்ப்பரித்து ஓடும் ஒட்டாவா நதி குறுக்கிட்டது. நண்பர் ஆற்றின் படகுத் துறைக்கு
காரை விட்டார். எட்டு கார்களை ஒரே சமயத்தில் ஏற்றிக்கொண்டு ஆற்றைக் கடக்கும்
வல்லமையுடைய இயந்திரப் படகு எங்களுக்காக காத்து நின்றது. படகின் தளமும் சாலையும்
சமதளத்தில் இருந்தன. எங்கள் கார் படகினுள் சென்று நின்றதும் படகு புறப்பட்டது.
அடுத்த மூன்றாவது நிமிடத்தில் படகு அக்கரையைச் சேர காரை உயிர்ப்பித்துப் பயணத்தைத்
தொடர்ந்தோம். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்னும் நம்மூர் பழமொழியின்
பொருத்தப்பாட்டை எண்ணி வியந்தேன்.
விலங்குகளும் பறவைகளும் வசிக்கும் அந்த ஊரில் மருந்துக்குக் கூட
மனிதர்கள் வசிக்கும் வீடுகள் இல்லை. அங்கே வசித்த காட்டுவாசிகள் சிலரும் பீசா
தின்னும் ஆசையில் ஒட்டாவா பக்கம் ஓடி வந்து விட்டனர்.
பார்க் ஒமேகா என்பது இந்தக் கானுயிர்
காட்சியகத்தின் பெயராகும்.
இரண்டாயிரத்து இருநூறு ஏக்கர் பரப்பில் அங்கும் இங்கும் அடர் காடுகள்,
அழகான குன்றுகள், அமுதமாய் நீர் நிறைந்து விலங்குகள் நீந்தி மகிழும் ஏரிகள்,
சுட்டிக் குழந்தையின் உற்சாகம்போல் பொங்கிப் பெருகும் ஊற்றுகள், சுனைகள் -
அவற்றின்மீது பீவர் என்னும் விலங்குகள் கட்டிய அணைகள், இவற்றுக்கிடையே வளைந்தும்
நெளிந்தும் செல்லும் மண்சாலைகள் – பார்க்கப் பார்க்க மனம் கள்வெறி கொண்டு
களிப்படைகிறது!
நுழைவாயிலில் அமைந்துள்ள
வரவேற்பகத்தில் உரிய கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டோம். நான்
ஒரு முதிய இளைஞர் என்பதால் எனக்குக் கட்டணச் சலுகை இருந்தது.
“குறிப்பிட்ட ஒரே ஒரு இடம் தவிர மற்ற
இடங்களில் காரைவிட்டு யாரும் கீழே இறங்கக் கூடாது. விலங்குகளுக்கு கேரட் கிழங்கைத்
தவிர வேறு எதையும் கொடுக்கக்கூடாது” என்று எச்சரித்து எங்களை உள்ளே செல்ல
அனுமதித்தார்கள்.
காட்டினுள் பதினைந்து கிலோமீட்டர்
தூர கார் பயணம் தொடங்கியது. குறுங்குன்றுகளின்
மீது ஏறியும் இறங்கியும் செல்ல வேண்டும். வழித்தட வரைபடத்தை மடியில் வைத்து அவ்வப்போது
பார்த்துக்கொண்டு மிகக் கவனமாக காரை ஓட்டினார் நண்பர் குமரேசன். இருபது இடங்களில்
நின்று கண்ணில் பட்ட கானுயிர்களைக் கண்டோம். வெளியில் எங்கு பார்த்தாலும்
விலங்குகள் நாங்கள் மட்டும் கார் என்னும் கூண்டுக்குள்ளே!
என் கண்களில் பட்ட விலங்குகள்
பறவைகள் அனைத்தையும் படம் பிடித்தேன். காரை நிறுத்தினால் போதும். மான், காட்டெருமை,
காட்டுப் பன்றி போன்ற விலங்குகளில் ஏதேனும் ஒன்று காருக்குள் தன் கழுத்தை நீட்டும்.
மக்கள் அதன் முகத்தை அன்புடன் தடவிக்கொடுத்து, தின்பதற்குக் கேரட், சோளம் போன்றவற்றைத்
தருவார்கள்.
காட்டுக் குதிரைகளும், வரை ஆடுகளும்
நம்மை உரசிக் கொண்டு நிற்கும். துள்ளித் தாவும் முயல்களைத் தொட்டுத் தூக்கலாம். பல
மான்கள் மனிதரைக்கண்டு பயப்படாமல் திரிந்தன; சில படுத்துக் கிடந்தன. குழந்தைகள்
எவ்வித பயமும் இல்லாமல் அவற்றைத் தொட்டு வருடி அதனுடன் பேசி மகிழ்ந்தனர். நானும்
ஒரு மானும் சேர்ந்து நின்று படம் எடுத்துக்கொண்டோம்.
திரும்பி வரும் வழியில் வெள்ளை
நிற ஓநாய்கள் கூட்டமாகத் திரிந்ததைப்
பார்த்தோம். அது மான் இல்லை- மான் போன்ற பெரிய விலங்கு ஒன்று கண்களை மூடித் தூங்கி
வழிந்ததைக் கண்டோம்.
ஒரு குளத்தில் மான்கள் நீந்தி
நீராடிக் கொண்டிருந்த காட்சி இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. இன்னொரு
குளக்கரையில் வெண்மயில் உள்ளிட்ட விதவிதமான பறவைகள் மேய்ந்து கொண்டிருந்தன.
எங்கள் காரை முந்திக்கொண்டு ஒரு
திறந்த வாகனத்தில் சென்ற ஓர் இளம்பெண் ஒரு கையால் ஒய்யாரமாக வாகனத்தை ஓட்டியபடி
மற்றொரு கையால் சோளம். பருப்பு போன்றவற்றை பாதையின் இருபுறமும் அள்ளி வீசிக்கொண்டே
விரைந்தாள். பறவைகள் அவற்றைக் கொத்தித் தின்றன. அவள் அந்தக் கானுயிர் காப்பகத்தின்
பணிப்பெண்ணாம்; வன தேவதையைப்போல வனப்புடன் இருந்தாள்!
இந்த வனப் பயணத்தின் போது நாங்கள்
பார்த்த கானுயிர்களின் பட்டியல் இது. Alpine ibex,
Arctic fox, Arctic wolf, Beaver, Bison, Black bear, Boar, Canadian goose,
Coyote, Duck, Elk, Fallow deer, Great blue heron, Grey wolf, Moose, Musk, ox,
Rabbit, Red deer, Red fox, Rein deer, White fox, White pea cock, Wild horse,
Wild turkey. இவற்றில் மிகப்பல கனடா
நாட்டுக் கானுயிர்கள் என்பதால் தமிழ்ப் பெயர்கள் தெரியவில்லை.
கிபெக் மாநிலத்தில் ஆங்கில மொழியின்
பயன்பாடு இம்மியளவும் கிடையாது. வழிகாட்டி விவரம், நுழைவுச் சீட்டு, கானுயிர்க்
கையேடு உட்பட எல்லாம் ஃபிரெஞ்ச் மொழியில்தான் உள்ளது. நல்ல வேளையாக பணியாளர்கள்
நாம் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்கிறார்கள்.
காட்டில் கழித்த அந்த ஐந்து மணிநேரம்
என் வாழ்க்கையின் பொன்னான தருணங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. மனைவி, மகள் என
குடும்பமாகச் சென்று பார்த்தது எனது நல்லூழ்ப் பயன் என எண்ணுகிறேன்.
கனடா நாட்டிற்கு வரும் அன்பர்கள்
கண்டிப்பாக இங்கே செல்ல வேண்டும். இங்கே நடுக்காட்டில் ஒரு தங்கும் விடுதியும்
உள்ளது. வன விலங்குகள் வசிப்பிடத்தில் ஓர் இரவு தங்கிப் பெறும் அனுபவம் புதுமையாக
இருக்கும். கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் இரவில் தங்கி நடு நிசியில்
முழுநிலவில் வன நடைப்பயிற்சி செய்த அனுபவம் எனக்கு உண்டு.
காக்கை குருவிகள் எங்கள் ஜாதி - நீள்
காடும் மலையும் எங்கள் கூட்டம்
என்று உணர்ந்துதான் பாடியிருக்கிறான் பாரதி என்பதை இப் பயணத்தின் நிறைவில்
உணர்ந்தேன்.
இதுபோன்ற திறந்தவெளி கானுயிர்க்
காட்சியகங்கள்(Vivariums) நம் நாட்டிலே
இருக்கின்றனவா என்பது குறித்து இப் பதிவைப் படிக்கும் வாசகர்கள் தெரிவிக்க வேண்டும்.
........................................................
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.