Wednesday 27 December 2017

குப்பைக் கீரை என்றாலும் அப்படிச் சுவைப்பது எதனாலே?

   நினைத்தால் வெளியில் சென்று உணவகங்களில் சாப்பிடுவது என்பது இங்கே(அமெரிக்காவில்) இயல்பான நிகழ்வாகும். நம் நாட்டிலும் இந்தக் கலாச்சாரம் பரவிவிட்டது. கணவன் மனைவி இருவரும் அலுவலகம்  செல்லும் குடும்பங்களில் கேட்கவே வேண்டாம்; வாரத்தில் பாதி நாள்கள் வீட்டில் சமையல் இருக்காது.

Monday 25 December 2017

அமெரிக்க மண்ணில் அருமையான விழா

 இந்தப் பதிவை எழுதும்போது கடிகாரம் பன்னிரண்டு மணி எனச் சொல்கிறது. குழந்தை இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் தூரத்து மாதா கோவிலில் மணி ஓசை நீண்டு ஒலிக்கிறது. அங்கே நடுநிசி பூசை நடக்கும் என எண்ணுகிறேன்.

  இங்கே குளிர் வாட்டி எடுக்கிறது. சில நாள்களில் வெப்பம் சுழியனுக்கும் கீழே செல்கிறது. தெர்மல் பேண்ட், ஷூ, பனியன், டி-ஷர்ட், ஜாக்கெட், இரண்டு கண்களையும் மூக்கையும் தவிர்த்த ஒரு தலைக் கவசம், கையுறைகள்- அதாவது ஒரு விண்வெளி வீரனைப்போல உடையணிந்துகொண்டு, நெஞ்சில் துணிவிருந்தால் கொஞ்ச நேரம் வெளியில் போய் வரலாம். இப்படியாக  ஒரு நகர் வலம் வந்தேன்.







   இங்கே கிறிஸ்துமஸ் விழாக் கோலம் ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கிவிட்டது. ஒரு தெருவில் இருபது வீடுகள் இருந்தால் இருபது வீடுகளிலும் கண்ணைக் கவரும் அலங்கார மின்விளக்குகளை ஒளிரவிட்டுள்ளனர். கிறுஸ்துமஸ் மரத்தை வீட்டுக் கூடத்தில் வைத்து அழகுபடுத்தியுள்ளனர். வீட்டு முகப்பில் வண்ண வண்ண பலூன்களை காற்றடைத்து வைத்திருப்பது விழாவுக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கிறது.  அவர்கள் மரங்களையும் விட்டுவைக்கவில்லை. இலையுதிர்த்த மரங்கள் அலங்கார மின்னொளியில் வெகு அழகு! இதிலே சிறப்பு என்னவென்றால், அந்த  வீடுகள் சிலவற்றில் இந்துக்களும் வசிக்கிறார்கள்! ஆக கிறிஸ்துமஸ் விழாவை ஒரு தேசிய விழாவாகக் கருதி அனைத்து மதத்தினரும் சேர்ந்து கொண்டாடுகிறார்கள்.

   சிலர் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமணிந்து குழந்தைகளுக்குப் பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்குகிறார்கள். அதாவது பிஞ்சு உள்ளங்களில் அன்பை விதைக்கிறார்கள்.

  நல்லூழ் இல்லாதவர்களுக்காக உள்ளம் உருகி இறைவனை மன்றாடி வேண்டிக்கொள்ளும் ஒப்பற்ற கோட்பாட்டினை உடையது கிறித்துவமதம். அணுவளவும் வன்முறையப் போதிக்காத மதம். எதிரிகளை ஆயுதபலத்தாலும் வீழ்த்தலாம்; அவர் நாணும்படியாக நன்னயம் செய்தும் வீழ்த்தலாம். இரண்டாவது வகையைப் போதித்தவர் இயேசு நாதர்.

  போதிய விழிப்புணர்வு இல்லாததால் நாம் நம் மதங்களைத் தவறாகக் கையாள்கிறோம்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

Sunday 17 December 2017

முயன்று பெற்றாள் முனைவர் பட்டம்

  நம் சென்னைப் பல்கலைக்கழகம் போல ஊரின் பெயரால் அமைந்தது இந்த டெக்சாஸ் பல்கலைக்கழகம். இங்கு நூற்றி இருபது நாடுகளைச் சேர்ந்த நாற்பத்தெட்டாயிரம் மாணவ மாணவியர் கல்வி கற்கின்றார்கள். நூற்றுக் கணக்கில் பணியாற்றும் உலகப் புகழ் வாய்ந்த பேராசிரியர்கள் நூற்றி எண்பது பாடப்பிரிவுகளில் பாடம் நடத்துகிறார்கள்.  இங்கே என் பெரிய மகள்   திருமணம் முடிந்த கையோடு உயிரியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பில் சேர்ந்தாள்.

   ஓயாத உளியடிக்குக்குப்பின் ஒரு கல் சிலையாவதுபோல், நெருப்பில் உருகி உருகி கட்டித்தங்கம் கண்கவரும் நகை ஆவதுபோல் கடுமையான ஆய்வுநெறிமுறைகளுக்கு உட்பட்டு, பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரவு பகலாக ஆய்வுகளை நடத்தி, ஆய்ந்து கண்ட முடிவுகள் உலகத் தரத்துக்கு ஒப்பானது எனத் தேர்வுக்குழுவினர் ஒருமனதாய் ஒப்புதல் தர முனைவர் பட்டப்பேற்றுக்கு ஆளானாள்.


   நேற்று(15.12.2017) மாலை ஏழு மணி அளவில் பல்கலைக்கழக வளாக முதன்மை அரங்கில் கோலாகலமாய் நடைபெற்ற வண்ணமிகு பட்டமேற்பு விழாவில் அவள் அரிமா என அணிநடை பயின்று, “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்த வந்தோம்” என்னும் பெருமித உணர்வுடன் மேடையேறி முனைவர் பட்டம் பெற்றாள். 

Wednesday 13 December 2017

பாரதியார் குறிப்பிடும் பெரிய கடவுள் யார்?

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினபொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியில் பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்

   மேற்காண் பாடலில் பெரிய கடவுள் என்று பாரதியார் எந்தக் கடவுளைக் குறிப்பிடுகிறார்?

   ஓர் இணையமகன் ஓர் இணைய குழுமத்தில் தொடுத்த வினா இது. பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவு செய்தார்கள். ஒருவர் பெரிய கடவுள் என பாரதியார் குறிப்பிடுவது சிவபெருமான் என்று ஒரே போடாகப் போட்டார்.

   இது ஏதோ பாரதியாரை வம்புக்கு இழுப்பதுபோல் தோன்றினாலும் ஒருவகையில் என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு.

    இலக்கணிகள் அடைமொழியை இனமுள்ள அடைமொழி, இனமில்லா அடைமொழி என வகைப்படுத்துவர். அந்தப் பகுதிக்கு நாம் இப்போது செல்ல வேண்டியதில்லை.

   பொதுவாக, ஒரு பெயர்ச் சொல்லின் முன் இரு வகைகளில் அடைமொழிகளைச் சேர்க்கலாம். அவற்றை அளவுசார் அடைமொழி(quantitative attributive), தரம்சார் அடைமொழி(qualitative attributive) எனலாம்.

பெருமை என்னும் அடைமொழியை இவ்விரு வகைகளில் பயன்படுத்தலாம்.

பெருமரம்=பெருமை+மரம் பெரிய மரம். இங்கே பெருமை என்பது அளவுசார் அடைமொழி.

பெருங்கடவுள்=பெருமை+கடவுள் பெரிய கடவுள். இங்கே பெருமை என்பது தரம்சார் அடைமொழி.

  எனவே பாரதியார் குறிப்பிடும் பெரிய கடவுள் என்னும் தொடரில் பெரிய என்பது தரம்சார் அடைமொழியாகும். அதை அளவுசார் அடைமொழியாக நினைத்துக்கொண்டு பெரிய கடவுள், சிறிய கடவுள் எனப் பாகுபடுத்தல் சிறப்பாகாது. பெருமை சால் கடவுள் என்னும் பொருளில் பெரிய கடவுள் எனக் குறிப்பிட்டிருப்பார் என்பது என் கருத்து.

   இன்னொரு கோணத்திலும் இதுகுறித்துச் சிந்திக்கலாம். பெண் விடுதலையை எந்தக் கடவுளும் வந்து காத்திட முடியாது. ஆடவர், பெண்டிர், அரசினர் என அனைவரும் காத்திட வேண்டும். அவ்வாறு பெண் விடுதலையைக் காத்திட உறுதியேற்று முன்வந்து செயல்படும் ஒவ்வொருவரையும் பெரிய கடவுள் எனக் குறிப்பிடுகிறார் என்றும் கொள்ளலாம். சிலசமயம், “ நீ கடவுளாய் வந்து என்னைக் காப்பாற்றினாய். நன்றி” என்று உதவிய மனிதரிடம் உர்ச்சி பொங்கச் சொல்கிறோமே!

  மேலும்  அப் பாட்டில் மோனைத் தொடைக்கு முதலிடம் கொடுத்துள்ளார் என்பதைக் கூர்ந்து பார்த்தால் தெரியும். மோனைத் தொடை இல்லாமல் எந்த இரு அடிகளையும் அவர் அமைக்கவில்லை. அந்த வகையில் பெண் விடுதலை- பெரிய கடவுள் என அடி மோனைக்காக அமைத்த அழகானத் தொடரே அது என்று இந்த விவாதத்தை விட்டுவிடலாம் என்பது என் கருத்து.

உங்கள் கருத்து என்னவோ?
.........................................
முனைவர் அ. கோவிந்தராஜூ,
அமெரிக்காவிலிருந்து.




Thursday 7 December 2017

மூழ்கி எடுத்தேன் முத்து

   இந்தியாவில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் என்னிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு “அமெரிக்காவில் உங்களுக்கு எப்படி பொழுது போகிறது?” என்று ஆவலுடன் கேட்டார்.

  மற்றவரைப் பற்றித் தெரிந்து கொள்வதில்தான் மனிதர்களுக்கு எத்தனை ஆர்வம்! இது ஓர் அடிப்படை இயல்பூக்கம். நாம் கதைகளை விரும்பிக் கேட்பதற்கும் படிப்பதற்கும், ஏன், இருக்கையின் நுனியில் அமர்ந்து திரைப்படம் பார்ப்பதற்கும் கூட காரணம் இதுதான்.

Friday 1 December 2017

எய்ட்ஸ் நோய் இல்லா என்னாடு

இன்று(டிசம்பர் 1) உலக எய்ட்ஸ் தினம்.


 எய்ட்ஸ் நோயை வருமுன் காக்கலாம்., வந்தபின் பார்க்கலாம் என்பது மூடத்தனம். பத்து ஆண்டுகளுக்கு முன் நான் இயற்றிய பத்து குறட்பாக்கள் எனது கோப்பில் தேடியபோது கிடைத்தன. விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவற்றை உரையுடன் பதிவு செய்கிறேன்.

      ஏமக்குறை நோய்(AIDS)
பலவகை  நோய்கள்  தொகுப்பென  மாறி
உடலை  அழிக்கும்  உணர்.
பொருள்:பலவகை நோய்த் தொகுப்பே எய்ட்ஸ். அது உடலை
                     உருக்குலைத்து    சாவில் கொண்டுவிடும்

ஏமக் குறைநோய்க் கிரையாகிச் சாதற்குக்
காமத்  தொடர்பைக்  கருது.
பொருள்: இல்லற இன்பத்தைத் தருவது கணவன் மனைவி
         உறவு(Marital relationship) மட்டுமே.  பிற உறவுகள்(Extra marital                                     relationship)  எய்ட்ஸ் நோயைத் தரும்.

ஆய்வு  செயப்பட்(ட) அருங்குருதி  ஏற்றார்க்கு
மாய்தல்  இலஏப்பி  னால்.
பொருள்: சோதனை செய்யப்பட்ட இரத்தம் பெறுவதால் எய்ட்சால் வரும்
         இறப்பினைத்    தவிர்க்கலாம்.

ஒருவர் பயன்படுத்தும் ஊசியை மற்றோர்
ஒருவுதல்  ஒன்றே  ஒழுங்கு.
பொருள்: மருந்தை உடலினுள் செலுத்த  ஒருவர் பயன்படுத்திய ஊசியை                      மற்றவர்   பயன்படுத்தக் கூடாது.

எள்ளிடும்  ஏமக்  குறைநோய்  உடையவர்
பிள்ளைப் பெறாஅமை  நன்று.
பொருள்: எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டவர் கருவுறுதலைத் தவிர்ப்பது                            நன்று.


ஏமக் குறைநோய்  எளிதில்  பெறக்கூடும்
காம  உறவைக்  களை
பொருள்:பரத்தன் பரத்தையர் தொடர்பால்(prostitution) எய்ட்ஸ் வந்து
        தொலைக்கும். அத் தகைய தகாத உறவு வேண்டாமே.

மணத்தல்  நிகழ்வு  நிறைவுறா  முன்னர்
புணர்தல்  தவறே  உணர்
பொருள்: திருமணத்திற்கு முன் உடற்புணர்ச்சி(pre-marital sex) அறவே               கூடாது.,  அது தவறு.

கணவன்  மனைவி  கருதிடின்  கற்பைக்
கனவிலும் இல்லையாம் ஏப்பு
பொருள்: கணவனும் மனைவியும் நேர்மையாக(nuptial loyalty) கற்புடன்
         வாழ்ந்தால் கனவில் கூட எய்ட்ஸ் நோய் வராது.

கொல்லுமோர் ஏமக் குறைநோய ராயினும்
ஒல்லும்  வகையெல்லாம்  ஓம்பு.
பொருள்: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரை நல்லமுறையில் காத்துப்
         பராமரிக்க வேண்டும்., ஒதுக்கிவைத்தல் பாவம்.

முப்பாலை ஏற்று முழுதாகக் கற்றார்க்கு
எப்போதும்  ஏப்பிலை  காண்.
பொருள்: திருக்குறளைக் கற்று அதன்படி வாழ்வார்க்கு எப்போதும் எய்ட்ஸ்
         நோய் வராது.

அருஞ்சொற்பொருள்:
ஏமக்குறை நோய், ஏப்பு = எய்ட்ஸ் நோய்
ஒருவுக                = நீக்குக
......................................................................................................................................
முனைவர் அ. கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
1.12.2017