இந்தப் பதிவு அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்.
அறுபது வயது
ஆனதும் இல்லறத்தில் இருந்தபடியே துறவு மேற்கொள்ள வேண்டும். முதியோர் அறுபது ஆண்டுகளில் தம்மைப் பற்றிக் கொண்டிருந்த பலவற்றை விட்டு
விலகி நின்றால் அவர்தம்
உடல் நலமும் உள்ள நலமும்
நன்றாக இருக்கும்.
முதுமையில்
எப்படி வாழ வேண்டும் என்பது குறித்துத் தொல்காப்பியர் தம் இலக்கண நூலில் பேசுகின்றார்.
எனக்குத் தமிழ்
கற்பித்த பேராசிரியர் தமிழண்ணல் மிகத் தெளிவாக அதை விளக்கினார். ‘அப்போதைக்கு இப்போதே சொல்லிவிட்டேன்’ என்று பெரியாழ்வார் பாணியில் சொன்னது இன்றும்
என் நினைவில் நிற்கிறது.
அந்தத் தொல்காப்பிய நூற்பா இது:
“காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும்
கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே''
-தொல்.பொருள் 192
கணவனும் மனைவியும் காமம் தீர்ந்த கடைசிக்கட்ட வாழ்வில் தமக்குப் பாதுகாப்பாக இருக்கும் பெற்ற பிள்ளைகளோடும், அறவழியில் வாழும் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடனும் இணக்கமாக இருந்து நல்லதை மட்டும் எண்ணிக்கொண்டு, மற்றவருக்கு நல்லதை மட்டும் சொல்லிக்கொண்டு, முடியுமாயின் நல்லவற்றைச் செய்துகொண்டு வாழ்வதே எல்லோருக்கும் வாய்க்காத முதுமைப் பருவத்தைப் பெற்றதன் பயனாகும் என்பதே இந் நூற்பாவின் பொருளாகும்.
இந்த நூற்பாவின் முதல் வரிதான் மிக முக்கியம். காமம் தீர்ந்த முதுமைப் பருவம். இளமைப் பருவம் காமத்தை விரும்பிய பருவம். முதுமையிலும் அதே காம உணர்வுடன் இருத்தல் முறையன்று. அறிவுடைய செயலும் அன்று. இங்கே காம உணர்வு என்பது ஆசை உணர்வு எனப் பொது நிலையில் கொள்ள வேண்டும்.
முதலில் பாலுணர்வைத் தூண்டக் கூடிய உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். தவிர்க்க முடியாதபோது குறைந்த அளவில் உண்ண வேண்டும்.
மசாலா நிறைந்த உணவு, உப்பும் சர்க்கரையும் கூடுதலாய் உள்ள உணவு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிகம் சூடாகவும் அதிகம் குளிர்ச்சியாகவும் எதையும் உண்ணுதல் கூடாது.
மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணல் ஆகியவற்றை மெல்ல விட்டொழித்தல் வேண்டும்.
அதே போல் பாலுணர்வும் பாலுறவும் என்பதும் தேவையில்லாதவை. இதற்கான மனப்பக்குவத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நூல்களைப் படிப்பது, இறைவழிபாட்டில் ஈடுபடுவது, எழுதுவது, சமூகப் பணிகளில் பங்கேற்பது என்று மடைமாற்றம் செய்ய வேண்டும். மன உறுதியாலும் தொடர் முயற்சியாலும் இது அனைவருக்கும் சாத்தியமாகும்.
சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொண்டாலே முதுமை இனிதாகும். சகிப்புத் தன்மை இருந்தால் சினம் தவிர்க்கப்படும். சினம் தவிர்த்தால் போதுமே; உடல் நலம் சீராக இருக்கும்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
என்பது வள்ளுவர் காட்டும் வழி. முதுமையில் எந்த ஒன்றிலிருந்து நீங்கி இருந்தாலும், அந்த ஒன்றினால் வரும் துன்பம் நம்மைத் தாக்காது என்பதே குறளின் எளிய பொருள். ‘வேண்டாமை
என்னும் விழுச்செல்வம்’ மட்டுமே முதுமையில் வேண்டப்படும் செல்வம். ‘வாயைக் கட்டுதல்
வயிற்றைக் கட்டுதல்’ என்னும் முதுமொழி முதுமைப் பருவத்துக்கு உரியது.
அடுத்ததாக முதியோருக்குக் கூடுதல் விழிப்புணர்வு தேவை. நோய் எதிர்ப்புத் தன்மை குறையும் பருவம் என்பதை ஒத்துக்கொண்டு தமது உடல் சார்ந்த செயல்பாடுகளை வயதுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்வதே அறிவுடைமை. கொரானா தீநுண்மி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இக் காலத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்வது குறித்து மும்முறை யோசிக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்காத எந்த மருந்தையும் எடுத்தல் கூடாது. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுக்காமல் இருப்பதும் சரியன்று.
நிறைவாக ஒரு கருத்து. கைபேசி, தொலைக்காட்சி ஆகியவற்றிலிருந்து இயன்றவரை ஒதுங்கியிருத்தல் வேண்டும்.
நான்கு வரியில் அமைந்த தொல்காப்பிய நூற்பா என்னை எப்படியெல்லாம் சிந்திக்கத் தூண்டுகிறது! தமிழில் வழி காட்டும் வண்டமிழ் நூல்கள்தாம் எத்தனை எத்தனை!
முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்
துச்சில்: கனடா.