குலோத்துங்கன் என்னும் அணையா விளக்கு இன்று அணைந்துவிட்டது. கரூரை மனத்தில்
நினைத்தால் உடனிகழ்வாக அறிஞர் வா.செ.கு அவர்களைப் பற்றிய நினைவும் எழும்.
குலோத்துங்கன் என்னும் புனைபெயர் கொண்ட வா.செ.கு. அவர்கள் கரூரை அடுத்த
வாங்கலாம்பாளையத்தைச் சேர்ந்தவர்.
கரூர் நகர்மன்றப் பள்ளியில் தமிழ்
வழியில் படித்தவர். அவர் தமிழிலும்
ஆங்கிலத்திலும் நிகரற்ற புலமை பெற்று, பின்னாளில் உலகப் பேரறிஞர்களுள் ஒருவராகத்
திகழ்ந்தார்.
மரபுக் கவிதை உலகில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி உலா வந்தவர். சங்கப்
புலவர்க்கு இணையாகப் பா புனையும் வல்லமை உடையவர்.
பதச் சோறாக நான்கு வரிகள்:
இயலும் என்பவர்க் கெதுவும் அரிதல
எழுந்து நிற்பவர்க் கிமயம் தடையல
முயலும் மானிடன் முடிவு காணுவன்
முன்னர் தோற்பினும் பின்னர் வெல்லுவன்.
“குலோத்துங்கனின்
கவிதைகள் எளிமை, தெளிவு, செறிவு, இனிமை, ஆழம்,அழகு, நடைப்பொலிவு ஆகியவற்றைக்கொண்டு
செவிநுகர் கனிகளாக உள்ளன.” என்று டாக்டர் கா.மீ. கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை
என்பதை குலோத்துங்கன் கவிதைகளைப் படித்தோர் உணர்வர்.
கவிதைக் கலையில் கரைகண்ட வா.செ.கு அவர்கள் கட்டுரை எழுதுவதில்
திருவள்ளுவருக்கு நிகரானவர். அவருடைய கட்டுரையில் ஒரு சொல்லை எடுக்கவும் முடியாது;
மாற்றவும் முடியாது. வரும் கட்டுரைகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப்
பதிப்பிக்கும் தினமணி வா.செ.கு கட்டுரைகளை வாரந்தோறும் நடுப்பக்கத்தில்
வெளியிட்டதே அவர்தம் எழுதும் திறனுக்குச் சான்றாகும்.
தமிழ் செவ்வியல் மொழியாக அறிவிக்கக் காரணமாயிருந்தவர்களில் வா.செ.கு. அவர்கள்
முக்கியமானவர் என்பது சிலருக்கே தெரியும். தமிழுக்கு உள்ள செவ்வியல் மொழிக்கான
தகுதிப்பாடுகளை சான்றாதாரங்களுடன் நிறுவியவரே அவர்தான்.
தமிழை இணையத் தமிழ் என்னும் அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்ல
வழிவகுத்தவரும் வா.செ.கு அவர்கள்தான்.
வள்ளுவத்தில் ஆழங்காற்பட்டவர் வா.செ.கு என்பது அவர் எழுதிய வாழும் வள்ளுவம்
என்னும் நூலைப் படித்தோருக்கு மட்டுமே தெரியும். The Immortal Kural என்று அவர் எழுதிய ஆங்கில நூல் குறளின் பெருமையை உலகுக்கே வெளிச்சம் போட்டுக்
காட்டியது. அந்த நூலை எழுத்தெண்ணிப் படித்தவன் என்ற முறையில் இதை நான் உறுதியாகக்
கூறமுடியும்.
வா.செ.கு. அவர்களை நான் பதினேழு ஆண்டுகளாக அறிவேன்.
நான் முன்னர்த் தலைமையாசிரியராகப் பணியாற்றிய கோபி வைரவிழா மேனிலைப் பள்ளியின்
நூற்றாண்டு விழா 1998இல் நடந்தபோது அவரை முக்கிய விருந்தினராக அழைத்து வந்தேன்.
அதற்குப் பிறகு சென்னை செல்லும்போதெல்லம் நான் அவரைச் சந்திப்பதை வழக்கமாகக்
கொண்டிருந்தேன். 2004 முதல் கரூரில் நடக்கும் வா.செ.கு அறக்கட்டளை நிகழ்த்தும்
மாணவர்களுக்கானப் பாராட்டு விழாவில் பங்கேற்று டி.என்.பி.எல். பள்ளி முதல்வர் என்ற
முறையில் அவரிடமிருந்து பரிசும் பாராட்டும் பெற்றதை இன்று கண்ணீர் மல்க நினைத்துப்
பார்க்கிறேன்.
அவர் வாழ்த்தொப்பம் இட்டுத் தந்த அவருடைய
நூல்களை என் இல்ல நூலகத்தில் வைத்துப் பொன்னேபோல் போற்றிவருகிறேன்.
கரூரின் இலக்கிய அடையாளமாகத் திகழும்
வா.செ.கு அவர்களுடைய புகழ் திருக்குறள் போல் இந்த உலகில் என்றும் நிலைத்து
நிற்கும்.