Tuesday 29 May 2018

இதுவரை சாப்பிடாத இட்லி இது

 இதுவரை பல நூல்களுக்கு நூல் மதிப்புரை எழுதியுள்ளேன். பல திரைப் படங்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளேன். ஆனால் முதல் முறையாக என் மனைவி தயாரித்த புதுமையான  புதுவகையான இட்லிக்கு விமர்சனம் ஒன்றை எழுதுகிறேன்.

Monday 21 May 2018

அவசியமா ஆடம்பர திருமணங்கள்?


   கடந்த இரு பத்தாண்டுகளில் ஆடம்பர திருமணங்கள் அதிகரித்து வந்துள்ளன. இந்த வகைத் திருமணங்களால், திருமண வீட்டாரின் செல்வச் செழிப்பைப் பறைசாற்றும் பயனைத்தவிர வேறு எந்தப் பயனும் இல்லை என்பதே எனது கருத்தாகும்.

Sunday 13 May 2018

தேடினும் கிடைக்காத தேன் சிட்டு

   கனடாவிலும் அமெரிக்காவிலும் பறவைகளுக்குப் பஞ்சமில்லை. தோளில் கேமராவை மாட்டிக்கொண்டு காலையில் புறப்பட்டால் நடைப்பயிற்சி முடியும்போது பத்துவகையான பறவைகளைப் படம் பிடித்து வருவேன். ஆனால் நான் வசிக்கும் கரூரில், காந்திகிராமம் பகுதியில் பறவைகள் அதிகம் இல்லை. நான் சிறுவனாக இருந்தபோது மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பறவைகள் ஆங்கில எழுத்தான V வடிவத்தில் பறப்பதைப் பார்த்திருக்கிறேன். இதை ஆங்கிலத்தில் skein என்னும் சொல்லால் குறிப்பிடுவர். இப்போதெல்லாம் இத்தகு காட்சியைப் பார்க்க முடிவதில்லை.






    அதேசமயம் என் வீட்டுக்கு விதவிதமான பறவை விருந்தாளிகள் வருகின்றன. வீட்டை ஒட்டியுள்ள இரண்டாயிரம் சதுர அடி  நிலத்தில் நிறைய மரங்களை நட்டு வளர்த்துள்ளேன். தென்னை, தேக்கு, கொய்யா, அகத்தி, புங்கை, முருங்கை, சப்போட்டா, வேம்பு, நெல்லி, வாழை, மாதுளை என பல்வகை மரங்களும் பாங்குற வளர்ந்துள்ளதால், பறவைகளுக்குக் கொண்டாட்டமாக உள்ளது. கூடு கட்டி, குஞ்சு பொறித்துக் கொஞ்சி மகிழ்கின்றன. மேலும் பெரிய தட்டுகளில் தூய குடிநீரை தினமும் நிரப்பி வைக்கின்றேன். அதைக் குடிப்பதற்கும், அதில் குளித்துக் கும்மாளம் போடுவதற்கும் அதிக எண்ணிக்கையில் வண்ணப் பறவைகள் வந்த வண்ணம் உள்ளன.

   அண்மையில் தேன் சிட்டு என்னும் குறுங்குருவிகள் அடிக்கடி வந்து செல்கின்றன. சிட்டுக் குருவியைவிட சிறியது இது. நீண்ட சற்றே வளைந்த அலகை உடையது. ஊசி முனை போன்ற கூரிய அலகால் பூவில் இருக்கும் குண்டூசி தலை அளவு தேனை ஒரு நொடியில் உறிஞ்சி எடுக்கும் திறமை உடையது இக் குட்டிச் சிட்டுகள். நாளும் காலையில் மட்டும் அதுவும்  ஏழு மணிக்கு முன்னதாக வந்து விடுகின்றன. மாலை நேரத்தில் வந்தால் பூக்கள் வாடி இதழ்கள் மூடிக்கொள்ளும் என்பதைச் சரியாக அறிந்து வைத்திருக்கின்றன.

  தொங்கும் பூக்களில் இந்தத் தேன் சிட்டு தலை கீழாய்த் தொங்கியபடி தேனைக் குடிக்கும் காட்சியைப் பார்க்கும்போது வியப்பு இமயத்தைத் தொடுகிறது. கண் இமைக்கும் நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட பூக்களில் தாவித் தாவி அமர்வதால் படம் எடுப்பதற்குப் படாத பாடு பட்டேன். நான் படம் எடுப்பதை அது  பார்த்துவிட்டால் அடுத்த நொடியில் பறந்தோடிவிடும்.

   தேனை எடுக்கும் அந்த நொடியில் ஒரு மகத்தான செயலை அந்தச் சின்னச் சிட்டு சிறப்பாக நடத்தி முடித்து விடுகிறது. ஆம், தான் நுகர்ந்த ஒரு துளி தேனுக்கு நன்றி செலுத்தும் வகையில், ஆண் பூக்களில் உள்ள மகரந்தப் பொடியை பெண் பூக்களின் மீது வைத்து விடுகின்றன. அதன் விளைவாக மலர்களுக்கும் மசக்கை உண்டாகி, மகசூல் மட்டிலா அளவில் அமைகிறது.


    ஐந்தறிவுள்ள இந்தச் சிட்டுக்கு உள்ள சுறுசுறுப்பும் முயற்சியும் ஆறறிவுள்ள மனிதனுக்கு இல்லை என்பதே என் கணிப்பாகும்.

Thursday 3 May 2018

மக்காத குப்பையும் என் மனைவியின் மகத்தான தீர்வும்

   நம் நாட்டில் திடக் கழிவுகள் பிரச்சனை என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாகவே உள்ளது. அழகு நகரங்கள் பட்டியலில் உள்ள திருச்சி மாநகரிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இது தொடர்பாக ஒரு குறும்படம் தயாரித்து வெளியிட்டும் கூட போதிய விழிப்புணர்வு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.