Wednesday 30 October 2019

மனத்தைப் பிசைந்த மரண வணிகம்


    நம் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணறு சார்ந்த விபத்துகள் சர்வ சாதாரணம் என்பதை ஒரு திரைப்படத்தில் காட்டியிருந்தது என் நினைவுக்கு வருகிறது. காண்க.

   ஆழ்துளைக் கிணறு தொடர்பான நீதிமன்ற வழிகாட்டுதல்கள் தெளிவாக இருந்தும் அவற்றைச் செயல்படுத்தாத  ஆட்சிப்பணி அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் ஒரு குழந்தை பலியாகியுள்ளது. இப்போதும் வருமுன் காப்பதற்கான வழிகளை நாம் ஆராயவில்லை. சமூகப் பொறுப்பில்லாத குடிமக்கள் மிகுதியாய் வாழும் நம் நாட்டில் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

     சிறுவன் சுஜித் வில்சன் மீட்புப் பணிகளும் அவனது மரணமும் வணிகச் சரக்காக மாறிய கொடுமை இன்னும்  என் நெஞ்சில் வலியைத் தருகிறது. ஊடகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு நடுக்காட்டுப்பட்டி சோகத்தை நம் நடு வீட்டில் தவணை முறையில் சேர்த்து, ஒரு கட்டத்தில் எல்லோரையும் தொலைக்காட்சிப் பெட்டிமுன் பழியாய்க் கிடக்கும்படிச் செய்தன. சோக நிகழ்வுக்கிடையில் குதியாட்டம் போடும் விளம்பரங்களைக் காட்டி தம் வருமானத்துக்கு வழி தேடிக்கொண்டன. மக்களை முட்டாள்களாக்கி உணர்வு நிலையில் நான்கு நாள்கள் வைத்துக் கொண்ட நம்மூர் காட்சி ஊடகங்களை எந்த வகையில் சேர்ப்பது?

       தூத்துக்குடி திரேஸ்புரத்தில், ஒட்டு மொத்தக் குடும்பமும் தொலைக்காட்சியில் மீட்புப் பணிகளைப் பார்த்துக்கொண்டிருக்க இரண்டு வயது பெண்குழந்தை குளியலறையிலிருந்த பெரிய வாளி நீரில் மூழ்கி இறந்ததை யாரும் கவனிக்கவில்லை என்ற செய்தி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாய் அமைந்தது.


    சுஜித் வில்சனின் மீட்புப் பணிகளைச் சாக்காக வைத்து அரசியல்வாதிகளும் நடிகர்களும் சுய விளம்பரம் தேடிக்கொண்ட அவலமும் அரங்கேறியுள்ளது. விளம்பரம் தேட இதுவா நேரம்?

    மீட்புப் பணிகளில் ஏற்பட்ட குளறுபடிகள் நமக்கும் திட்டமிடலுக்கும் வெகுதூரம் என்பதைப் பறைசாற்றின. குழந்தை மூச்சு விடுகிறதா என்பது பற்றி கடைசிவரையில்  யாரும் மூச்சுவிடவில்லை.  துளை போடும் காட்சிகளை மட்டும் காட்டி மக்களைப் பைத்தியக்காரர்களாக ஆக்கிவிட்டார்கள். நான்காவது நாளில் துர்நாற்றம் வந்தது என்றால் முதல்நாளே அக்குழந்தை இறந்திருக்க வேண்டும். என்பது சராசரி மனிதருக்கும் புரியும். ஆனால் ஆட்சிப்பணி அதிகாரிகளுக்குத் தெரியவில்லையே. ஆங்கிலத்தில் Operation success but patient died என்று ஒரு சொலவடை உண்டு. சுஜித் விஷயத்தில் அது மெய்யாகிவிட்டது.
   
    தாய் கமலா மேரி மகனின் ஈமச் சடங்கின்போது  சுதந்திரமாகப் புலம்பி அழக்கூட முடியாமல் வீடியோ கேமிராக்காரர்கள் சூழ்ந்து நின்றது கொடுமையிலும் கொடுமை. கூடியிருந்த பொதுமக்கள் தம் மொபைல்களில் படம்பிடித்தவாறு நின்றது மேலும் எரிச்சல் ஊட்டியது. தனிப்பட்ட ஒரு சோக நிகழ்வை இப்படிப் பொதுவெளியில் மணிக்கணக்கில் போடுவது எனக்குச் சரியாகப் படவில்லை.
    
       
     கூட்டிக் கழித்துப் பார்த்தால் மரண வணிகம் அமோகமாக நடந்து முடிந்துள்ளது.

குறிப்பு: வாசகர்கள் இது தொடர்பாகப் படிக்க வேண்டிய ஒரு பதிவு என் மாணவர் வா. மணிகண்டன் எழுதியுள்ள குழிகள் என்னும் தலைப்பில் அமைந்தது.
Thursday 24 October 2019

முயற்சியால் கிடைத்த முனைவர் பட்டம்


   டாக்டர்  பட்டங்களில் மூன்று வகை உண்டு.
   முதல் வகை: ஒரு முழுநேர அல்லது பகுதிநேர ஆய்வு மாணவர் ஒரு  குறிப்பிட்ட தலைப்பில் ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்து உருவாக்கிய ஆய்வேட்டை மூன்று புறத் தேர்வர்கள் மதிப்பீடு செய்து, பொது வாய்மொழித்தேர்வு நடத்திப் பல்கலைக்கழகத்தால் அளிக்கப்படும் டாக்டர் பட்டம்.

Monday 14 October 2019

இணையற்ற இணையப் பயிற்சி முகாம்


   புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கம் நடத்திய இரண்டு நாள் இணையப் பயிற்சி முகாம் இரண்டு மணி நேரத்தில் முடிந்தது போல் தோன்றியது. ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவர்(?) திரு.நா.முத்துநிலவன் ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்காமல் பயிற்சி வகுப்பைக் கட்டுக்கோப்புடன் நடத்திய பாங்கு பாராட்டுக்குரியது. அமைப்பில்லாத அமைப்பைக்கொண்டு இந்தப் போடு போடுகிறார். ஆனால் அமைப்புச் சார்ந்த பல அமைப்புகள், வங்கிக் கணக்கில் பல இலட்சங்கள் இருந்தும் செயல்படாமல் இருப்பதையும், அப்படியே செய்தாலும் ஒரு சடங்காகச் செய்வதையும் பாக்கிறோம். தூங்கி வழியும் அமைப்புகளைத் தூசிதட்டிச் செயல்பட வைக்க இவர்கள் ஒரு பயிற்சி முகாமை நடத்தினால் நன்றாக இருக்கும்.

Monday 7 October 2019

பெரியாருக்குப் பெருமை சேர்ப்போம்


    பெரியாரின் கோட்பாடுகளில் பல எனக்குப் பிடிக்கும்; சில பிடிக்காது. பெண்ணடிமையைப் போக்க பெரும்பாடு பட்டவர், மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தோரை விழிப்புணர்வு கொள்ளச் செய்தவர் என்ற முறையில் அவரைப் புகழ்ந்து மேடைகளில் பேசுவது எனது வழக்கமும் கூட.