Saturday 11 December 2021

பாரதியார் பிறந்தநாள் சிறப்புக் கவிதை

     வேடிக்கை மனிதரைப் போல்

           (அகவல் பா) 

தேடிச் சென்று, “தேன்தமிழ் பாரதி,

வேடிக்கை மனிதர் யார்யார்?”  என்றேன்.

விவரம் அறிய விருப்பொடு நின்றேன்

அவரே அதனை அழகாய்ச் சொன்னார்:

 

தினமும் தேடித் தின்பதை எண்ணி

மனத்தில் எண்ணி மகிழும் மக்கள்;

சிறப்பிலாக் கதைகள் சிற்சில பேசிப்

பிறப்பின் பயனைப் பேசா மாந்தர்;

தானும் கெட்டு வனமும் அழித்த

கானுறை குரங்கின் கதையைப் போல   

மனமிக வருந்தி மற்றவர் வாட

தினமொரு திட்டம் தீட்டும் மாந்தர்;       

திருந்தா திருந்து தின்றதைத் தின்று

பொருந்தா வாழ்வைப் போக்கில் வாழ்ந்து

வயதும் ஆகி வண்ணமும் குறைந்து

துயரப் பட்டுத் துன்பம் பெருகி

எமனுக் கொருநாள் இரையாய் மாறி          

அமரர் ஆகும் அறிவிலா மாக்கள்;

கொத்தித் திரியும் கோழியை ஒருநாள்

கத்தியைக் கொண்டு கழுத்தை யறுப்போர்;

அண்டிப் பிழைக்கும் ஆட்டையும் கூட  

ண்டியாய் ஆக்கி ஊன்வளர்ப் போர்கள்;

பாதியில் நச்சுப் பாம்பென நுழைந்த       

சாதியின் பெருமை சாற்றும் மனிதர்;

சாமப் போதிலும் திரியும் பேய்போல்

காம நுகர்வில் கருத்துடை யோர்கள்;        

நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும்

கொஞ்சமும் இல்லா கோதுடை மாந்தர்;  

கெஞ்சிக் கேட்டும் கிடைக்கா திருப்பின்

வஞ்சனை சொல்லும் வாய்ச்சொல் வீரர்;

தப்பும் தவறும் தம்நாவி லேற             

செப்பித் திரியும் செருக்குடை மாந்தர்; 

மேவிய தீங்கு மேலும் நடக்க              

ஆவி பெரிதென அடங்கிக் கிடப்போர்;

சொந்தச் சோதரர் துயருறக் கண்டும்

சிந்தை யிரங்காச் சிறுமதி யாளர்;                   

சிப்பாய் கண்டால் சிறுநீர் கழித்துத்

துப்பாக்கி பார்த்தால் தொடைமிக நடுங்கி    

கப்சிப் என்று கைவாய் மூட

எப்போதும் குனியும் எழுத்தறி வில்லார்;

கயவர் வழியில் கண்ணிலாக் குழந்தை    

வியப்பொடு சென்று விழுவதைப் போல

பொய்யை நம்பிப் பொறியில் சிக்கும்       

மெய்யறி வில்லா மக்கள் கூட்டம்;

விரியும் பட்டியல் விரிக்கின்என்றார்

விழிநீர் பெருக விடைபெற் றேனே.  

        

-கவிஞர் இனியன், கரூர்

துச்சில்: கனடா.

 

 

 

Thursday 9 December 2021

இருந்தாலும் இறந்தவர்களே

    வள்ளுவர் பலருடைய வாழ்வியல் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கிறார். அவர்களில் சிலரை வாழ்வோர் பட்டியலிலிருந்து நீக்கிச் செத்தவர் பட்டியலில் சேர்க்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் பலவாகும்.

Monday 6 December 2021

எல்லாம் பனி மயம்

     கனடா நாட்டில் இது மழைக்காலம். ஆனால் மழையை விட பனிதான் அதிகமாய்ப் பொழிகிறது. பனிப் பொழிவைக் காண கண் கோடி வேண்டும். அப்படி ஓர் அழகு. தேவர்கள் வானிலிருந்து மலர்கள் தூவ அது பூமாரியாய்ப் பொழிந்தது என்று புராணக் கதைகளில் படித்திருக்கிறோம். பனி மழையை நேரில் பார்த்தவர்தாம் அப்படி எழுதியிருக்க முடியும்! குண்டு மல்லிப் பூக்கள் வானிலிருந்து பரவலாக விழுந்து கொண்டே இருப்பதாய் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் இங்கே பெய்யும் பனிமழை.

Wednesday 17 November 2021

பெற்றோரைப் பேணல் பிள்ளையின் கடன்

 

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்

பேரா இடும்பை தரும்   892

பெரியார்என்னும் சொல்லுக்குப் பொருள்கள் பலவாகும். இதற்கு இணையான வழக்குச் சொல் பெரியவர் என்பதாகும். பெரியவர் எனின் ஆற்றலில் பெரியவர், கல்வியில் பெரியவர், செல்வத்தில் பெரியவர், செல்வாக்கில் பெரியவர், பதவியில் பெரியவர், புகழில் பெரியவர், வயதில் பெரியவர் எனப் பற்பல பொருள்கள் நம் நினைவில் தோன்றும். 

Sunday 31 October 2021

வீடுதோறும் பேய்கள்

    Halloween என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப் பெறும் பேய்கள் விழா இன்று கனடா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டின் தீபாவளியைப் போல வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

Friday 29 October 2021

குறிஞ்சி நிலத்தில் குறு நடையாக….

      நீண்ட காலம் எந்தப் போரும் நடக்காமல், களத்தில் இறங்கிப் போர் புரிய வாய்ப்பில்லாமல், வீட்டில் முடங்கிக் கிடக்கும் பண்டைக் காலத்துத் தமிழ் மறவர்களின் தோள்கள் தினவெடுக்குவாம். எனக்கும் அதே நிலைதான்.

Saturday 23 October 2021

கட்டுடல் கொண்ட கனடா மக்கள்

     இப்போது கனடா நாட்டின் மக்கள் தொகை ஏறத்தாழ மூன்றரை கோடி! இவருள் சுமார் முப்பது விழுக்காடு அளவு வெளிநாட்டினராக இருக்கலாம். கனடாவைத் தாயகமாய்க் கொண்ட மக்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ்வதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

Thursday 14 October 2021

பாரதியும் ஹைக்கூ கவிதையும்

 ஹைக்கூ  கவிதையை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் பாரதியே.

அவர் அக்டோபர் 18, 1916 சுதேசமித்திரன் நாளிதழில் 'ஜப்பானியக் கவிதை' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை இது:

Monday 11 October 2021

நாடு முழுவதும் நன்றித் திருவிழா

    மனிதருக்கே உரிய பண்புகளில் முதன்மையானது உற்றுழி உதவுதல். அதனினும் சிறந்த பண்பு ஒன்று உண்டென்றால் அது பெற்ற உதவியை நன்றியுடன் நினைத்துப் பார்த்தல் ஆகும். ஒருவர் செய்த உதவி தினையளவே என்றாலும் அதைப் பனையளவாய்க் கொண்டு நன்றி பாராட்டுதல் தலைசிறந்த பண்பாகும். இந்தப் பண்பின் வெளிப்பாடாக ஒரு நாளை ஒதுக்கி உற்சாகமாகக் கொண்டாடுவதைக் கனடா நாட்டில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.   இன்று காலை நடைப்பயிற்சியின் போது நான் கண்ட காட்சிகளே அதற்குச் சான்று.

Saturday 2 October 2021

அம்மா வந்தாள்

       தி.ஜானகிராமன் எழுதியுள்ள 'அம்மா வந்தாள்' நாவலை, அம்மா தனக்குத் தந்த சிறு மைசூர்பா துணுக்கை  ஒரே மூச்சில் தின்னாமல் மெல்ல நக்கிச் சுவைத்துத் தின்ற குழந்தையைப்போல் மெதுவாக எழுத்தெண்ணிப் படித்து முடித்தேன்.

Monday 20 September 2021

எமக்குத் தொழில் எங்கும் பறப்பது

 எம்மில் தேவதை  எம்மில் வாழ்கிறாள்

எம்மில் இருந்து எம்மனம் வீழ்கிறாள்

‘எம்’முன் நின்றே ஏத்தினன் அவளை

எம்மில் மீண்டும் எழுக என்றேன்

எம்மில் உறையும் இறைவன் அருள்க

எம்மில் இனிமகிழ் வெங்கும் நிறைக

என மனம் ஒன்றிய நிலையில் ஒரு நிமிட வழிபாட்டை முடித்து, மாப்பிள்ளையின் மகிழ்வுந்தில் டெல்லாஸ் ஃபோர்ட்வொர்த் விமான நிலையத்தை நோக்கி விரைந்தோம். பெண்ணும் மாப்பிள்ளையும் கனத்த இதயத்தோடு எங்களுக்கு விடை நல்க, நாங்கள் கொண்டு வந்திருந்த இரு பெட்டிகள் விமானக் கோழியின் அடைமுட்டைகள் ஆக, எந்தச் சிக்கலுமின்றிப் பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைந்து, ‘வானில் பறக்கும் வெண்பறவையே, நினது வாயில் திறவாய்’ என மனம் எண்ணிட, காத்திருப்போர் கூடத்தில் காத்திருந்தோம்.

    விமானம் இருபது நிமிடம் தாமதமாகப் புறப்படும் என அறிவித்தனர். இருபது நிமிடம் இரு நிமிடமாய்க் கழிய, மூக்கும் வாயும் முழுதாய் மறைத்து, கண்மலர் காட்டிக் கனிவுடன் வரவேற்றாள் விமானத் தாரகை.

    உரிய இடம் கண்டு, கூரையில் இருந்த கூட்டைத் திறந்து, சிறிய பெட்டியைச் சிறைவைத்து, சாளரம் ஓரம் சாய்ந்து நான் அமர, என் துணைவி என்னருகில் அமர, அந்தச் சின்னப் பறவை தன் சிறகை விரித்து, மேலே மேலே எழுந்து, மேகங்கள் இடையே பறந்தது.

     ஒன்பது மாதங்கள் அமெரிக்க மண்ணில் நாங்கள் வாழ்ந்த துச்சில் வாழ்க்கையின் தூய நினைவுகளில் மனம் நிலைத்தது. சரியாக மூன்று மணி நேரம் பறந்தபின், அந்த வான் ஊர் பறவை தன் சிறகுகளை மெல்ல அசைத்துக் கனடா நாட்டின் டொரன்டோ பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கி நிலைகொண்டது. அப்போது அங்கே காலை 11.45 மணி.

   மூன்றாம் முறையாகக் கனடா நாட்டில் காலடி பதித்து, உதவியாளர் நல்கிய உதவியால் எல்லாச் சோதனைகளையும் கடந்து ஒட்டாவா செல்லும் அடுத்த விமானத்தைப் பிடிக்கச் சென்றோம். நாங்கள் செல்ல வேண்டிய பிற்பகல் இரண்டு மணி விமானம் ஏதோ காரணத்தால் இயங்காமல் போக, மாலை ஐந்து மணி விமானத்துக்காகக் காத்திருந்தோம்.

   பெரிய மகள் அன்புடன் தந்த எலுமிச்சம் சோறும், உருளைக்கிழங்கு வறுவலும் அமிழ்தமாய் இருந்தது. உண்ட களைப்பில் உட்கார்ந்த வண்ணம் என் மனைவி சற்றே உறங்க, நான் டாக்டர் இரா.ஆனந்தகுமார் ஐ.ஏ.எஸ் என்பவர் எழுதிய ‘படிப்படியாய்ப் படி’ என்னும் நூலைப் படிக்கத் தொடங்கினேன். நேரம் போனதே தெரியவில்லை.

   கனடா நாட்டின் தலைநகராய்த் திகழும் ஒட்டாவா நோக்கி நாங்கள் சென்ற ஏர் கனடா விமானம் மிக வேகமாய்ப் பறந்தது. அடுத்த ஐம்பது நிமிடங்களில் விமானம் ஒட்டாவா வொய்.ஓ.டபிள்யூ பன்னாட்டு விமான நிலையத்தில் பாங்காகத் தரையிறங்கியது. இறங்கி நாங்கள் வெளிவாயிலுக்கு வரவும் எங்கள் பெட்டிகள் எங்களை நோக்கி கன்வேயர் பெல்ட் மூலமாக வந்து விழவும் சரியாக இருந்தது. அலைப்பேசியை உசுப்பி வெளியில் காத்திருந்த இளைய மாப்பிள்ளையை அழைத்தேன். எங்களை அன்புடன் வரவேற்றுத் தம் மகிழ்வுந்தில் அலுங்காமல் அழைத்துச் சென்றார்.

      அன்று மணல் வீடு கட்டி எங்களை மகிழ்வித்த சின்னப்பெண், வளர்ந்து, படித்துப் பட்டங்கள் பெற்று, கனடா சென்று, காதலன் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து, கடுமையாய் உழைத்து, காசுகள் சேர்த்து, இன்று ஒரு வளமனையைச் சொந்தமாக வாங்கியுள்ளாள்.

   அந்த அழகு மனையின் வாசலில் நின்று அகம் குளிர வரவேற்றாள் எங்கள் இளையமகள். அவள் கைகளில் தவழ்ந்த எங்கள் பேரன் எங்களைக் கண்ட மகிழ்ச்சியில் பெருங்கூச்சலிட்டு, உடல்மொழி காட்டி அவன் தந்த உற்சாக வரவேற்பை வருணிக்கத் தக்க சொல்கள் தமிழில் இல்லை.


      கனடாவில் குளிர்காலம் தன் ஆதிக்கத்தைத் தொடங்கும் தருணத்தில் நாங்கள் வந்துள்ளோம்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

   

 

Friday 10 September 2021

இக்கிகய் என்னும் இணையற்ற நூல்

    உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் உயிர் வாழ்கின்றனர் என்பது ஜப்பானியர்தம் கருத்து. உலகிலேயே அதிக ஆண்டுகள் அதாவது நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழும் ஜப்பானிய கிராமத்து மக்கள் தாங்கள் மகிழ்ச்சியாக, நீண்ட காலம் வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருப்பதாகக் கருதுவர்.

Tuesday 31 August 2021

அமெரிக்கக் குகையில் அலிபாபாவாக நான்

    கி.பி.2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் நாள் மாலை 2.59 மணி.  இடம் Natural Bridge Caverns, டெக்சாஸ் மாநிலம், அமெரிக்கா.

Wednesday 18 August 2021

இந்திய சுதந்திரதின விழா

     இங்கே அமெரிக்காவில் டெல்லாஸ் பகுதியில் வசிக்கிறார் என் மூத்த மாப்பிள்ளை. அவரது அளவிலா அன்பில் திளைக்கும் பத்துப் பன்னிரண்டு  தமிழர் குடும்பங்கள் உள்ளன. அக் குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் அவ்வப்போது ஒன்றுகூடி தம் நாட்டின் கலாச்சாரத் தொடர்புடைய தீபாவளி, பொங்கல், ஐயப்பன் வழிபாடு போன்ற பல விழாக்களைப் பாங்குடன் கொண்டாடுவார்கள். விழாக்கள் ஏதும் இல்லாவிட்டாலும் கூட உண்டாட்டு எனச்சொல்லப்படும் ஒரு நாள் முழுவதும் உண்டு மகிழும் உணவுத் திருவிழா உண்டு.

Friday 30 July 2021

மனம் விரும்பும் மால்குடி கார்டன்ஸ்

    நீண்ட இடைவெளிக்குப்பின் நேற்று மாலை ஒரு புகழ்பெற்ற உணவகத்திற்குச் சென்றோம், அமெரிக்காவில் பெருந்தொற்றுத் தாக்கம் குறைந்துள்ள போதிலும் உணவகங்களில் வாடிக்கையாளர் வருகை வழக்கத்திற்கு மாறாகக் குறைந்தே காணப்படுகிறது.

Saturday 17 July 2021

யானையை விழுங்கிய மலைப்பாம்பு

    இன்று(ஜூலை 16) காலையில் எழுந்ததும் பாம்பு முகத்தில் விழித்தேன். புலனத்தில் அன்றாடம் ஆங்கிலத்தில் பதிவிடும் என் நண்பர் வலைப்பூவர் என்.வி.சுப்பராமன் அவர்கள் இன்று உலகப் பாம்புகள் தினம் எனக் குறிப்பிட்டு பல அரிய தகவல்களைத் தந்திருந்தார். தொடர்ந்து பாம்பு குறித்த சிந்தனையாகவே இருந்தேன்.

Tuesday 6 July 2021

யாதும் ஊரே யாவரும் கேளிர்

 

அமெரிக்க சுதந்திர தினத்தை அருமையாய்க் கொண்டாடினார்கள் நம் தமிழர்கள்.

   டெக்ஸாஸ் மாநிலத்தில் லிட்டில் எல்ம் நகரின் அழகிய லூவிஸ்வில் ஏரி. அந்த ஏரிக்கரையில் மரங்கள் சூழ்ந்த  வீடுகளின் அணி வரிசை. அவற்றில் இரு வீடுகளுக்கு மட்டும் வாசகர்களை அழைத்துச் செல்கிறேன்.

Saturday 3 July 2021

ஐயா எனக்கோர் ஐயம்

 

ஐயா, வணக்கம். எனக்கோர் ஐயம்

   உங்கள் மாணவன் மரு.பூர்ண சந்திரகுமார்.

   எனக்கு வந்த வாட்ஸ்அப் பதிவு ஒன்றில் "கிராமத்தில் விவசாயம் செய்ய நிறைய புதுப்புது கருவிகள் வந்துவிட்டன!. ஆள் தேவையில்லை. கிராமத்தில் இருக்கும் படித்த  இளைஞர்களே, கிராமத்தை விட்டு வெளியேறி நகரம் நோக்கிச் செல்லுங்கள். அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். படிப்பிற்கேற்ற வேலை தேடிக்கொள்ளுங்கள். நிறைய சம்பாதியுங்கள். மகிழ்ச்சியாய் வாழுங்கள்!" என்று கூறப்பட்டிருந்தது.

"உழந்தும் உழவே தலை", "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்", "உழுவார் உலகிற்கே அச்சாணி" என்கிறது வள்ளுவம். "இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது" என்றார் காந்தி. மனிதனின் அடிப்படை தேவைகளில் முதன்மையானது உணவு!.(ஓகிகள் விதிவிலக்கு). –என்றெல்லாம் நான் நீள நினைத்தபோது சில ஐயங்கள் ஏற்பட்டன என்ற முன்னுரையோடு தொடங்கிச் சில கேள்விகளைக் கேட்டார்.

 தொடர்வது அவரது கேள்விகளும் எனது விடைகளும்.   

மேற்கூறிய வாட்ஸ்அப் கூற்று விவசாயத்தை நலிவுபடுத்துவது போல் ஆகாதா?

  “நிச்சயமாக நலிவை ஏற்படுத்தும். போகிற போக்கில் எதையாவது புலனத்தில் தூவிவிட்டுப் போவது இன்று பலரது வாடிக்கை அல்லது வேடிக்கை. என்னிடம் வினாவைக் கேட்குமுன் நீயே விடையும் சொல்லிவிட்டாய். உலகத் தேரின் அச்சாணியாய் விளங்கும் உழவன் கை மடங்கினால் அதன் விளைவு ஆயிரம் கொரோனாவுக்குச் சமமாக இருக்கும்.”

 “படித்த இளைஞர்கள் எல்லாம் நகரப் பணி மட்டுமே குறிக்கோள் என்றால் விவசாயம் என்னாவது?

    “விவசாயம் பாழாகும். இன்றைக்குப் பட்டம் பெற்ற இளைஞர் பலர் நகருக்குச் சென்று நாயைப் பராமரிக்கும் வேலையைக்கூட நன்றாகச் செய்வார்கள். ஆனால் அப்பாவுடன் சென்று அரை நேரம் வயலில் ஏர் உழுவதை இழிவாய் நினைப்பார்கள். எனக்குத் தெரிந்த பல விவசாயக் குடும்பத்து இளைஞர்கள் இப்படி நகரை நோக்கி நகர்ந்த காரணத்தால் அவர்களுடைய விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாகி, எல்லைக்கல் முளைத்து எங்கும் காணப்படுகின்றன! அல்லது கருவேல மரங்கள் மண்டிக்கிடக்கின்றன. எப்போது நம் நாட்டு இளைஞர்கள் மேனாட்டுப் பண்பாட்டை ஏற்றார்களோ அப்போதே எளிமையாய்  விவசாயம் செய்யும் பெற்றோரிடமிருந்து விலகிப் போய்விட்டார்கள் என்று பொருள். பிறகு ஒரு கட்டத்தில் உணர்கிறார்கள், கண்கெட்டபின் சூரிய வணக்கம் செய்ய முயன்றவன் கதையாக.”

விவசாயம் மெல்ல மெல்ல தன் சிறப்பை இழந்து வருகிறதா?

“அப்படிச் சொல்ல இயலாது. நான் மேலே சொன்ன இளைஞர் கூட்டம் ஒருபக்கம் இருந்தாலும் படித்த இளைஞர் பலரும் அரசு வேலையைக்கூட உதறித்தள்ளிவிட்டு விவசாயத்திற்குத் திரும்பி வந்து தலை நிமிர்ந்து நடக்கிறார்கள்.”

  “மக்கள் தொகை பெருகுவதற்கு ஏற்ப, விவசாய நிலங்கள் குறைய, குறைய அல்லது விவசாயம் செய்ய ஆள் இன்மையால் மனிதன் பசியை வெல்லும் ஓக வாழ்விற்கு இயற்கையால் தள்ளப்படுகிறானா?

   “அப்படி நான் எண்ணவில்லை. விவசாயம் நலிந்தால் மனிதன் பட்டினி கிடந்து சாவான். பசி வந்திடப் பத்தும் பறந்து போகும். அவற்றுள் நீ குறிப்பிடும் ஓக வாழ்வும் அடங்கும். பசியை வெல்லும் ஓக வாழ்வு என்பது ஓர் உயர்ந்த தவநிலை. விவசாயம் நலிவதால் அது மனிதருக்கு வாய்க்காது.  

“மண்ணோடு மனிதனுக்கு உள்ள உறவு கருவியால் வருமா? கருவிகள் கொண்டு செய்யப்படும் விவசாயத்தால் பூரண ஆரோக்கிய வாழ்வு கிட்டுமா?

   “நீ குறிப்பிடும் கருவி டிராக்டர் போன்ற இயந்திரங்களைக் குறிக்கும் என நினைக்கிறேன். எந்தத் துறையிலும் நூறு விழுக்காடு இயந்திர மயமாவது நல்லது அன்று. ஒன்றைத் தெரிந்துகொள். இயந்திரங்கள் மனிதனை முழுச்சோம்பேறியாக்கி வருகின்றன. வருங்காலத்தில் இயந்திரத்தின் உதவி இல்லாமல் வீட்டிற்குள்ளேயும் நடக்கமாட்டான்.  இன்னும் பத்தாண்டுகளில் மனிதனை இயந்திரங்கள் அடிமைப் படுத்தி ஆட்டிப்படைக்கப் போகின்றன. அடிமையான மனிதன் அவற்றின் பேச்சைக் கேட்காதபோது இயந்திரங்கள் இரண்டு அடி கொடுக்கும் காலம் வரும்! இவனுக்கு அழிவு இவன் கண்டுபிடித்த கருவிகளால் மட்டுமே.

    அடுத்து நீ குறிப்பிடும் பூரண ஆரோக்கிய வாழ்வை இயந்திரங்கள் ஒருபோதும் தர இயலாது. பூரண ஆரோக்கிய வாழ்வுக்கு அன்புதான் அடிப்படை. அதை அன்பு நிறைந்த மனிதர்களால் மட்டுமே தரமுடியும். இன்று பார்க்கிறோமே, அன்புநிறை ஆசிரியர்களின் முகம் காணாமல், அவர்களுடைய இனிய சொல்லைக் கேட்காமல் இணையவழியில் கற்கும் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமையை.

  சரி. உன் கேள்விக்கு வருகிறேன். வேளாண் துறையில் இயந்திரம் என்பது உணவில் ஊறுகாயைப் போல அளவாய் இருத்தல் வேண்டும். மீண்டும் கலப்பைகள் வேண்டும். கலப்பையால்  உழுவதற்கு மாடுகள் வேண்டும். மாடுகளின் கழிவுகள் பயிருக்கு எருவாக வேண்டும். அதனால் யாவர்க்கும் நஞ்சில்லா உணவு கிடைக்க வேண்டும்.

  உடலுழைப்பும் பெருமையுடையது என உணர்த்தும் வகையில் ஏர் உழுவோர்க்கும் நாற்று நடுவோர்க்கும் அரசு சீருடை நல்க வேண்டும். உரிய ஊதியம் வழங்கிட ஆணை பிறப்பிக்க  வேண்டும். அவர்கள் அறுபது வயதை எட்டும்போது அரசு ஓய்வூதியம் வழங்க.வேண்டும்.

    இவை நடைமுறைக்கு வந்தால் நகரத்தில் பிறந்து வளரும் இளைஞர்கள் கூட கிராமத்திற்குச் சென்று இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதில் 10% பரப்பில் குளம் அமைத்து, 30% பரப்பில் அடர்வனம் அமைத்து, எஞ்சியுள்ள 60% பரப்பில் இயற்கை விவசாயம் செய்து, பல்லுயிர் ஓம்பி, தம்இல் இருந்து தமது பாத்துண்டு, அறவழியில் ஆனந்தமாய் வாழ்வார்கள்.”

 நீ கோபி வைரவிழா மேனிலைப் பள்ளியில் எனது வகுப்பறையில் மாணவனாய் இருந்தபோதும் நிறைய கேள்விகள் கேட்டாய். இப்போது நீ புகழ்மிக்க அரசு சித்த மருத்துவர் என்ற போதிலும், அதே தேடலுடன் கேள்விகள் கேட்டாய். நான் சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு வாய்ப்பளித்தாய்.

நன்றி. வாழ்க நலமுடன்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

 

 

 

 

Friday 25 June 2021

முடி வெட்டச் சென்ற முத்தையா

    ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் கழித்து முடிவெட்டப் போனார் முத்தையா. சென்ற வருடம் ஜனவரி மாதம் முடி திருத்தகம் சென்று முடி வெட்டியதோடு சரி. பிறகு பிப்ரவரியில் கோவிட் தலைகாட்டத் தொடங்கியதும் இவர் சலூன்காரரிடம் தலைகாட்ட மறுத்துவிட்டார். ஏப்ரலில் போட்ட பொதுமுடக்கம் முடிந்து கடைகள் திறந்தபோது சலூன்களும் திறந்து செயல்பட்டன. அடுத்த வாரத்தில், ஒரு சலூன்காரர் தன்னிடம் முடி வெட்டிக்கொண்ட ஐம்பது பேர்களுக்குத் தொற்றைப் பரப்பிய செய்தி நாளேடுகளில் வந்தபோது, முத்தையா தன் வருமுன் காக்கும் திறமையை எண்ணித் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டார்.

     பாகவதர் கணக்கில் தலைமுடி வளர்ந்தபோதும் முத்தையா கவலைப்படவில்லை. இந்த நிலையில் வெளிநாடும் சென்றார். சென்ற இடத்தில் கோவிட் பரவிக்கிடந்தாலும் சலூன்கள் கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட்டன. என்றாலும் அங்கும் சலூனுக்குச் செல்வதைத் தவிர்த்த முத்தையா காந்தியைப் பின்பற்றி முடிதிருத்த முனைந்தார். குளியலறைக் கண்ணாடிமுன் நின்று கத்தரிக்கோலைக் கையில் பிடித்தார். அரை மணிநேரம்  சென்றது. பின்னர் விழுந்து கிடந்த மயிர்களை கூட்டி எடுத்துக்கொட்ட மேலும் அரைமணி நேரம் ஆயிற்று.

    குளித்துவிட்டு வெளியே வந்தபோது அவரது மனைவி, “அட பராவாயில்லையே. இருபது டாலர் மிச்சம்” என்று சொல்ல முத்தையாவுக்கு ஏற்பட்ட புல்லரிப்பில் சற்றே மயிர்க்கூச்செரிந்தார். அப்புறம் என்ன, தானே முடி வெட்டிக்கொள்ளும் கலையைத் தொடர்ந்தார். பிறகு அடுத்த நாட்டுக்கும் பயணமானார். விமானத்தில் இவரது சிகை அமைப்பைக் கண்ட சிலர் வியப்படைந்தனர்.

     சென்ற இடத்திலும் ஆறு மாதங்களில் மூன்று முறைகள் தானே முடிவெட்டிக்கொண்டார். பின்பக்க மண்டை மட்டும் ஊட்டி தேயிலைத் தோட்டம் போல் படிப்படியாக இருக்கும்!

    இப்போது ஒரு கோவிட் தொற்றும் இல்லை, ஊரில் அனைவரும் முத்தையா உட்பட இரண்டு தடுப்பூசிகள் போட்டுள்ளனர் என்பதால் சலூன் கடைக்குச் சென்று முடிவெட்டிக்கொள்ள அவருக்கு ஆசை வந்தது. அதற்கான தேதியும் நேரமும் குறிக்கப்பட்டது. ஆம். அந்த ஊரில் தொலைப்பேசியில் நேரம் கேட்டுச் செல்வது நடைமுறை.

    Super Cuts என்னும் பெயரமைந்த சலூன் கடைக்குக் காலையில் முதல் ஆளாகச் சென்றார். சொந்த ஊரில் எப்போதுமே இப்படி முதல் ஆளாகச் செல்வது இவரது வழக்கம். இவர் சென்றபின்தான் கடை முதலாளியம்மா, நாற்பது வயது இருக்கும், காரில் வந்து கம்பீரமாய் இறங்கினார். கடை திறக்க இருபது நிமிடங்கள் இருந்தன.

   சரியாகப் பத்து மணிக்கு முத்தையா உள்ளே சென்றார். அந்த அம்மணி “வெல்கம்” எனச்சொல்லி புன்முறுவலுடன் வரவேற்றார். முகக்கவசத்திற்குள் ஒளிந்து கொண்ட அவரது புன்முறுவலைக் காணமுடியாமல் போனதில் முத்தையாவுக்குச் சற்றே ஏமாற்றம்தான்.  எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “ஹாய்” எனச் சொன்னார். பிறகு, பெயர், முகவரி, தொலைப்பேசி எண் முதலிய விவரங்களைக் கேட்டு கணினியில் உள்ளீடு செய்தார். இதற்கிடையில் முத்தையா கடையை ஒரு நோட்டம் விட்டார்.

    இருபதுக்கு இருபத்தைந்து அடி உள்ள பெரிய, இதமாகக் குளிரூட்டப்பெற்ற ஹால். முதலில் வரவேற்புக்கூடம். இடைவெளியுடன் கூடிய இருக்கைகள்; சிறிய டீப்பாய், அதன்மேல் புத்தகங்களும் வார இதழ்களும் அழகுற காட்சியளித்தன. எங்கு பார்த்தாலும் ஒரு தூசு தும்பு, ஒட்டடை எதுவுமில்லை.

    அடுத்ததாக, இரண்டு வரிசைகளில் ஆறு அழகிய முடி திருத்த இருக்கைகள். எதிரில் அப்பழுக்கில்லாத பெரிய கண்ணாடிகள். ஆங்காங்கே சுவரில் சிகை அலங்காரப் படங்கள் குடும்பம் குடும்பமாக. கடைக்காரர் தரும் சேவைக்கான விலைப்பட்டியலும் ஒரு பக்கம் சுவரில் தொங்கியது. பார்வையில் படும் வகையில் அரசு அளித்திருந்த உரிமம் வைக்கப்பட்டிருந்தது. இங்கு உரிய உரிமம் பெற்றவர் மட்டுமே முடி திருத்தும் சேவையை அளிக்கமுடியும்.

    அம்மையார் முத்தையாவை ஓர் இருக்கையில் அமரச் சொன்னார். ஒரு மடிப்புக் கலையாத, தூய்மையான கரிய நிற சால்வையை எடுத்துக் கழுத்துவரைப் போர்த்தினார். கொஞ்சமாக அவரது தலையில் தண்ணீரைப் பீய்ச்சியடித்தார். ஒரு சீப்பால் எல்லா முடியையும் ஒன்று திரட்டி உச்சிக்கொண்டை போட்டு கலையாமல் இருக்க ஒரு கிளிப்பை மாட்டிவிட்டார். கண்ணாடியில் பார்த்த அவருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. இப்போது தலையின் பக்கவாட்டிலும், பின்னாலும் முடி வெட்டினார். பின் அந்த கிளிப்பை எடுத்து வேறுபக்கம் மயிரைத் திரட்டி நிறுத்தி, எதிர்பக்கத்தில் வெட்டித் தள்ளினார். இப்படி சீப்பும் கிளிப்பும் இடம் மாற இருபது நிமிடங்களில் பணியை முடித்து ஒரு சிறிய மின் கருவி மூலம் முடி வெட்டிய சுவடு தெரியாமல் மிக நுணுக்கமாக ஒழுங்கு படுத்தினார்.

     இந்த சலூனில் கட்டிங் மட்டும்தான். ஷேவ் செய்ய வேறு சலூனுக்குத்தான் செல்ல வேண்டும் என்பதை கூகிளில் தேடி அறிந்து வைத்திருந்தார் முத்தையா. அவர் எப்போதும் செல்ஃப் ஷேவிங் செய்பவர் ஆதலால் அதுபற்றிக் கவலைப்படவில்லை. “மீசையை மட்டும் கொஞ்சம் ட்ரிம் செய்யமுடியுமா?” என்று கேட்டார். அவர் பேசிய ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டதால் அவர் மீசை தப்பித்தது. சொல்லப்போனால் அம்மணி மிக நன்றாகவே ட்ரிம் செய்திருந்தார். சில பாராட்டு  மொழிகளை உதிர்த்த முத்தையா தான் கையோடு கொண்டுவந்திருந்த சீப்பால் தலைவாரி அழகு பார்த்தார். நான்கு வயது குறைந்த மாதிரி நினைப்பு!

    முடி திருத்தக் கட்டணம் வரியுடன் சேர்த்து பதினெட்டு டாலர், இந்திய மதிப்பில் சொன்னால் ரூபாய் ஆயிரத்து நானூறு. முதியோருக்கு இரண்டு டாலர் தள்ளுபடி! 

   முத்தையா தான் கொண்டு வந்திருந்த கடை விளம்பரத் துணுக்கைக் கொடுத்து நான்கு டாலரைக் குறைக்குமாறு கேட்க அவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றார். பன்னிரண்டு டாலர் கொடுத்தால் போதும். இருந்தாலும் அவ்வூர் வழக்கப்படி இரண்டு டாலர் டிப்சும் சேர்த்து பதினான்கு டாலரை கொடுத்துவிட்டு, இரண்டு டாலரைச் சேமித்த மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி நடையைக் கட்டினார்.

   அட அந்த முத்தையா யார் என்றுதானே கேட்கிறீர்கள்?

அது நானேதான்!

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

    

Monday 21 June 2021

அமெரிக்காவில் அப்பா நாள்

        1910 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தந்தையர் தினக் கொண்டாட்டம் இங்கே ஆண்டுக்காண்டு கூடுதல் சிறப்புடன் கொண்டாடப் படுகிறது. சேர்ந்து கொண்டாட வசதியாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையை அமெரிக்க நாட்டு அரசே தேர்வு செய்து அறிவித்தது.

Thursday 27 May 2021

வைரங்களுடன் சில நிமிடங்கள்

     26/5/2021 புதன் மாலை ஏழு மணி. என் அழைப்பை ஏற்றுக் குறித்த நேரத்தில் வந்து கொட்டம் அடித்தது ஒரு மாணவர்ப் படை.

    கோபி வைரவிழா மேனிலைப்பள்ளியில் நான் பணியாற்றிய கால் நூற்றாண்டு காலத்தில்(1979-2004) என்னிடம் படித்த நூற்றுக்கணக்கான மாணவர்களில் பலரை,அமெரிக்காவில் இருந்த வண்ணம்,  இணையவழியில் ஜூம் செயலி மூலமாகச் சந்தித்து உரையாடினேன்.

Wednesday 26 May 2021

சகலமும் தந்த சைக்கிள் சாமி

     நான் வணங்கும் சாமிகளில் எனது சைக்கிளும் ஒன்று. அதனால்தான் சைக்கிள்சாமி என்று குறிப்பிட்டேன். நான் அரசு ஊதியம் பெறும் பணியில் சேர, முனைவர் பட்டம் பெற, வீடு கட்ட, கார் வாங்க, வங்கியிலே கொஞ்சம் வைப்பு நிதியாய் வைக்க, வறியவர்க்கு அல்லது உரியவர்க்குச் சிறிது வழங்க அடிப்படைக் காரணம் எனது சைக்கிள்தான். அதனால்தான் எனது புதிய ஹூண்டாய் காருக்குச் சமமாக மதித்து எனது 44 ஆண்டுகள் பழமையான சைக்கிளைப் பேணிப் பயன்படுத்தி வருகிறேன்.

Tuesday 18 May 2021

சைக்கிளால் ஏற்பட்ட திருப்பம்

   1969 ஆம் ஆண்டு. பழைய திருச்சி மாவட்டம், பழைய உடையார்பாளையம் தாலுக்கா, ஆண்டிமடம் அரசு உயர்நிலைப் பள்ளியில்  பள்ளி அளவில் நடக்கும் பத்தாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த சமயம் அது.

Thursday 6 May 2021

எங்கள் அப்பாவுக்கு ஒரு சைக்கிள் இருந்தது

    எங்கள் சொந்த ஊரான கூவத்தூரில் மிஞ்சிப் போனால் பத்து வீடுகளில் சைக்கிள் இருக்கும். ஒருவர் சொந்தமாக சைக்கிள் வைத்திருக்கிறார் என்றால் அவர் வசதியானவராகக் கருதப்பட்ட காலம் அது. சைக்கிள் வாங்கும் அளவுக்கு வசதியான நிதிநிலை இருந்தும் எங்கள் அப்பா ஏனோ சைக்கிள் வாங்கவில்லை. அவருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பது ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  எங்கள் வீட்டில் நான் மற்றும் அண்ணன் இருவர் இருந்தோம். அண்ணன்கள் இருவரும் வாடகைக்கு சைக்கிள் எடுத்து நன்றாக ஓட்டக் கற்றுக்கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு அணா வாடகை.

Sunday 18 April 2021

மின்சாரத்தில் இயங்கும் மீனா கார்

    மேகக் கூட்டத்தின் மீது பறப்பது போன்ற உணர்வு சாலையில் காரில் பயணிக்கும்போது கிடைத்தால் எப்படியிருக்கும்! அப்படி ஓர் உணர்வைப் பெற்று மகிழ்ந்தேன். அதன் விளைவே இப் பதிவு.

    ஹுயூஸ்டனில் வசிக்கும் இரவி பர்வத மீனா இணையர் நேற்று என் மகளின் இல்லத்திற்கு விருந்தினராக வந்தனர். அவர்கள் ஓட்டிவந்த மின்சார கார் நேற்று இரவு முழுவதும் என் கனவில் வலம் வந்தது.

Wednesday 14 April 2021

ஒளிக்கீற்று ஒன்று தெரிகிறது

     வலைப்பூ வாசகர் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் மற்றும் தொல்காப்பியர் திருநாள் வாழ்த்துகள். நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு நல்ல செய்தியோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

    சித்திரைத் தொடக்கமே நல்லதுதான். புதிய நம்பிக்கைகளின் விதைகள் அன்றைக்குத்தானே விதைக்கப்படுகின்றன? “கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கித் தவிக்கும் எங்களுக்கு என்ன நல்ல செய்தி சொல்லப் போகிறீர்கள்?” என்று நீங்கள் கேட்பது என் செவிகளில் விழுகிறது.

     பெருந்தொற்றினால் ஏற்படும் இறப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வந்துவிட்டது என்பதே அந்த நல்ல செய்தி.

Wednesday 31 March 2021

தகுந்த முறையில் தரவுகளைக் காப்போம்

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுபதினம் என்பது 1969இல் வெளிவந்த சுபதினம் திரைப்படத்திற்காக வாலி எழுதிய வரிகள்.  நான் பழைய காலத்துப் பதினோராம் வகுப்பில் படித்த காலக்கட்டம் அது. அப்போது சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலித்த அந்தப் பாடல் இன்னும் என் செவிகளில் ஒலிக்கிறது.

Sunday 7 March 2021

தொல்காப்பியர் திருநாள்

     அரசு அறிவிப்பின்படி தைத் திங்கள் இரண்டாம் நாள் (ஜனவரி 15 அல்லது 16) திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கி.மு. 31. தொல்காப்பியர் வாழ்ந்த காலம் கி.மு.300.  அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன். ஏனோ தொல்காப்பியருக்கு விழா எடுக்க நாள் குறிக்காமல் வள்ளுவருக்கென ஒரு நாளை வகுத்தனர்.

Tuesday 2 March 2021

தடுப்பூசி போட்ட தருணம்

     நான் அமெரிக்காவில் காலடி வைத்ததும் என் பெரிய மாப்பிள்ளையிடம் கேட்ட முதல் கேள்வி “எப்போது கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?” என்பதே. அவரும் உடனே உரிய வலைத்தளத்தில் புகுந்து முன்பதிவு செய்தார்.  திருமண நாள் குறிப்பிடப்படாமல் நிச்சயம் செய்யப்பட்ட பெண், மாப்பிள்ளை போல  என் மனைவியும் நானும் காத்திருந்தோம்.

Wednesday 24 February 2021

வானொலி வந்த வரலாறு

      “வானொலியைக் கண்டு பிடித்தவர் யார்?” என்று ஓர் ஆசிரியர் ஒரு பத்தாம் வகுப்பு மாணவனைக் கேட்டால் அவன் சொல்லும் விடை என்னவாக இருக்கும்?

    நீங்கள் நினைப்பது சரிதான். மார்க்கோனி என்றே சொல்வான். ஆசிரியரும் அருமை” எனப் பாராட்டுவார்.  தப்பான விடை சொன்ன மாணவனை  ஆசிரியர் பாராட்டுகிறாரே என்பது எனது வருத்தம்.

   ஆம். அவன் சொன்னது தவறான விடை என்பது இன்றளவும் பலருக்கும் தெரியாது.

   உண்மையில் வானொலியைக் கண்டுபிடித்தவர் சென்ற நூற்றாண்டில் கொல்கத்தாவில் வாழ்ந்த புகழ் பெற்ற அறிவியலாளர் ஜகதீஸ் சந்திர போஸ்.

Wednesday 17 February 2021

பார்த்தோம் பனிப் புயலை

    இப்போது அமெரிக்காவைக் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இரவு நேர வெப்ப நிலை குறைந்து விட்டதாக என் மகள் சொல்கிறாள்.

   நேற்று வீசிய Appetizer எனப் பெயரிடப்பட்ட பனிப்புயலில் நாங்கள் வசிக்கும் டெக்சாஸ் மாநிலம் கதி கலங்கிவிட்டது. மாநில ஆளுநரின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசர நிலைப் பிரகடனம் செய்தார். நிலைமையைச் சமாளிக்க கூடுதல் நிதி. இராணுவ உதவி என்று உதவிக்கரம் நீட்டியுள்ளார். இரயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. கல்விக் கூடங்கள், அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.

Thursday 4 February 2021

உனக்கு மிக நல்லதடி பாப்பா!

 

சாலை விதிகளைப் பாப்பா நீ

சரியாக அறியவேணும் பாப்பா!

ஓடி ஆடும் பிள்ளைகள் வாகனம்

ஓட்டுதல் கூடாது பாப்பா!

 

பதினெட்டு வயதைத் தாண்டி- ஓட்டப்

பழகிட  வேண்டும்  பாப்பா!

உரிமம் இல்லாமல் பாப்பா ஓட்ட

உரிமை இல்லையடி பாப்பா!

 

தலைக்கவசம் இல்லாமல் ஓட்டல் பெரும்

தவறாகும் அறிந்திடு பாப்பா!

இடது புறமாக மட்டும் வாகனம்

இயக்கப் படவேணும் பாப்பா!

 

சீறிப் பாய்ந்திடத் தூண்டும் ஆனால்

சிக்னலை மதித்திட வேண்டும்!

சிக்னலை மதிக்காத போது உடல்

சிதறிப் போனாலும் போகும்!

 

வேகம் மிகக்கெடுதல் பாப்பா உனக்கு

விவேகம் வேணுமடி பாப்பா!

முன்னால் போகும் வாகனம் அதை

முறையாக முந்தோணும் பாப்பா!

 

இடப்பக்கம் முந்திநீ சென்றால் அது

இன்னலைத் தருமடி பாப்பா!

வலப்பக்கம் முந்திட வேண்டும் நல்ல

வழியாகக் கொண்டிடு பாப்பா!

 

வாகன இடைவெளி முக்கியம் இன்றேல்

வம்பில் மாட்டுவாய் சத்தியம்!

இருபது மீட்டர் இடைவெளி – என்றும்

இருப்பது நல்லதடி பாப்பா!

 

வலப்பக்கம் வாகனம் திருப்ப சில

வழிமுறை உள்ளதடி பாப்பா!

வலக்கையை உயர்த்திக் காட்டு உரிய

விளக்கையும் போட்டுக் காட்டு!

 

கண்ட இடங்களில் வண்டியை நீ

கண்டிப்பாய்  நிறுத்தாதே பாப்பா!

உரிய இடத்திலே நிறுத்து அது

உனக்குமிக  நல்லதடி பாப்பா!

   -கவிஞர் இனியன், கரூர்.