Wednesday 27 December 2017

குப்பைக் கீரை என்றாலும் அப்படிச் சுவைப்பது எதனாலே?

   நினைத்தால் வெளியில் சென்று உணவகங்களில் சாப்பிடுவது என்பது இங்கே(அமெரிக்காவில்) இயல்பான நிகழ்வாகும். நம் நாட்டிலும் இந்தக் கலாச்சாரம் பரவிவிட்டது. கணவன் மனைவி இருவரும் அலுவலகம்  செல்லும் குடும்பங்களில் கேட்கவே வேண்டாம்; வாரத்தில் பாதி நாள்கள் வீட்டில் சமையல் இருக்காது.

Monday 25 December 2017

அமெரிக்க மண்ணில் அருமையான விழா

 இந்தப் பதிவை எழுதும்போது கடிகாரம் பன்னிரண்டு மணி எனச் சொல்கிறது. குழந்தை இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் தூரத்து மாதா கோவிலில் மணி ஓசை நீண்டு ஒலிக்கிறது. அங்கே நடுநிசி பூசை நடக்கும் என எண்ணுகிறேன்.

  இங்கே குளிர் வாட்டி எடுக்கிறது. சில நாள்களில் வெப்பம் சுழியனுக்கும் கீழே செல்கிறது. தெர்மல் பேண்ட், ஷூ, பனியன், டி-ஷர்ட், ஜாக்கெட், இரண்டு கண்களையும் மூக்கையும் தவிர்த்த ஒரு தலைக் கவசம், கையுறைகள்- அதாவது ஒரு விண்வெளி வீரனைப்போல உடையணிந்துகொண்டு, நெஞ்சில் துணிவிருந்தால் கொஞ்ச நேரம் வெளியில் போய் வரலாம். இப்படியாக  ஒரு நகர் வலம் வந்தேன்.







   இங்கே கிறிஸ்துமஸ் விழாக் கோலம் ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கிவிட்டது. ஒரு தெருவில் இருபது வீடுகள் இருந்தால் இருபது வீடுகளிலும் கண்ணைக் கவரும் அலங்கார மின்விளக்குகளை ஒளிரவிட்டுள்ளனர். கிறுஸ்துமஸ் மரத்தை வீட்டுக் கூடத்தில் வைத்து அழகுபடுத்தியுள்ளனர். வீட்டு முகப்பில் வண்ண வண்ண பலூன்களை காற்றடைத்து வைத்திருப்பது விழாவுக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கிறது.  அவர்கள் மரங்களையும் விட்டுவைக்கவில்லை. இலையுதிர்த்த மரங்கள் அலங்கார மின்னொளியில் வெகு அழகு! இதிலே சிறப்பு என்னவென்றால், அந்த  வீடுகள் சிலவற்றில் இந்துக்களும் வசிக்கிறார்கள்! ஆக கிறிஸ்துமஸ் விழாவை ஒரு தேசிய விழாவாகக் கருதி அனைத்து மதத்தினரும் சேர்ந்து கொண்டாடுகிறார்கள்.

   சிலர் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமணிந்து குழந்தைகளுக்குப் பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்குகிறார்கள். அதாவது பிஞ்சு உள்ளங்களில் அன்பை விதைக்கிறார்கள்.

  நல்லூழ் இல்லாதவர்களுக்காக உள்ளம் உருகி இறைவனை மன்றாடி வேண்டிக்கொள்ளும் ஒப்பற்ற கோட்பாட்டினை உடையது கிறித்துவமதம். அணுவளவும் வன்முறையப் போதிக்காத மதம். எதிரிகளை ஆயுதபலத்தாலும் வீழ்த்தலாம்; அவர் நாணும்படியாக நன்னயம் செய்தும் வீழ்த்தலாம். இரண்டாவது வகையைப் போதித்தவர் இயேசு நாதர்.

  போதிய விழிப்புணர்வு இல்லாததால் நாம் நம் மதங்களைத் தவறாகக் கையாள்கிறோம்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

Sunday 17 December 2017

முயன்று பெற்றாள் முனைவர் பட்டம்

  நம் சென்னைப் பல்கலைக்கழகம் போல ஊரின் பெயரால் அமைந்தது இந்த டெக்சாஸ் பல்கலைக்கழகம். இங்கு நூற்றி இருபது நாடுகளைச் சேர்ந்த நாற்பத்தெட்டாயிரம் மாணவ மாணவியர் கல்வி கற்கின்றார்கள். நூற்றுக் கணக்கில் பணியாற்றும் உலகப் புகழ் வாய்ந்த பேராசிரியர்கள் நூற்றி எண்பது பாடப்பிரிவுகளில் பாடம் நடத்துகிறார்கள்.  இங்கே என் பெரிய மகள்   திருமணம் முடிந்த கையோடு உயிரியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பில் சேர்ந்தாள்.

   ஓயாத உளியடிக்குக்குப்பின் ஒரு கல் சிலையாவதுபோல், நெருப்பில் உருகி உருகி கட்டித்தங்கம் கண்கவரும் நகை ஆவதுபோல் கடுமையான ஆய்வுநெறிமுறைகளுக்கு உட்பட்டு, பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரவு பகலாக ஆய்வுகளை நடத்தி, ஆய்ந்து கண்ட முடிவுகள் உலகத் தரத்துக்கு ஒப்பானது எனத் தேர்வுக்குழுவினர் ஒருமனதாய் ஒப்புதல் தர முனைவர் பட்டப்பேற்றுக்கு ஆளானாள்.


   நேற்று(15.12.2017) மாலை ஏழு மணி அளவில் பல்கலைக்கழக வளாக முதன்மை அரங்கில் கோலாகலமாய் நடைபெற்ற வண்ணமிகு பட்டமேற்பு விழாவில் அவள் அரிமா என அணிநடை பயின்று, “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்த வந்தோம்” என்னும் பெருமித உணர்வுடன் மேடையேறி முனைவர் பட்டம் பெற்றாள். 

Wednesday 13 December 2017

பாரதியார் குறிப்பிடும் பெரிய கடவுள் யார்?

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினபொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியில் பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்

   மேற்காண் பாடலில் பெரிய கடவுள் என்று பாரதியார் எந்தக் கடவுளைக் குறிப்பிடுகிறார்?

   ஓர் இணையமகன் ஓர் இணைய குழுமத்தில் தொடுத்த வினா இது. பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவு செய்தார்கள். ஒருவர் பெரிய கடவுள் என பாரதியார் குறிப்பிடுவது சிவபெருமான் என்று ஒரே போடாகப் போட்டார்.

   இது ஏதோ பாரதியாரை வம்புக்கு இழுப்பதுபோல் தோன்றினாலும் ஒருவகையில் என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு.

    இலக்கணிகள் அடைமொழியை இனமுள்ள அடைமொழி, இனமில்லா அடைமொழி என வகைப்படுத்துவர். அந்தப் பகுதிக்கு நாம் இப்போது செல்ல வேண்டியதில்லை.

   பொதுவாக, ஒரு பெயர்ச் சொல்லின் முன் இரு வகைகளில் அடைமொழிகளைச் சேர்க்கலாம். அவற்றை அளவுசார் அடைமொழி(quantitative attributive), தரம்சார் அடைமொழி(qualitative attributive) எனலாம்.

பெருமை என்னும் அடைமொழியை இவ்விரு வகைகளில் பயன்படுத்தலாம்.

பெருமரம்=பெருமை+மரம் பெரிய மரம். இங்கே பெருமை என்பது அளவுசார் அடைமொழி.

பெருங்கடவுள்=பெருமை+கடவுள் பெரிய கடவுள். இங்கே பெருமை என்பது தரம்சார் அடைமொழி.

  எனவே பாரதியார் குறிப்பிடும் பெரிய கடவுள் என்னும் தொடரில் பெரிய என்பது தரம்சார் அடைமொழியாகும். அதை அளவுசார் அடைமொழியாக நினைத்துக்கொண்டு பெரிய கடவுள், சிறிய கடவுள் எனப் பாகுபடுத்தல் சிறப்பாகாது. பெருமை சால் கடவுள் என்னும் பொருளில் பெரிய கடவுள் எனக் குறிப்பிட்டிருப்பார் என்பது என் கருத்து.

   இன்னொரு கோணத்திலும் இதுகுறித்துச் சிந்திக்கலாம். பெண் விடுதலையை எந்தக் கடவுளும் வந்து காத்திட முடியாது. ஆடவர், பெண்டிர், அரசினர் என அனைவரும் காத்திட வேண்டும். அவ்வாறு பெண் விடுதலையைக் காத்திட உறுதியேற்று முன்வந்து செயல்படும் ஒவ்வொருவரையும் பெரிய கடவுள் எனக் குறிப்பிடுகிறார் என்றும் கொள்ளலாம். சிலசமயம், “ நீ கடவுளாய் வந்து என்னைக் காப்பாற்றினாய். நன்றி” என்று உதவிய மனிதரிடம் உர்ச்சி பொங்கச் சொல்கிறோமே!

  மேலும்  அப் பாட்டில் மோனைத் தொடைக்கு முதலிடம் கொடுத்துள்ளார் என்பதைக் கூர்ந்து பார்த்தால் தெரியும். மோனைத் தொடை இல்லாமல் எந்த இரு அடிகளையும் அவர் அமைக்கவில்லை. அந்த வகையில் பெண் விடுதலை- பெரிய கடவுள் என அடி மோனைக்காக அமைத்த அழகானத் தொடரே அது என்று இந்த விவாதத்தை விட்டுவிடலாம் என்பது என் கருத்து.

உங்கள் கருத்து என்னவோ?
.........................................
முனைவர் அ. கோவிந்தராஜூ,
அமெரிக்காவிலிருந்து.




Thursday 7 December 2017

மூழ்கி எடுத்தேன் முத்து

   இந்தியாவில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் என்னிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு “அமெரிக்காவில் உங்களுக்கு எப்படி பொழுது போகிறது?” என்று ஆவலுடன் கேட்டார்.

  மற்றவரைப் பற்றித் தெரிந்து கொள்வதில்தான் மனிதர்களுக்கு எத்தனை ஆர்வம்! இது ஓர் அடிப்படை இயல்பூக்கம். நாம் கதைகளை விரும்பிக் கேட்பதற்கும் படிப்பதற்கும், ஏன், இருக்கையின் நுனியில் அமர்ந்து திரைப்படம் பார்ப்பதற்கும் கூட காரணம் இதுதான்.

Friday 1 December 2017

எய்ட்ஸ் நோய் இல்லா என்னாடு

இன்று(டிசம்பர் 1) உலக எய்ட்ஸ் தினம்.


 எய்ட்ஸ் நோயை வருமுன் காக்கலாம்., வந்தபின் பார்க்கலாம் என்பது மூடத்தனம். பத்து ஆண்டுகளுக்கு முன் நான் இயற்றிய பத்து குறட்பாக்கள் எனது கோப்பில் தேடியபோது கிடைத்தன. விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவற்றை உரையுடன் பதிவு செய்கிறேன்.

      ஏமக்குறை நோய்(AIDS)
பலவகை  நோய்கள்  தொகுப்பென  மாறி
உடலை  அழிக்கும்  உணர்.
பொருள்:பலவகை நோய்த் தொகுப்பே எய்ட்ஸ். அது உடலை
                     உருக்குலைத்து    சாவில் கொண்டுவிடும்

ஏமக் குறைநோய்க் கிரையாகிச் சாதற்குக்
காமத்  தொடர்பைக்  கருது.
பொருள்: இல்லற இன்பத்தைத் தருவது கணவன் மனைவி
         உறவு(Marital relationship) மட்டுமே.  பிற உறவுகள்(Extra marital                                     relationship)  எய்ட்ஸ் நோயைத் தரும்.

ஆய்வு  செயப்பட்(ட) அருங்குருதி  ஏற்றார்க்கு
மாய்தல்  இலஏப்பி  னால்.
பொருள்: சோதனை செய்யப்பட்ட இரத்தம் பெறுவதால் எய்ட்சால் வரும்
         இறப்பினைத்    தவிர்க்கலாம்.

ஒருவர் பயன்படுத்தும் ஊசியை மற்றோர்
ஒருவுதல்  ஒன்றே  ஒழுங்கு.
பொருள்: மருந்தை உடலினுள் செலுத்த  ஒருவர் பயன்படுத்திய ஊசியை                      மற்றவர்   பயன்படுத்தக் கூடாது.

எள்ளிடும்  ஏமக்  குறைநோய்  உடையவர்
பிள்ளைப் பெறாஅமை  நன்று.
பொருள்: எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டவர் கருவுறுதலைத் தவிர்ப்பது                            நன்று.


ஏமக் குறைநோய்  எளிதில்  பெறக்கூடும்
காம  உறவைக்  களை
பொருள்:பரத்தன் பரத்தையர் தொடர்பால்(prostitution) எய்ட்ஸ் வந்து
        தொலைக்கும். அத் தகைய தகாத உறவு வேண்டாமே.

மணத்தல்  நிகழ்வு  நிறைவுறா  முன்னர்
புணர்தல்  தவறே  உணர்
பொருள்: திருமணத்திற்கு முன் உடற்புணர்ச்சி(pre-marital sex) அறவே               கூடாது.,  அது தவறு.

கணவன்  மனைவி  கருதிடின்  கற்பைக்
கனவிலும் இல்லையாம் ஏப்பு
பொருள்: கணவனும் மனைவியும் நேர்மையாக(nuptial loyalty) கற்புடன்
         வாழ்ந்தால் கனவில் கூட எய்ட்ஸ் நோய் வராது.

கொல்லுமோர் ஏமக் குறைநோய ராயினும்
ஒல்லும்  வகையெல்லாம்  ஓம்பு.
பொருள்: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரை நல்லமுறையில் காத்துப்
         பராமரிக்க வேண்டும்., ஒதுக்கிவைத்தல் பாவம்.

முப்பாலை ஏற்று முழுதாகக் கற்றார்க்கு
எப்போதும்  ஏப்பிலை  காண்.
பொருள்: திருக்குறளைக் கற்று அதன்படி வாழ்வார்க்கு எப்போதும் எய்ட்ஸ்
         நோய் வராது.

அருஞ்சொற்பொருள்:
ஏமக்குறை நோய், ஏப்பு = எய்ட்ஸ் நோய்
ஒருவுக                = நீக்குக
......................................................................................................................................
முனைவர் அ. கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
1.12.2017



Wednesday 22 November 2017

நம்ப முடியாத நல்ல செய்திகள்

   கடுங்குளிர் காரணமாக ஒருவார இடைவெளிக்குப் பிறகு இன்று மணிக் கணக்கில் நீண்டதூரம் நடந்தேன். கொடைக்கானலில் மாலை நேரத்தில் நடப்பது போல தட்பவெப்ப நிலை சுகமாக இருந்தது.

Wednesday 15 November 2017

நாய் தொடங்கிய புத்தகக் கடை

   அமெரிக்காவில் டெல்லாஸ் நகரில் என் பெரிய மகள் டாக்டர் அருணா வசிக்கிறாள். ஒட்டாவாவிலிருந்து டெல்லாஸ் செல்லும் வழியில் விமானத்தைச் சற்று நிறுத்தச் சொல்லி நியூயார்க்கில் வசிக்கும் என் சகலை மகள் ஆனந்தி, அவள் பெற்ற சுட்டிக் குழந்தைகளைப் பார்ப்பதற்காக இறங்கிவிட்டோம்.

Friday 10 November 2017

ஆவிகளை அழைக்கும் அமெரிக்கர்

   உலகில் ஆவிகளைக் கொண்டாடும் நாடுகள் பலவாக உள்ளன. அவற்றுள் கனடாவும் அமெரிக்காவும் முதலிடத்தில் இருக்கின்றன. அக்டோபர் 31ஆம் தேதிதான் அவர்களுக்குப் பேய்கள் தினம். ஹாலவின் டே(Halloween Day) என ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்.

Tuesday 7 November 2017

அந்தோ! மறைந்தார் மாமனிதர் மா.நன்னன்

   
  பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் காலமாகிவிட்டார் என்னும் செய்தியைச் சற்றுமுன் மின்னஞ்சல் வாயிலாக அறிந்து கழிபெரும் துன்பமுற்றேன்.

Saturday 4 November 2017

விழி நிறைய விடை பெறுகிறோம்

   கனடாவில் எங்கள் அருமை மகள் செல்வி புவனாவுடன் ஐந்து மாதங்கள் வசித்தோம். அவள் காட்டிய அன்பில் திளைத்தோம். ஐந்து மாதங்கள் ஐந்து மணித்துளிகளாய் பறந்து விட்டன. இன்று விடை பெறும் நாள். “அப்பா, இது உங்களுக்கும் அம்மாவுக்குமான விமான டிக்கெட்” என்று சொன்னபடி அச்சியந்திரம் துப்பிய பயணச் சீட்டைக் கொடுத்தாள். அதில் உள்ள விவரங்களைச் சரிபார்க்கும்போதே விழிகளும் மனமும் நிறைந்தன; கண்ணீராலும் நினைவுகளாலும். 

Friday 3 November 2017

நூல் மதிப்புரை

  
சொல்லயில்
மரபுக் கவிதைகள்

  அண்மையில் நான் டொரெண்டோ தமிழ்ச் சங்கத்திற்குப் பேசச் சென்றிருந்தபோது தானே வந்து என்னிடத்தில் அறிமுகம் செய்து கொண்ட பேராசிரியர் சு. பசுபதி அவர்கள், தாம் எழுதிய சொல்லயில் என்னும் நூலில் வாழ்த்தொப்பமிட்டுத் தந்தார்.

Tuesday 31 October 2017

புகுந்த வீட்டில் புதுப்பொலிவுடன் வாழும் தமிழ்

  கனடாவிற்கும் கவின்மிகு தமிழுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. இங்கே தமிழன்னை கழிபேருவகையுடன் களிநடம் புரிகின்றாள். புகுந்த வீட்டில் புதுப்பொலிவுடன் வாழ்கின்றாள்.  இதை டொரண்டோ தமிழ்ச் சங்கத்தில் நேரிடையாகப் பார்த்தேன்.

Thursday 26 October 2017

நூலக நாடு நூலகம் நாடு

 எனக்கு நூலகங்கள் மிகவும் பிடிக்கும். நான் நான்காம் வகுப்பில் படித்தபோது எங்கள் ஊர் ஊராட்சி  நூலகம் சென்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் எழுதிய மலைக்கள்ளன் நாவலைப் படித்தது இன்னும் நினைவில் உள்ளது. அந்தச் சிறு வயதில் தொடங்கிய நூலக ஆர்வம் பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து நூலக அறிவியலில் ஒரு பட்டம் பெறவும் அடித்தளமாக அமைந்தது.

Friday 20 October 2017

நா.பா. பார்வையில் காதல்

  காதல் என்பது செம்புலப் பெயல் நீரைப்போல் மனங்கலத்தல் ஆகும். உடற் கவர்ச்சியால், உடைக் கவர்ச்சியால், உரைக் கவர்ச்சியால் பெண்களைக் கவர முடியாது என்னும் கருத்தை நா.பார்த்தசாரதி அவர்கள் தம் நாவல்கள் பலவற்றில்  மணியிடை இழையாக வைத்துள்ளார்.

Monday 16 October 2017

ஒட்டாவா தமிழ்ச் சங்கத்தின் ஒப்பிலா விழா

  எனது கனடா நாட்டுப் பயணம் நிறைவுக்கு வரும் சமயத்தில் நான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மகிழ்ந்த தருணம் இதுவாகும். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சிறப்பாகச் சொல்லி வைத்த ஒளவையாரின் வாயில் ஒரு பிடி சர்க்கரையைப் போட்டால் சரியாக இருக்கும்.

Sunday 8 October 2017

நான் பார்த்த சாரதி

 நான் பிஞ்சில் பழுத்தவன் என்று சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமையா? சிலர் சொல்லிக் கொள்கிறார்களே!. ஆனால் நான் பிஞ்சில் படித்தவன் என்று சொல்வதில் எனக்குப் பெருமைதான். பதினோராம் வகுப்பில் படித்தபோதே நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலரை எழுத்தெண்ணிப் படித்தவன். பிறகு வளர்ந்து பெரியவன் ஆனதும் முனைவர் பட்டத்துக்காக அவருடைய நாவல்களை எடுத்து ஆய்வு செய்தவன். அவரை நேரில் சந்தித்துப் பேசியவன். இந்தக் கதை எல்லாம் இப்போது எதற்கு என்கிறீர்களா?

Monday 2 October 2017

கனடாவில் காந்தியைக் கண்டேன்

   ஆம். உண்மையில் மகாத்மா காந்தி பிறந்த நாளில் அவரைப் பார்க்கும் பேறு பெற்றேன். நீங்கள் கல்லில் கடவுளைப் பார்ப்பது உண்மை என்றால் நானும் கல்லில் காந்தியைப் பார்த்தேன் என்பதும் உண்மையே.

Tuesday 26 September 2017

வெளியில் விலங்குகள் கூண்டில் மனிதர்கள்

  விலங்குகளைக் கூண்டில் அடைப்பது, அவற்றை சர்க்கஸ் காட்சிகளில் பயன்படுத்துவது, குறிப்பாக யானைகளைக் கோவில் வாசலில் கட்டிப்போடுவது, கிளி ஜோஸ்யம் என்னும் கிறுக்குத்தனமான செயலுக்காக கிளிகளை அடைத்து வதைப்பது, கொத்தித் திரியும் அந்தக் கோழிகளைக் கொட்டகையில் அடைத்து வளர்ப்பது, அண்டிப் பிழைக்கும் நல்ல ஆடுகளில் ஓர்  ஆடு பார்க்க மற்றோர் ஆட்டை அறுத்துக் கறிக்கடையில் தொங்கவிடுவது போன்ற எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை.

    மனிதர்கள் கூண்டுக்குள் கிடக்க, அவர்களை விலங்குகள் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்தால் எப்படியிருக்கும் என கற்பனை செய்து பார்ப்பேன்.    இப்படி கரூரில் உட்கார்ந்துகொண்டு கற்பனை செய்து பார்த்தது கனடாவில் நிஜமாகி விட்டது.

    நாங்கள் வசிக்கும் பேஷோர் பகுதியிலிருந்து காரில் தொண்ணூறு  கிலோமீட்டர் பயணித்தால் மாண்ட்டிபெலோ என்ற ஊர் வரும். இது அண்டை மாநிலமான கிபெக்கில் உள்ளது.

    வழியில் ஆர்ப்பரித்து ஓடும் ஒட்டாவா நதி குறுக்கிட்டது. நண்பர் ஆற்றின் படகுத் துறைக்கு காரை விட்டார். எட்டு கார்களை ஒரே சமயத்தில் ஏற்றிக்கொண்டு ஆற்றைக் கடக்கும் வல்லமையுடைய இயந்திரப் படகு எங்களுக்காக காத்து நின்றது. படகின் தளமும் சாலையும் சமதளத்தில் இருந்தன. எங்கள் கார் படகினுள் சென்று நின்றதும் படகு புறப்பட்டது. அடுத்த மூன்றாவது நிமிடத்தில் படகு அக்கரையைச் சேர காரை உயிர்ப்பித்துப் பயணத்தைத் தொடர்ந்தோம். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்னும் நம்மூர் பழமொழியின் பொருத்தப்பாட்டை எண்ணி வியந்தேன்.

 விலங்குகளும் பறவைகளும்  வசிக்கும் அந்த ஊரில் மருந்துக்குக் கூட மனிதர்கள் வசிக்கும் வீடுகள் இல்லை. அங்கே வசித்த காட்டுவாசிகள் சிலரும் பீசா தின்னும் ஆசையில் ஒட்டாவா பக்கம் ஓடி வந்து விட்டனர்.

  பார்க் ஒமேகா என்பது இந்தக் கானுயிர் காட்சியகத்தின் பெயராகும்.

   இரண்டாயிரத்து இருநூறு  ஏக்கர் பரப்பில் அங்கும் இங்கும் அடர் காடுகள், அழகான குன்றுகள், அமுதமாய் நீர் நிறைந்து விலங்குகள் நீந்தி மகிழும் ஏரிகள், சுட்டிக் குழந்தையின் உற்சாகம்போல் பொங்கிப் பெருகும் ஊற்றுகள், சுனைகள் - அவற்றின்மீது பீவர் என்னும் விலங்குகள் கட்டிய அணைகள், இவற்றுக்கிடையே வளைந்தும் நெளிந்தும் செல்லும் மண்சாலைகள் – பார்க்கப் பார்க்க மனம் கள்வெறி கொண்டு களிப்படைகிறது!

    நுழைவாயிலில் அமைந்துள்ள வரவேற்பகத்தில் உரிய கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டோம். நான் ஒரு முதிய இளைஞர் என்பதால் எனக்குக் கட்டணச் சலுகை இருந்தது.

  “குறிப்பிட்ட ஒரே ஒரு இடம் தவிர மற்ற இடங்களில் காரைவிட்டு யாரும் கீழே இறங்கக் கூடாது. விலங்குகளுக்கு கேரட் கிழங்கைத் தவிர வேறு எதையும் கொடுக்கக்கூடாது” என்று எச்சரித்து எங்களை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

    காட்டினுள் பதினைந்து கிலோமீட்டர் தூர  கார் பயணம் தொடங்கியது. குறுங்குன்றுகளின் மீது ஏறியும் இறங்கியும் செல்ல வேண்டும். வழித்தட வரைபடத்தை மடியில் வைத்து அவ்வப்போது பார்த்துக்கொண்டு மிகக் கவனமாக காரை ஓட்டினார் நண்பர் குமரேசன். இருபது இடங்களில் நின்று கண்ணில் பட்ட கானுயிர்களைக் கண்டோம். வெளியில் எங்கு பார்த்தாலும் விலங்குகள் நாங்கள் மட்டும் கார் என்னும் கூண்டுக்குள்ளே!

    என் கண்களில் பட்ட விலங்குகள் பறவைகள் அனைத்தையும் படம் பிடித்தேன். காரை நிறுத்தினால் போதும். மான், காட்டெருமை, காட்டுப் பன்றி போன்ற விலங்குகளில் ஏதேனும் ஒன்று காருக்குள் தன் கழுத்தை நீட்டும். மக்கள் அதன் முகத்தை அன்புடன் தடவிக்கொடுத்து, தின்பதற்குக் கேரட், சோளம் போன்றவற்றைத் தருவார்கள்.


 
ஓர் இடத்தில் மட்டும்  காரைவிட்டு இறங்க அனுமதிக்கிறார்கள். அங்கே டிராக்டர் இழுத்துச் செல்லும் கூண்டு வண்டியில் ஏறி சிறிது தூரம் சென்று ஒரு தோட்டம், வனவாசிகள் பாரம்பரிய காட்சியகம், அங்கே திரியும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைக் காண்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.






  காட்டுக் குதிரைகளும், வரை ஆடுகளும் நம்மை உரசிக் கொண்டு நிற்கும். துள்ளித் தாவும் முயல்களைத் தொட்டுத் தூக்கலாம். பல மான்கள் மனிதரைக்கண்டு பயப்படாமல் திரிந்தன; சில படுத்துக் கிடந்தன. குழந்தைகள் எவ்வித பயமும் இல்லாமல் அவற்றைத் தொட்டு வருடி அதனுடன் பேசி மகிழ்ந்தனர். நானும் ஒரு மானும் சேர்ந்து நின்று படம் எடுத்துக்கொண்டோம்.


   திரும்பி வரும் வழியில் வெள்ளை நிற  ஓநாய்கள் கூட்டமாகத் திரிந்ததைப் பார்த்தோம். அது மான் இல்லை- மான் போன்ற பெரிய விலங்கு ஒன்று கண்களை மூடித் தூங்கி வழிந்ததைக் கண்டோம்.

    ஒரு குளத்தில் மான்கள் நீந்தி நீராடிக் கொண்டிருந்த காட்சி இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. இன்னொரு குளக்கரையில் வெண்மயில் உள்ளிட்ட விதவிதமான பறவைகள் மேய்ந்து கொண்டிருந்தன.

   எங்கள் காரை முந்திக்கொண்டு ஒரு திறந்த வாகனத்தில் சென்ற ஓர் இளம்பெண் ஒரு கையால் ஒய்யாரமாக வாகனத்தை ஓட்டியபடி மற்றொரு கையால் சோளம். பருப்பு போன்றவற்றை பாதையின் இருபுறமும் அள்ளி வீசிக்கொண்டே விரைந்தாள். பறவைகள் அவற்றைக் கொத்தித் தின்றன. அவள் அந்தக் கானுயிர் காப்பகத்தின் பணிப்பெண்ணாம்; வன தேவதையைப்போல வனப்புடன் இருந்தாள்!








   இந்த வனப் பயணத்தின் போது நாங்கள் பார்த்த கானுயிர்களின் பட்டியல் இது.  Alpine ibex, Arctic fox, Arctic wolf, Beaver, Bison, Black bear, Boar, Canadian goose, Coyote, Duck, Elk, Fallow deer, Great blue heron, Grey wolf, Moose, Musk, ox, Rabbit, Red deer, Red fox, Rein deer, White fox, White pea cock, Wild horse, Wild turkey. இவற்றில் மிகப்பல கனடா நாட்டுக் கானுயிர்கள் என்பதால் தமிழ்ப் பெயர்கள் தெரியவில்லை.

 கிபெக் மாநிலத்தில் ஆங்கில மொழியின் பயன்பாடு இம்மியளவும் கிடையாது. வழிகாட்டி விவரம், நுழைவுச் சீட்டு, கானுயிர்க் கையேடு உட்பட எல்லாம் ஃபிரெஞ்ச் மொழியில்தான் உள்ளது. நல்ல வேளையாக பணியாளர்கள் நாம் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்கிறார்கள்.

  
ஒரு நாளில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கார்களில் இரண்டாயிரம் பேர்களுக்குக் குறைவில்லாமல் இங்கே வருகின்றனர். நூற்றுக் கணக்கில் பள்ளி மாணவர்கள் தனிப் பேருந்தில் வன உலா செல்கின்றனர். ஆனால் எங்கும்  பாலித்தின் பை போன்ற குப்பைகளை அறவே பார்க்க முடியாது. இந்த ஒழுங்கை நாம் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

  காட்டில் கழித்த அந்த ஐந்து மணிநேரம் என் வாழ்க்கையின் பொன்னான தருணங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. மனைவி, மகள் என குடும்பமாகச் சென்று பார்த்தது எனது நல்லூழ்ப் பயன்  என எண்ணுகிறேன்.

   கனடா நாட்டிற்கு வரும் அன்பர்கள் கண்டிப்பாக இங்கே செல்ல வேண்டும். இங்கே நடுக்காட்டில் ஒரு தங்கும் விடுதியும் உள்ளது. வன விலங்குகள் வசிப்பிடத்தில் ஓர் இரவு தங்கிப் பெறும் அனுபவம் புதுமையாக இருக்கும். கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் இரவில் தங்கி நடு நிசியில் முழுநிலவில் வன நடைப்பயிற்சி செய்த அனுபவம் எனக்கு உண்டு.

காக்கை குருவிகள் எங்கள் ஜாதி - நீள்
காடும் மலையும் எங்கள் கூட்டம்

என்று உணர்ந்துதான் பாடியிருக்கிறான் பாரதி என்பதை இப் பயணத்தின் நிறைவில் உணர்ந்தேன்.

    இதுபோன்ற திறந்தவெளி கானுயிர்க் காட்சியகங்கள்(Vivariums) நம் நாட்டிலே இருக்கின்றனவா என்பது குறித்து இப் பதிவைப் படிக்கும் வாசகர்கள் தெரிவிக்க வேண்டும்.
........................................................
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.